கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

உமர் பின் கத்தாப் (ரலி): "உத்தம அரசியலின் அரிச்சுவடி"

{கட்டுரை சற்றே பெரிது, அவசியம் பொறுமையாக படித்து பார்க்கவும்.}

வரலாற்றின் தவறுகள் ஒரே மாதிரியானவை ஆட்களும் இடங்களுமே மாறுபடுகின்றன என "வார்த்தை சித்தர்" வலம்புரி ஜான் கூறுவார். இது, மற்றெவரையும் விட ஆட்சியாளர்களுக்கு சரியாகப்பொருந்தும்.

ஆதிக்கம் செய்வதற்காகவும், அளவு கடந்த பணம் சம்பாதிப்பதற்காகவும் ஆட்சிக்கு வருகிறவர்கள் அல்லது ஆட்சிக்கு வந்த பிறகு இந்த தவறுகளை செய்பவர்கள், எகிப்தின் அன்றைய பேரரசன் பிர்அவ்னிலிருந்து நேற்றைய அதிபர் ஹோஸ்னி முபாரக் வரை கேவலமாக வீழ்ந்துபடுகிறார்கள். பெற்ற பெருமையை இழந்து மாய்கிறார்கள். வரலாற்றில் அவர்களுக்குரிய இடம் அழிக்கப்படுகிறது.

மக்களது அபிமானத்தோடு ஆட்சிக்கு வருகிற பலரும் கூட வாழையடி வாழையாக வரலாறு சொல்லித் தருகிற இந்தப் பாடத்தை காலப்போக்கில் மறந்து விடுகிறார்கள். வரலாற்றின் பெரிய சோகமே வரலாற்றிலிருந்து யாரும் பாடம் பெறவில்லை....என்பது தான்...!

இந்த உலகிலிருந்து எதைத் நிரந்தரமாக தம்மோடு வைத்துக் கொள்ள முடியும்..? என்ற கேள்வி குறித்து ஆட்சியிலிருப்பவர்கள் சிறிதளவாவது சிந்திக்கிறார்களா..? என்ற கேள்வி பிரம்மாண்டமாய் எழுந்து நிற்கிறது. மாபெரிய சாம்ராஜ்யங்களை கட்டியாள்பவர்கள், வாழ்க்கையை பற்றிய சாதாரணமான தத்துவத்தை கூட ஏன் மறந்து விடுகிறார்கள் என்பது புதிராகவே எஞ்சி நிற்கிறது.

அரபுப் பாலவனத்தில் தந்தையுடையவும், சின்னம்மாக்களுடையவும் ஓட்டகைகளை மேய்க்கிற சாதாரண இடையராக இருந்து, 22 ½லட்சம் சதுர மைல்களை 10 ஆண்டுகள் சர்வ வல்லமையுடன் அரசோட்சிய மாமன்னராக உயர்ந்த, இஸ்லாமின் இரண்டாவது ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களின் வாழ்க்கை வரலாறு ஒவ்வொரு ஆட்சியாளருக்கும் பரிசாக வழங்கப்படவேண்டும். அதிகார வாழ்வின் சரியான அடையாளம் எது என்பதையும், நீடூழி வாழ்தலுக்கான இரகசியம் என்னவென்பதையும் அந்த வரலாறு குன்றிலிட்ட விளக்காக உலகிற்கு வெளிச்சமாக உணர்த்திக் கொண்டிருக்கிறது.

வரலாறு பல வீரர்களை பார்த்திருக்கிறது. உமரைப் போன்ற ஒரு வெற்றியாளரைப் பார்த்ததில்லை.

பல வெற்றியாளர்களை சந்தித்திருக்கிறது. உமரைப் போல ஒரு வாழ்நாள் சாதனையாளரை அது கண்டதில்லை.

பல அரசியல் மேதைகளை பார்த்திருக்கிறது. உமரைப் போல ஒரு தொலை நோக்கு கொண்டவரை அது சந்தித்ததில்லை.

பல ஆட்சித்தலைவர்களை பார்த்திருக்கிறது. உமரை போன்று, ஏழையாக எவரும் அரசாட்சி செய்ததில்லை.

உமரைப் போல தொண்டர்,

உமரைப் போல சாமாண்யர்,

உமரைப் போல கண்டிப்பானவர்,

உமரைப் போல நிர்வாகம் செய்தவர்,

உமரைப் போல அமைதியை பராமரித்தவர்,

உமரைப் போல நீதியாக நடந்து கொண்டவர்,

உமரைப் போல சட்டத்திற்குட்பட்டு வாழ்ந்தவர்,

உமரைப் போல குடும்பம் நடத்திய ஆட்சியாளர்,

உமரைப் போல தன் குடிமக்களை பாதுகாத்தவர்,

உமரைப் போல பிரச்சினைகளுக்கு தீர்வுகண்டவர்,

உமரைப் போல ஒட்டுப் போட்ட ஆடையணிந்தவர்,

உமரைப் போல வளர்ச்சிப் பணிகளை கவனித்தவர்,

உமரைப் போல தன் அதிகாரிகளை கண்காணித்தவர்,

உமரைப் போல எதிரிகளை அஞ்சி நடுங்கச் செய்தவர்,

உமரைப் போல தன் சமூகத்திற்கு பாக்கியமான மனிதர்,

உமரைப் போல முன்னேற்றத்திற்கு வழியமைத்துக் கொடுத்தவர்,

உமரைப் போல திறமையாளர்களைப் பயன்படுத்திக் கொண்டவர்,

உமரைப் போல சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்டவர்,

உமரைப் போல இரண்டாம் கட்டத்தலைவர்களுக்கு வாய்ப்பளித்தவர்

என்று இந்த உலகில் எவரையும் சுட்டிக்காட்டுவது அரிது.

நிகர் சொல்ல முடியாத மனிதர் என்ற வார்த்தை ஹஜ்ரத் உமர்(ரலி) அவர்களுக்கு பொருந்துவது போல மற்ற எவருக்கும் பொருந்தாது.

மிகச் சாதாரண நிலையிலிருந்து அதிஉன்னதமான நிலைக்கு தான் உயர்ந்து, தன்னுடை சமூகத்தையும் உயர்த்திய ஒரு தலைவராக மட்டுமல்ல, உத்தமராகவும் ஒரு மனிதரின் வாழ்கையை படிக்க வேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டீர்கள் என்றால்.. உமர் பின் கத்தாபின் வரலாற்றை ஒரே ஒரு முறை படித்து பாருங்கள். அந்த ஈர்ப்பிலிருந்து நீங்கள் விடுபட மாட்டீர்கள். இவர் போல இன்னொருவரா..??? என்று நீங்கள் மறுக்கவே செய்வீர்கள்..!

அவர் முஸ்லிம்களுக்கு மட்டுமே உரியவர் அல்ல..

வெற்றியாளராக வாழ நினைக்கும் அனைவருக்குமே உரியவர்.

சாமான்ய வாழ்விலிருந்து சாதனை வாழ்விற்க்கும்,

சாதனை வாழ்விலிருந்து சரித்திர வாழ்விற்கும்,

சரித்திர வாழ்விலிருந்து நிரந்தர வாழ்விற்கும்

அவரது வாழ்வு ஒரு இலக்கணம்.

இஸ்லாம் என்ற ஒற்றைச் சொல் இந்த உலகில் செய்த மந்திர மாற்றம் என்ன என்பதை தெரிந்து கொள்வதற்கு உமர்(ரலி) ஒரு உதாரணம் போதும்.

முஹம்மது (ஸல்) மனித சமூகத்திற்கு எதை விட்டுச் சென்றார் என்பதை கணக்கிடுவதற்கு உமர்(ரலி) ஒரு உதாரணம் போதும்.

இறைவன் இந்த உலகில் மனிதர்களை உருவாக்கியதற்கு என்ன காரணம் என்பதை உண்ர்ந்து கொள்வதற்கும் உமர்(ரலி) ஒரு உதாரணம் போதும்......

கிபி 586 ல் மக்காவின் பிரபலமான குறைஷிக் குடும்பத்தின் பனூ அதீ கிளைப் பிரிவில் கத்தாப் பின் நுபைல் என்பவரின் மத்திய தரக்குடும்பத்தில் உமர் (ரலி) பிறந்தார்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை விட 13 வயது இளையவரான, சிவப்பேறிய வெண்மை நிறம் கொண்ட அவர் வலிமையான திடகாத்திரமான உடல்வாகும் கொண்டிருந்தார். குதிரையில் அவர் ஏறி உட்கார்ந்தால் நிற்பது போல தெரியும் எனும் அளவு உயரமானவர். அன்றைய அரபகத்தில் எழுதப் படிக்கத் தெரிந்த 17பேரில் ஒருவராக இருந்த அவர் மல்யுத்தம் குதிரையேற்றம் உள்ளிட்ட தற்காப்புக் கலைகளையும் கற்றிருந்தார். கவிதைகளோடும் இலக்கியத்தோடும் கூட அவருக்கு அழுத்தமான தொடர்பு இருந்தது. அலாதியான பேச்சுத்திறன் அவரிடமிருந்தது.

ஆனாலும் தந்தையின் அன்பான அரவணைப்பு அவருக்கு கிட்டியதில்லை. தந்தை கத்தாப், உமர் விசயத்தில் எப்போதும் கடுமையாகவே நடந்து கொள்வார் என வரலாற்றாசிரியர்கள் பலரும் குறிப்பிடுகிறார்கள்.

உமர் (ரலி) பிறக்கிற போதே அரசியல்வாதியாகப் பிறந்தார் என்றும் சொல்லலாம். அரபுக்கு குடும்பங்களுக்கிடையே சண்டைகள் மூள்கிறபோது பேச்சு வார்த்தைக்கு செல்கிற சஃபாரத் எனும் தூதுப் பொறுப்பு அவருடைய பனூஅதீ குடும்பத்திற்குரியதாக இருந்தது. உமர் (ரலி)யிடம் அதற்குரிய பேச்சுத்திறன் இயற்கையாகவே இருந்தது. அரசியல் அவரது இரத்தத்தில் கலந்திருந்ததற்கு இது கூட காரணமாக இருக்கலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோடு தொடர்பு கொண்டு இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பு அந்த வீரத்திருமகனுக்கு வாழ்க்கைகான இலக்கு தெளிவில்லாமல் இருந்தது. இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போதித்த சத்தியத்தை உயர்த்திப் பிடிப்பதே அவரது குறிக்கோளாக மாறியது. மிகத் தீரமாகவும், தீவிரமாகவும் ஈடுபாட்டோடும் தியாகத்தோடும் அந்தப் பாதையில் அவர் வீர நடை போட்டார். அதனால் "அல்பாரூக்" சத்தியத்தை திட்டவட்டமாக தெரிந்தவர், அதன் வழி நடப்பவர் என்ற சிறப்பு அடைமொழி அவருக்கு வழங்கப்படலாயிற்று.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன் அரபுப்பாலைவனம், ஆதிக்க எண்ணம் கொண்டோர் திரும்பியும் பார்க்காத பூமியாக இருந்தது. ஒரு திட்டமிட்ட அரசியலமைப்போ ஆட்சி முறையோ அங்கே இருக்கவில்லை. ஏன் அரசு என்ற ஒன்று அங்கு செயல்பட்டதில்லை. குடும்ப பஞ்சாயத்து தான் ஒரே அரசியல் முறையாக அங்கு நடைமுறையில் இருந்தது.

முஹம்மது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அரபுலகின் முதல் அரசியல் தலைவராக உருவெடுத்தார். சிறிய நகரான மதீனாவின் தலைவர் என்ற நிலையிலிருந்து ஏமன், பஹ்ரைன் உள்ளிட்ட அரபு தீப கற்பத்தின் ஆட்சியாளரக உயர்ந்த பிறகே முஹம்மது (ஸல்)அவர்கள் மறைந்தார்கள். அவர் வரலாற்றிற்கு இஸ்லாமிய சமயத்தை மட்டுமல்ல புதிய அரபு அரசாங்கத்தையும் சேர்த்தே விட்டுச் சென்றார்.

அந்த சமயத்தையும் அரசாங்கத்தையும் முழு உலகிற்கும் முன்னெடுத்துச் செல்கிற சிறந்த தொண்டர் படையை உருவாக்கியது முஹம்மது நபிகள் நாயகத்தின் மகத்தான சாதனையாகும். இந்த ஒரு அம்சமே முஹம்மது நபியை முழுமையடைந்த சாதனையாளராக உலகிற்கு காட்டுகிறது. வரலாற்றின் பல தலைவர்களுக்கும் வாய்க்காத பேறு இது.

முஹம்மது நபியின் முழுமையடைந்த, சாதனையின் முதன்மையான வெளிப்பாடாக, இஸ்லாத்தின் முதல் ஜனாதிபதி "அபூபக்கர் சித்தீக்" திகழ்ந்தார். அன்னாருடைய இரண்டரை ஆண்டு கால ஆட்சிக்குப் பிறகு இஸ்லாமிய சிற்றரசுக்கு பொறுப்பேற்ற உமர், அந்த சாதனையின் சிகரமான வெளிப்பாடாக மிளிர்ந்தார். முஹம்மது நபியின் சமயத்தையும், அரசியலையும் அகில உலகிற்கும் அவர் முன்னெடுத்து நடந்தார்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறப்பதற்கு 80 நாட்களுக்கு முன் அவரது இறுதி ஹஜ்ஜின் போது அரபா பெருவெளியில் “உங்களது மார்க்கம் நிறைவு பெற்று விட்டது’ என்று பிரகடணப்படுத்தினார். அந்தப் பிரகடணத்தின் முழு கணபரிமாணத்தையும் பிற்கால வரலாறு உமரின் வடிவத்தில் கண்டது.

மதீனாவில் தோன்றிய சிற்றரசு சில ஆண்டுகளில் மாபெரிய பேரரசானது. அன்றைய வல்லரசுகள் உம்ரின் காலடியில் வீழ்ந்தன். படோபடமிக்க அன்றைய சாஸானிய பாரசீகப் பேரரசு முற்றிலுமாக அவரிடம் வீழ்ந்தது. கம்பீரம் மிக்க அன்றைய பைஜாந்திய ரோமப் பேரரசின் மூன்றில் இரண்டு பங்கை அவர் வாகை சூடினார். பாரசீகம், இராக், சிரியா, பாலஸ்தீனம், லிபியா, எகிப்து, ஆர்மீனியா, இன்றைய ஆப்கானிஸ்தானின் சில பகுதிகள் வரை அவரது சாம்ராஜ்ய எல்லை விரிந்தது.

வெற்றி கொள்ளப்பட்ட பகுதிகள் அனைத்திலும் திட்டமிட்ட நீதி மிக்க நிர்வாகத்தை உமர்(ரலி) வழங்கியதால் உமர் என்ற ஒற்றைப் பெயர் மக்களுக்கு ஆறுதலை அளிக்கிற சொல்லாகவும், எதிர்களை கிலிபிடிக்கச் செய்கிற சொல்லாகவும் எங்கும் எதிரொலித்தது. இத்தனையும் ஒரு பத்தாண்டுகளுக்குள் நடந்தது. அதிலும் ஆச்சரியம் என்னெவென்றால் தன்னுடைய படை வென்றெடுத்த பல பகுதிகளை அவர் நேரில் சென்று பார்க்க கூட வாய்ப்புக் கிட்டவில்லை. மதீனா நகரின் பள்ளிவாசல் முற்றத்தில் ஒரு பஞ்சாயத்து தலைவர் போல உட்கார்ந்து கொண்டு பல லட்சம் சதுர மைல்களை அவர் ஆட்சி செய்தார். 

தனது நிர்வாக நிலப்பரப்பின் எந்த மூளையிலும் என்ன நடக்கிறது என்பதை அவர் அறிந்து கொண்டார். நாட்டை பல பகுதிகளாக பிரித்து தகுதி வாய்ந்த நம்பிக்கைகுரிய ஆளுநர்களை நியமித்து அவர்களை தன் கைப்பிடியில் வைத்துக் கொண்டார். ஆளுநர்களின் ஒரு சிறிய தவறும் கூட, அது தொழுகை நடத்துவதில் செய்யப்படும் சிறு குறையாக இருந்தாலும் கூட மதீனாவில் விசாரிக்கப்படும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதிகாரிகள் மீது புகார் அளிப்பவர்கள் தங்களது புகாருக்கு மேல் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை அறிந்து கொண்டனர்.

அதே நேரத்தில் புகார் கொடுத்தவர்கள் அச்சமற்று வாழ்வதற்கான அடிப்படையான உத்தரவாதமும் உமர் (ரலி) ஆட்சியில் மக்களுக்கு கிடைத்தது. அன்றைய பூமிப்பந்தின் சரி பாதியை சூழ்ந்திருந்த இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் மொத்த நிலப்பரப்பும் உமர் என்ற ஒற்றைக் குடையின் கீழ் நீதி தவழும் நிம்மதியில் தழைத்திருந்தது.

19 ம் நூற்றாண்டைச் சேர்ந்த அமெரிக்க இலக்கியவாதியும், அரசியல் பிரமுகரும் வரலாற்று ஆய்வாளருமான வாசிங்டன் இர்விங்க், உமர் (ரலி) அவர்களின் வாழ்க்கை முறையையும் ஆட்சி முறையையும் பற்றி சில வரிகளில் ஒரு சித்திரம் தருகிறார். உலகிற்கு உமர் அவர்கள் விட்டுச் சென்ற தடங்களில் ஒரு சிறு பதிவு அது. இர்விங் எழுதுகிறார்.

“உமரின் முழு வரலாறு அவரை தீட்சணயம் மிக்க அறிவாளியாகவும், எதற்கும் வளையாத நேர்மையாளராகவும், நீதியின் மீது அதிக பிடிமானம் கொண்டவராகவும் காட்டுகிறது. இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை நிறுவதிலும், முஹம்மது நபியின் நடைமுறைகளை எடுத்துச் செல்வதிலும், அபூபக்கருக்கு உதவுவதிலும் அவர் அனைவரைக் காட்டிலும் முன்னணியில் இருந்தார். முஸ்லிம்களால் விரைவாக கைகொள்ளப்பட்ட பகுதிகள் அனைத்திலும் சட்டத்தின் கட்டுப்பாடான ஆட்சியை வழங்குவதற்காக தீட்சண்யம் மிக்க நடைமுறைகளை அவர் நிறுவினார். 

படைத்தலைவர்கள் மீது அவரது பிடி இரும்புப்பிடியாக இருந்தது. படைத்தலைவர்களை தன்னுடைய கட்டுக்குள் வைத்திருந்தது அவரது ஆட்சித்திறனுக்கு ஒரு அடையாளமாகும். படைத்தலைவர்கள் பிரபலமானவராகவும், வெகு தூரத்தில் அவர்கள் வென்றெடுத்த பகுதிகளில் இருந்த போதும் உமருக்கு கட்டுப்படுவதிலிருந்து அவர்கள் துளியும் விலகவில்லை.

எளிமையான வாழ்க்கையை மேற்கொள்வதிலும், ஆடம்பரத்தை உதறுவதிலும் தனக்கு முந்திச் சென்ற இறைத்தூதருடையவும், அபூபக்கருடையவும் முன்னுதாரணத்தை அவற்றை அப்படியே பின்பற்றினார். தான் கடைபிடித்த அதே வழிமுறைகளை தன்னுடை படைத்தலைவர்களுக்கும் அவர் கடிதம் மூலம் அறிவுறுத்தினார்.

“ஆடம்பரமாக உண்ணுவதிலும், ஆடை அணிவதிலும் பாரசீகர்களின் பகட்டை உங்களுக்கு நான் எச்சரிக்கிறேன். உங்களது தேசத்தின் எளிமையையே நீங்கள் தொடர்ந்து கடைபிடியுங்கள்..! அல்லாஹ் உங்களுக்கு தொடர்ந்து வெற்றியை தருவான் என்று தொடர்ந்து வலியுறுத்தினார். இத்தகை குற்றச்சாட்டு எந்த அதிகாரி மீதாவது சொல்லப்பட்டால், அவருக்கு கடுமையாக தண்டனை வழங்கினார். 

அரசாங்கத்திடம் மிஞ்சியிருக்கிற பணத்தை, வாரந்தோறும் பங்கு வைத்து, அவர் கேட்டு வருகிறவர்கள் அனைவருக்கும் கொடுக்காமல், தேவையுடையவர்களை கண்டறிந்து பங்கு வைத்தார். “ இந்த உலகின் அருள் வளங்களை அல்லாஹ் நம்மீது பொழிவது, நாம் நமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவேண்டும் என்பதற்காகவே அன்றி நாம் செய்த நனமைகளுக்கான கூலியாக அல்ல. அவைகளுக்கான கூலி மறுமையில் கிடைக்கும் என்று அவர் கூறுவார்.

இர்விங்க்கின் இந்த வார்த்தைகள் உமர் (ரலி) அவர்களின் ஆட்சி முறையையும், வாழ்க்கை போக்கையும் ஒரு சேர விவரிக்கின்றன என்றாலும் உமர் (ரலி) அவர்களின் தனிப்பட்ட வாழ்வியல் நடைமுறைகளும், ஒழுங்கமைப்பும், நீதியுணர்வும், பக்தியும், சமூக அக்கறையும், மதிநுட்பம் மிகுந்த நடவடிக்கைகளும் அவ்வளவு எளிதில் வார்த்தைகளுக்கு சிக்கி விடக்கூடியதல்ல.

அவரது வரலாற்றை வாசிக்கிற யாரும் ஆச்சரியப்படாமலும், அழாமலும் வாசித்து விட முடியாது. 18 ம் நூற்றாண்டின் இங்கிலாந்தில் மிகவும் பிரபலமான வரலாற்றாசிரியர் கிப்பன் அந்தஆச்சரியத்தை வெளிப்படுத்துகிறார்.

"Yet the abstinence and humility of Umar were not inferior to the virtues of Abu Bakr: his food consisted of barley bread or dates; his drink was water; he preached in a gown that was torn or tattered in twelve places; and a Persian satrap, who paid his homage as to the conqueror, found him asleep among the beggars on the steps of the mosque of Muslims- Gibbon - In The Decline and Fall of the Roman Empire.

“தொளிக்கோதுமையினால் செய்யப்பட்ட ரொட்டி அல்லது பேரீத்தம் பழங்களே அவரது உணவாகவும், சாதரண தண்ணீரே அவரது பானமாகவும் இருந்தது. அவரது சட்டை பணிரெண்டு இடங்களில் தையல் போடப்பட்டிருந்தது. பாரசீக இராஜதந்திரி ஒருவர் மரியாதை நிமித்தமாக அவரை சந்திக்க மதீனாவுக்கு வந்த போது பள்ளிவாசலின் படிக்கட்டுகளில் ஏழைகளோடு ஏழையாக உமர் உறங்கிக் கொண்டிருக்க கண்டார்.”

மகுடம் இல்லை. அரச மாளிகை இல்லை. காவலர்களோ ஏவலர்களோ இல்லை, குதிரைப் பூட்டிய சாரட் வண்டிகள் இல்லை. வெண்சாமரம் இல்லை. துதிபாடிகள் இல்லை. முரசு இல்லை. ஒற்றைச் சவுக்கை மட்டும் வைத்துக் கொண்டு அந்த ஏழை அரசாண்ட அழகை சொல்லி முடிக்க வார்த்தைகளே இல்லை.

அந்தப் பேரரசர் பாலஸ்தீனத்தின் வெற்றியை உறுதி செய்வதற்காக ஜெரூஸலம் நோக்கிப் புறப்பட்ட போது அது ராஜபவனியாக இருக்கவில்லை. அவர் பாலஸ்தீனுக்குள் நுழைந்த அழகுக் காட்சியை சொல்லிச் சொல்லி நெகிழாத வரலாற்றாசிரியர்களே இல்லை.

ஒரே ஒரு பணியாளரை அழைத்துக் கொண்டு மதீனாவிலிருந்து புறப்பட்ட உமர் பாலஸ்தீனத்திற்கு நுழைந்த போது அவரது பணியாளர் ஒட்டகத்தின் மீது அமர்ந்திருக்க உமர் ஒட்டகத்தை இழுத்துக் கொண்டு வந்தார்.

இது தேர்தல் நேரத்தில் கிழவியை கட்டிப் பிடிக்கிற நடிப்பல்ல. நபிகள் பெருமானாரிடமிருந்து உமர் வாழ்க்கையை கற்றுக்கொண்ட இயல்பு.

உமரின் வாழ்வு முறைகள் நடிப்பாக இருந்திருக்குமானால் அவர் பெற்ற வெற்றிகள் அவர் காலத்திலேயே காணாமல் போயிருக்கும். அரிதாரம் அதிக நேரத்திற்கு நிலைக்காது அல்லவா..?

வலுவுள்ளதே வெல்லும் (survival of fittest) என்பது உயிரியல் தத்துவம். ஆனால் தரமுள்ளதே நிலைக்கும் என்பது உலக அனுபத்தின் சாரம். உமரின் தரமே அவரது வெற்றிகளின் நிலைத்தன்மைக்கு காரணம்.

ஆட்சிக்கு வந்த பிறகு ஆட்சியின் சுகத்தை அனுபவிப்பதை அவர் இலக்காக கொள்ளவில்லை என்பது உமர் (ரலி) தரத்தை உயர்த்திய பிரதான செய்தியாகும்.

பகட்டோடு நடந்து கொண்டால் தான் அரசியலில் பிழைக்க முடியும் என்று பலர் நினைக்கிறார்கள். எளிமை தான் நிலைக்கும் என்பதை ஹஜ்ரத் உமர் (ரல்) அவர்களின் வாழ்வு நிஜப்படுத்தியிருக்கிறது.

முஸ்லிம்கள் ஏழைகளாக இருந்த போது எப்படி வாழ்ந்தார்களோ அதே வாழ்வு முறை உமர் ஆட்சிக்கு வந்த பிறகும் தொடர்ந்தார் என்று வரலாறு கூறுகிறது. (he continued to live much as he had when Muslims were poor and persecuted.)

துறவிகள் கூட இன்று கோடீஸ்வரர்களாக வாழ்கிறார்கள். ஆசிரமம் நடத்த குட்டித்தீவுகளும், ஆகாயப் பயணத்திற்கு குட்டி விமானங்களும். தரை வழிப்பயணத்திற்கு ரோல்ஸ்ராய்ஸ் கார்களும், தியானம் செய்ய பஞ்சு மெத்தைகளும், "ஏசி" மிஷின்களுமாக வலம் வருகிறார்கள். சந்நியாசிகளே இப்படி இருந்தால், சர்க்கார் நடத்துபவர்கள் எப்படி இருப்பார்கள்....?

உலகின் மிகப்பெரிய ஏழை நாடான இந்தியாவின் நாடாளுமன்ற உறுப்பினர்களை எண்ணிப்பாருங்கள் 549 உறுப்பினர்கள் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கணக்கு காட்டிய கோடீஸ்வரர்கள். இன்னும் முக்கால்வாசிப்பேர் கணக்கு காட்டாத கோடீஸ்வரர்கள். சாமானிய மனிதர்கள் பத்து பேர் இருந்தால் அது ஆச்சரியமே..!

நூற்றுப் பத்து கோடிக்கும் மேற்பட்ட ஏழைகளை கொண்ட நாட்டில் வறுமையின் வலி அறியாதவர்கள் நாட்டுக்கு என்ன செய்வார்கள்..? நாட்டு மக்களுக்குத்தான் என்ன செய்வார்கள்..?

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களிடம் ஒரு பெரும் சர்வதேச தொழிலதிபருக்குண்டான ஸ்டைல் மிளிர்வதை கவனியுங்கள். மக்களின் பிரச்சினகள் குறித்து யோசிக்கிற யோக்கிய அம்சம் துளியும் அதில் இல்லாத்தை காண்பீர்கள்..!

மக்களிடம் காலில் விழாத குறையாக சில இடங்களில் காலில் விழுந்தும் கையை பிடித்தும் கெஞ்சி ஓட்டுப் பொறுக்கிறவர்கள் தேர்தலில் வெற்றியடைந்த பிறகு, அந்த மக்களின் எஜமானார்களாக தங்களை கருதிக் கொள்கிறார்கள்.

அரசியல் என்பது மக்களுக்கு சேவையாற்றும் தளமாக இல்லாமல், அதிகாரத்தின் ருசியை அனுபவிக்கும் சாப்பாட்டு மேஜையாகவும், முறையற்ற வகையில் பணத்தை பெருக்கிக் கொள்ளும் சூது வியாபாரமாகவும் மாறி விட்டது என்பது கண்கூடு.

இந்தியாவில் புதிய மக்கள் அரசு அமைந்த போது அதை வாழ்த்திய காந்தியடிகள்” ஏழ்மையை அகற்றும் பணியில் ஈடுபடுவதற்காகவே இந்தப் பதவிகள் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்பதை மறவாமல் செயற்படுங்கள்‘ என்று கேட்டுக் கொண்டார்.

இன்றைக்கு அரசியலுக்கு வருகிறவர்கள் இரண்டே இரண்டு இலக்குகளோடு களத்தில் இறங்குகிறார்கள்.

ஒன்று பணம் சம்பாதிப்பது. இரண்டாவது சம்பாதித்த பணத்தை அரசியல் தொடர்பை வைத்து மேலும் அதிகமாக பெறுக்கிக் கொண்டு அதை காப்பாற்றிக் கொள்வது.

இதில் பெரிய வேதனை என்னவென்றால் முந்தைய காலங்களில் அரசியல் தலைவர்கள் எம் எல் ஏக்கள் எம்பிக்களுடைய சொத்துக்கள் பெருகி வருவது குறித்து கவலையாக பேசிக் கொண்டிருந்த மக்கள் கூட இப்போதெல்லாம் அதை சகஜம் என்று ஏற்றுக் கொள்ள தொடங்கி விட்டது தான்.

ஹஜ்ரத் உமரைப் பற்றிய ஒரு பழைய வரலாற்றை உங்களுக்கு நான் ஞாபகப்படுத்துகிறேன். இன்றைய சூழநிலைக்கு அது கற்பனையாக கனவாக உங்களுக்கு தோன்றலாம். ஆனால் இது கதையல்ல நிஜம்.

மக்களதிபர் உமர் "ஜும் ஆ" பிரசங்கத்திற்காக பள்ளிவாசலுக்கு வருகிறர். அவரை "சல்மான் அல் பார்ஸி" என்ற தோழர் தடுத்து நிறுத்திக் கேட்கீறார். உமரே..! நீங்கள் இப்போது அணிந்திருக்கிற ஆடை ஒரு சந்தர்ப்பத்தில் வெகுமதியாக உங்களுக்கு கிடைத்தது. இதே போல ஒன்று எனக்கும் கிடைத்தது. இப்போது நீங்கள் இரண்டு ஆடைகளை கீழுக்கு ஒன்றாக மெலே ஒன்றாக அணிந்திருக்கிறீர்களே அது எப்படி..?? என்று கேட்டார். உமர், தனது மகன் அப்துல்லாஹ்வை நோக்கினார். அப்துல்லாஹ் சொன்னார். சகோதரரே..!! என் தந்தையுடையது ஒரு ஆடை தான். உங்களுக்கு வெகுமதியாக ஆடை கிடைத்த அந்த சந்தர்ப்பத்தில் எனக்கும் ஒரு ஆடை கிடைத்தது. அதை நான் என் தந்தைக்கு கொடுத்தேன் என்றார்.

ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களுக்கு ஒற்றை ஆடை கூட கேள்விக்குரியதாக இருந்தது. அவரது ஆடைகளில் ஒட்டுக்களும் அதிகம். உமரின் ஆடையில் தோள் புஜங்களுக்கு இடையே நான்கு ஒட்டுக்களை நான் பார்த்தேன் என நபித்தோழர் அனஸ் கூறுகிறார்.. 

இன்றையை அரசியல் தலைவர்களுக்கு ஆடை வடிவமைப்பதற்கு என்று ஒரு பெரும் நிறுவனமே நடக்கிறது. சில தலைவர்களுக்கு ஆடை உடுத்தி விடுவதற்கு பணியாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அணிந்து வருகிற ஆடைகள் பத்திரிகைகளின் எட்டுக்கால செய்தியாக உலாவருகிறது, ஆனால் ஆட்சிக் கட்டிலிருந்து அவர்கள் இறங்கிய பிறகு அவர்களது ஆடைகள் மட்டுமல்ல, அவர்களே கூட வரலாற்றின் குப்பைத்தொட்டிகளுக்குள் வீசப்பட்டு விடுகிறார்கள்.

அதே வரலாறு, ஒட்டுப் போட்ட ஆடை அணிந்தவர்களையும், ஓலைக் கூரையில் வசித்தவர்களையும் புகழ் மகுடம் சூட்டி அழகு பார்க்கிறது.

எளிமை வரலாற்றில் புகழைப் பெற்றுத்தரும். ஆனால் அது மட்டுமே அரசு நடத்துபவர்களுக்கு போதாது.

நீதி வழுவாமை, நீண்ட கால நோக்கில் மக்களுக்கு நன்மை செய்தல், அரசின் பொதுச் சொத்துக்களை தன் சொத்தாக கருதி அபகரித்துக் கொள்ளாமல் அதை பாதுகாப்பதுமே ஒரு ஆட்சியாளருக்குரிய பொறுப்புணர்வாகும். உமர் (ரலி) அவர்களிடம் இந்த அம்சங்கள் ஆச்சரியப்படத்தக்க வகையில் குடி கொண்டிருந்தன.

ஆட்சி நடைமுறைகளுக்கு பழக்கமில்லாத பாலைவனத்தில் பிறந்த அந்தப் பெருந்தகை, மக்கள் வசிக்கும் பகுதிக்குள் இராணுவத்தினர் தங்குவது பொருந்தாது என்று கருதி இராணுவத்தினருக்காக புதிய நகரங்களை அமைத்தார். இன்றைய பிரபலமான இராக்கிய நகரங்களான பஸரா, கூபா ஆகிய இரு நகரங்களும் இந்த வகையில் உமர் (ரல்) அவர்கள் கட்டமைத்த நகரங்களாகும்.

உமர் (ரலி) மக்கள் வாழ்வுக்கு பொறுப்பேற்றிருக்கிற ஒரு சிறந்த நிர்வாகி என்பதை எப்போதும் நிரூபித்து வந்தார். மக்கள் பஞ்சத்தில் வாட அவர் மஞ்சத்தில் உல்லாசமாக படுத்திருந்தவர் அல்ல. குளுகுளு அறையில் ஆலோசனைகள் என்ற பெயரில் காலம் கடத்தியவர் அல்ல. மக்களின் ஜீவாதாரப் பிரச்சினையில் அதற்குத் தேவையான அக்கறையோடும், திறனோடும் செயல்பட்டார்.

கி.பி 630 ல் அரபுலகத்தை கடுமையான பஞ்சம் வாட்டியது. கிராமவாசிகள் பலர் பசி பட்டினியால் இறந்து போனார்கள். பன்னூற்றுக் கணக்கானோர் தலைநகர் மதீனாவை முற்றுகையிட்டனர். அங்கு தான் உணவு பங்கிடப்பட்டு வந்தது. உடனே உமர் (ரலி) சிரியா, இராக், பாலஸ்தீனில் உள்ள கவர்னர்களுக்கு கடிதம் எழுதினார். சரியான நேரத்தில் ஆளுநர்களுடைய உதவி வரவே, பல்லாயிரக்க்கணக்கானோர் உயிர் பிழைத்தனர். சிரியாவின் ஆளுநராக இருந்த அபூ உபைதார் (ரலி) பெருமளவிலான உதவிப் பொருட்களை அனுப்பியதோடு ஒருகடிதமும் எழுதினார். அதில புகழ் பூத்த அந்த வாசகம் எழுதப்பட்டிருந்தது.

நான் உங்களுக்கு உணவுப் பொதிகளைச் சுமந்த ஒட்டக அணிகளை அனுப்பி வைக்கிறேன். அதன் ஒரு முனை சிரியாவில் இருக்கும். மறு முனை மதீனாவில் இருக்கும் என அபூஉபைதா எழுதியிருந்தார். மதீனாவை தேடி வந்த மக்களின் துயரை ஆற்றிய பிறகு பாலைவனத்தில் உள்ளோடிய மக்களை தேடிச் சென்று அவர்களுக்கு உதவ உமர் (ரலி) ஆட்களை அனுப்பினார். அக்காலங்களில் இரவு தோறும் மக்களை உமர் பொது விருந்துக்கு அழைத்தார். நூற்றுக்கணக்கானோர் அந்த விருந்தில் கலந்து தங்களது பசியை ஆற்றிக் கொண்டனர். (ஹயகல்)

நிலமை ஓரளவு சீரடைந்ததும் மதீனாவில் தங்கியிருந்தவர்கள் தங்களது ஊர்களுக்குச் செல்வதற்கு தேவையான ஏற்பாடுகளை உமர் செய்து கொடுத்தார்.

மக்களுக்கான அத்தியாவசியக் கடமைகளை நிறைவேற்றுவதை அவர்களுக்கு தான் செய்கிற கிருபையாக கொடையாக அவர் அர்த்தப்படுத்த முயலவில்லை. கடமையாக கருதினார். இந்தக் கடமைகளை செய்வதற்கு தானே அதிக பொருத்தமான ஊழியன் என்று அவர் கூறி வந்தார்.

ஒரு முறை அரசாங்க ஒட்டகத்தை ஒரு நீர் குட்டையில் அவர் கழுவிக் கொண்டிருந்தார். உள்ளூர்காரர்களுக்கு இந்தக் காட்சி சகஜம். வெளியூரிலிருந்து வந்த ஒரு அரசப்பணியாளருக்கு இது ஆச்சரியத்தை தந்தது. ஏன் ஒரு ஊழியரிடம் இந்த வேலை நீங்கள் உத்தரவிடக் கூடாது என்று அவர் கேட்டார். உமர் திருப்பக் கேட்டார். சொன்னார் (அய்யுன் அஃபது மின்னீ) என்னை விட சிறந்த ஊழியன் யார்..? வந்தவர் வாயடைத்துப் போனார். அவர் மட்டுமல்ல வரலாறும் கூடத்தான்.

காற்றலைகளை காற்றுக்கே கூடத் தெரியாமல் விற்று விடுகிற அரசியல்வாதிகளை பெருகி விட்ட காலத்தில் உமர் (ரலி)அவர்களைப் பற்றி நினைப்பே பிரமிப்பூட்டுகிறது.

மற்றொரு முறை அரசாங்க ஒட்டகை ஒன்று காணாமல் போய்விட்டதாக காவலாளி கூறினார். உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து வேகமாக எழுந்து கொண்ட உமர் அதை தேடிப்புறப்பட்டார். உடனிருந்தவர்கள் ஒரு வேலைக்காரரை விட்டு அதை தேடச் சொல்லலாமே என்றார்கள்.

வரலாறு ஒருவரை ஏன் நினைவில் வைத்திருக்கிறது என்பதற்கான காரணத்தை கவனியுங்கள்..!

உமர் கூறினார்: ஒட்டகை குறித்து என்னிடம் தான் விசாரிக்கப்படும். என வேலைகாரனிடம் அல்ல.

ஆதிக்கம் அல்ல உழியம் என்பதே உமரின் அரசியல் வாழ்வின் தத்துவம். இந்த ஊழியம் நன்மையானதாக அமைய வேண்டும் என்பதே அவரது ஆதங்கம்.

இறப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன்னாள் தோழர்களோடு பேசுகிற போது
“அல்லாஹ் என்னை உயிரோடு வைத்திருந்தால் இராக் வாசிகளின் விதவைப் பெண்களை எனக்குப் பிறகு வேறெவரிடமும் கையேந்த தேவையில்லாத நிலையில் தான் விட்டுச் செல்வேன்.” என்று அவர் சொன்னார்.

உமரது வாழ்வின் கடைசி நிமிடங்கள் அவரைப் போலவே கம்பீரமானவை. நெஞ்சத்தை கொஞ்சம் திடமாக வைத்துக் கொண்டால் மாத்திரமே அந்த இறுதி நிமிடங்களை நீங்கள் கலங்காமலும் குமுறாமலும் வாசிக்க முடியும்.

நபி மொழித் திரட்டுக்களில் பிரபலமான ஸ்ஹீஹுல் புகாரியின் ரஹ்மத் அறக்கட்டளையின் மொழி பெயர்ப்பு உங்களிடம் இருக்கும் என்றால் 2700 ஹதீஸை படித்துப் பாருங்கள்.

அதிகாரத்தின் சிகரத்திலும், அனுதாபத்தின் விளிம்பிலும் ஒரு அடிமையைப் போல உமர் (ரலி) எதற்குப் புலம்கிறார் என்பதை படியுங்கள். உமரின் வரலாறு அரசியலின் அரிச்சுவடியாக மாறியதற்கான இரகசியத்தை அதில் நீங்கள் கண்டு கொள்ளலாம்.

இந்த அரிச்சுவடியின் தொடரில் வரலாற்று வாய்பாடு இலேசானது.


எம் ஜி ஆரை விட அண்ணா வாழ்வார். அண்ணாவை விட காமராஜர் வாழ்வார் என உங்களுக்குத் தெரிந்த பலரையும் இந்த வகையில் நீங்கள் வரிசைப்படுத்திப் பார்க்கலாம்..


ஒவ்வொரு ஆட்சி மாற்றத்தின் போதும் இஸ்லாமின் இரண்டாவது மக்கள் அதிபர் ஹஜ்ரத் உமர் (ரலி) நினைவு கூறப்படுவது வாடிக்கை. யாரைப் பார்த்து அல்லது யாரிடம் மாற்றத்தை எதிர் பார்த்து அந்த முன்னுதாரணம் சொல்லிக் காட்டப்படுகிறது என்பதை யோசித்துப் பார்த்தால் அயற்சியும் விரக்தியுமே மேலோங்கும் என்றாலும் நம்பிக்கையை விட்டு விட முடியாதே..! நம்பிக்கை தானே வாழ்க்கை..
நன்றி:இஸ்லாமிய சமுதாயம் முகநூலில்இருந்து.

0 கருத்துகள்: