கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

நான்காவது முறையாக அணைக்கரை பாலம் விரிசல்! சுதந்திர இந்தியாவின் அவலம்!


நான்காவது முறையாக அணைக்கரை பாலத்தில் (அணை) நெரிசல் ஏற்ப்பட்டு பொதுமக்களை அவதிப்பட வைத்திருக்கிறது. இதற்கு காரணம் பொதுப்பணித்துறை அதிகாரிகளா? காவல்துறையா? பொதுமக்களா? என ஆய்வு செய்வதற்கு முன்பு பாலத்தின் வரலாற்றை சற்று சுறுக்கமாக பார்ப்போம்.

இந்தியா ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தபோது கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் மழைக்காலங்களில் பெரும் வெள்ளமாகவும், கோடைக்காலங்களில் காலவாய்கள் வாயிலாகவும் வீணாக கடலில் கலப்பதைக்கண்டு வேதனை அடைந்தனர். கொள்ளிடத்திற்கு வடக்குப்புறமாக உள்ள கடலூர் மாவட்டமும், தெற்கேயுள்ள நாகை, தஞ்சை மாவட்டங்களும் வறட்சியால் பாதிக்கப்படுவதையும் காண்கின்றனர். இதனால் கொள்ளிடத்தில் வீணாக போகும் தண்ணீரை தேக்கி விவசாயத்திற்கு பயன்படுத்த வைக்கலாம் என தீர்மானித்து தஞ்சை மாவட்டம் அணைக்கரையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே அணைகட்ட திட்டமிடுகின்றனர். 

அதன்படியே 1836ம் ஆண்டு இன்ஜினியர் சர். ஆர்தர் காட்டன் என்பவரால் அணைக்கட்டப்பட்டது. இந்த அணைக்கு கீழணை என பெயரும் வைத்தனர். தற்பொழுது இந்த அணை தஞ்சை மாவட்ட பொதுப்பணித்துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. அணையின் மூலமாக கிட்டதட்ட 4.5 லட்சம் கனஅடி நீரை தேக்கி வடிகால் மூலம் பாசனத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. கீழணை மூலம் வடக்குராஜன் ஆறு, தெற்குராஜன் ஆறு, குமுக்கிமண்ணியாறு, மற்றும் குறுவாயக்கால்கள் என பிரித்து ஒரு லட்சத்தி 26 ஆயிரத்தி 836 ஏக்கர்களுக்கு பாசன வசதிக்கு கொடுக்கப்படுகிறது. 

அதோடு மட்டுமின்றி, கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் பல்வேறு பெரு நகரங்களுக்கு பைப் லைன் மூலம் எடுத்து செல்லப்படுகிறது. சென்னைக்கு குடிதண்ணீரை வழங்கும் வீராணம் ஏரிக்கு அணைக்கரையிலிருந்து தான் தண்ணீர் போகிறது. இப்படிப்பட்ட அணையை ஆங்கிலேயர்கள் இயற்கை சூழலுக்கு ஏற்ப வடக்கில் ஓர் அணையும், தெற்கில் ஒர் அணையுமாக பிரித்து வடக்கு அணையில் 20 கன்வாய்களும், தெற்கு அணையில் 40 கன்வாய்களுமாக பிரித்து கட்டியுள்ளனர். 

இரண்டுக்கும் நடுவில் அணைக்கரை என்கிற கிராமம் பல்வேறு வசதிகளோடு தீவாக காட்சியளிக்கிறது. அங்கேதான் பொதுப்பணித்துறை அலுவலகங்களும், கரிகாலச்சோழன் பெயரில் சுற்றுலா மாளிகையும், சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம், இயற்கையோடு பூங்காவும் அமைத்திருக்கின்றனர். இப்படி அழகோடும், மக்களுக்கு பயன்படும் வண்ணம் எதிர்கால விவசாயிகளின் நிலையை மனதில் கொண்டு ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட அணை பிற்காலத்தில் வந்த சுதந்திர அரசு அதனை போக்குவரத்து பாலமாக பயன்படுத்த துவங்கிவிட்டனர். 

“ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்வதற்கு ஏதுவாக வடமாவட்டங்களுக்கும், தென்மாவட்டங்களுக்கம், இடையே கட்டப்பட்ட இந்த அணையில் வடமாவட்டங்களில் உள்ள பெரும்பாலான வனத்துறைகளை பார்வையிடுவதற்கான போக்கவரத்து வசதிகளுக்கு அணையை இணைத்து ஜீப் போன்ற இலகுவான வாகனங்கள் போவதற்காகத்தான் பாலம் கட்டினார்கள். ஆனால், தற்போது போக்குவரத்து அதிகரித்ததோடு தஞ்சை, கும்பகோணம், மன்னார்குடி, பட்டுக்கோட்டை, என பெருநகரங்களிலிருந்து சென்னைக்கு செல்லும் கனரக வாகனங்களும் போக்குவரத்துகளும் இந்த பாலத்தின் வழியாக தான் செல்கின்றனர். இரவு நேரங்களில் செக் போஸ்டில் இருக்கும் காவல்துறையினர், கனரக வாகனங்களிடமிருந்து லஞ்சமாக பணம் வாங்கிக்கொண்டு பாலத்தின் நலனை கருத்தில் கொள்ளாமல் அனுமதித்தன் விளைவே பாலம் பழுதானத்திற்கு முதல் காரணம்” எனகின்றனர் அணைக்கரை சேர்ந்த பொதுமக்கள்.2010ம்ஆண்டு முதல்முறையாக அணைக்கரையில் லேசான விரிசல் ஏற்ப்பட்டது. 

அப்பொழுது இருந்த தஞ்சை மாவட்ட ஆட்சியர் சண்முகம் கெடுபிடியாக இருந்து பாலத்தை காக்க வேண்டும் என்கிற நல்லெண்ணத்தோடு ஒரு தொகையை ஒதுக்கி பழதை சீர் செய்யும் வரை போக்குவரத்தை அனுமதிக்காமல் இருந்தார். சென்னைக்கு போகும் வாகனங்கள் மயிலாடுதுறை, சிதம்பரம் வழியாக சென்றன. பிறகு பாலம் சரிசெய்யப்பட்டதாக சொல்லி போக்குவரத்தை அனுமதித்தனர். ஆனால், பாலத்தின் நலம் கருதி கனரக வாகனங்களை அனுமதிக்காமல் இருப்பதை விட்டுவிட்டு இரவு நேரங்களில் அனுமதித்தனர். அதன் விளைவு 2011ல் ஒரு விரிசலும், 2012ல் ஒரு விரிசலும் ஏற்ப்பட்டது. அதற்கு பொதுப்பணித்துறையின் மூலம் 6.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பழுது பார்த்தனர். அப்பாலத்தின் மேல் இருபுரங்களிலும் கனமான கட்டைகளை அமைத்து சுமைகளை ஏற்றினார்களே தவிர முழுமையாக பாலத்தை சரிசெய்யவில்லை. 

“பாலத்தின் மேல இரண்டு பக்கமும் கட்டை கட்டி சுமையை ஏத்திட்டாங்க. அந்த பாளத்தின் அழகையே கொலச்சுட்டாங்க. தண்ணீர் கனமாக வரும்போது குறிப்பிட்ட அளவை தொட்டுட்டாலே தானாகவே ஷட்டர்கள் தூக்கி கொள்ளும் அதிகபட்ச தண்ணி வடிந்தவுடன் தானாகவே மூடிக்கொள்ளும். இப்படிப்பட்ட அற்புதத்தை, பொக்கிஷத்தை பாழாக்கியதே பொதுப்பணித்துறை மற்றும்  காவல்துறையின் பொறுப்பில்லாத்தன்மை தான். இந்த அணை உடைஞ்சுட்டா நாகை தஞ்சை மாவட்ட விவசாயம் பாழாகறது மட்டுமில்லாம, சென்னை மாநகருக்கு குடிநீர் திண்ணாட்டம் வந்துடும். ஏன்னா, வீராணம் ஏரிக்கு அணைக்கரையிலிருந்து தான் தண்ணீர் போகுது. உடனடியாக அரசு இதில் கவனம் செலுத்தி அணையாக பாதுகாக்க வேண்டுமே தவிர மீண்டும் மீண்டும் பாலமாக பார்த்து அணையின் ஆயுளை குறைக்க கூடாது.”

என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவரோ “இந்த பாலத்துக்கு இரண்டு பக்கத்துலயும் மணல் குவாரிகளை அமைத்து அளவுக்கதிகமான ஆழம் தோண்டி மணல் அள்ளியதும் ஒரு காரணம். அதோட பாலம் பழுதை ஒதுக்க நீக்கிய பணத்தில் பாதிக்கு மேல செலவு செய்யாம ஏப்பம் விட்டுட்டாங்க” என்கின்றார்.

ஆங்கிலேயர்கள் இந்தியாவை சுரண்டும் எண்ணத்தோடு வந்தாலும், பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் பெரும் அணைகள், கட்டிடங்கள் சாலைகள் என அற்புதங்களை அமைத்து கொடுத்து சென்றனர். சுதந்திர இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் அதைக் காப்பாற்றாமல் அதனை அழிவுக்கு கொண்டு செல்வது பெருத்த வேதனையளிக்கிறது.

க.செல்வகுமார்.

0 கருத்துகள்: