கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

மிளகு

பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும்
பயமில்லாமல் சாப்பிடலாம்.
கூர்முனையுடைய அகன்ற அழுத்தமான இலையினையும் உருண்டை வடிவப் பழக் கொத்தினையும் உடைய ஏறு கொடி. பழம், கொடி ஆகியவை மருத்துவப் பயனுடையது.


மிளகு, வால்மிளகு, வெள்ளை மிளகு என மூன்று வகைப்படும்.

1. 3 கிராம் மிளகைப் பொடித்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டு 125 மில்லி லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி குடித்து வரக் காய்ச்சல், செரியாமை, வயிற்றுப் பொருமல் ஆகியவை தீரும். மருந்து வீரியம் தணியும். ( மருந்து வீறு என்பது கடும் மருந்துகளை உட்கொள்வதால் வாய், வயிறு வெந்துபோகுதல்)

2. அரை கிராம் மிளகுப் பொடியுடன் 1 கிராம் வெல்லம் கலந்து காலை, மாலை சாப்பிட்டு வர பீனிசம், தலை பாரம், தலைவலி தீரும்.

3. மிளகு 4 கிராம், பெருங்காயம் 1 கிராம், கழற்சிப்பருப்பு 10 கிராம் இவற்றைப் பொடித்துத் தேனில் அரைத்து 200 மி.கிராம் எடையுள்ள மாத்திரைகளாக்கி வயதுக்கு ஏற்ப 1 அல்லது 2 மாத்திரை காலை, மாலை சாப்பிட்டு வர காய்ச்சல், குளிர் காய்ச்சல், யானைக்கால் காய்ச்சல் ஆகியவை தீரும்.

4. மிளகைப் புளித்த மோரில் ஊற வைத்து உலர்த்தி இள வறுப்பாய் வறுத்துப் பொடித்து அரை கிராம் பொடியை தேனில் குழைத்து காலை, மாலை கொடுத்துவர வாயு, கபம், இருமல், செரியாமை, மிகு ஏப்பம் ஆகியவை நீங்கி பசி தீரும்.

5. மிளகு 75 கிராம், சீரகம் 50 கிராம், அருகம்புல் சமூலம் 100 கிராம் ( சமூலம் = மூலிகையின் அனைத்துப் பகுதியும் பூ, காய், இலை,தண்டு, வேர்) அனைத்தையும் இடித்து ஒரு லிட்டர் நல்லெண்ணையில் போட்டு 15 நாட்கள் கடும் வெயிலில் வைத்து 45,90, 150 நாட்கள் தொடர்ந்து தலைக்குத் தேய்த்து வர கண் நோய் தீரும்.

6. மிளகு 5 கிராம், அருகம் வேர் 30 கிராம், சிறுகீரை வேர் 5 கிராம், சீரகம் 5 கிராம் அனைத்தையும் ஒரு லிட்டர் நீரிலிட்டுக் காய்ச்சி கால் லிட்டராக சுருக்கி பால், கற்கண்டு கலந்து பருக மருந்து வீறு தணியும்.

7. மிளகு 10 கிராம், அவுரி வேர் 20 கிராம், சேர்த்து அரைத்து சுண்டைக்காய் அளவு காலை, மாலை கொடுக்க எட்டி, வாமை, கலப்பைக் கிழங்கு நாவி, அலரி வேர் ஆகியவற்றின் நஞ்சு தீரும்.

8. 6 மிளகுடன் 10 கிராம் இஞ்சி, 3 வெள்ளருகம்பூ இவற்றை இடித்து அரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி காலை, மாலை குடித்துவர ஆஸ்துமா, இரைப்பு, நுரையீரல் சளி, மூக்கடைப்பு, இருமல் ஆகியவை தீரும்.

9. மிளகு 6, சுக்கு 10 கிராம், சீரகம் 35 கிராம், பூண்டு பல் 3, ஓமம் 10, இந்துப்பு 4 கிராம் இவற்றை மண்சட்டியில் வறுத்து 50 கிராம் வேப்பங் கொழுந்துடன் மையாய் அரைத்து 50 மி.லி. வெந்நீரில் கலந்து வடிகட்டி குழந்தைகளுக்கு அரைச்சங்கு தாய்ப்பாலில் கலந்து 2 முதல் 4 வேளை கொடுக்க வயிற்றுக் கோளாறுகள் நீங்கும்.

10. மிளகுடன் ஒரு கைப்பிடி இலந்தை இலை, பூண்டு 4 பல் அரைத்து மாதவிலக்கான முதல் 2 நாட்கள் கொடுத்து வர கருப்பைக் குற்றங்கள் நீங்கும்.

11. 2 கிராம் மிளகுடன் 10 கிராம் கரிசாலை இலையை சேர்த்து வெண்ணெய் போல அரைத்து மோரில் கலக்கி காலை, மாலை சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை, சோகை முதலியவை தீரும்.

12. 10 கிராம் மிளகுடன் சமஅளவு சுக்கு, திப்பிலி, இரண்டு கிராம் இலவங்கம் சேர்த்து அத்துடன் ஆடாதொடை வேர் 80 கிராம், முசுமுசுக்கை வேர் 120 கிராம் சேர்த்து பொடியாக்கி 5 அரிசி எடை கருப்பு வெற்றிலையுடன் சாப்பிட்டு பால் அருந்தி வர சுவாச உறுப்பு துப்புரவாகும். உறைந்த சளி வெளியேறும். இருமல், என்புருக்கி தீரும்.

13. மிளகு 10 மூக்கிரட்டை வேர் ஒரு பிடி, அருகம்புல் ஒரு பிடி, கீழாநெல்லி ஒரு பிடி இவைகளை ஒன்றாக இடித்து அரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி தினம் இரண்டு வேளை குடித்து வர காமாலை, நீர் ஏற்றம், சோகை, வீக்கம், நீர்க்கட்டு தீரும்.

14. மிளகையும், துளசியையும் தனித்தனியாக வறுத்துப் பொடி செய்து வெல்லப் பாகில் பொடியைச் சேர்த்து சுண்டைக்காய் அளவு உருட்டி சுத்தமான பாத்திரத்தில் வைத்துக்கொண்டு வாயில் போட்டு நன்றாக சப்பி சாப்பிட வேண்டும். ஒரு நாளைக்கு மூன்று வேளை வீதம் மூன்று நாட்களுக்கு சாப்பிட தீராத விக்கல் நிற்கும். உப்பு, புளி, காரம் நீக்க வேண்டும்.

15. மிளகுத் தூளுடன் திப்பிலித் தூள் சிறிது சேர்த்து அரிசி வேகவைத்த நீருடன் கலந்து கொடுக்க கல்லீரல், மண்ணீரல், நல்ல முறையில் இயங்கும். இரத்தம் அதிகரிக்கும். பசி உண்டாக்கும்.

16. மிளகு மற்றும் ஏலக்காய் விதைகளை பொடி செய்து கொடுக்க கருத்தரித்த தாய்மார்களுக்கு சளி சம்மந்தமான வியாதி குணமாகும்.

17. மிளகு, கசகசா, பாதாம்பருப்பு, கொப்பரைத் தேங்காய், சீரகம் இவரை பசும்பாலில் அரைத்துக் காய்ச்சி நறுமணத்துடன் இறக்கித் தலைக்குத் தேய்த்து முழுகி வர யாதொரு நோயும் அணுகாது.

18. திரிகடுகு (சுக்கு, மிளகு, திப்பிலி) பொடி செய்து சிறிது உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வர நல்ல பசி உண்டாகும். சீரகம், ஏலமும் சேர்த்துக் கொள்ளலாம்.

19. திரிகடுகுப் பொடியை திரிகடி அளவு (மூன்று விரல் அளவு) சூடான வெந்நீருடன் சாப்பிட்டால் சில நிமிடங்களில் தலைவலி நீங்கும்.

20. ஒன்பது மிளகை அம்மியில் வைத்து எலுமிச்சை சாறு விட்டு மை போல அரைத்து நெற்றியில் பற்றுப் போட தலைவலி உடனே குணமாகும்.

21. மிளகு, சந்தனம், கற்பூரம் மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து சொறி, சிரங்குகளின் மேல் பூச குணமாகும்.

22. மிளகுத்தூள் 1 மி.கிராம், சிறிய வெங்காயம் இரண்டு, அரை கிராம் உப்பு இம்மூன்றையும் நன்றாக அரைத்து புழு வெட்டு உள்ள இடத்தில் தடவி வர புழு வெட்டு நிற்கும்.

23. 10 மிளகுடன் 3 ஆடாதொடை இலையை சேர்த்து மை போல அரைத்து உருட்டி நாள்தோறும் காலையில் விழுங்க வேண்டும். இவ்வாறு நாற்பத்தைந்து
நாட்கள் சாப்பிட நாள்பட்ட இருமல் காணாமல் போகும்.

24. புரசு விதை, மிளகு வகைக்கு 3 கிராம், வெள்ளைப் பூண்டு 6 கிராம் அரைத்து கொட்டைப் பாக்களவு மூன்று நாள் காலை சூரிய உதயத்தில் சாப்பிட விரை வீக்கம் நீங்கும்.

25. மிளகு, உப்பு, இலவங்கம், கற்பூரம் இந்நான்கையும் இடித்துப் பொடி செய்து வஸ்திர காயம் செய்து வைத்துக் கொண்டு பல் துலக்கி வெந்நீரில் வாய் கொப்பளிக்க பல் நோய் தீரும்.

0 கருத்துகள்: