புதுடெல்லி: மத்திய அரசு உளப்பூர்வமாக தலையிடாவிட்டால் வக்ஃப் சொத்துக்கள் மூலம் கிடைக்க வேண்டிய ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வருமானத்தை இழக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று சச்சார் கமிட்டியில் சிறப்புப் பணி அதிகாரியாக பணியாற்றிய ஸக்காத் பவுண்டேஷன் ஆஃப் இந்தியாவின் தலைவர் டாக்டர் ஸஃபர் மஹ்மூத் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் சட்ட திருத்த மசோதா குறித்து தேஜஸ் மலையாள நாளிதழுக்கு அளித்த பேட்டியில் ஸஃபர் மஹ்மூத் இதனை தெரிவித்துள்ளார்.
ஸஃபர் மஹ்மூத் தனது பேட்டியில் கூறியிருப்பது:
அந்தந்த காலக்கட்டங்களில் நிலவும் சந்தை விலையைப் பொறுத்தே வக்ஃப் நிலத்தை குத்தகைக்கு விட வேண்டும் என்ற சச்சார் கமிட்டி மற்றும் வக்ஃப் சொத்துக்கள் தொடர்பான பாராளுமன்ற கூட்டுக் கமிட்டியின் பரிந்துரையை புறக்கணித்துவிட்டு வக்ஃப் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இம்மசோதாவை மக்களவையில் நிறைவேற்றும்போது இந்த பரிந்துரை உள்பட 3 திருத்தங்களை கொண்டுவரவேண்டும் என்று மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ரஹ்மான் கானிடம் எழுத்துமூலம் கோரிக்கை விடுத்துள்ளேன்.
ஆனால், சட்டங்களை இயற்றும்போது இந்த பிரிவை உட்படுத்தலாம் என்று ரஹ்மான் கான் தெரிவித்தார். மசோதாவிலேயே திருத்தம் கொண்டு வந்தால் பின்னர் யாராலும் திருத்தம் கொண்டு வர முடியாது. அதேவேளையில் சட்டத்தை உருவாக்க கால தாமதம் ஏற்படும். அரசு தலத்தில் பணியாற்றிய எனக்கு, சட்டம் உருவாக்க ஏற்படும் காலதாமதம் குறித்து தெளிவாக தெரியும். அரசுக்கு உளப்பூர்வமான ஈடுபாடு இருந்தால் மசோதாவிலேயே திருத்தம் கொண்டு வர வேண்டும்.
வக்ஃப் போர்டுகளின் வருமானம்
வக்ஃப் போர்டுகளின் ஒரே வருமானம், வக்ஃப் சொத்துக்களை குத்தகைக்கு அளிப்பது மூலம் கிடைக்கும் வருமானாமாகும். சந்தை விலையைப் பொறுத்து குத்தகைக்கு அளிக்க வேண்டும் என்ற சட்டப் பிரிவு இல்லையெனில் சாதாரண விலைக்கு வக்ஃப் நிலத்தை குத்தகைக்கு கொடுக்கும் நிலை உருவாகும்.
மாநில வக்ஃப் போர்டுகளின் அதிகார வரம்பை வெட்டிக் குறைக்கும் வகையில் குத்தகைக்கு அளிக்கும் நடைமுறைக்கான சட்டப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது என்பது இன்னொரு பிரச்னையாகும். ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வருடங்களுக்கான குத்தகை ஒப்பந்தங்களை வக்ஃப் போர்டுகள் மாநில அரசிடம் ஒப்படைத்து அங்கீகாரம் பெற வேண்டும் என்பது சட்டப் பிரிவாகும். வக்ஃப் போர்டுகள் தங்களது ஒரே வருமானமான குத்தகைக்கான ஒப்பந்தத்தின் அங்கீகாரத்தை பெற மாநில அரசை எதிர்பார்த்து இருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. சச்சார் கமிட்டியோ, கூட்டு பாராளுமன்றக் குழுவோ இத்தகையதொரு பரிந்துரையை வழங்கவில்லை.இந்த சட்டப் பிரிவை மசோதாவில் இருந்து நீக்க வேண்டும்.
வக்ஃப் போர்டின் சி.இ.ஓ.க்கள் (முதன்மை செயல் அதிகாரிகள்) மாநில அரசில் துணை செயலாளர் ராங்கினைப் பெற்ற அதிகாரியாக இருக்க வேண்டும் என்ற மசோதாவில் கூறப் பட்டுள்ளது வரவேற்கத்தக்கதாகும். ஆனால், மாநில வக்ஃப் போர்டுகளை கட்டுப்படுத்த புதிய வக்ஃப் மசோதா மூலம் அதிகாரம் வழங்கப்பட்டுள்ள மத்திய வக்ஃப் போர்ட் கவுன்சிலின் செயலாளரின் தகுதி குறித்து தெளிவாக குறிப்பிடவில்லை. இதனால் வக்ஃப் போர்டுகளின் சி.இ.ஓ.க்களை விட குறைந்த ராங்கில் உள்ளவர்கள் மத்திய வக்ஃப் போர்ட் கவுன்சில் செயலாளராக இருக்கும் நிலை ஏற்படும். இது கவுன்சிலின் செயல்பாட்டை பாதிக்கும். மத்திய அரசின் இணை செயலாளர் ராங்குடைய அதிகாரியை கவுன்சில் செயலாளராக நியமிக்க வேண்டும் என்ற பிரிவை மசோதாவில் உட்படுத்த வேண்டும்.
அதேவேளையில், 2010-ஆம் ஆண்டு மக்களவை நிறைவேற்றிய வக்ஃப் திருத்த மசோதாவை விட மிகவும் சிறந்ததொரு மசோதாவை மாநிலங்களவை தற்போது நிறைவேற்றியுள்ளது. வக்ஃப் சொத்துக்கள் சட்டவிரோத செயல்பாட்டிற்கோ, ஆக்கிரமிப்பிற்கோ உள்ளானால் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு தண்டனை கிடைக்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
மாநில வக்ஃப் போர்டுகளின் நிர்வாக, நிதி விவகாரங்களில் மத்திய வக்ஃப் கவுன்சிலுக்கு அதிகாரம் வழங்கியிருப்பது, வக்ஃப் போர்டுகளும், மத்திய வக்ஃப் கவுன்சிலுக்கும் இடையே சச்சரவு ஏற்பட்டால் உச்சநீதிமன்றத்தில் இருந்து ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் சச்சரவை தீர்ப்பதற்கான பிரிவும் வரவேற்கத்தக்கதாகும். வக்ஃப் சொத்துக்களை ஆக்கிரமிப்பது ஜாமீன் இல்லா தண்டனை கிடைக்கக் கூடிய குற்றம் என்ற பிரிவும் வரவேற்கத்தக்கதே. வக்ஃப் சொத்துக்களை ஆக்கிரமிப்பவர்களில் அரசு உட்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அரசு ஆக்கிரமிப்பை நிறுத்தவில்லை எனில் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து மசோதாவில் தெளிவு இல்லை.
1954-ஆம் ஆண்டு வக்ஃப் சட்டம் கொண்டு வரப்பட்டது. பின்னர் அதில் திருத்தம் செய்ய 41 ஆண்டுகள் தேவைப்பட்டது. 1995-ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்ட வக்ஃப் சட்டம் பின்னர் 18 வருடங்கள் கழித்து திருத்தம் செய்யப்பட்டுள்ளது.வக்ஃப் சட்டத்தின் வரலாறு இவ்வாறிருக்க, திருத்தங்கள் எதுவும் இல்லாமல் மசோதா நிறைவேற்றப்பட்டால் அண்மை காலங்களில் அதன் குறைபாடுகளை சரி செய்ய முடியாது.
இவ்வாறு ஸஃபர் மஹ்மூத் தெரிவித்துள்ளார்.
http://www.thoothuonline.com
0 கருத்துகள்:
கருத்துரையிடுக