முஸ்லிமின் நேரம் மிகப் பெறுமதியானது. இது ரமலான் காலத்திற்கு மட்டுமன்றி எல்லா காலத்திற்கும் பொருத்தமானது. ஒரு முஸ்லிம் தனது நேரத்தை ஒருபோதும் வீணாக கழித்து விடக் கூடாது. எனினும்,ரமலான் மாதத்தில் அதிகமானோர் இரவில் விழித்திருந்து வீண் பேச்சுக்களிலும் விளையாட்டுக்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இத்தகைய செயற்பாடுகளினால் பிறருக்கு தொந்தரவு அளிப்பவர்களாகவும் அவர்கள் மாறி விடுகின்றனர். இரவில் விழித்திருப்பதால் அதிகாலை வேளையின் பரக்கத்தை இழந்துவிடுகின்றார்கள். பகல் பொழுது உறக்கத்தில் கழிகின்றது. கடமையான தொழுகைகளும் நேரம் கழித்தே நிறைவேற்றப்படுகின்றது.
அலி மஹ்பூழ் என்பவர் குறிப்பிடுகின்றார்: சிறப்பான நேரங்களை வீணாக கழிப்பது மோசமான செயற்பாடாகும். சிலர் ரமலான் மாதத்தின் இரவுகளையும் இவ்வாறு கழிக்கின்றனர். வெறுமனே புறம் பேசுவதிலும் கோல் சொல்வதிலுமே இவர்களுடைய நேரங்கள் கழிகின்றன.
ஆனால், எமது முன்னோர் அவ்வாறு இருக்கவில்லை. அவர்கள் ஒருவரை யொருவர் சந்தித்துக் கொண்டால் நேரத்தின் பெறுமதி பற்றி ஞாபகப்படுத்திக் கொள்வார்கள்.
அதிகமாக உறங்குதல்
ஒரு முஸ்லிமுக்கு ரமலான் மாதத்தின் நேரம் மிகப் பெரும் மூலதனமாகும். அவன் அதனை மிகச் சிறந்த முறையில் பயன்படுத்தி, மறுமையில் பிரயோசன மளிக்கும் நன்மைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். எனினும், சில முஸ்லிம்களிடத்திலே ரமலான் மாதத்தின் அதிகமான பொழுதுகளை தூக்கத்தில் கழிக்கும் வழக்கம் காணப்படுகின்றது. அதிகமான நேரத்தை தூக்கத்தில் கழிப்பதால் கடமைகளை உரிய முறையில் நிறைவேற்ற முடிவதில்லை.
ஸுன்னத்தான அமல்களை செய்வதற்கும் நேரம் கிடைப்பதில்லை. கழிந்த நேரத்தை ஒரு போதும் மீளப்பெற முடியாது. அது போன்றே இதுபோன்றதொரு இன்னுமொரு சந்தர்ப்பம் கிடைக்கும் என்பதற்கும் எவ்வித உத்தரவாதமுமில்லை.
ஒரு நோன்பாளியான முஸ்லிம் பகல் பொழுதுகளை அல்குர்ஆனை ஓதவும் திக்ருகள், தஸ்பீஹ்களில் ஈடுபடவும் பிரயோசனமான விடயங்களை கேட்கவும், வாசிக்கவும் பயன்படுத்திக் கொள்வது அவசியமாகும். அவ்வாறில்லாதபோது நோன்பின் மூலம் எதிர்பார்க்கப்படுகின்ற பயனை அவனால் அடைந்துகொள்ள முடியாது போகும் என்பதில் சந்தேகமில்லை.
ஜமாஅத் தொழுகைகளை தவறவிடுதல்
ரமலான் மாதத்தில் நோன்பு நோற்ற நிலையில் ஜமாஅத் தொழுகையை தவறவிடுவது சர்வ சாதாரணமாக நடைபெறுகின்றது.
உறக்கம், சோம்பல், வேறு வேலைகளில் ஈடுபட்டிருத்தல் போன்ற காரணிகளால் ஜமாஅத் தொழுகை தவறவிடப்படுகின்றது.
ஜமாஅத் தொழுகைக்கு பல சிறப்பம்சங்கள் காணப்படுகின்றன. அதற்கு அதிகமான நன்மையும் வழங்கப்படுகின்றது. மஸ்ஜிதிற்கு செல்பவருக்கு அல்லாஹுதஆலா பாதுகாப்பளிக்கின்றான், ரிஸ்க் அளிக்கின்றான், அப்பாதையில் மரணித்தால் சுவனத்தை அளிக்கிறான்.
இவ்வாறான நன்மைகளை எவ்வாறு தொழுகையை ஜமாஅத்தாக நிறைவேற்றாதவன் பெற்றுக் கொள்ள முடியும்.
அதிகமாக சாப்பிடுதல்
அல்லாஹுதஆலா அல்குர்ஆனில் பல இடங்களில் உண்ணுதல், பருகுதல், வீண்விரயம் செய்தல் பற்றி குறிப்பிடுகின்றான். உண்ணுங்கள், பருகுங்கள், வீண் விரயம் செய்யாதீர்கள். நிச்சயமாக, அல்லாஹுதஆலா வீண்விரயம் செய்பவர்களை விரும்புவதில்லை. (அஹ்ராப்:31)
ஏழைகளுக்கும் உறவினர்களுக்கும் வழிப்போக்கர்களுக்கும் அவர்களுடைய உரிமைகளை வழங்குங்கள். வீண் விரயம் செய்யாதீர்கள். நிச்சயமாக, வீண்விரயம் செய்பவர்கள் ஷைத்தானின் சகோதரர்களாவர். ஷைத்தான் அல்லாஹ்வை நிராகரித்தவனாக காணப்படுகின்றான். (அல்இஸ்ராஃ 26,27)
இப்னு ஹுஸைமீன் கூறுகின்றார்: இந்த யதார்த்தம் நேரத்தையும் செல்வத்தையும் வீணடிப்பதை காண்கிறேன். மக்கள் பல வகையான உணவுகளை தயாரிப்பதிலும் பகலில் தூங்குவதிலும் இரவில் பிரயோசனமற்ற விடயங்களுக்காக விழித்திருப்பதையும் காண்கிறேன். உண்மையில் இது எவ்வித சந்தேகமுமின்றி பெறுமதியான காலத்தை வீணடிப்பதாகும்.
உணவு தயாரிப்பதில் நேரத்தை செலவிடல்
ரமலான் மாதம் என்றதுமே ஏனைய காலங்களை விட சிறந்த, வித்தியாசமான உணவுகளை தயாரிப்பதிலே கவனம் செல்கின்றது.ரமலான் என்பது உண்பதற்கும் பருகுவதற்குமான மாதமல்ல. மாற்றமாக, கட்டுப்படுவதற்கும் இபாதத்களில் ஈடுபடுவதற்குமான மாதமாகும். எனினும், இந்த உண்மை நிலை அநேகரினால் வசதியாக மறக்கப்பட்டுள்ளது.
சில வீடுகளில் ழுஹர் தொழுகையுடன் இப்தாரிற்கான உணவுகளை தயாரிப்பதில் குறிப்பாக பெண்கள் ஈடுபடுகின்றனர். அவசரவசரமாக ழுஹர் தொழுகையை நிறைவேற்றியவுடன் இவர்களது பணி ஆரம்பமாகி விடுகின்றது. அஸர் தொழுகைக்காக அதான் கூறப்பட்டவுடன் அல்லது சற்று தாமதித்து அதே அவசரத்துடன் அத்தொழுகையையும் நிறைவேற்றிவிட்டு மீண்டும் சமையல் பணிகளில் ஈடுபடுகின்றனர். இவர்களுக்கு அல்குர்ஆனை ஓதுவதற்கோ, திக்ருகள், தஸ்பீஹ்களில், ஈடுபடுவதற்கோ நேர அவகாசம் கிடைப்பதில்லை. இந்தக் களைப்புடன் அவர்களுக்கு இரவு நேர தொழுகையும் சிரமமாகி விடுகின்றது.
இந்நிலை மாற்றப்பட வேண்டும். எளிமையான உணவுகளுடன் நோன்பு திறத்தல், ஸஹர் செய்தல் என்பவற்றிற்கும் பழக வேண்டும். இவ்விடயத்தில் ஆண்களுக்கு கணிசமானளவு பொறுப்பிருப்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
விளையாட்டுக்கள், பொழுதுபோக்கு அம்சங்களில் நேரத்தை செலவிடல்
அருள்பாலிக்கப்பட்ட ரமலான் மாதத்தின் ஆரம்பத்துடனே சிறுவர் முதல் பெரியோர் வரை பல்வேறு விளையாட்டுக்களில் ஈடுபட ஆரம்பித்துவிடுகின்றனர். நோன்பு நோற்றிருக்கும் காலத்தை எவ்வாறாவது கழித்து விட வேண்டும் என்ற நோக்கில் இத்தகைய விளையாட்டுக்களில் ஈடுபடுகின்றனர். சிலவேளை இவ்வாறான விளையாட்டுக்கள் பொது மக்களுக்கும் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுபவர்களுக்கும் பெரும் தொல்லையாக மாறி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இமாம் கஸ்ஸாலி, ஷெய்க் ஹஸனுல் பஸரி (றஹ்) அவர்கள் கூறிய இக்கருத்தை குறிப்பிடுகிறார்கள்: அல்லாஹுதஆலா ரமலான் மாதத்தை இபாதத் செய்வதற்கான மாதமாக ஆக்கியிருக்கிறான். முன்சென்ற கூட்டத்தினர் அல்லாஹ்வுக்கு கட்டுப்படுவதில் போட்டிப் போட்டனர். அதிலே வெற்றிப் பெற்றனர். பின் வந்த சமூகத்தினர் அதனை வீணடித்து, தோல்வியடைந்து நஷ்டவாளிகளாகிவிட்டனர்.
நோன்பு திறப்பதை தாமதித்தல்
நியாயமான காரணமின்றி நோன்பு திறப்பதை சிலர் தாமதிக்கின்றனர். இது அல்லாஹ்வின் கட்டளைக்கும் நபி (ஸல்) அவர்களது முன்மாதிரிக்கும் மாற்றமாக இருப்பதை அவர்கள் உணர்வதில்லை. இரவு நேரம் வரை நோன்பை பூரணப்படுத்துங்கள் என்ற அல்குர்ஆன் வசனத்திற்கு விளக்கமளிக்கும் இப்னு கஸீர் (றஹ்) பின்வருமாறு குறிப்பிடுகின்றார். சூரியன் மறைந்தவுடன் நோன்பை திறத்தல் ஷரீஆ ரீதியான சட்டமாகும்.
அபூ தர்தா (றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: மூன்று பண்புகள் நபித்துவத்திற்குரிய பண்புகளாகும். அவை, நோன்பு திறப்பதை முற்படுத்துதல், ஸஹர் செய்வதை பிற்படுத்துதல், தொழுகையில் இடது கையின் மேல் வலது கையை வைத்தல். (தபரானி).
சூரியன் மறைவதற்கு முன்னர் நோன்பு திறத்தல்
சிலர் சூரியன் மறைவதற்கு முன்னர் அல்லது அதனை உறுதிப்படுத்தாமல் பொடுபோக்காக நோன்பை திறந்துவிடுகின்றனர். இது பிழையான செயற்பாடாகும். இப்னு ஹஸ்ம் (றஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். சூரியன் மறைந்துவிட்டதில் சந்தேகம் கொண்ட நிலையில் யாரொருவர் உணவு உட்கொள்கின்றாரோ அல்லது அருந்துகின்றாரோ அவர் அல்லாஹ்வுக்கு மாறு செய்தவர் ஆவார்.
ஸஹரை முற்படுத்துதல்
நபி(ஸல்) அவர்கள் ஸஹரை பிற்படுத்தியிருக்கின்றார்கள். ஸைத் பின் ஸாபித் (றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.“நாம் நபி (ஸல்) அவர்களுடன் ஸஹர் செய்தோம். பின்னர் தொழுகைக்காக எழுந்தோம்.” நான் அவரிடம் ஸஹர் நேரத்திற்கும் அதானிற்கும் எவ்வளவு நேரம் இருந்தது எனக் கேட்டேன். அதற்கவர், “50 வசனங்களை ஓதும் நேரம்” எனக் குறிப்பிட்டார். (புஹாரி, முஸ்லிம்)
எனவே, எஞ்சியிருக்கும் ரமழானில் நாட்களையாவது மேற் கூறிய விடயங்களிலிருந்து விலகியவர்களாக கழிப்பதற்கு முயற்சிப்போம். அல்லாஹ் எமக்கு நோன்பின் முழு பயனையும் பெறுவதற்கு அருள்பாலிப்பானாக.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக