கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

பேராசிரியர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) மரணம்!

சென்னை: பிரபல எழுத்தாளர், மனோதத்துவ நிபுணர், பேச்சாளர் பேராசிரியர் அப்துல்லாஹ் இன்று (19/08/2013) அதிகாலை மரணமடைந்தார்.

நுரையீரல் புற்றுநோயால் அவதிப்பட்ட பேராசிரியர் அப்துல்லாஹ், சில நாட்களுக்கு முன்பு சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிட்சை பெற்று வந்தார். நேற்று உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டு வெண்டிலேட்டரில் அப்துல்லாஹ்வுக்கு சிகிட்சை அளிக்கப்பட்டது. சிகிட்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை 1.30 மணியளவில் அவர் மரணமடைந்தார்.

சேசாசலம் எனும் இயற்பெயர் கொண்ட பெரியார்தாசன் 1949 ஆகஸ்ட் 21ம் நாள் சென்னை பெரம்பூரில், வீராசாமி – சாரதாம்பாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். எளிய குடும்பமும், ஏழ்மைச் சூழலும் சேசாசலமாக இருந்தவரை சாதனையாளராக உருமாற்றம் செய்தது. சென்னை பெரம்பூரிலுள்ள R.B.C.C.C. பள்ளியில் தமது ஆரம்ப கல்வியை கற்ற அவர் பச்சையப்பன் கல்லூரியில் பட்டம் வென்றார். பின்னர் அதே கல்லூரியிலேயே 1971ல் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். லண்டன் ஆக்ஸ்போர்டு பலகலைக்கழகத்தில் மனோதத்துவத் துறையில் அவர் டாக்டர் பட்டம் பெற்றார்.

சாதீய இழிவுகளையும், சமூக கொடுமைகளையும் கண்டித்து எழுதினார், பேசினார். அவர் 120க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். பெரியாரின் முன்னிலையில் உரையாற்றி பெரியார்தாசனாக மாறினார். உலகின் பல்வேறு நாடுகளுக்கு சென்று சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார். அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்றில் விசிட்டிங் பேராசிரியராகவும் பணியாற்றினார்.

அவரிடம் நகைச்சுவை உணர்வு நிரம்ப காணப்பட்டது.
கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், மனோதத்துவ நிபுணர் என்பதோடு அவர் ஒரு நடிகராகவும் திகழ்ந்தார். பாரதிராஜாவின் ‘கருத்தம்மா’ திரைப்படத்தில் நடித்து சமூக அவலங்களை எடுத்துக் காட்டினார். மனோதத்துவத் துறையில் தாம் கற்ற பெற்ற அனுபவத்தின் மூலம் சிறந்த மனவியல் பயிற்சியாளராகப் புகழ் பெற்றார். ஏராளமானோருக்கு சிகிட்சை அளித்துள்ளார்.

அம்பேத்கரின் வழியில் பெளத்தத்தை தழுவினார் பெரியார்தாசன். பெளத்த தத்துவங்கள் குறித்து ஆய்வு நூல்களை எழுதிய அவர், பெளத்தக் கருத்துகளைப் பரப்பும் பிரச்சாரகராகவும் தீவிரப் பயணம் மேற்கொண்டார். அம்பேத்கரின் இறுதி நூலான ‘புத்தரும் அவர் தர்மமும்’ என்ற நூலை தமிழில்
மொழிபெயர்த்தார்.

இந்துக்களின் ஆன்மீக குருவாக தம்மை அறிவித்துக் கொண்ட சங்கரமட சங்கராச்சாரியாருடனும், இந்து முன்னணி இராம கோபாலனுடனும் விவாதங்கள் புரிந்த பெரியார்தாசன், தமது அழுத்தமான கேள்விகளால் அவர்களைத் திணறடித்தார். இந்து மத வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள் அனைத்தையும் கரைத்துக் குடித்த அவர், அவற்றிலிருந்து மேற்கோள்களையும், ஸ்லோகங்களையும் எடுத்துக் கூறினார்.

2010ம் ஆண்டு மார்ச் மாதம் அப்துல்லாஹ் என்று பெயர் மாற்றம் செய்து, இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக மாற்றிக்கொண்டார். மக்காவில் வைத்து இஸ்லாத்தை தழுவிய அப்துல்லாஹ், உடனே உம்ரா என்ற புனித கடமையையும் நிறைவேற்றினார். முஸ்லிமான பிறகு அழைப்புப் பணியில் தீவிர கவனம் செலுத்தினார். பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார்.

0 கருத்துகள்: