ஹைதராபாத்:இந்தியாவின் பெருமையை பறைசாற்றும் கோபுரங்களில் ஒன்றான சார்மினார் சர்ச்சையில் சிக்கியிருக்கும்சூழலில் மினாராக்களின்(சார்மினார் கோபுரம்) வரலாற்று ரீதியான உண்மையை வெளிச்சம் போட்டு காட்டும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
நான்கு மினாராக்களுடன்(கோபுரங்கள்) வானை நோக்கி கம்பீரமாக நிற்கும் ஹைதராபாத்தில் 420 வருடகால பழமையான சார்மினாரும், அதன் சுற்றுவட்டாரமும் கடந்த சில வாரங்களாக செய்திகளில் இடம் பிடித்துள்ளன. சார்மினாரின் வலப்புறம் புதிதாக கட்டப்படும் கோயில்தான் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்தியாவின் இஸ்லாமிய பாரம்பரியத்தின் மீதமுள்ள சின்னங்களில் ஒன்றாக ஹைதராபாத்தில் உள்ள சார்மினார் ஆர்கியாலஜிகல் சர்வே ஆஃப் இந்தியாவின்(ஏ.எஸ்.ஐ-இந்திய தொல்பொருள் ஆராய்ச்சித்துறை) கீழ் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஆனால், சார்மினார் விவகாரத்தில் ஏ.எஸ்.ஐ காட்டும் அலட்சியம் ஏற்கனவே சர்ச்சையை கிளப்பியிருந்தது.
சர்ச்சைக்குரிய கோயில் தொடர்பான சம்பவத்தில் கடந்த சில தினங்களாக சார்மினாரின் சுற்றுவட்டாரத்தில் மக்கள் தாக்கப்படுவதும், வாகனங்கள் தீக்கிரையாக்கப்படும் சம்பவங்கள் அரங்கேறின.
இதனிடையே ஹிந்து பத்திரிகை வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சார்மினாரின் வரலாற்று உண்மையை பறைசாற்றுகின்றது.
60ஆண்டுகளுக்கு முந்தைய முதல் புகைப்படத்தில் சார்மினாரின் வலப்புறத்தில் கார் பார்க் செய்யப்பட்டிருப்பதை காணலாம். ஆனால், கடந்த வெள்ளிக்கிழமை ஹிந்து பத்திரிகையின் போட்டோகிராஃபர் எடுத்த புகைப்படத்தில் சார்மினாரின் வலப்புறத்தில் புதிதாக கட்டப்படும் சர்ச்சைக்குரிய கோயில் இருப்பதை காணலாம்.
சார்மினார் கட்டும்பொழுதே இங்குள்ள பாக்கியலெட்சுமி கோயிலும் இருக்கிறது என்ற வாதம் இதன் மூலம் நொறுங்கிப் போனது என்று ஹிந்து பத்திரிகை கூறுகிறது. சார்மினாரின் பாதுகாப்பை ஏற்றுள்ள ஆர்கியாலஜிகல் சர்வே ஆஃப் இந்தியா, இங்கு சட்டவிரோத கோயில் எழும்புவதை தடுப்பதில் தோல்வியை தழுவியுள்ளது என்பதை ஹிந்து பத்திரிகை வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தெளிவுப்படுத்துகின்றன.
சார்மினாருடன் இணைந்து உலக புராதன சின்னங்களில் இடம் பிடித்த கோல்கண்டா கோட்டையிலும் சட்டவிரோதமாக கட்டிடங்கள் எழுப்பப்பட்டுள்ளன. நகருக்கு வெளியே உள்ள இந்த கோட்டையில் 2000க்கும் மேற்பட்ட சட்டவிரோத கட்டிடங்கள் எழும்பியுள்ளதாக ஹிந்து பத்திரிகையின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இதனை தடுப்பதிலும் ஆர்கியாலஜிகல் சர்வே ஆஃப் இந்தியா ஆர்வம் காட்டவில்லை.
சார்மினார் சுற்றுவட்டாரத்தில் பழையை நிலை தொடரவேண்டும் உயர்நீதிமன்றத்தின் உத்தரவு இப்பிரச்சனையில் மீறப்பட்டுள்ளது என்றும், ஆந்திரா மாநில காங்கிரஸ் முதல்வர் சங்க்பரிவாருக்கு உதவுவதாகவும் குற்றம் சாட்டி முக்கிய கூட்டணி கட்சியான மஜ்லிஸே இத்திஹாதுல் முஸ்லிமீன்(எம்.ஐ.எம்) மாநில அரசுக்கும், மத்தியில் ஆளும் ஐ.மு கூட்டணி அரசுக்குமான தனது ஆதரவை விலக்கிக் கொண்டது.
294உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் ஏழு உறுப்பினர்களைக் கொண்ட எம்.ஐ.எம் ஆதரவை விலக்கிக் கொண்டது கிரண்குமார் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கியுள்ளது.
கிரண்குமார் ஒரு சமூகத்திற்கு ஆதரவாக செயல்படுகிறார் என்று எம்.ஐ.எம்மின் தலைவர் அக்பருத்தீன் உவைஸி குற்றம் சாட்டியிருந்தார். கோயில் கட்டுவதை நிறுத்தக் கோரி போராட்டம் நடத்திய எம்.ஐ.எம் எம்.எல்.ஏக்களை போலீஸ் கைதுச் செய்திருந்தது.
http://www.thoothuonline.com/
http://www.thoothuonline.com/
0 கருத்துகள்:
கருத்துரையிடுக