கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

எங்கோ-எதற்கோ-யாருக்கோ கொட்டப்படும் ஏழைவரி!


ஐம்பெரும் கடமைகளில் ஜக்காத் ஏழைகளின் நலனுக்காக ஏகன் அல்லாஹ் ஏவிய முக்கியக் கடமை. ஈந்துவந்து இன்பம் காண்பதே ஈமான்கொண்டோரின் சீமான்தனம் என்ற சீரியக் கருத்தை வல்ல நாயனின் அருள்மறையும் அகிலத்தின் அருட்கொடையாய் அவனியில் அவதரித்த நம் அண்ணல் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அழகிய நடைமுறையும் நமக்கெல்லாம் கற்பித்துத்தருகின்றன.

அந்த ஏழையின் பசியை எல்லோரும் அறிந்து கொள்ளத்தான் உணவின் தேவைகளை உணர்ந்து கொள்ளத்தான் புனித ரமலான் நோன்பையும் இறைவனும் நம்மீது கடமையாக்கியிருக்கிறான். ஏழைகளை ஏறெடுத்தும் பார்க்காதவர்கள் எம்மைச் சார்ந்தோர் அல்ல என்பதை உணர்த்தவே அல்லாஹூத்தஆலா மூமின்களின் முக்கிய இலக்கணப்பண்பாக இப்படிக்கூறுகிறான்:

தொழுகையைக் கடைப் பிடியுங்கள்; ஜகாத்தையும் (ஒழுங்காகக்) கொடுத்து வாருங்கள்; ருகூஃ செய்வோரோடு சேர்ந்து நீங்களும் ருகூஃ செய்யுங்கள். (அல்குர்ஆன்2:43)

எனவே தான் புனித ரமலான் மாதமே ஏழைகளுடனும்-ஏழைகளுக்கு ஈந்துண்டு வாழ்வதுடனும் இணைந்திருக்கிறது அத்துடன் புனித ரமலான் முடிந்து வரும் பெருநாளுக்கு ஈதுல் பித்ர்- ஈகைத்திருநாள் என்று பெயரும் வந்துள்ளது. நாம் ரமலான் முழுவதும் நோன்பிருந்து அந்த பெருநாளை மகிழ்வுடன் கொண்டாடிடவும் எல்லா ஏழை-எளியவர்களும் அன்று இல்லாமை இல்லாமல் இனிது உண்டு உடுத்து மனநிறைவோடு மகிழ்ந்திடவும்தான் அந்தத் திருநாளில் பித்ராவும் கடமையானது. ஆனால் ஜக்காத்தும்-பித்ராவும் இன்று ஏழை-எளியவர் எவருக்கும் சென்று சேராமல், யார் யாருக்கெல்லாமோ எதற்கெதற்கெல்லாமோ மார்க்கத்தின் பெயரால் எங்கோ எதற்காகவோ அள்ளிக் கொட்டப்பட்டு- பட்டினியார் பாவங்கள் பங்கிடப்பட்டும் தட்டிப் பறிக்கப்பட்டும் வருவதுதான் பரிதாபமானது.

ஜக்காத் எப்போது எப்படி யாருக்குக் கொடுப்பது என்பது பற்றி மார்க்க அறிஞர்கள் அவரவர் கருத்துக்களை அவ்வப்போது கூறிவந்தாலும்- முப்பது வருடங்களுக்கு முன்னால் எல்லா ஊர்களிலும் ஜக்காத் நாள் என்பதை பொதுவாக ரமலான் மாதம் 27- என்று அன்றைய தினத்தின் ஏற்றத்தை எண்ணிப்பார்த்து செல்வந்தர்கள அன்றைய தினத்தை வழக்கமாக்கி; வறியோர்க்கெல்லாம் வாரிவாரி வழங்கிவந்தார்கள். அன்றைய தினத்தில் எல்லா ஊர்களின் தெருக்களிலும் ஏழை எளியவர்கள் கூட்டம் கூட்டமாக வந்து வசதிபடைத்தவர்கள் அளிக்கும் ஜக்காத்தை மனதாரப் பெற்று மகிழ்ந்து வந்தனர்.

ஏழைகள் பலர் தமது ஊர்களிலும் செல்வந்தர்கள் இருந்தாலும் அவர்களிடம் சென்றுகேட்டுப்பெறுவதை நாணத்தால் விரும்பாமல். பக்கத்து ஊர்களுக்கு பஸ்களில் அல்லது நடைப்பயணமாகச் சென்று அன்றையதினம் ஜக்காத்தை போதுமான அளவுக்குப் பெற்று இன்முகத்துடன் தமது ஊர்களுக்குத் திரும்பி புனித ஈதுல்பித்ர் அன்று புத்தாடைகள் அணிந்து- அழகிய உணவும் சமைத்து உண்டு மகிழ்ந்து அந்த பெருநாட்களைக் மகிழ்வுடன் கொண்டாடியும் வந்தார்கள்.

பல செல்வந்தர்கள் பணமும் அத்துடன் பெண்களுக்கு புதிய சேலைகளும் ஆண்களுக்கு சட்டை வேட்டிகள் என்று மனமுவந்து வழங்கிவந்ததை நாமும்தான் கண்டிருக்கிறோம். ஆனால் இப்பொழுது ரமலான் 27-அன்றும் பிறநாட்களிலும் அத்தகைய ஏழைகளின் கூட்டத்தை எங்குமேக் காணமுடிவதில்லை. வறியவர் எவருமின்றி எம்சமுதாயம் வளம் பெற்றுவிட்டதோ என்று நாமும் எண்ணும்போது.... ஏழைகள் பலரின் பரிதாபக்குரல்கள் நம்காதுகளில்- பெரியவீடு-பங்களாக்களில் எல்லா வசதிவாய்ப்போடு வாழ்ந்தாலும் தமது வீட்டுநடைக்கு தேடிவந்து ஜக்காத் கேட்கும் ஏழைக்கு இப்போதெல்லாம் கிடைப்பதோ ஏமாற்றமும் அவமானங்களுமே.

பல செல்வந்தர்கள் ரமலான் மாதம் முழுவதும் இந்த ஏழைகளுக்குப் பயந்து வீடுகளைப் பூட்டிவிட்டு வெளிவூர்களுக்குச் சென்று விடுதலும் நடைமுறையாகி நடக்கிறது. இன்னும் பல வீடுகளில் உள்ளே ஆட்கள் இருந்தாலும் வெளியிலே பூட்டுக்கள்- முற்றங்களில் தடுப்புக்கள் வளாகத்தின் உள்ளே வந்துவிடாமல் காவலர்கள்- இல்லையெனில் கோபக் குரல்கள் வீடுகளில் உள்ளிருந்து, நாங்கள் யாருக்கும் ஜக்காத் கொடுப்பதில்லை- ஏற்கனவே கொடுக்க வேண்டியவர்களுக்குக் கொடுத்துவிட்டோம்- வேறு வீடுகளில் போய்கேளுங்கள் என்று. சிலர் வீடுகளில் வறுமையோடு வந்தவர்களுக்கு வசைபாடுதலும்கூட- வெறுமையாக வெறுப்பாகக்கூறி விரட்டியும் விடுவதுதான் வேதனையான உண்மை.

''ஏழைகளின் கண்ணீர் கூரிய வாளுக்கு ஒப்பாகும்'' ((நபிமொழி)

தூய இஸ்லாம் என்றுபேசும் துணிச்சல்கார வேஷதாரிகள்- தங்களுக்கு மட்டும்- தங்கள் மர்கஸ்களின்; மடங்களின் தஃவாபணிக்காக தந்துவிடுதலே தர்மம் என்னும் தவறான அறிவுரையால் தடம்மாறும் பல தனவந்தர்கள்- ஏழைகள் வரியை இப்படி ஏய்ப்பவர்களுக்குக் கொடுத்துவிட்டு ஏழைகளுக்கு ஏச்சையும் பேச்சையுமே பதிலாக அள்ளிக் கொடுத்து, ஏழைகளின் உள்ளக் குமுறல்களையே வகையாக வாங்கிக் கட்டிக்கொள்கிறார்கள் என்பதே எதார்த்தமான உண்மை. ஏழைவரி என்பதும் எளியவருக்கு ஈந்துண்டு வாழ்தல் என்பதும் நம் நன்மையின் கனத்தை அளவிடும் எடைகற்கள் என்பதையும் அதுதான் சுவனத்திற்கே படிக்கற்கள் என்பதையும் ஏனோ இவர்கள் எல்லோருமே எளிதாக மறந்துவிடுகிறார்கள்.

ஜக்காத்தைப்பற்றி கட்டளையிடும் அருள்மறையில் அல்லாஹுத்தஆலா அதை யாருக்குக் கொடுக்கவேண்டும் என்று சொல்லும்போது:

(ஜகாத் என்னும்) தானங்கள் தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன் பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்), வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் - அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன் (அல்குர்ஆன் 9:60)

ஆகவே, உறவினர்களுக்கு அவர்கள் பாத்தியதையைக் கொடுத்து வருவீராக. அவ்வாறே ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் (அவரவர்க்குரியதை கொடுத்து வருவீராக எவர்கள் அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை நாடுகிறார்களோ அவர்களுக்கு இது மிக்க நன்மையுடையதாகும்; அவர்கள்தாம் (அவ்வாறு கொடுத்து வருபவர் தாம்) வெற்றியாளர்களாவார்கள். (அல்குர்ஆன் 30:38)

அவர்களுடைய செல்வத்தில் இரப்போருக்கும், வசதியற்றோருக்கும் பாத்தியதை உண்டு. (அல்குர்ஆன் 51:19)

அல்லாஹ்வுக்கு அழகான கடனாகக் கடன் கொடுப்பவர் யார்? அவருக்கு அவன் அதை இரட்டிப்பாக்குகின்றான், மேலும், அவருக்குக் கண்ணியமான நற்கூலியும் உண்டு. (அல்குர்ஆன் 57:11)

இவர்களுக்குக் கொடுத்திட வேண்டிய ஏழைவரியாம் ஜக்காத்தை இறைக்கட்டளைக்கு மாற்றமாக எந்தெந்த மடங்களுக்கோ மர்கஸ்களுக்கோ கொடுப்பது நிச்சயம் இறைஅங்கீகாரத்தைப் பெற்றுத்தராது. ஏழைகளின் குமுறல்கள்பல எம்காதுகளிலும் பலமுறை எதிரொலித்தே உள்ளன. ஏழையின் கண்ணீர் ஏகன் அல்லாஹ்விடத்தில் வணக்கங்களைவிடவும் கனமானது என்பதுதான் இஸ்லாத்தின் எச்சரிக்கை. இணைப்பிலுள்ள கவிதையும் இதையேத்தான் இயம்புகிறது. இறைக்கட்டளைப்படி அவனால் சொல்லப்பட்டவர்களுக்கு முதலில் கொடுத்துப்போக எஞ்சியதை தமது கொள்கைக் கூட்டத்தாருக்கு கொடுத்துவிடுவதை யாரும் குறைகூறமாட்டர்கள்.

'எவர் ஒரு முஃமினின் இவ்வுலக கஷ்டமொன்றை நீக்கி வைக்கின்றாரோ அல்லாஹ் அவரை விட்டும் மறுமையின் கஷ்டமொன்றை நீக்கி வைப்பான். எவர் கஷ்டத்தில் இருக்கும் ஒருவருக்கு உதவுகின்றாரோ அல்லாஹ் அவருக்கு உலகிலும் மறுமையிலும் கஷ்டங்களை நீக்கி வைத்து உதவுவான். மேலும், எவர் (ஆடை கொடுத்தோ அல்லது குறைகளை மறைத்தோ) ஒரு முஸ்லிமின் மானத்தை மறைக்கின்றாரோ அல்லாஹ் அவரது மானத்தை ஈருலகிலும் மறைப்பான். ஒரு அடியான் தனது சகோதரனுக்கு உதவியாக இருக்கும் காலமெல்லாம் அல்லாஹ் அவனுக்கு உதவியாக இருக்கின்றான்' (நபிமொழி)

ஜக்காத் ஏழை-எளியவருக்கு மட்டுமே உரியது. பைத்துல்மால் அமைத்து அதிலிருந்து ஏழைகளுக்கு முறையாகக் கொடுத்திடலாம் என்றால் யார்யார் ஏழைகள்? ஏந்த நிலையில் என்று எல்லோருக்கும் தெரிந்துவிடுவதில்லை. தன்னைச்சார்ந்தோர் அண்டைவீட்டார்- வறியவராய் வாழும் தனது உறவுகள் இவைபற்றிய அறிதல்கள் தனிப்பட்ட ஒவ்வொரு மனிதனுக்கு மட்டுமே தெரியும் உண்மைகள். முதலில் இவர்களுக்கு உதவுவோம்-பிறரை உதவிடத் தூண்டுவோம்.

இன்னும் நமக்கு அள்ளிக் கொடுத்திட ஆசையிருந்தால் நமது சதகாத் தொகைகளால் பைத்துல்மால்களின் பணப்பெட்டிகளையும் நிரப்புவோம். அதற்காக... என்றுமே ஏழைகளை ஏறெடுத்துப் பார்ப்பதை நிறுத்திடாமல்- வீடுதேடி வந்து உதவிக்கேட்போரை விரட்டிட எண்ணாமல் நம்வீட்டு வாசல்களை-வளாகங்களையும் அவர்களுக்காக வாரி வழங்கிட அல்லாஹூத்தஆலாவின் அருள்வேண்டி திறந்தே வைத்திடுவோம். அவ்வாறு செய்யும்போதுதான் ஏழையும் சிரிப்பான் அங்கு இறைவனும் இருப்பான். எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும்- எங்கும் இல்லாதார் இல்லாத நிலைவேண்டும் என்பதே இஸ்லாம்.

இந்த புனிதமிகு மாதத்தில தெளிந்த ஈமானுடன் நாம் செய்யும் நல்லமல்கள் அனைத்தையும் நாயன் அல்லாஹ் பொருந்தி என்றென்றும் நம்மனைவருக்கும் நல்லருள்புரிந்தருள்வானாகவும்...ஆமீன்.

ஸல்லல்லாஹு அலா முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்-
ஸல்அல்லாஹு அலா முஹம்மத் யாரப்பி ஸல்லி அலைஹி வஸல்லிம்.


அன்புடனும் ஸலாமுடனும்,
அபுமைமூனா
துபாய்
source:http:nidurinf/data/


0 கருத்துகள்: