கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

காவு கொடுக்கும் காவி அரசியல்!

பா.ஜ.க உறுப்பினர் ஆடிட்டர் ரமேஷ் கொலையை அடுத்து தமிழகம் முழுவதும் உள்ள பா.ஜ.க. மற்றும் இந்து முன்னணி தலைவர்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும் என இன்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 

ஆடிட்டர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டது ஏன்? மற்றும் தமிழகத்தில் உள்ள மற்ற பா.ஜ.க உறுப்பினர்களும், இந்து முன்னணியினரும் படுகொலை செய்யப்பட்டது ஏன்? கடந்த ஒரு வருடத்தில் மட்டும் ஆறு பேர்கள் படுகொலை செய்யப்பட்டதன் நோக்கம் என்ன? உண்மையான குற்றவாளிகள் யார்? என்பதை எல்லாம் மறைத்து வைத்துவிட்டு, 'இஸ்லாமிய தீவிரவாதிகள் தான் எங்கள் இந்து முன்னணியினரை கொலை செய்து இருக்கிறார்கள்' இதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்தே தீரவேண்டும் என்று ஆவேசப்படும் பா.ஜ.க அராஜகவாதிகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலிஸ் பாதுகாப்பு என்கிறது தமிழக அரசு.

பா.ஜ.க வினர் தொடர் படுகொலைகளை கண்டித்து தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில்  பந்த் நடத்த இருப்பதாக சொல்கிறது. இதை ராமதாஸ் ஆதரிக்கிறார். கட்டாய பந்த் நடத்தி, வன்முறையை தூண்டி, பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தி, அடிதடியும் இல்லை என்றால் பந்த் எப்படி முழுமை பெறும். அத்தனை அலங்கோலங்களையும் பா.ஜ.க வினர் செய்ததும் இல்லாமல் கோவையில் உள்ள மசூதி மீது பெட்ரோல் குண்டு வீசி அப்பகுதியில் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கின்றனர்.  

திட்டமிட்டு மதகலவரத்தை உருவாக்கும் நோக்கத்தோடு பா.ஜ.க. வினரும் இந்து முன்னணியினரும் செயல்படுவதை அவர்கள் வெளியிடும் நோட்டீசுக்களும், போஸ்டர்களும் அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது. 

எந்த ஆதாரமும் இல்லாமல், கோவையில் இஸ்லாமிய தீவிரவாதிகள்தான் எங்கள் அமைப்பு உறுப்பினர்களை கொன்றார்கள் என்று பொது மக்களிடம்  பா.ஜ.க நோட்டீஸ் விநியோகித்து உள்ளது. 

வேலூரில், 'இந்து கடைகளில் இந்து தயாரிப்பையே கேட்டு வாங்குவோம்' என்று இந்து முன்னணியினர்இந்து முன்னணியினர் போஸ்டர் வைத்திருக்கின்றனர். 

"இந்து, சுதந்திரம், சுயராஜ்யம், சுயேச்சை, முதலாளி கொள்ளை, ஏகாதிபத்திய எதேச்சாதிகாரம், பாரதமாதா என்பன போன்ற வார்த்தைகளை உச்சரிப்பதன் மூலம் எப்படிப்பட்ட அயோக்கியனும் பாடுபடாமல் வாழத்தக்கவனாக ஆகிவிடுகிறான்" என்று பெரியார் சொன்னதை மெய்ப்பித்திருக்கிறார்கள் பா.ஜ.க / இந்துமுன்னணியினர். 

"துளுக்க நாய்களே! குஜராத்தை கண்டுமா இன்னும் திருந்தவில்லை. நீங்கள் இரண்டாம்தர குடிமக்கள் என்பதை மறந்து விடாதீர்கள்" என்று மிரட்டும் தொனியில் மற்றொரு போஸ்டரையும் பல இடங்களில் இந்து முன்னணியினர் வைத்திருக்கின்றனர். மூன்று நாட்களுக்கும் மேலாக போஸ்டர்கள் அப்படியே இருக்கின்றன.  இவர்களுக்கு இஸ்லாமியர்கள் இரண்டாம்தர குடிமக்கள் என்று சொல்லும் அதிகாரத்தை யார் கொடுத்தது?

சில நாட்களுக்கு முன்புதான் குஜராத் கலவரத்தில் இறந்த இஸ்லாமியர்களை நாய்களோடு ஒப்பிட்டுப் பேசி மோடி கடும் சர்ச்சைகளை எதிர்கொண்டார். 'இப்படி பேசியதற்காக தான் வருத்தப்படவில்லை என்றும் இந்து இளைஞர்களின் ஒட்டுமொத்த உணர்வையே தான் வெளிப்படுத்தியதாக' மறுமுறையும் தன் பேச்சை நியாயப்படுத்தியதை நாம் இங்கே நினைவில் கொள்ள வேண்டும். 'இந்து  பாசிசம்' இப்படித்தான் பெரும்பான்மை ஆளுமையின் வெளிப்பாடாக வருகிறது. 

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக போராடும்போது ஒட்டப்படும் சுவரொட்டிகளை காவல்துறையைச் சேர்ந்தவர்களே கிழித்து அப்புறப்படுத்தி சம்பந்தப்பட்ட நபர்களையும் கைது செய்வதில் காட்டும் ஆர்வமும், பொறுப்புணர்வும் ஏன் இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பை ஏற்படுத்தும் சுவரொட்டிகளை பார்த்து காவல்துறையினருக்கு வரவில்லை?  இந்த அலட்சியத்தின் உள்நோக்கம் என்ன? 

பா.ஜ.கவைச் சேர்ந்த பெண் உறுப்பினர் ராஜராஜேஸ்வரி என்பவர் என்ன காரணத்திற்காக தீக்குளித்து இறந்தார் என்பது மர்மமாக இருக்கும் நிலையில் பா.ஜ.கவினர் 'ஆடிட்டர் ரமேஷ் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்தே ராஜராஜேஸ்வரி தீக்குளித்து இறந்தார்' என்கின்றனர். அதுவும் போகட்டும். முருகமணி என்பவர் மாரடைப்பால் இறந்துவிட்டார். இவர் ஆடிட்டர் ரமேஷ்சுக்கு நெருக்கிய நண்பர் என்றும் அவருடைய மரணத்தின் அதிர்ச்சி தாங்காமலேயே முருகமணி இறந்தார் என்றும் பா.ஜ.கவினர் தனது கட்சி தொண்டர்களிடம் ஆவேசத்தோடு விளக்கம் கூறுகின்றனர். 

இஸ்லாமிய தீவிரவாத தாக்குதல்களுக்கு இனியும் இந்து முன்னணியினரை இழக்க அனுமதிக்க மாட்டோம். இந்து முன்னணியினர் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவதற்கு கண்டனம் தெரிவித்து வரும் ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி அத்வானி கோவையில் பேச இருக்கிறார் என்றும் குறிப்பிடுகிறார்கள்.

ஒவ்வொரு முறையும் அத்வானி வரவுக்கு முன் கலவரங்களை உருவாக்குவதும், படுகொலைகள் நடப்பதும், குண்டுகள் வெடிப்பதும் அத்தனை வேளைகளையும் இஸ்லாமிய தீவிரவாதிகள் செய்கிறார்கள் என்பதும் அதற்கு கண்டனம் தெரிவித்து பேச அத்வானி வருகிறார் என்பதும் கட்சி வளர்ச்சிக்காக நடத்தும் நாடக அரசியலாக இருக்கிறது. 

இத்தனை வன்முறைகளையும் திட்டமிட்டு செயல்படுத்தும் பா.ஜ.க மதவெறியர்களுக்கு போலிஸ் பாதுகாப்பு என்கிறது தமிழக அரசு. படுகொலை செய்யப்பட்டவர்கள் எதற்காக கொல்லப்பட்டார்கள்? இதற்கும் இஸ்லாமியர்களுக்கும் என்ன தொடர்பு என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

1) 4-7-2012 இல் நாகையில் பா.ஜ.க. மாநிலச் செயற்குழு உறுப்பினர் புகழேந்தி என்பவரை கொன்ற வழக்கில் தேடப்பட்ட "முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்த முனீஸ்வரன் சரண்"

2) 23-10-2012 இல் வேலூரில் பா.ஜ.க. மருத்துவ அணியின் மாநிலச் செயலாளர் டாக்டர் அரவிந்த் என்பவரின் கொலையில் கைதானவர்களின் விவரம். கைதான ஆறு பேரும் இந்துக்கள்.

3) 19-3-2013 அன்று பரமக்குடி நகராட்சி பா.ஜ.க. முன்னாள் கவுன்சிலர் முருகன் கொலை வழக்கில் கைதானவர்கள் விவரம். இதில் ஒரு இந்துவும், மூன்று முஸ்லிம்களும் ஈடுபட்டு உள்ளனர். ஆனால் காரணம் இந்து முஸ்லிம் பிரச்னை அல்ல. சொத்து தகராறு.

4) 8-7-2013 அன்று ராமேஸ்வரத்தில் ஒன்றிய இந்து முன்னணி செயலாளர் குட்டநம்பு என்பவர் கொல்லப்பட்ட வழக்கில் மாந்தோப்பு ராமச்சந்திரன், முருங்கவாடி சண்முகநாதன் ஆகிய 2 பேரை கைது செய்துள்ளனர்.

5) 1-7-2013 அன்று வேலூரில் இந்து முன்னணி மாநிலச் செயலாளர் வெள்ளையப்பன்  என்பவர் கொலையுண்ட வழக்கில் போலீசார் இன்னும் விசாரணை செய்து வருகின்றனர்.


இதுவரை படுகொலை செய்யப்பட்டுள்ள பா.ஜ.க மற்றும் இந்து முன்னணியினர் கொலைகளுக்கும் இஸ்லாமிய மதம் சார்ந்தவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. கோவையைச் சேர்ந்த ஆடிட்டர் ரமேஷ் படுகொலையும் கத்துவட்டி தொடர்பாக நடந்தவை என்று அப்பகுதி மக்களால் கூறப்படுகிறது. 

கோவையின் மையப்பகுதியில் இருக்கும் இஸ்லாமிய வணிகர்களின் செல்வாக்கை ஒடுக்கவும் அவர்களுடைய தொழில் இடங்களை அபகரிக்கவும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து முன்னணியினர், பா.ஜ.கவினரும் நடத்தும் உள்ளூர் யுத்தம் என்கிறார்கள் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள். 

இஸ்லாமியர் கடைகளுக்கு தீவைப்பதும், கடைகளுக்குள் நுழைந்து பொருட்களை அபகரிப்பதும் நடந்துக் கொண்டிருக்கிறது.  97இல் இவை போன்ற வன்முறையிலும் கலவரங்களிலும் 19 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டதற்கும் இவர்களே காரணம். அப்போது கோவையைச் சேர்ந்த பெரியார் தொண்டர்களையும் இந்துத்துவ வெறியர்கள் தாக்கியதையும் குறிப்பிடுகின்றனர். 

97 க்களில் அத்வானி கோவை வந்தபோது நடந்த தொடர் குண்டு வெடிப்புகளுக்கு காரணம் இஸ்லாமிய தீவிரவாதிகள் தான் என்று அப்போதும் இதே பா.ஜ.கவினர் கூறினர். இதில் உள்ள உறுப்பினர்கள் தொண்டர்கள் அனைவருமே வன்முறை சக்திகள் என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு முறையும் தேர்தல் வருவதற்கு முன்பு இவர்கள் மத கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு செயல்படுவதாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகிறார்கள். இவர்களின் நடவடிக்கைகளும் அதை உறுதிப்படுத்துவதாக இருக்கிறது. 

இதற்கிடையே தமிழக முதல்வர் ஜெயலலிதா இப்தார் விருந்தை ரத்து செய்வதாக குறிப்பிட்டிருக்கிறார். 'அ.தி.மு.கவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் மரணத்திற்காக ரத்து செய்யப்பட்டது' என்று காரணத்தை கூறுகிறார். ஆனால் ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை. 'புழுக்கையோடு தானும் வெயிலில் சேர்ந்த காய்ந்ததாம் எலி என்கிற நாட்டுப்புற ஒப்பிடு'தான் ஜெயலலிதாவின் செயலைப் பார்க்கும் போது நினைவுக்கு வருகிறது. 

எல்லாவற்றிலும் குற்றமும் குறையும் கண்டுபிடித்துக் கொண்டிருந்தால் எப்படி என்று சலித்துக் கொள்பவர்கள் பா.ஜ.க. மற்றும் இந்து முன்னனி தலைவர்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும் என இன்று தமிழக அரசு அறிவித்ததன் உள்நோக்கத்தையும் கவனிக்க வேண்டும்.

"இந்திய மக்கள் எவ்வித முன்னேற்றமோ, விடுதலையோ, சுதந்திரமோ பெறுவதற்குத் தங்களை அருகதை உடையவர்கள் என்று சொல்லிக் கொள்ளுவதற்கு முன்பாக இந்தியர்கள் ஒரே சமூகத்தார், ஒரே இலட்சியமுடையவர் என்கின்ற நிலையை அடைய வேண்டியது மிகவும் முக்கியமானது" என்று பெரியார் குறிப்பிட்டதைப் போல், இன்னும் நம் சமூகம் உருவாகவில்லை. 

அதுவரையில் இந்து மதவாதிகளின் அரசியல் சூழ்ச்சிக்கு, சாதிய தலைமைகள் ஊக்குவிப்பதையும், தமிழ்தேசியம் பேசும் அரசியல் கட்சிகளின் ஆதரவையும், அதன் நுண்ணரசியலையும், விளைவுகளையும் பொது மக்கள் உணர்ந்து கொள்ள முடியாமல் தங்களை காவு கொடுக்க அனுமதித்து விடுவார்கள். இந்து / இந்துத்துவம் மதவாத / மிதவாத ஆளுமை அப்படி. 

- தமிழச்சி
24/07/013

0 கருத்துகள்: