கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

எஸ்.எம்.எஸ். மூலம் மருந்து விலை!

ருந்து மாத்திரைகள் வாங்கி வாங்கியே அல்லாடித் தவிப்பவர்களுக்கு ஆறுதலான சேதி... டாக்டர் பரிந்துரைத்த மருந்தை எந்த நிறுவனம் குறைந்த விலைக்கு கொடுக்கிறது என்பதை எஸ்.எம்.எஸ். மூலம் தெரிந்துகொண்டு, வாங்கும் முறையை மத்திய அரசு விரைவில் கொண்டு வர உள்ளது.
ஆரோக்கியம் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளின் விலையை குறைக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. தனது மருத்துவமனைகளில், மருந்துகளின் பிராண்ட் பெயர்களை பரிந்துரைப்பதற்குப் பதில் அவற்றின் அடிப்படை பெயரான 'ஜெனரிக்’-ஐ டாக்டர்கள் எழுதிக் கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. தனியார் மருத்துவமனைகளில் இதை எப்படி அமல்படுத்துவது என்பது குறித்தும் ஆராய்ந்து வருகிறது. ஜெனரிக் பெயரை மட்டும் எழுதிக் கொடுப்பதால், மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தங்களின் பிராண்டை விளம்பரப்படுத்த அதிக தொகை செலவிடுவதைக் குறைக்கும். இதனால் மருந்துகளின் விலை நிச்சயம் குறையும் என்பது மத்திய அரசின் திட்டம்.
இந்நிலையில் எஸ்.எம்.எஸ். மூலம் மருந்துகளின் விலையைத் தெரிந்துகொள்ளும் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்த உள்ளது. ஒரே நோய்க்கு சிகிச்சை அளிக்க பல்வேறு நிறுவனங்களால் தயாரிக்கப்படும் மருந்துகளின் விலைகளுக்கு இடையில் சுமார் 10 முதல் 15 மடங்குக்கு மேல் வித்தியாசம் இருப்பதாக மத்திய அரசு மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. சில மருந்துகளில் இந்த விலை வித்தியாசம் 20 மடங்குக்கு மேல் கூட இருக்கிறதாம். 
உதாரணமாக, ஜீரணக் கோளாறு பிரச்னைகளுக்கான  மாத்திரையில், குறிப்பிட்ட பிராண்டின் பத்து மாத்திரைகள்  அடங்கிய ஒரு அட்டையின் விலை சுமார் 70 ரூபாயாக இருக்கிறது. இதே திறன் கொண்ட மற்றொரு பிராண்டின் விலை நான்கு ரூபாய்தான்.
இதேபோல் கிருமி தொற்றுக்குச் சிகிச்சை அளிக்கும் ஒரு பிராண்டின் பத்து மாத்திரைகளின் விலை 250 ரூபாய். இதே திறன் கொண்ட வேறு ஒரு பிராண்டின் பத்து மாத்திரைகளின் விலை 70 ரூபாயாக இருக்கிறது. 
இதுபோன்று ஏராளமான மருந்துகளின் விலையில் கடும் விலை வித்தியாசம் காணப்படுவதை மத்திய அரசு கண்டறிந்துள்ளது.
இந்தியாவை பொறுத்த வரையில் எந்த ஒரு மருந்தையும் பத்திரிகைகள் மற்றும் தொலைகாட்சிகளில் விளம்பரப்படுத்த அனுமதி இல்லை. இதனால், மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தங்களின் மருந்து மாத்திரைகளை எழுதிக் கொடுக்க டாக்டர்களுக்குப் பரிசுப் பொருட்கள் வழங்குவது, வெளிநாட்டு சுற்றுலா அழைத்துச் செல்வது என செலவு செய்கின்றன.  இதன் மூலம் மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு அதிக செலவு ஏற்படுகிறது. இதை மருந்து விலையில் ஏற்றுவதால் விலை அதிகரித்து விடுகிறது.
இப்படி எஸ்.எம்.எஸ். மூலம் மருந்துகளின் விலையை பொது மக்கள் தெரிந்துக் கொள்ளும்பட்சத்தில் குறிப்பிட்ட மருந்தை வாங்குவார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இருக்காது என்பதால் மருந்து நிறுவனங்கள் மருத்துவர்களைக் கவனிப்பதை விட்டு விடும். இதனால் மருந்து விலை குறையும் என மத்திய அரசு எதிர்பார்க்கிறது. மேலும், தங்கள் தயாரிப்பு அதிகம் விற்க வேண்டும் என்பதற்காக நிறுவனங்கள் மருந்து விலையை குறைக்க கூடும் என்றும் எதிர்பார்க்கிறது.
மத்திய அரசின் இந்த எஸ்.எம்.எஸ். திட்டத்தை அமல்படுத்தும் பொறுப்பை தன்னாட்சி அமைப்பான தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (NPPA -National Pharmaceutical Pricing Authority) எடுத்துக் கொண்டுள்ளது. இதன்படி, எஸ்.எம்.எஸ். சேவை மையம் ஒன்று உருவாக்கப்படும். இந்த மையத்திற்கு வாடிக்கையாளர்கள், எஸ்.எம்.எஸ். மூலம் மருந்தின் பெயரை அனுப்பினால் அந்த மருந்தை தயாரிக்கும் நிறுவனங்கள், மருந்தின் விலை விவரத்தை தெரிவிக்கும். நுகர்வோர், டாக்டரிடம் குறைந்த விலையுள்ள மருந்தை பரிந்துரைக்கும்படி வேண்டுகோள் விடுக்கலாம்.
இது குறித்து தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்தின் அதிகாரி ஒருவர் கூறும்போது, ''இந்தியாவில், 90 ஆயிரத் துக்கும் மேற்பட்ட பிராண்ட் பெயரில் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த மருந்துகளின் விலை பற்றிய விவரங்களை பொதுமக்களால் எளிதில் தெரிந்து கொள்ள முடிவதில்லை. இந்தக் குறையை போக்கி, விலை மலிவான மருந்துகளை வாங்கி மக்கள் பயன்படுத்தும் விதமாக நடவடிக்கை எடுக்க இருக்கிறோம். அதற்கான ஆரம்பக் கட்ட பணிகளைத் தொடங்கி இருக்கிறோம். மருந்து விலையை எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிக்கும் திட்டத்தை நிறைவேற்றுவதில் பல சட்ட சிக்கல்கள் உள்ளன. இதுபோன்ற சவால்களை எதிர்கொண்டு விரைவில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
மலிவு விலை மருந்துகள், தரம் குறைவாக இருக்கும் என்று பொதுவாகக் கருதப்படுகிறது. அது தவறு. தரம் குறைந்த மருந்துகள் தயாரிப்பது 1945- ம் ஆண்டின் 'மருந்து மற்றும் அழகு சாதன பொருள்கள் சட்டப்படி’ குற்றம். மேலும், மருந்து உற்பத்தி, மத்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையரால் கண்காணிக்கப்படுகிறது. எனவே, மருந்துகள், தரம் குறைவாக இருக்க வாய்ப்பில்லை!''  என்றார்.

0 கருத்துகள்: