கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

இஸ்லாமும் உலக அழைப்புப் பணி இயக்கமும்!

                                         டாக்டர் மஹாதீர் முஹம்மது
                                 ———————————————-
இஸ்லாமிய வரலாற்றில் அழைப்புப் பணி என்பது இஸ்லாமிய போதனைகளைப் பரப்ப அதிலும் நம்பிக்கை அற்றவர்கள் மத்தியில் அதிகமான இறைநம்பிக்கையாளர்களைப் பெற ஏற்படுத்தப்பட்டது வெள்ளிடைமலை. இன்று அழைப்புப் பணி குறித்துப் பேசும்போது அது முஸ்லிம்களிடம் இஸ்லாமிய போதனைகளைக் கூறுவது
 என்று ஆகிவிட்டது. அழைப்புப்பணியை முஸ்லிம்களுக்கு இஸ்லாமியக் கோட்பாடுகளைப் போதிக்கும் இயக்கமாக ஆக்கிவிட்டனர். முஸ்லிம் அல்லாதார் மத்தியில் இஸ்லாமியச் செய்தியைச் சொல்வதில் கவனம் செலுத்தப்படவில்லை. கோட்பாடுகளைத் தெளிவாக்கும்போது நமது அசட்டையால் பிறசமயத்தாரிடம் வெறுப்பூட்டுகின்ற அளவிற்கு எண்ணங்களை உருவாக்கிவிடுகிறோம். பிற சமயத்தாரைப் புரிந்து கொள்ளாமல் நாம் அவர்களைவிட புனிதம் நிறைந்தவர்கள் எனும் எண்ணத்தை வளர்த்துவிடுகிறோம். முஸ்லிம்களை நல்ல முஸ்லிம்களாக மாற்றுகின்றவரையில் பிற சமயத்தார் நம்மைப்பற்றி என்ன எண்ணுகிறார்கள் என்று நாம் கவலைப் பட வேண்டியதில்லை. நாம் இவ்வாறு செய்யவில்லையானால் இஸ்லாத்தைப் பரப்ப வேண்டும் என்ற பணியை மறுப்பவர் ஆகிறோம். அதிலும் பிற சமயத்தாரிடம் எடுத்துக் கூற வேண்டிய கடமையிலிருந்து தவறிவிடுகிறோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் எத்தனை முஸ்லிம்கள் இருந்திருப்பார்கள் என்று எண்ணிப் பாருங்கள். அண்ணலார் அவர்கள் அது குறித்துக் கவலை கொள்ளாது விட்டிருந்தால் நிலைமை என்ன ஆகியிருக்கும்?
மலாய்க்காரர்கள் 800 ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர். அரபு நாட்டிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் வந்த வியாபாரிகள் மிகவும் சிரமப்பட்டு இஸ்லாத்தை எடுத்துக் கூறினர். அதனால் நம் முன்னோர்கள் மனம்மாறி இஸ்லாத்தைத் தழுவினர். அவர்களின் சிரத்தைக்குப் பரிசாக மலாய்க்காரர்கள் அனைவருமே முஸ்லிம்களாயினர். அரபு இந்திய வணிகர்கள் கட்டாயக் கடமைகளை (பர்லு அய்ன்) மட்டும் செய்யச் சொன்னார்களா? அதை மட்டும் செய்து மலாய் நாட்டில் அப்போது வாழந்தவர்களைக் கண்டு கொள்ளாது போயிருந்தால் மலாய் நாட்டில் இன்று முஸ்லிம்களே இருந்திருக்க மாட்டார்கள். நாங்கள் முஸ்லிம்களாக இல்லையா என்று கூறுபவர்களைப் பற்றிக் கவலையில்லை. ஆனால் இந்நிலைக்கு எங்களைக் கொண்டு வந்த முன்னோர்களுக்கு நாங்கள் நன்றிக் கடன் பட்டிருக்கிறோம்.
வரலாற்றின் பிற்பகுதிக்குச் சென்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஸ்லிம் ஆகாத தங்கள் குடும்பத்தாரை ஒதுக்கி வைத்துப் பார்க்கவில்லை. அதுமட்டுமல்ல, அரபு தீபகற்பத்தில் சிலை வணக்கத்தாரையும் ஒதுக்கி வைத்து பிரச்சாரம் பண்ணவில்லை. அவர்களிடம் இஸ்லாமிய போதனைகளைக் கூறி ஓரிறைக் கொள்கைவாதிகளாக மாற்ற விரும்பினார்கள். இதன் காரணமாக அண்ணலார் (ஸல்) அவர்களின் குடும்பத்தினர், நண்பர்கள், தோழர்கள், மதீனா மக்கள், இறுதியாக அரபு தீபகற்பம் முழுவதும் இஸ்லாத்தைத் தழுவியது. இஸ்லாம் பரவியது. இன்று நாம் இங்குக் கூடியிருப்பதற்குக் காரணம் முன்னோர்கள் பிற சமயத்தாரிடம் காட்டிய பரிவு – அவர்கள் தங்கள் மதத்தைப் பின்பற்றவும் வழிபடவும் வாய்ப்பளித்த தகவு.
இவற்றை எல்லாம் அறிந்தபின் பிற சமயத்தாரிடம் இஸ்லாத்தை அதன் உண்மையான தோற்றத்தில் கொண்டு செல்லாதது நமது தவறாகும். நாம் அவர்களை மத மாற்றம் செய்ய வேண்டாம், மனமாற்றம் செய்யலாமே. நமது மதத்தைப் பற்றிய தெளிவையும் புரிந்து கொள்ளும் மனத்தையும் உண்மையை உணரும் தன்மையையும் உருவாக்கலாம்.
இஸ்லாத்தை முதன்முதலாக ஏற்றுக் கொண்டவர்களில் அடிமையாக இருந்த பிலால் ஒருவர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் மற்ற முஸ்லிம்களும் ஓர் அடிமையை திருப்தி கொள்ளச் செய்து முஸ்லிமாக ஆக்கியுள்ளனர். அதுவும் இஸ்லாம் முழுமையாக வெளிப்படாத நாள்களில் அது நடந்துள்ளது. அந்நாள்களில் இஸ்லாத்தை ஏற்று அதன் காரணமாக பிலால் (ரலி) துன்பமும் தண்டனையும் பெற்றார். இஸ்லாமிய அறிவு முழுவதும் அறியாத நிலையில் அவருடைய பங்களிப்பு இஸ்லாத்திற்குக் கிட்டியது. இன்று அவரை மரியாதை செய்யும் பொருட்டு நம் பள்ளிவாசல்களில் பணிபுரிபவரை அவருடைய பெயரால் அழைக்கிறோம்.
உம்மத்துகளுக்கு இஸ்லாத்தைப் பற்றிய முழுமையான அறிவும் தகுதியும் இருப்பது அவசியம். ஆனால் உம்மத்துகளுக்கு நடத்தையும் மிக முக்கியமானது என்பதை அழைப்புப்பணி உணர்த்துகிறது. பிலால் (ரலி) இஸ்லாத்தை ஏற்றதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நன்னடத்தையும் அவர்கள் பிலால் (ரலி) மீது காட்டிய பரிவும் ஆகும். அழைப்புப் பணியில் நமது நடத்தை, சொல்லுக்கு மாறுபட்டும் போதனைகளுக்கு மாறுபட்டும் இருந்தால் பயனற்றுப் போய்விடும்.
நல்லதை ஏற்கவும் தீயதை மறுக்கவும் கட்டளையிடப் பட்டிருக்கிறோம். இது நம்முடைய மார்க்கம் தரும் கட்டளை. நம்முடைய செயலில் எது நல்லது எது கெட்டது என்பதைத் தெரிந்து உணர்வுப் பூர்வமாகவும் செயல்பட அது வழிவகுக்கிறது. நாம் செய்யும் கடமைகள் மறுமைக்கும் உரியதாகும். சுயநலமாக இருப்பது இஸ்லாம் கூறிய வழிமுறை அல்ல. நம்முடைய உம்மத்துகளுக்கும் உதவி புரியவேண்டும் என்ற கடமை நமக்குள்ளது. நாம் எப்போதும் நன்மையைச் செய்து தீயதை விலக்கி வாழ்ந்தால் பிற சமயத்தினரும் நம்மை மதிப்பார்கள், நம் மார்க்கத்தைப் போற்றுவார்கள். பிற சமயத்தினர் நம்மையும் இஸ்லாத்தையும் பாராட்டி மரியாதை தருவது தவறா?
பலர் இஸ்லாமியப் பிச்சாரம் செய்யச் செல்லும் போது பிற சமயத்தவர் நம்மை மதிக்கின்றனரா என்பதைக் கண்டு கொள்வதே இல்லை. பலர் நம்மில் நமக்குத் தெரிந்த விளக்கங்களைக் கூறிஇஸ்லாத்தைச் சொல்லி வருகின்றனர். அது மட்டுமன்றி நமது சகோதர முஸ்லிம்களைக் குறை காண்கிறோம். அறிவுரை வழங்குவதில் மென்மையை விட்டு விடுகிறோம். முஸ்லிம்கள் எப்பொழுதும் கடமையான வணக்க வழிபாடுகளில் திளைத்துள்ளனர் என்பதை வலியுறுத்துகிறோம். இட்டுக் கட்டியவற்றையும், இடைச் செருகல்களையும் சிறந்தவை, பக்திக்குரியவை என்று கடைப்பிடிக்கிறோம். அவற்றை மற்ற முஸ்லிம்கள் பின்பற்றவில்லையானால் அவர்கள் நல்ல முஸ்லிம்கள் அல்லர் என்று கூறிவிடுகிறோம். அதனைப் பக்திக் குறைவு என்றும் சாடுகிறோம். கடுமையான சூழ்நிலைகளில் சம்பந்தப்பட்டவர்களை நம் கட்சியைச் சார்ந்தவர்களல்லர் என்று கூறி புறந்தள்ளி விடுகிறோம். மற்றவர்களைக் குறையுள்ள முஸ்லிம்கள் என்று கூறக் கூடாதென்ற அல்குர்ஆன் போதனையை நாம் மறந்துவிட்டோம். நாமே குறையுள்ள முஸ்லிம்களாக இருக்கக்கூடும்.
அல்லாஹுத்த ஆலா அன்-நஹ்ல் அத்தியாயத்தில் வசனம் 125இல்
“விவேகத்துடனும் அழகிய அறிவுரைகள் மூலமாகவும் உம் இறைவனின் மார்க்கத்தின் பக்கம் அழைப்பீராக. மேலும் மிகச் சிறந்த முறையில் மக்களிடம் விவாதம் புரிவீராக. தன்னுடைய பாதையிலிருந்து வழிபிறழ்ந்தவர் யார் என்பதை உம் இறைவன் நன்கறிவான்” எனக் கட்டளையிட்டுள்ளான்.
முஸ்லிம்களையும் பிற சமயத்தவரையும் முன் கூறப்பட்டுள்ள கட்டளைக்கேற்ப வெற்றி கொள்ளவேண்டும். இன்று முஸ்லிம் உம்மத்துகள் எந்த நிலையிலும் தங்களை முன்னுதாரணமாக மற்றவர்களுக்குக் காட்ட இயலாது, பின்பற்ற வைக்கவும் முடியாது. நாம் அத்தியாயம் ஆலுஇம்ரானில் வசனம் 110இல் குறிப்பட்டுள்ளதைப் போல “நாம் மனிதர்களில் சிறந்தவர்கள்”  என்று கூறிக் கொள்ளலாம். ஆனால், மனசாட்சிக்கு விரோதமில்லாமல் நாம்தான் சிறந்தவர்கள் என்று நம்மால் கூறமுடியுமா?
இன்று முஸ்லிம் உலகமே குழப்ப நிலையில் இருந்து வருகிறது. நமக்குள்ளே சண்டை சச்சரவு, ஒத்துப்போகாத நிலை – வலிமையின்மை, நம்மை நாமே பாதுகாக்க இயலாத நிலையில் நாம் இருக்கின்றோம். அத்துடன் நம்ப முடியாதவர்களின் அணியில் சேரும் சூழ்நிலைக்கு வலிமையின்மையின் காரணமாகத் தள்ளப்படுகிறோம்.
முஸ்லிம்கள் ஏழ்மை நிலையில் இருக்கிறார்கள். அதனால் அடிப்படை அறிவைக்கூட நவநாகரிக யுகத்தில் பெற முடியவில்லை. சில நேரங்களில் இவ்வுலகம் நமக்குரியதல்ல. மறுமைதான் நமக்குரியது என்று கூறி மனநிறைவு அடைகிறோம். சிறந்தவர்களாய்த் திகழ்வதற்கான வழி இதுவல்ல என்று நமக்குத் தெரிந்தும் இதனைச் செய்கின்றோம்.
ஏழ்மை நம்பிக்கையை அழித்துவிடும். ஆனால் அதற்காக நாம் எதையும் செய்வதில்லை. வறுமையை பக்தியோடு இணைத்துவிடுகிறோம். வறுமை ஈமானை இழக்க வைக்கும்.
நாம் அழைப்புப் பணி செய்யும்போது அல்குர் ஆனையும் தகுதிமிக்க ஹதீஸ்களையும் குறிப்பிட வேண்டும். இறைவன் மீது பக்தியோடு நடக்கும் முஸ்லிம்களுக்கு இறைவன் வழங்கிய அருட்கொடை இவைதான் என்று கட்டியம் கூறுமுடியாது. ஞானம் நிறைந்தோர் பரம ஏழைகளாக இருந்தால் நாங்கள் தான் சிறந்த மக்கள் என்று கூறி எவரையும் நம்பவைக்க இயலாது. முஸ்லிம் நாடுகள் வலிமையற்றுப் பிறசமய நாடுகளிடம் தானமும் உதவியும் பெற வேண்டியுள்ளது. தங்களது தற்காலிக நிம்மதிக்காக இஸ்லாமிய சகோதரத்துவத்தை பணயம் வைக்கத் தயங்குவதில்லை. நமக்குள்ளே சண்டையிட்டுக் கொள்வதால் இஸ்லாமிய சகோதரத்துவம் கேலிக்கூத்தாகி விடுகிறது. இஸ்லாமியப் பாதையில்தான் செல்கிறோம் என்று நம்மால் நம்ப வைக்க முடியுமா? அல்லது இஸ்லாம்தான் நேரிய பாதை என்று மற்றவர்களை தெளிவுபடுத்த முடியுமா?
வார்த்தைகள் அழகாக இருக்கலாம். ஆனால் முரண்பட்ட செயல்களாலும் வெளிப்படையான தோல்விகளாலும் நம்பிக்கையை உருவாக்க முடியுமா? முஸ்லிம்களின் நிலங்களைக் கையகப்படுத்தியோர் இன்று முஸ்லிம்களை வெட்டிப் புதைக்கின்றனர். சொல்ல முடியாத கஷ்டங்களையும் அவமானங்களையும் அவர்கள் அடைந்து வருகின்றனர். பெண்கள் கற்பழிக்கப்படுகின்றனர். ஆண்கள் கொடுமைப்படுத்தப்பட்டு கொல்லப்படுகின்றனர். அவர்கள் நம்மிடம் உதவிவேண்டி வருகின்றனர். அவர்களுக்கு நாம் உதவவில்லையானால் இஸ்லாமிய வாழ்விற்குச் சான்றாக ஏதாவது அமையுமா? இஸ்லாம் தவறானதா? நம்முடைய விளக்கங்கள் தவறானதா? பாதுகாப்போடு இருக்கும் முஸ்லிம்களைக் கூடுதலான பக்திமான்களாக ஆக்குவது கடமையா? துன்பப்பட்டுவரும் முஸ்லிம் சகோதரர்களுக்கு உதவுவது நமது கடமையா  என்று எண்ண வேண்டாமா? நாம் நம்மைச் சிறந்த முஸ்லிமாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் நேரத்தில் பல முஸ்லிம்கள் நாடிழந்து பிற சமயத்தாரின் நாடுகளில் அகதிகளாகி ஈமானை இழந்துவிட்டனர். மத்தை மறந்துவிட்டனர். சிலர் மதம் மாறியும் விட்டனர் என்பது நமக்குத் தெரியாதா? இது நமக்குப் புலப்பட்டாலும் சுவர்க்கத்திற்காக அலைகிறோம். வாழ்க்கையின் அவலத்தில் உள்ள சகோதர முஸ்லிம்களுடைய நலனைக் காக்காத நமக்குச் சுவர்க்கத்தில் இடம் கிடைக்குமா? சுயநலத்தினால் நம்முடைய சகோதரர்களைக் கவனியாது செல்கிறோம். நாம் நமக்குரிய நன்மைகளைத் தேடுவதிலேயே காலத்தைக் கழிக்கிறோம்.
இன்று நாம் இஸ்லாத்தையும் அழைப்புப் பணி செய்யும் பிரச்சார இயக்கத்தையும் குறித்து ஆய்வு செய்ய உள்ளோம். சமய நம்பிக்கை பற்றியும் ஆய்வு செய்ய உள்ளோம். மார்க்க நம்பிக்கையும் மனித நேர்மையும் இதற்குத் தேவைப்படுகிறது. பாவம் செய்யவில்லை என்று கருதினால் உண்மையை மறந்துவிட்டு சுயதேவைகளில் மூழ்கிடவிடலாம். சிலரைப் போல நானும் புனிதத்தை விடப் புனிதம் என்ற கொள்கையில் ஈடுபாடுகாட்ட விரும்பவில்லை. அதைவிட இஸ்லாத்தின் கொள்கைகளை அதன் உண்மைத் தோற்றத்தை, தாக்கத்தை நமது சகோதரர்களுக்கும் மனிதகுலம் முழுமைக்கும் பரப்புவது கடமை என்று எண்ணுகிறேன்.
நன்றி: சமூக நீதி http://www.samooganeethi.org/?p=1054

0 கருத்துகள்: