கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

நம்மை வாழவைத்த அரபுநாடுகள்


இப்போதெல்லாம் facebook மற்றும் சில இணைய தளங்களில் கவர்ச்சியாக விமானம் படங்களை யெல்லாம் போட்டு அரபுநாட்டு வாழ்க்கையை விமர்சனம் செய்து, நம்நாட்டில் குடும்பத்தோடு வாழும் வாழ்க்கைபோல் வருமா என்றெல்லாம் எழுதுகிறார்கள். இதற்கு 20௦ அல்லது 30 வருசமா தொடர்ந்து இங்கு இருந்து வருபவர்களும் லைக் போடுவதும், ஆமாம் போடுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

நம்மூர் பகுதிகளில் 1975 வாக்கில் துவங்கிய அரபுநாட்டு பயணம். இந்த வாய்ப்பை அடைவதற்கு 1995, வரை அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. அன்றைக்கு நம்மவர்கள் இருந்த நிலமை அப்படி. படிப்பு விசயத்தில் பின்தங்கி இருந்தோம், அரசு உத்யோகம் நினைத்து பார்க்கவே வேண்டாம். ஏதோ அந்த காலத்திலும் நம் முன்னோர்கள் எப்படியோ தட்டு தடுமாறி மலேசியா,சிங்கப்பூர் பக்கம்போய் இருந்ததால் ஒருசில குடும்பங்கள் வசதி வாய்ப்புடனும் இவர்கள் உதவியால் இவர்களை சார்ந்த சொந்தங்கள் பசி, பட்டினி இல்லாமலும் வாழ முடிந்தது. யார் வேண்டுமானாலும் வேலைக்கு வரலாம் என்ற வாய்ப்பை இந்த மலேசியா, சிங்கப்பூர் நாடுகள் தரவில்லை.

அப்போதைய அநேக நம் ஆண் பிள்ளைகளுக்கு 8 ம் வகுப்பு வரை படிப்பு, பிறகு ஏதாவது ஒரு கடையில் வேலை, கொஞ்சம் திறமையுள்ள பசங்கள் பக்கத்து டவுன், அதையும் தாண்டி சென்னை பக்கம் போய் வேலை செய்து மாதம் ரூ500, சம்பாதிப்பது பெரியவிசயமாக இருக்கும். பெரிதாக எதையும் நாம் அனுபவித்து பார்க்கவில்லை, நம் தாய், தந்தையர்க்கு நோய் வந்தால் கூட முறையான வைத்தியம் பார்த்து காப்பாற்ற முடியாத ஒரு நிலை, அக்கா, தங்கைகளுக்கு உரிய வயதில் கல்யாணம் பண்ணிக் கொடுக்க முடியாமல் வரதட்சணை கொடுமை, அவமானங்கள். சொந்த வீடு வாசல் என்பது எல்லோராலும் கட்ட முடியவில்லை அப்படி ஒரு கஷ்டமான காலக் கட்டத்தில் தான் 1975 வாக்கில் இருந்தோம்.

அந்த காலகட்டத்தில் தான் அன்றைய பாரத பிரதமர் இந்திராகாந்தி அவர்களால் அரபுநாட்டு மன்னர்களிடம் முறையாக ஒப்பந்தம் அடிப்படையில் நம் நாட்டு மக்களை வேலைக்கு அனுப்பி வாழ வழி வகுத்து கொடுத்து இன்று வரை பலனை நாம் அனுபவித்து வருகிறோம்.

அரபுநாடுகளுக்கு வந்து வாழ்வில் வளமடைந்தவர்கள் ஏராளமானோர், அதேசமயம் ஒரு சிலர் அழிந்தும் போனார்கள் என்பது வேறு விஷயம். முதலில் நல்ல விஷயங்களைப் பார்ப்போம்.

படித்தவனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பது பழமொழி. படிக்காதவனுக்கும் இங்கு சிறப்பு இருக்கிறது என்று நிருபித்து காட்டியது இந்த அரபுநாடுகள் தான். படித்தவர்களை விட போதிய படிப்பு இல்லாதவர்கள் இங்கு வந்து தன் கடின உழைப்பால், திறமையால் முன்னேறி வாழ்வில் வளமடைந்தோர்கள் அதிகம். உழைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை கொடுத்தது இந்த அரபுநாடுகள் தான். 4 அல்லது 5 வருடத்தில் வீடு வாசல்களை கட்ட முடிகிறது. முதிர் கன்னிகள் இப்போது இல்லை. வரதட்சணை ஒழிக்கப்பட்டுள்ளது. நல்ல வைத்தியம் பார்த்துக் கொள்ள முடிகிறது. இளமையில் வறுமை நம் பிள்ளைகளுக்கு இல்லை. உயர் கல்விகள் வரை பிள்ளைகளை படிக்க வைக்கிறோம். இப்போது திருமண அழைப்பிதழில் மணமகன்/மணமகள் பெயருடன் படிப்பு தகுதி பார்க்கவே சந்தோசமாக இருக்கிறது. இதில் கொஞ்சம் சந்தோஷமான விசயம் என்னவென்றால் நம் ஆண் பிள்ளைகளை விட பெண் பிள்ளைகள்தான் நிறைய படிக்கிறார்கள் என்பது தான்.

பல வருடங்கள் தங்கி கஷ்டப்பட்டு நாம் என்னதான் சம்பாதித்தாலும், நம் வருமானத்தை அறிந்து முறைப் படுத்த குடும்பத்தார்களின் ஒத்துழைப்பு மிகமிக அவசியம். படிப்படியாக ஒரு நபரின் வளர்ச்சியை கண்டே அதை புரிந்துக்கொள்ள முடியும். மின்னல் வேகத்துக்கு மேலே போயி அதே வேகத்தில் கீழே வருபவர்களும் உண்டு. 30 அல்லது 40 வருடங்கள் இங்கு உழைத்து பொருளாதாரத்தை முறைப் படுத்திக் கொண்டு 60 வயசில் ஊரோடு தங்கி ரிடயர்ட் லைஃப் வாழ்பவர்களும் உண்டு. விட்டுவிட்டுப் போன தொழிலேயே மீண்டும் வந்து தொடருபவர்களும் இருக்கிறார்கள். அங்கேயும் கெட்டு இங்கேயும் கெட்டு பல கம்பெனி பல நாடுகள் என்று மாறிமாறி பொண்டாட்டி நகைகளையல்லாம் அழித்து நஷ்டப்பட்டவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் கடைசியாக சொன்ன இவர்கள் இந்த வாழ்க்கையில் தோற்றவர்கள்.

இறுதியாக சொல்ல வருவது என்னவென்றால் இந்த அரபுநாட்டு வாழ்க்கையால் நாம் அடைந்துள்ள நன்மைகளை இன்றைய பிள்ளைகள் மறந்துவிடக் கூடாது. படித்தவர்களையும், படிக்காத உழைப்பாளி களையும் இன்றுவரை கை நீட்டி அழைக்கிறது இந்த அரபுநாடுகள் மட்டுமே!! இதற்கு இணையாக வேறு எந்த நாட்டையும் உதாரணம் சொல்லமுடியாது. விசா ஜெராக்ஸ் காபியை வைத்துக்கொண்டு நமது நாட்டிலிருந்து பயணிக்க முடிகிற ஒரே நாடு துபாயாகதான் இருக்கமுடியும். முன்புபோல் பெரிய
தொகையை செலவு செய்து இங்கு வரவேண்டிய நிலை இப்போதில்லை. பம்பாய் வந்து தங்கி கஷ்டப்பட்டு வரவேண்டிய அவசியமும்மிலை. கையில் தொழிலும் பாஸ்போர்ட்டும் இருந்தால் போதும் 4அல்லது 5 மணி நேரத்திலே சென்னையிலிருந்து அரபுநாடுகளுக்கு வந்து சேர்ந்துவிடலாம்.

நாம் வேண்டி கேட்டுக் கொள்வதெல்லாம் தவறான பிரசாரங்களை நிறுத்துங்கள்! நம்நாட்டில் சம்பாதித்து வாழ தகுதியானவர்கள் அங்கே நலமாய் வாழட்டும்!! வாய்ப்புகளை பயன்படுத்தி பல நாடுகளுக்கு சென்று நம் மக்களை வாழ்க்கையில் வளமடைய தூண்டுங்கள்!!!

- கொல்லாபுரம் S.M.சாதிக்
http://puthumanaikpm.blogspot.com

0 கருத்துகள்: