வீட்டின் முன்புறமாக கற்கள் ஒட்ட வேண்டிய வேலை ஒன்றிருந்தது. சில வீடுகளின் முன்பாக கருங்கற்களை வரிசையாக ஒட்டியிருப்பதை கவனித்திருப்பீர்கள். அந்த வேலைதான். கற்களை வெட்டுவதிலிருந்து நேர்த்தியாக ஒட்டுவது வரைக்கும் முஸ்லீம்கள்தான் இந்த வேலையை கச்சிதமாகச் செய்வார்கள் என்று சொன்னார்கள்.
பெங்களூரில் ஷில்கரிபாளையா என்ற இடம் இருக்கிறது. அங்கு இந்த வேலை செய்யும் முஸ்லீம்கள் நிறைய இருப்பதாகச் சொல்லி நியாமத் என்பவரின் எண்ணைக் கொடுத்தார் ஆர்கிடெக்ட் ஒருவர். நெம்பர் தந்ததோடு நிறுத்தாமல் ஒரு எச்சரிக்கையையும் சேர்த்துக் கொடுத்தார். “பண விஷயத்தில் உஷாரா இருங்க சார். முஸ்லீம்ஸ் காசு வாங்கிட்டு காணாம போயிடுவாங்க”.
பெங்களூரில் ஷில்கரிபாளையா என்ற இடம் இருக்கிறது. அங்கு இந்த வேலை செய்யும் முஸ்லீம்கள் நிறைய இருப்பதாகச் சொல்லி நியாமத் என்பவரின் எண்ணைக் கொடுத்தார் ஆர்கிடெக்ட் ஒருவர். நெம்பர் தந்ததோடு நிறுத்தாமல் ஒரு எச்சரிக்கையையும் சேர்த்துக் கொடுத்தார். “பண விஷயத்தில் உஷாரா இருங்க சார். முஸ்லீம்ஸ் காசு வாங்கிட்டு காணாம போயிடுவாங்க”.
நியாமத் ஒரு ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு வந்திருந்தார். வயதானவர். ஜிப்பா, முஸ்லீம் குல்லா, இசுலாமியர்களின் ட்ரேட் மார்க் தாடி என்றிருந்தார். இந்தக் கற்களைப் பற்றி கொஞ்சம் விவரித்தார். சாதரஹள்ளி அல்லது சிரா என்ற வகைக் கற்களைத்தான் பெரும்பாலும் ஒட்டுவார்களாம். சிரா கொஞ்சம் ரேட் அதிகம். கல்லின் விலை மட்டும் சதுர அடிக்கு எழுபத்தைந்து ரூபாய். ஒட்டும் கூலி சதுர அடிக்கு நூற்றியிருப்பத்தைந்து ரூபாய் என்றார். நூறு ரூபாய் என்றால் ஒட்டுங்கள் இல்லையென்றால் வேறொருவருக்கு வேலையைக் கொடுத்துவிடுகிறேன் என்ற போது பரிதாபமாகப் பார்த்தார். ஆனால் வேலை செய்வதாக ஒத்துக் கொண்டார்.
“அட்வான்ஸ் வேண்டும்” என்றார்.
“எவ்வளவு தரணும்?”
“பத்தாயிரம் குடுங்கோ சார்” என்றவுடன் ஆர்கிடெக்ட்டுக்கு போன் செய்தேன். மறுபடியும் அதே டயலாக்கை இம்மிபிசகாமல் சொன்னார் “முஸ்லீம்ஸ் காசு வாங்கிட்டு காணாம போயிடுவாங்க”
“இப்போ காசு இல்லைங்க பாய். வேலையை ஆரம்பிங்க வாங்கிக்கலாம்” யோசித்தவர் அதற்கும் சரியென்று சொன்னார்.
“எப்போ வேலை ஆரம்பிப்பீங்க?”
“நாளைக்கே ஆரம்பிச்சுடுறோம். ஆனால் நாளைக்கு சாயந்திரம் காசு வேணும் சார்”
“என்னங்க காசு காசுங்குறீங்க. வேலையைச் செய்யுங்க. காசு வரும்”
எதுவும் பேசாமல் சென்றுவிட்டார். அடுத்த நாள் வேலையைத் தொடங்கினார். இரண்டு மூன்று ஜூனியர்களோடு வந்திருந்தார். எல்லோரும் குடும்ப உறுப்பினர்களாம். ஒருவருக்கொருவர் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. வேலை படு வேகமாக நடந்தது. அவர்கள் எத்தனை வேகமாக வேலையைச் செய்தாலும் ஒரு நாளைக்கு ஐந்தாயிரத்துக்கு மேல் கொடுத்துவிட வேண்டாம் என்று ஆர்கிடெக்ட் எச்சரித்தார்.
அன்று மாலை ஐந்தாயிரம் கொடுத்தேன். அப்பொழுதும் நியாமத் அதட்டாமல் கேட்டார்.
“ப்ளீஸ் சார், பத்தாயிரம் வேணும்”
“பணம் இல்லைங்க. நாளைக்கு வாங்கிக்கலாம்” என்றேன் .
அவருடன் வந்தவர் என்னிடம் கொஞ்சம் அதட்டலாக பேசினார். அப்பொழுது நியாமத் அவரை சமாதானப்படுத்திவிட்டு என்னிடம் “நாளைக்கு கொடுத்துடுங்க சார்” என்ற போது அவரின் கண்களில் கண்ணீர் கசிந்தது.
சங்கடமாகிவிட்டது. “ஏ.டி.எம் வர்றீங்களா? எடுத்து தந்துடுறேன்” என்றபோது தலையாட்டினார். இன்னொரு ஐந்தாயிரம் கொடுத்துவிட்டு ஆர்கிடெக்டிற்கு போன் செய்தேன்.
“ஏன் சார் பத்தாயிரம் கொடுத்தீங்க? நாளைக்கு வர மாட்டாங்க பாருங்க” என்றார். அதோடு நிறுத்தாமல் “எத்தனை கட்டடம் நாங்க கட்டறோம்? எங்களுக்கு தெரியாதா சார்?” என்றார்.
நியாமத் ஏமாற்றிவிடுவாரோ என்று பயந்து கொண்டே தூங்கினேன். ஆனால் அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு வேலையை ஆரம்பித்திருந்தார்கள். அன்றும் அவர்களுக்குள் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. அதே வேகம். மதிய உணவு கூட இல்லாமல் எதற்காக இத்தனை வேகமாகச் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. அடுத்த ஐந்து நாட்களுக்கும் தினமும் பத்தாயிரம் வாங்கிக் கொண்டார்கள். நான் ஆர்கிடெக்டிடம் பணம் சம்பந்தமாக ஆலோசனை கேட்பதைக் குறைத்திருந்தேன். பத்து நாட்களில் முடிப்பதாகச் சொன்ன வேலையை ஐந்து நாட்களில் முடித்துவிட்டார்கள்.
கடைசி தினத்தில் இன்னொரு பத்தாயிரம் கொடுத்த போது கணக்கு முடிந்திருந்தது. நியாமத் நன்றி சொன்னார். பிறகு முகம், கை கால்களைக் கழுவினார். அவருக்குப் பின்னால் ஒவ்வொருவராக கை கால் கழுவினார்கள். கிளம்புவதற்கு தயாரான போது கேட்காமல் இருக்க முடியவில்லை.
“ஏன் ஒருத்தருக்கொருத்தர் பேசிக் கொள்ளாமல் வேலை செய்யறீங்க?” என்றபோது அவரது ஜூனியர்கள் தங்களுக்குள் முகத்தை பார்த்துக் கொண்டார்கள்.
நியாமத்தான் சொன்னார். அவரது ஜூனியர்கள் ஒவ்வொருவரும் அவரது தம்பிகள். இந்தக் கல் ஒட்டுவதுதான் குடும்பத்திற்கான ஒரே வருமானம். தம்பிகள் யாருக்கும் திருமணம் ஆகவில்லை. நியாமத்துக்கு மட்டும் திருமணம் ஆகிவிட்டது. அவருக்கு மூன்று பெண் குழந்தைகள். கடைசியாக பிறந்த குழந்தைக்கு ஒன்றரை வயது. அவரது மனைவிக்கு கிட்னி ஃபெயிலியராம். ரொம்ப நாட்களாக டயாலிசிஸ் கிட்டத்தட்ட வாழ்வின் இறுதிகட்டத்திற்கு வந்துவிட்டாராம்.
“டயாலிசிஸ், ஆஸ்பத்திரி செலவுன்னு பணம் கரையுது சார். எப்படியும் போயிடுவான்னு தெரியுது. ஆனா விட மனசு வரலை. அவளோட நிலைமை, குழந்தைக, பணத்துக்கான தேவையெல்லாம் எங்களை பேச விடறதில்லே சார். அதான் உங்ககிட்ட கூட பணம் வேணும்ன்னு திரும்பத் திரும்ப கேட்டேன்” என்ற போது தனது ஜிப்பா நுனியால் கண்களை துடைத்துக் கொண்டார்.
“இதை முன்னாடியே சொல்லியிருக்கலாமே” என்றேன்.
“இல்ல சார். எங்களை யாரும் இங்கே நம்பறதில்ல. என்ன சொன்னாலும் பொய் சொல்லுறதாத்தான் சொல்லுவாங்க” என்றார். என்னிடம் ஒரு பத்தாயிரம் அதிகமாக இருந்தது. “முடிந்த போது கொடுங்க” என்று கொடுத்தேன். “ரொம்ப நன்றி சார். தேவைப்படும் போது வாங்கிக்கிறேன். இப்போ வேண்டாம்” என்று கிளம்பினார். அந்த நடையில் நேர்மையிருந்தது. அவர் நகர்ந்த பிறகு மனம் பாரமாகியிருந்தது. உடனடியாக வீட்டுக்குள் செல்லாமல் அந்த வீதியில் நடந்து கொண்டிருந்தேன்.
சிறிது நேரத்திற்குப் பிறகு ஆர்கிடெக்ட் போன் செய்தார். “வேலை முடிஞ்சுடுச்சு சார். மொத்தமா ஐம்பதாயிரம் கொடுத்துட்டேன்” என்றேன்.
“ஐயாயிரம் புடிச்சுட்டு கொடுத்திருக்கலாம்ல சார்” என்று துவங்கினார். கட் செய்துவிட்டு போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டேன். கார்த்திகைக் குளிர் சில்லிடத் துவங்கியிருந்தது.
வா மணிகண்டன்.
நன்றி : நிசப்தம்
வா மணிகண்டன்.
நன்றி : நிசப்தம்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக