சங்கரராமன் கொலை வழக்கிலிருந்து சங்கராச்சாரியும், இஹ்சான் ஜாப்ரி கொலை வழக்கிலிருந்து நரேந்திர மோடியும் விடுவிக்கப்பட்டுள்ளனர். புதுவை நீதிமன்றமும், அகமதாபாத் நீதிமன்றமும் அமைந்திருக்கும் இடங்கள் வெவ்வேறு எனினும், ஆதிக்கச் சக்திகளுக்கு ஆதரவான அவற்றின் நடவடிக்கைகள் ஒன்றாகவே உள்ளன.
பாபர் மஸ்ஜித் இடிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகள் என லிபரஹான் ஆணையத்தால் அடையாளம் காட்டப்பட்ட அத்வானி, உமாபாரதி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட இந்துத்துவவாதிகள் எவர் மீதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மஸ்ஜித் இடிப்பில் அவர்கள் ஈடுபட்டதற்கான சாட்சியங்களும், ஆதாரங்களும் இருந்த பிறகும் அவர்களுக்குத் தண்டனையில்லை.
ஆனால், நாடாளுமன்றத் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறி, அப்சல் குருவுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. அப்சல் குரு மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரங்கள் இல்லையெனினும், நாட்டின் கூட்டு மனசாட்சியின் அடிப்படையில் தண்டனை வழங்குவதாக அறிவித்தார் நீதிபதி.
மும்பையில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி என ஸ்ரீகிருஷ்ணா ஆணையத்தால் அடையாளம் காட்டப்பட்ட பால்தாக்கரே மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ‘முடிந்தால் என்னைக் கைது செய்து பார்’ என அவர் சட்டத்துக்கே சவால் விட்ட பிறகும் எந்தச் சட்டமும் அவரை நெருங்கவில்லை. இறுதியில் அவர் மரணித்த போது தேசியக் கொடியை உடலில் போர்த்தி மரியாதை செலுத்தினார்கள்.
ஆனால், மும்பை தாஜ் ஹோட்டல் மீதான தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்ட அஜ்மல் கசாப்புக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டு விட்டது.
கோத்ரா ரயில் எரிப்பில் 59 கரசேவகர்கள் இறந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 11 முஸ்லிம்களுக்கு மரண தண்டனையும், 20 முஸ்லிம்களுக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், அதே குஜராத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை இனப்படுகொலை செய்த குற்றவாளிகள் அனைவரும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி வருகின்றனர். மோடி தலைமையிலான அரசு முஸ்லிம்கள் மீதான தாக்குதலை முன்னின்று நடத்தியதற்கான ஆதாரங்கள் இருந்த பிறகும் அவற்றை ஏற்க மறுக்கின்றன நீதிமன்றங்கள்.
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அல் உம்மா இயக்கம் தடைசெய்யப்பட்டு, அதன் தலைவர்கள் நிர்வாகிகள் அனைவரும் கைதாகி சிறையில் உள்ளனர். முக்கிய குற்றவாளிகள் அனைவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. குண்டுவெடிப்பில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு அரசு உரிய இழப்பீட்டையும் வழங்கியுள்ளது.
ஆனால், கோவையில் 19 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் எந்த நடவடிக்கையும் இல்லை. எவரும் சிறையில் இல்லை. கொல்லப்பட்ட முஸ்லிம்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடும் வழங்கப்படவில்லை. முஸ்லிமுக்குச் சொந்தமான ஷோபா டெக்ஸ்டைல்ஸ் சூறையாடப்பட்டு அழிக்கப்பட்டது. அந்த இடத்தில் இன்று போத்தீஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக எழுந்து நிற்கிறது. ஷோபா நிறுவனத்தினர் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. இதுபோல ஆயிரமாயிரம் முஸ்லிம் வர்த்தகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், எந்த நீதியும் இல்லை.
சேலம் ஆடிட்டர் ரமேஷ் உள்ளிட்ட இந்துத்துவ இயக்கங்களின் தலைவர்கள் கொல்லப்பட்ட வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகிய முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த வழக்குகளில் ஏற்கெனவே உண்மைக் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுவிட்டதாக காவல்துறை தலைவரே அறிவித்துவிட்ட நிலையிலும், இந்த முஸ்லிம் இளைஞர்கள் வேண்டுமென்றே சிக்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், பழனி பாபா படுகொலை வழக்கில் கைதான இந்துத்துவ சக்திகள் ஒருவர் கூட இப்போது சிறையில் இல்லை. அனைவரும் சுதந்திரமாக வெளியே வலம் வருகின்றனர். அந்த வழக்கையே, காவல்துறை நீர்த்துப் போகச் செய்து விட்டது.
பெங்களூர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கைதாகி சிறையிலுள்ள அப்துல் நாசர் மதானிக்கு பரோலும் இல்லை; பிணையும் இல்லை. மருத்துவ சிகிச்சைக்கான அனுமதிக்குக் கூட அவர் உச்சநீதிமன்றம் வரை சென்று போராட வேண்டியுள்ளது. சக்கரநாற்காலியில் தவழ்ந்து கொண்டிருக்கும் ஊனமுற்ற அந்த மனிதரை, 24 மணிநேரமும் கேமரா கண்காணிப்பில் அதிபயங்கர வெளிச்சத்தில் சிறை வைத்துள்ளனர். இத்தனைக்கும் அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப் படவில்லை. அவர் தண்டனைக் கைதியும் அல்ல. விசாரணைக் கைதிதான்.
ஆனால், மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்றுள்ள, நடிகர் சஞ்சய் தத் விரும்பியபோதெல்லாம் வெளியே வருகிறார். திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதால் படப்பிடிப்பு முடியும்வரை கைதாவதிலிருந்து விலக்கு வேண்டும் என்றார். சொந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க அடிக்கடி பரோலில் செல்கிறார்.
400 ஆண்டுகால வரலாற்றுச் சின்னமான பாபர் மஸ்ஜிதில், 1949 இல் இந்துத்துவ சக்திகள் அத்துமீறி நுழைந்து ராமர்-சீதை சிலைகளை வைத்தபோது அவற்றை அகற்ற மறுத்தது அரசு நிர்வாகம். நீதிமன்றமும் அந்த அநீதிக்குத் துணை நின்றது. பின்னர் அங்கே சென்று பூஜை செய்ய அனுமதி வழங்கப்பட்டது. 60 ஆண்டுகளுக்குப் பின் 2010 இல் அவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய அலகாபாத் உயர்நீதிமன்றம், பாபர் மஸ்ஜித் இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்று கூறியது. ஒரு இடப்பிரச்னையை ஆதார ஆவணங்களின் அடிப்படையில் அணுகாமால், நம்பிக்கையின் அடிப்படையில் அணுகியது நீதிமன்றம். உலக நீதித்துறை வரலாற்றிலேயே இப்படி சட்டத்திற்குப் புறம்பான ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டதில்லை.
ஆனால், வேலூர் கோட்டையிலுள்ள மஸ்ஜிதில் தொழுகை நடத்த முஸ்லிம்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. தடையை மீறி தொழுகை நடத்தப் போகும் முஸ்லிம்கள் கைது செய்யப்படுகின்றனர். போராட்டங்கள் ஒடுக்கப்படுகின்றன. அந்தக் கோட்டை வளாகத்தில் உள்ள கோவிலில் வழிபாடு செய்ய இந்துக்களுக்கு அனுமதி இருக்கும்போது, மஸ்ஜிதில் தொழுகை நடத்தவிடாமல் முஸ்லிம்களை மட்டும் தடுப்பது ஏன் என்ற கேள்விக்கு இங்கே எந்த விடையும் இல்லை.
இந்தியாவில் முஸ்லிம்களுக்கும், இந்துத்துவ சக்திகளுக்கும் ஒரே சட்டம் தான். ஆனால், ஒரே நீதியில்லை.
நீதி மறுக்கப்பட்டவர்களும், நீதியை மறுப்பவர்களும் ஒரே நாட்டில்தான் வாழ்கின்றனர். அநீதி இழைத்தவன் அதிகாரத்திலும், அநீதி இழைக்கப்பட்டவன் அடித்தட்டிலும் நிற்பது ஆபத்தானது. பாதிக்கப்பட்டவன் குமுறிக்கொண்டிருக்கும் நாட்டில் எப்படி அமைதி நிலைக்கும்?
நன்றி:ஆளூர் ஷாநவாஸ்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக