கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

சவூதியில் 40 லட்சம் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு அங்கீகாரம்.


சவூதி அரேபியாவில் பணியாற்றும் சுமார் 40 லட்சம் வெளிநாட்டுத் தொழிலாளர்களை அந்நாட்டு அரசு முறைப்படுத்தியுள்ளது. இதன் மூலம் அவர்களுக்கு சட்டபூர்வ அங்கீகாரமும் பாதுகாப்பும் கிடைத்துள்ளது.

சவூதி அரேபியாவில் இயங்கி வரும் நிறுவனங்களில் உள்ளூரைச் சேர்ந்த பணியாளர்களை விட வெளிநாட்டுப் பணியாளர்களை அதிகமாக வைத்திருக்கும் நிலை இருந்து வந்தது. இதனால் உள்நாட்டைச் சேர்ந்தவர்கள் வேலையில்லாமல் தவிக்கும் நிலை தோன்றியது. இதையடுத்து, ஒவ்வொரு நிறுவனமும் 10 வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு ஒரு உள்ளூர் பணியாளரை வேலையில் வைத்திருப்பதைக் கட்டாயமாக்கும் "நிதாகத்' என்ற சட்டத்தை சவூதி அரசு சமீபத்தில் கொண்டு வந்தது. இதனால் இந்தியர்கள் உள்பட ஆயிரக்கணக்கான வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தங்கள் வேலையை இழக்கும் நிலை தோன்றியது.

இதனிடையே, உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் வெளிநாட்டுப் பணியாளர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு சவூதி அரசு சமீபத்தில் உத்தரவிட்டது. அதற்கு சில மாதங்கள் அவகாசமும் அளிக்கப்பட்டது. எனினும், அந்தக் காலக்கெடுவுக்குள் வெளியேறாதவர்களுக்கு சவூதி மன்னர் அப்துல்லா பின் அப்துலாசிஸ் சமீபத்தில் மன்னிப்பு வழங்கினார். அவர்கள் அனைவரும் வரும் நவம்பர் 4ஆம் தேதிக்குள் வெளியேற அவகாசமும் அளித்துள்ளார்.

சவூதியில் உரிய சட்டபூர்வ ஆவணங்களுடன் பணியாற்றும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் 40 லட்சம் பேரை அந்நாட்டு அரசு கடந்த நான்கு மாதங்களில் முறைப்படுத்தி, அங்கீகாரம் அளித்துள்ளது. தவிர, 11 லட்சத்து 80 ஆயிரம் தொழிலாளர்கள் தங்கள் தொழிலை மாற்றிக் கொள்வதாக அரசிடம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சவூதி பணியாளர் நலத்துறை துணை அமைச்சர் அப்துல்லா அபுத்னைன் கூறுகையில், ""ஏற்கெனவே உரிய ஆவணங்கள் இல்லாமலும், அரசிடம் இதுவரை பதிவு செய்யாமலும் இருந்த சுமார் 11 லட்சத்து 20 ஆயிரம் வெளிநாட்டுப் பணியாளர்கள் ஜூலை 6ஆம் தேதி வரை தங்களைப் பற்றிய விவரங்களை அளித்து, தங்கள் பணியை முறைப்படுத்திக் கொண்டுள்ளனர். இந்தக் காலகட்டத்தில், சவூதியில் பணிபுரிவதற்கான அனுமதியை 16 லட்சம் பேருக்கு வழங்கியும், புதுப்பித்தும் இருக்கிறோம்'' என்றார்.

நிதாகத் சட்டத்தின் கீழ், சுமார் 90 ஆயிரம் இந்தியர்கள் ரியாத் நகரில் உள்ள தூதரகத்தை அணுகி தங்கள் ஆவணங்களை முறைப்படுத்திக் கொண்டுள்ளனர். மேலும், சுமார் 65 ஆயிரம் இந்தியர்கள் ஏற்கெனவே தங்கள் பயண ஆவணங்களைப் பெற்றுச் சென்றிருப்பதாகவும், அவர்கள் சட்டபூர்வமாக பாதுகாப்பாக இருப்பதாகவும் இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
நன்றி:http://dinamani.com

0 கருத்துகள்: