கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

பெற்றோரை நிந்திக்கும் பிள்ளைகள்


பாத்திமா நளீரா
ஆலயத்துக்கு அருகில் இருப்பவன்தான் வழிபாட்டுக்குக் கடைசியாக வருவான்” என்பதுபோல், தன் அருகிலுள்ள பெற்றவர்களை ஏனோ தானோ என்று  பொடு போக்காகப் பார்ப்பதும் தூரத்திலுள்ள சொந்த பந்தங்களுடனும் சமுதாய மட்டத்தில் அந்தஸ்தில் உயர்ந்து நிற்பவர்களுடன்
சுமூகமான   உறவைப் பேணி இறுக்கமான இணக்கத்துடன் முகமூடி அணிந்து வாழ்வதும் இன்றைய இளைய தலைமுறையான பிள்ளைகளுக்குப் பெஷன் ஆகிவிட்டது.


பெற்றோர்கள் கடனாளிகளாகவும் பிள்ளைகள் பங்காளிகளாகவும் மாறிவிட்ட காலம் இது.  வாழ்க்கை முறை யதார்த்தத்தை அப்படியே மாற்றி விட்டது. நிலவைக் காட்டிச் சோறு ஊட்டி பிள்ளைகளை மகிழ்வித்த பெற்றவர்களின் பிற்காலம் ஊட்டி, ஊட்டி வளர்த்த அந்தப் பிள்ளைகளினால் கண்களில் ஒளியையே இழந்து கண்ணீரில் முகம் கழுவ வைக்கப்படுகின்றனர். கலங்கித் தவிக்கின்றனர்.
நவீன யுகத்தில் சில போலியான வாழ்க்கை நடைமுறைக்கு ஏற்ப அல்லது கட்டியவளின் கண்டிப்பான கட்டளைக்கு இணங்க பாசத்தில் கலப்படம் கலந்து தாய், தந்தையரின் உள்ளத்தில் மாறாத வடுக்களை ஏற்படுத்துகின்றனர் இன்றைய இளைஞர்கள். இவ்வாறான பெற்றோர்கள் ஒரு பாவப்பட்ட ஜென்மங்களாக பிள்ளைகளின் கண்களுக்கு உறுத்தப்படுகின்றனர்.

காலூன்றி, கையுயரும் வரை பராமரிப்பு, பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் எல்லா வசதிகளுக்கும் பெற்றோர் தேவைப்படுகின்றனர். ஆனால், சமுதாயத்தில் தலை தெரிய  ஆரம்பித்தவுடன் அல்லது தனக்கென்று ஒரு குடும்பம் உருவானவுடன் பாசமெல்லாம் பறந்தோடி விடுகிறது. இந்தப் பிள்ளைகளின் அன்பு அவ்வளவு சீக்கிரம் சுருங்கி விடுகிறது. நெஞ்சில் சுமந்து பாதுகாத்த பெற்றோரை எப்படித்தான் கண்ணீர் விட வைக்கின்றனரோ தெரியாது. பிள்ளைகளுக்குப் புரையேறினால் கூடப் பதறும் இவர்களுக்கா இந்தக் கேட்பாரற்ற நிலைமை?

வயது போய் முதுமையை அணைத்துக் கொண்டிருக்கும் இவர்கள், குழந்தைப் பருவத்துக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதனை குழந்தைகளாக இருந்து பெரியவர்களான இந்தப் பிள்ளைகளுக்கு ஏன் புரியாமல் போகிறது? தன்னை அள்ளியணைத்துக் கொஞ்சி மகிழந்த நினைவுகள் ஏன் அகன்று விடுகின்றன?

தாய், தந்தையரின் கருத்துகள் கூட பெரும்பாலான பிள்ளைகளிடத்தில் அரங்கத்தில் ஏற்றுக் கொள்ளப்படாத அரளிப் பூவாக இருக்கின்றன.இவர்களின் பேச்சுகள், புத்திமதிகள், கருத்துகள் குடும்ப சபைகளில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. சாதாரண நண்பர்களுக்கு அல்லது மூன்றாம்  நபருக்குக் கொடுக்கும்  முன்னுரிமை கூடத் தாய், தந்தையருக்குக் கொடுக்கப்டுவதில்லை. மாறாக அவர்களின் இதயங்களில் இரத்தத்தைக் கசியச் செய்கிறார்கள்.

இதனால்தானோ முதியோர் இல்லங்கள் முந்திக் கொண்டு முன்னணியில் நிற்கின்றன? மேலும் சில பிள்ளைகள் பெற்றோரை தம்முடனேயே கண்ணும் கருத்துமாகத் வைத்துக் கொள்கின்றனர். இவர்கள் வேறு உறவினர்கள் அல்லது சகோதரர்கள் வீட்டில் இருந்தாலும் கரிசனையுடன்  தம்முடனேயே வைத்துச் சோறு போடும்  பிள்ளைகளும் இல்லாமல் இல்லை. இவர்கள்தான் தனிக் குடித்தனம் செய்பவர்கள். சுய நலத்துக்காகச் சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப பெற்றோர்களை வாங்கிக் கொள்கின்றனர்.

உதாரணங்களாகப் பின்வருவனவற்றைப் பட்டியலிடலாம்.

1. வேலைக்குச் செல்லும் தம்பதி என்றாலும் அல்லது கணவன் மாத்திரம் வேலைக்குச்  சென்றாலும் மனைவிக்கு ஒத்தாசை பேரன், பேத்திகளை பராமரித்துப் பாதுகாப்பது, வீட்டுப் பாதுகாப்பு என்ற சுயநல எண்ணம்.

2. பெற்றவர்களைப் பராமரிக்காமல் விட்டு விட்டார்கள் என்ற சமுதாயத்தின் குற்றச் சாட்டிலிருந்து தப்பித்துக் கொள்வது.

3. வேலையாளுக்குக் கொடுக்கும் பணம் மீதமாவதுடன் வேலைகளையும் பொறுப்புகளையும் வயதானவர்களின் தலையில் சுமத்தி விட்டு இவர்களுக்கு ஓய்வு எடுக்க ஒரு நல்ல வசதியான சந்தர்ப்பம்.

4. மூன்றாம் நபரை வைத்துக் கொண்டு வீணாகச் சந்தேகப்படுவதனை விட பெற்றோருக்கு முதலிடம் என்ற போலிப் போர்வையில் பழிகளிலிருந்து தப்பித்துக் கொள்வது. எனத்  தொடர்ந்து கொண்டே போகலாம்.

இதுவும் ஒரு மறைமுகமான முதியோர் இல்லம்தான் என்பதனைப்  பெற்றோர்கள் மறந்து விடுகின்றனர். நம் பிள்ளைகள், பேரன், பேத்தி என வெகுளித்தன அறியாமையினால் தொடர்ந்து கடை வழிகளிலும் சமையல் அறைகளிலும் பாடசாலை என்றும் வயது போன காலத்தில்  தாய், தந்தையர் சீரழிகின்றனர். கணவன் அல்லது மனைவி இறந்து விட்டால் பிள்ளைகளின் விரல் நுணி அசைவை எதிர்பார்த்து நின்ற பெற்றோர் பாவப்பட்ட ஜெகன்மங்கள்தான். பெற்றேர்களைத் தன்னுடன் வைத்துக் கொள்கின்றேன் என்ற போர்வையில் சிறை வாசத்தைக் கொடுக்கும் இவர்கள், சகல வேலைகளையும் அட்டை இரத்தம் உறுஞ்சுவது போல் தமது பெற்றோரிடமிருந்து உறுஞ்சி விடுகின்றனர். வயது போன காலத்தில் ஓய்வாக, சந்தோஷமாக, அமைதியாக இருக்க நினைத்தாலும் வீட்டுச் சூழல் அவர்களைத் தட்டி எழுப்பி விடுகிறது. தள்ளாத வயதிலும் அன்பினாலும் கருணையினாலும்  பாசத்தினாலும் மென்மேலும் தம் குழந்தைகளுக்காகப் பாடுபடுகின்றனர்.

தொடர்ந்து பிள்ளைகளுக்கும் பரம்பரைகளுக்கும் சேவை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்தத் தியாகத்தில் தாய், தந்தை முழுமையான திருப்தி கண்டாலும் பிள்ளைகள் சுயநல திருப்தியே பெறுகின்றனர். (விதி விலக்கான உண்மையான பாசமான சில குழந்தைகளும் உள்ளனர்)
நாம் பிள்ளைகளைப் பராமரித்தது போன்று எதிர்காலத்திலும் பிள்ளைகள் நம்மை பராமரிப்பார்கள் என்று நம்புவது சேற்றில் காலை விடுவதற்குச் சமன். அனாதைகளைப் போல் அவலத்தில் துப்பவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் திணறும் பெற்றோர்களே அதிகம். இயலாத காலத்தில் என்னவெல்லாமோ எண்ணி, ஏங்கிக் கண்ணீர் வடிக்கின்றனர்.

மேலும், சில பிள்ளைகள் தம்முடைய சில சுயநலத் தேவைகளுக்காக தன்னை வளர்த்து ஆளாக்கிய பேற்றோரை விட்டு விலகுவதும் அல்லது அதற்கேற்றாற் போல் போலித்தனமான நொண்டிக் குற்றச்சாட்டுகளைக் கூறி தமது பிழைகளை மறைக்க பெற்றோர்கள் மீது பழி சுமத்தி மெல்ல, மெல்ல விலகி ஒதுங்குவதும் நாளாந்தம் நடந்தேறிக் கொண்டே இருக்கின்றன.

பிள்ளைகள் விட்ட குறைகள், தவறுகள் (மன்னிக்க முடியாத தவறுகள்) தாய், தந்தையர் மன்னித்து மறைத்து சமுதாயத்தில் ஓர் உயர்ந்த இடத்துக்கு வர வேண்டும் என்று போராடிய பெற்றோரையே எதிர்காலத்தில் குற்றவாளிகளைப் போன்று கூண்டில் நிறுத்தி கேள்வி கேட்கின்றனர். தாம் மணம் முடித்தவர்கள் முன்னிலையிலேயே அவமானப்படுத்தும் பிள்ளைகளும் இல்லாமல் இல்லை.

இதற்குத்தான் கூடிய வயதுடன் வாழ்வதனை ஒரு சாபமாகப் பெற்றோர் நினைக்கும் அதே வேளை, அதிகளவு வயது வாழ்வு பிள்ளைகளையும் எரிச்சலடைய வைக்கிறது. முகம் சுழிக்க வைக்கிறது. அதிகளவு முதுமை இவர்களை ஒதுக்குப் புறமாக ஒதுக்கி வைக்கிறது. இவர்களின் ஓரிரு வார்த்தைகளைக் கூடச் செவி கொடுத்துக் கேட்கவும் நேரமிருக்காது. தமக்கும் என்றாவது ஒருநாள் இந்த நிலை நேரும் என்பதனை பிள்ளைகள் எண்ணிப் பார்ப்பது இல்லை.

மேலும் பிள்ளைகளின் சில நடவடிக்கைகள், அழுத்தங்கள் போன்றன இவர்களுக்கு மன உளைச்சலைத் தோற்றுவித்து உளவியல் ரீதியில் நோய்களை ஏற்படுத்துகிறது. தளர்ந்த நரம்புகளில் இறுக்கமான வார்த்தைகளினால் நிலை குலைவையும் உண்டாக்குகிறது. பாதுகாப்பற்ற நிலையினால் பதறித் தவிக்கின்றனர். சில பெற்றோர்களுக்குச் சகல வசதிகளும் செய்து கொடுக்கப்படுகின்றன என்ற போர்வை இருந்தாலும் பேச்சுத் துணை இல்லாத தனிமையில் மனம் பாதிக்கப்பட்டு புலம்பலாக மாறுவதும் உண்டு. அவர்கள் தங்கள் கடந்த கால வாழ்வை எண்ணிக் கலங்குவது கண்ணீரை வரவழைக்கும்.

சகல சௌகரியங்களுடனும் மதிப்புடனும் வாழ்கின்றனவர்கள் கர்வப்படலாம்…… பெற்றவர்கள் அருகில் பூப்போல் இருந்தால் மாத்திரமே! அப்படி அமையாதவிடத்துப் பிள்ளைகள் எல்லாம் ”விமோசனம் இல்லாத சாபத்துக்குரிய நோயை”ப் போன்றவர்கள்.

நாம் பெற்றோர்களிடத்தில்  மிகவும் நீதியாகவும் நேர்மையாகவும் நடந்து கொள்ள வேண்டும். நாம் எப்படிப்பட்ட கல்விமான்களுடனும் புத்தி ஜீவிகளுடனும் செல்வந்தர்களுடனும் நட்புப் பாராட்டி, சீராட்டினாலும் பெற்றவர்களின் பிரார்த்தனைதான் இம்மையிலும் மறுமையிலும் அங்கீகிரிக்கப்படும் என்பதனை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும். பெற்றோரைத் திட்டுவது, வீட்டை விட்டுத் துரத்துவது, அவர்களை ஒதுக்கி வைப்பது, வேலைக்காரர்கள் போல் நடத்துவது இப்படிப்பட்ட பெரும்பாவங்களை விட்டும் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அவர்களைப் பார்த்து முகங்சுழிக்கும் உரிமை கூட எமக்கு இல்லை. அவர்களை இதயத்தில் சுமக்காவிட்டாலும் பரவாயில்லை. நோய்வினை செய்யாமல் இருந்தால் போதும்.
நன்றி: வீரகேசரி வாரமஞ்சரி
source: www.fathimanaleera.blogspot.com



0 கருத்துகள்: