கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

முற்றிலும் இலவசம் – அது என்ன? அதாங்க “அட்வைஸ்”

இளைஞர்களுக்குப் பிடிக்காதது, முதியர்வர்களுக்குப் பிடித்தது. தெரிந்தவர்களோ தெரியதவர்களோ எங்கு போனாலும், சிறியவர் முதல் பெரியவர் வரை வயது வரம்பு இல்லாமல் அனைவருக்கும் இலவசமாகக் கிடைப்பதும், அனைத்து காலங்களிலும் பொழியும் மழை அதுதான் “அட்வைஸ் மழை”.

இங்கு போகாதே, அங்கு உட்காராதே, போனில் பேசாதே, கேம்ஸ் விளையாடாதே, அதைச் செய், இதைச் செய் என்று வீட்டில் தொடங்கி கல்லறை வரை சந்திக்கும் ஒவ்வொருவரும் பல விதங்களில் நமக்கு அறிவுரை வழங்குவதை பார்த்து இருக்கிறோம், கேட்டு இருக்கிறோம். சிலரைப் பார்த்தவுடன் பலர் அந்த இடத்தை விட்டு நகர்வதைப் பார்க்கலாம், ஏன் என்று கேட்டால் “அவர் ஒரு அட்வைஸ் பேரொளிடா… எதுக்கெடுத்தாலும் ஒரு அட்வைஸ ஸ்டாக் வச்சு இருப்பாரு” என்று பதில் சொல்வார்கள். அவர்களுக்கு பட்டப் பெயரோ பல வகையில் கிடைக்கும்: அட்வைஸ் ஆறுமுகம், பிளேடு, ரம்பம்,…

அவர்கள் கூறும் சில விஷயங்கள் நமக்கு நன்மை பயக்கும். சில விஷயங்கள் நமக்கு எரிச்சலூட்டும். சிலர் யாருக்கு எப்பொழுது அட்வைஸ் கொடுப்பது என்றறியாமல் வீட்டில் தங்கள் குழந்தைகளுக்கும், மனைவிக்கும் சொல்வது போல் பொது இடத்திலும் தங்கள் கைவரிசையை - வாய் வரிசையைக் காட்டி தேவையில்லாமல் வாங்கிக் கட்டிக் கொள்வார்கள்.

அப்படித்தான் ஒரு முதியவர் யார் என்று தெரியாத இளைஞனைப் பார்த்து, “எப்பா இங்கே வா, உன்னோட நல்லதுக்காக ஒண்ணு சொல்றேன், இத்தனை சின்ன வயசுல புகை பிடிச்சா உடம்பு என்னாத்துக்கு ஆகுரது?” என்று அவரது அட்வைஸ ஆரம்பிக்க, காதல் தோல்வியில் தன் சோகத்தை மறக்க புகைய விட்டு ஆற்றிக் கொண்டிருக்கும் இளைஞனைப் பார்த்து இப்படிச் சொன்னால் அவனுக்கு இருக்கிற ஆத்திரத்துக்கு “யோவ்… ஒன் வேலையைப் பார்த்துகிட்டு போயா சொட்டைத் தலை” என்று அவமரியாதையாக பதில் சொல்வான்.

இப்படிப்பட்ட அவமரியாதை தேவைதானா என்று கேட்டால், முதியவர்கள் சொல்லும் பதில்: “கொட்டுவது தேளின் குணம், அதைக் காப்பாற்றுவது எங்கள் குணம்” என்று முகமலர்ச்சியுடன் சொல்வார்கள். நாம் அறிவுரை கூறுவது ஒன்றும் தவறல்ல. ஆனால் எப்பொழுது, எங்கு, யாருக்கு, எந்த நேரத்தில் செய்வது என்பதை அறிந்து இருக்க வேண்டும்.

நாம் என்னதான் நண்பர்களாகவோ, உறவினர்களாவோ, அவர்களுக்கு நன்மையை மட்டுமே செய்ய கூடியவர்களாகவோ இருந்தாலும் நாமாக அவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் அட்வைஸ் என்ற பெயரில் மூக்கை நுழைப்பது சரிதானா என்று கேட்டால் ஒரு விதத்தில் சரியாக இருந்தாலும், மற்றொரு விதத்தில் தவறு என்றுதான் சொல்ல வேண்டும்.

நீங்கள் அவர்கள் நன்மையை நாடிச் சொல்லும் அறிவுரையானது உங்களை அவர்களுக்கு எதிரியாகக் காட்டும். சில நேரங்களில் உங்கள் அறிவுரை அவர்களுக்கு உங்கள் மீது வெறுப்பை ஏற்ப்படுத்தும், இதனால் உறவுகள் பாதிக்கப்படவும் வாய்ப்புண்டு. ஆனால் அவர்கள் செய்யும் சில செயல்களை உங்கள் அறிவுரை மூலம் மாற்ற விரும்பினால் சில அன்பான யுக்திகளைக் கையாண்டால் போதும்.

முதலில் அவர்களின் எண்ணங்களை, செயல்முறைகளை உற்ற நண்பர்களாக, உறவினர்களாக இருக்கும் நாம் முற்றிலும் அறிந்து இருக்க வேண்டும்.

அவர்கள் சரியானது என்று எண்ணி செய்யும் சில காரியங்கள் சில நேரங்களில் நமக்கு தவறாகத் தெரியும். உடனே அவர்களிடம் போய், “நீ இப்படிச் செய்தது தவறு, நீ இப்படித்தான் செய்து இருக்கணும்” என்று கடுகடுப்புடன் சொல்வதில் அர்த்தம் ஒன்றும் இல்லை. ஏனெனில் அவர்களைப் பொறுத்தவரை அவர்களின் பார்வையில் அவர்கள் செய்தது சரி.

இதனால் நாம் என்ன தவறு செய்தோம், ஏன் நம்மை சரி செய்து கொள்ளச் சொல்கிறார்கள் என்று எண்ணி ஒரு வித மனவேதனைக்கு உள்ளாக்கப்படுவார்கள். நீங்கள் அப்படிச் சொல்லும்போது அவர்களுக்கு உங்கள் மீது சந்தேகம்தான் எழும். நாம் செய்ததை பொறாமைப்பட்டு இப்படி நம்மை அறிவுரை என்ற பெயரில் குற்றம் சாட்டுகிறார்களோ என்று கூட தோண வைக்கும்.

ஆகையால் முதலில் அவர்களின் கோணலான பார்வையை முற்றிலும் தெரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். பின்னர் உங்கள் பார்வையில் அவர்கள் செய்ததைப் பற்றி தவறு இருந்தால் அதை நீங்கள் திருத்திக் கொள்ளலாம் அல்லது அவர்கள் செய்தது தவறாக இருந்தால், “இந்த முறை நீ செய்தது நன்றாக இருந்தது, இருந்தாலும் நான் இன்னும் அதிகமாக எதிர்பார்த்தேன். அல்லது இப்படி செய்ததற்கு பதிலாக இப்படி செய்து இருக்கலாம்” என்று அன்பாக, அரவணைப்பாக சொன்னால் போதும் அவர்களே உங்கள் வழிக்கு வருவார்கள்.

அப்படி வருபவர்களை இதுதான் சமயம் என்று கோழி அமுக்குவது போல் முழுதாக அமுக்கி ஒரே நேரத்தில் உட்கார வைத்து ஒரு மணி நேரம் தோசையைப் புரட்டி எடுக்கமால், கொஞ்சம் கொஞ்சமாக வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல் நேரம் பார்த்துச் சொன்னால், அட்வைஸ் செய்தே ஆக வேண்டும் அல்லது அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்கின்ற உங்கள் கனவும் நிறைவேறும். உங்கள் அட்வைஸை சலிப்பில்லாமல் மற்றவர்களை கேட்க வைக்கவும் முடியும். மாற்றங்களை காணவும் முடியும்.

சில நேரங்களில் நாம் சொல்லும் அறிவுரை மற்றவர்களின் மனதைப் புண்படுத்தவும் வாய்ப்புண்டு. எடுத்துக் காட்டாக, அனைவருக்கும் நல்ல தோழியாய், தோழனாய் தோன்றும் சிலர் சிலருக்கு மட்டும் ஏன் எதிரியாக தெரிகிறார்கள் என்றால் அது ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமை, போட்டி, பொறாமை என்ற பல காரணங்கள் இருக்கலாம்.

நமக்கு அப்படி ஒருவர் செய்யும் செயல்கள், அல்லது நம்மிடம் நடந்து கொள்ளும் விதம் சரியாக தெரியவில்லை என்றால் உடனே அவர்களிடம் போய், “நீ நடந்து கொள்வது சரியில்லை, நீ இப்படி செய்வதால் என் மனம் பாதிக்கப்படுகிறது” என்று சட்டென்று உங்கள் அறிவுரையைத் தொடங்கி நீங்கள் அவர்களிடம் அறிவுரையைப் பெற்று வருவதை விட முதலில் அவர்கள் நம்மிடம் மட்டும்தான் அப்படி நடந்து கொள்கிறார்களா, இல்லை எல்லோரிடமும் அப்படித்தானா என்பதை ஆராய வேண்டும்.

உங்களிடம் மட்டும் அப்படி நடந்து கொள்கிறார்கள் என்றால் குற்றத்தை அவர்கள் மீது சுமத்துவதை விட நம்மிடம் அப்படி என்ன தவறான செயல் உண்டு, ஏன் மற்றவர்களிடம் இனிமையாகப் பேசும் குணமுடையவர் நம்மிடம் கடிந்து கொள்கிறார், நமக்கு மட்டும் எதிராகத் தோன்றுகிறார் என்பதை ஆராய வேண்டும். இதற்கு பெயர்தான் “Self Test” (தன்னைத் தானே ஆய்வு செய்து மாற்றிக் கொள்ள முயற்சி செய்வது) என்பார்கள்.

ஒருவேளை மற்ற அனைவரிடமும் உங்களிடம் நடந்து கொள்வது போல் ஒரே விதமாக நடந்து கொண்டால், அவர்களின் செயல்களில் உண்மையாக மாற்றம் காண வேண்டும் என்றால், முதலில் அவர்களின் உற்ற நண்பராக ஆக முயற்சி செய்ய வேண்டும். அவர்கள் எதிர்பார்க்கும் முன்பே அவர்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதன் மூலம் அவர்களின் நம்பிக்கையைப் பெறலாம். பின்னர் உங்கள் நல் அறிவுரைகளை சிறிது சிறிதாக வழங்கலாம்.

ஏனென்றால் நமக்கு வேண்டப்பட்டவர்களிடம் உள்ள குறைகளைச் சரி செய்வது நம்முடைய கடமையாகும். அதற்காக எதற்கெடுத்தாலும் நாம்தான் குறையற்றவர் என்ற ரீதியில் எப்பொழுதும் அவர்களைச் சீண்டிப் பார்ப்பது நல்லதல்ல.

முதலில் நாம் மற்றவர்களுக்கு அறிவுரை என்ற பெயரில் அவர்களிடம் உங்களுக்கு தவறாகத் தோன்றும் சிலவற்றைச் சுட்டிக்காட்டும் முன்பு, மற்றவர்களின் இடத்தில் நம்மை வைத்து பார்க்க வேண்டும். அப்போது தான் அவர்களின் வலியை நாம் உணர்ந்து அதற்கு ஏற்றாற்போல் தகுந்த அறிவுரையை வழங்க முடியும். நமக்கு அப்படி யாராவது அறிவுரை வழங்கினால் நம் மனம் அதை எப்படி ஏற்றுக்கொள்ளும், அவர்கள் மீது நல்ல அபிப்பிராயம் வருகிறதா இல்லை தேவை இல்லாதது என்றும், நீங்கள் செய்தது சரி என்றும் நிரூபிக்க வாக்குவாதம் செய்வீர்களா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நமக்கு மற்றவர்கள் சொல்லும் அறிவுரையை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இல்லாத பொழுது, நாம் எப்படி மற்றவர்களைத் திருத்த முடியும், பக்குவமான அறிவுரையை வழங்க முடியும் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும்.

சில நேரம் நாம் செய்யத் தொடங்கும் அறிவுரையே நமக்கு அவர்கள் மூலம் அறிவுரை கிடைக்கவும், நம்மைக் குற்றம் சொல்லவும் ஒரு வாயிலைத் திறந்து வைப்பது போல் ஆகி விடும், “அது அப்படி இல்லீங்க சார், இங்க வாங்க… நான் சொல்றத கேளுங்க” என்று உங்கள் காதில் இரத்தம் வரும் வரை விட மாட்டார்கள்.

எப்பொழுதும் நம் கருத்தை அறிவுரை என்ற பெயரில் மற்றவர்களுக்கு திணிப்பதை விட, நம் அனுபவத்தை, அதனால் கிடைத்த வெற்றியை அவர்களுடன் பகிர்ந்து கொள்வது அவர்களுக்கு ஒரு சிறந்த அறிவுரையை மறைமுகமாக கொடுக்க முடியும்.

இனி நீங்கள் யாருக்காவது அட்வைஸ் செய்ய வேண்டும் என்றால் முதலில் சிந்தியுங்கள் உங்களைப் பற்றி. ஆராயுங்கள் அவர்களைப் பற்றி. பின்னர் உங்கள் பாச மழையை (அட்வைஸ் மழையை) பொழியுங்கள்.
source:http://www.thoothuonline.com

0 கருத்துகள்: