கடலூர், நாகை மற்றும் தஞ்சை மாவட்டங்களின் விவசாயத்திற்கு ஆதாரமாக விளங்கும், பழமையான கீழ்அணையை பாதுகாக்க, அப்பாலத்தின் மீது, போக்குவரத்தை முற்றிலும் தடை செய்ய வேண்டும். போக்குவரத்திற்காக, மாற்றுப் பாலம் அமைக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
மேட்டூரில் இருந்து பெருக்கெடுத்து வரும் காவிரி நீர், முக்கொம்பில் காவிரி, கொள்ளிடம் என, இரண்டாக பிரிகிறது. இதில் காவிரி கல்லணைக்கும், கொள்ளிடம் ஆறு கடலூர் நாகை மாவட்டங்களின் இடையே உள்ள பழையாறு வழியாக, வங்க கடலில் கலக்கிறது.
சர் ஆர்தர் காட்டன்:
கொள்ளிடம் ஆறு, தஞ்சை மாவட்டம், திருவிடை மருதூர் அடுத்த அணைக்கரை கிராமத்தில், தெற்கு கொள்ளிடம், வடக்கு கொள்ளிடம் என, இரண்டாக பிரிந்து, 3 கி.மீ., தூரம் பயணித்து மீண்டும் இணைந்து பின், கடலில் கலக்கிறது.கொள்ளிடம் ஆற்று நீரைத் தேக்கி வைத்து பாசனத்திற்கு பயன்படுத்த, அணைக்கரை கிராமத்தில், 1836ல் சர் ஆர்தர் காட்டன் என்ற பொறியாளரால் கீழணை கட்டப்பட்டது.கொள்ளிடத்தில் பெருக்கெடுத்து வரும் நீரை, ஒன்பது அடி உயரத்திற்கு தேக்கி வைக்கும் வகையில், தெற்கு கொள்ளிடம் ஆற்றில், 493 மீட்டர் நீளத்திற்கு, 40 மதகுகளுடனும், வடக்கு கொள்ளிடம் ஆற்றில், 372 மீட்டர் நீளத்திற்கு, 30 மதகுகளுடனும், தலா, எட்டு மணல் போக்கிகளுடன் கீழணை கட்டப்பட்டு உள்ளது.இதில், தெற்கு கொள்ளிடம் அணையில் இருந்து தெற்கு ராஜன் வாய்க்கால், குமுக்கி மண்ணியாறு மூலம், தஞ்சை மற்றும் நாகை மாவட்டங்களில், 25 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களும்; வடக்கு கொள்ளிடம் அணையில் இருந்து வடவாறு மற்றும் வடக்கு ராஜன் வாய்க்கால் வழியாக, கடலூர் மாவட்டத்தில், 1 லட்சம் ஏக்கர் விளை நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.மேலும், வடவாறு மூலம் நீர் பிடிப்பு செய்யப்படும், வீராணம் ஏரியில் இருந்து, 2004 முதல் சென்னை குடிநீர் தேவைக்கும் தண்ணீர் எடுத்துச் செல்லப்படுகிறது.கடலூர், நாகை மற்றும் தஞ்சை மாவட்டங்களில், 1.26 லட்சம் ஏக்கர் விளை நிலங்களுக்கு ஆதாரமாக உள்ள கீழணையை பொதுப்பணித் துறையினர் பராமரித்து வருகின்றனர்.
உயர்மட்ட பாலம்:
அணை ஷெட்டர்களை, ஏற்றி இறக்க உதவும், ரெகுலேட்டர்களை தினமும் கண்காணித்து பராமரிக்க, அதிகாரிகள் வாகனங் களில் சென்று வரவும், தெற்கு மற்றும் வடக்கு கொள்ளிடத்திற்கு இடையே, தீவாக உள்ள அணைக்கரை கிராம மக்களின் போக்குவரத்து வசதிக்காகவும், 1854ல் கீழணையை ஒட்டியே, 10 மீட்டர் அகலத்தில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது. இது, சென்னை கும்பகோணம் தஞ்சாவூர் பிரதான தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது.கீழணையை கடந்து தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும், பாலப் பராமரிப்பிலும் பொதுப்பணித் துறைக்கு அக்கறை இல்லை. இத்துடன், கீழணை பாலம் மீது, கனரக வாகனங்களும் அதிகளவில் சென்று வந்தன.இப்பிரச்னையால், 2008, நவம்பர் மாதம், பாலத்தின் ஒரு மதகில் விரிசல் ஏற்பட்டு, போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின், விரிசலை சரி செய்து வாகன போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. மீண்டும், 2009, மார்ச், 28ம் தேதி, வடக்கு கொள்ளிடம் பாலத்தின், 13வது மதகில் விரிசல் ஏற்பட்டு, வாகன போக்கு வரத்து தடை செய்யப்பட்டது.பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறைகளைச் சேர்ந்த, ஒன்பது பொறியாளர் கொண்ட குழு, 2009, ஏப்ரல், 21ம் தேதி, கீழணை பாலத்தை ஆய்வு செய்தனர்.
வடக்கு கொள்ளிடம் பாலத்தில், 11, 12, 13வது மதகுகளில் விரிசல் ஏற்பட்டிருந்தது; ஏழு மதகுகள் வலுவிழந்து காணப்பட்டது, ஆய்வில் தெரிய வந்தது.ஆய்வு குழுவில் இடம் பெற்ற, பொதுப்பணித் துறையின் மூத்த ஆலோசகர் மோகனகிருஷ்ணன், "162 ஆண்டு பழமை வாய்ந்த, கீழணை பாலத்தின் பாதுகாப்பு கருதி, வாகன போக்குவரத்தை முற்றிலும் தடை செய்ய வேண்டும்; வாகன போக்குவரத்திற்காக, புதிய பாலம் கட்டவேண்டும்' என, ஆலோசனை வழங்கினார்.ஆனால், அப்போதைய தமிழக அரசு, புதிய பாலம் கட்டும் வரை போக்குவரத்தை தடை செய்தால், மக்களிடம் ஆட்சிக்கு, அவப்பெயர் ஏற்படும் எனக் கருதி, ஏற்கனவே உள்ள பாலத்தை சீரமைத்து மீண்டும் வாகன போக்குவரத்தை இயக்க முடிவு செய்தது.
பாலம் மற்றும் அணைகளின் ஷெட்டர்களை சீரமைக்க, 2010ல், 6.21 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.அதில், தெற்கு மற்றும் வடக்கு பாலங்கள் தலா, 2 கோடி ரூபாய் செலவிலும்; தெற்கு அணை ஷெட்டர்கள், 1.3 கோடி ரூபாய் செலவிலும்; வடக்கு அணை ஷெட்டர்கள், 91 லட்சம் ரூபாய் செலவிலும் சீரமைக்கப்பட்டது.பின், 2012, ஜனவரி, 6ம் தேதி முதல்வர் ஜெயலலிதா, அணைக்கரை பாலங்களை வாகன போக்குவரத்திற்கு திறந்து வைத்தார். அதன்பின் கடந்த ஒன்றரை ஆண்டாக பஸ், லாரி உள்ளிட்ட, அனைத்து கனரக வாகனங்களும் கீழணை பாலங்கள் வழியாக சென்று வந்தன.
போக்குவரத்து துண்டிப்பு:
இந்த சூழ்நிலையில், கடந்த, ஜூன், 30ம் தேதி தெற்கு கொள்ளிடம் ஆற்று பாலத்தில், 16, 17வது மதகுகளுக்கு இடையேயும்; 27வது மதகிலும் மீண்டும் விரிசல் விட்டு உள் வாங்கியதும்; போக்குவரத்து அடியோடு துண்டிக்கப்பட்டது.உடனே, அவசர அவசரமாக, 4.25 லட்சம் ரூபாய் செலவில், பாலத்தில் ஏற்பட்ட விரிசலை, கான்கிரீட் கலவைக் கொண்டு பூசி, கடந்த, 16ம் தேதி முதல், இலகுரக வாகன போக்குவரத்து மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது.கான்கிரீட் கலவை மீது வாகனங்கள் செல்வதால், உராய்வு தன்மையால், மீண்டும் பள்ளம் ஏற்பட்டு, மழை நீர் தேங்கி, பாலம் வலுவிழக்கும் என்ற சிக்கல் உள்ளது. இதை தவிர்க்க, உராய்வை ஏற்படுத்தாத, ரப்பர் கலந்த தார் சாலையை, பாலத்தின் மீது அமைக்க, 49 லட்சம் ரூபாய் செலவில், ஒரு திட்ட மதிப்பிட்டை, அரசின் பார்வைக்கு, பொதுப்பணித் துறை அனுப்பி உள்ளது.வலுவிழந்த பாலத்தை, இனி எத்தனை முறை சீரமைத்தாலும், அதன் பழைய உறுதித் தன்மை இருக்க போவதில்லை. மீண்டும் போக்குவரத்தை வழக்கம் போல் அனுமதித்தால், பாலம் ஒரேடியாக பழுதடைவதோடு, அருகில் உள்ள, 176 ஆண்டு பழமை வாய்ந்த, கீழணைகளுக்கும், பாதிப்பு ஏற்படும் ஆபத்து உள்ளது.எனவே,"கீழணையை பாதுகாக்க, கொள்ளிடம் ஆற்றில், புதிய பாலம் கட்ட வேண்டும்' என, கீழணை பாசன விவசாயிகள், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து, பொதுப்பணித் துறையின், ஓய்வு பெற்ற கண்காணிப்பு பொறியாளர் ராமசாமி கூறியதாவது:நாடு சுதந்திரம் அடைவதற்கு முன், பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் சாலைகளும் இருந்தன. இதன் காரணமாக, அணைகளை ஒட்டியே, பாலங்கள் கட்டப்பட்டன. அதன் பிறகு, நெடுஞ்சாலை துறை உருவாக்கப்பட்டு, தனியாக செயல்பட்டு வருகிறது.பழமை வாய்ந்த கீழணையை ஒட்டியுள்ள பாலம், அளவுக்கு அதிகமான வாகனப் போக்குவரத்தால், வலுவிழுந்து உள்ளது. கீழணையைப் பாதுகாக்க, பாலத்தில் போக்குவரத்தை முழுமையாக தடை செய்ய வேண்டும். சாலை போக்குவரத்திற்கு, தேசிய நெடுஞ்சாலை, புதிய பாலம் கட்ட வேண்டும். தற்போதுள்ள பழைய பாலத்தை, பொதுப்பணித் துறை தொடர்ந்து பராமரித்து வர வேண்டும்.இவ்வாறு ராமசாமி கூறினார்.
மணல் லாரிகள்:
அணைக்கரை பாலம் சீரமைக்கப்பட்டு, முதல்வர் ஜெயலலிதாவால் வாகன போக்குவரத்து மீண்டும் துவக்கி வைக்கப்பட்ட பின், தெற்கு கொள்ளிடம் ஆற்றில், முள்ளங்குடியில், அரசு மணல் குவாரி துவங்கப்பட்டது.இங்கு மணல் ஏற்றி வரும் லாரிகள் அனைத்தும், அணைக்கரை பாலம் வழியாகவே சென்று வந்தன. தினமும், 400க்கும் மேற்பட்ட, மணல் லாரிகள் அதிக சுமையுடன் சென்று வந்ததால், அணைக்கரை பாலம் மேலும் வலுவிழந்தது.
வி.கே.டி., சாலை இழுபறி:
கீழணைப் பாலம் பழுதடைந்து உள்ளதை, 2009ல் பொறியாளர் குழு உறுதி செய்தது. இதைத் தொடர்ந்து, விக்கிரவாண்டி கும்பகோணம் தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை திட்டத்தில்(வி.கே.டி.,சாலை), தஞ்சை மாவட்டம் தத்துவாச்சேரி முதல் அரியலூர் மாவட்டம், தென்னவ நல்லூர் கிராமம் வரை, அணைக் கரை கொள்ளிடம் ஆற்றில், 1 கி.மீ., தூர புதிய பாலத்துடன், 5 கி.மீ., தூர புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கு, நிலம் கையகப்படுத்த, மத்திய அரசு, 14.27 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது.நிலம் கையகப்படுத்த, அரியலூர் மற்றும் தஞ்சை மாவட்ட நிர்வாகங்கள் சுணக்கம் காட்டின. நான்கு ஆண்டுக்குப் பின், ஒரு வழியாக, நில அளவீடு செய்து, நில உரிமையாளர்களுக்கு, "நோட்டீஸ்' வழங்கப்பட்டது. அணைக்கரை பாலம் மற்றும் புறவழிச் சாலைக்கான நிலம் கையகப்படுத்தினாலும், பணியை தற்போதைக்கு துவங்க முடியாத நிலையே நீடித்து வருகிறது. இதற்கு வி.கே.டி., சாலை திட்டப் பணி தான் காரணம்.
டெண்டர்:
வி.கே.டி., சாலை திட்டத்தில், 950 கோடி ரூபாய் செலவில், இருவழிச் சாலை அமைக்க, மதிப்பீடு தயாரித்து, நிலங்களை கையகப்படுத்தும் பணி, விழுப்புரம், கடலூர் மாவட்டங் களில் நடைபெற்று வருகிறது. இதன் பிறகே, சாலை பணி துவங்கும். இதற்கு கடந்த ஆண்டு, தேசிய நெடுஞ்சாலை ஆணயம் (நகாய்), "டெண்டர்' கோரியது. ஆனால், இதில் எந்த நிறுவனமும் பங்கேற்கவில்லை.இந்த சாலையில், சரக்கு வாகனங்களின் போக்குவரத்து குறைவாக உள்ளதால், முதலீடு செய்யும் தொகையை, குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் எடுப்பது சிரமமாக இருக்கும் என்பதால், "டெண்டர்' எடுக்க எந்த நிறுவனமும் முன்வரவில்லை.இதுகுறித்து, "நகாய்' திட்ட மேலாளர் ஹெரால்டு ஆண்டனி கூறியதாவது:வி.கே.டி., சாலை திட்டத்தில், அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில், 1 கி.மீ., நீளத்திற்கு பாலம் அமைக்கப்பட உள்ளது. இதற்கு, தேவையான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. நிலம் கையகப்படுத்தும் பணி முடிந்ததும், அடுத்தாண்டு, "டெண்டர்' விடப்பட்டு பணிகள் துவங்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக