ரியாத்: இந்தியாவின் 65வது குடியரசு தினத்தை முன்னிட்டு 24-01-14 அன்று சவுதி அரேபியாவின் ரியாத் மாநகரில் சவுதி வாழ் இந்தியர்கள் சார்பாக இரத்ததான முகாம் நடைபெற்றது.
ரியாத் மாநகரிலுள்ள கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டியில் நடைபெற்ற இந்த முகாமை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டலம் ஏற்பாடு செய்திருந்தது. காலை 8:30 மணிக்கு துவங்கிய இம்முகாமில் ஆண்கள், பெண்கள் என 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழர்களால் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும் தமிழர்கள் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, உ.பி போன்ற பிற மாநில சகோதரர்களும் பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், சிரியா, பங்களாதேஷ், ஏமன், எத்தியோபியா, சவுதி அரேபியா உட்பட பல நாட்டினரும் இந்த முகாமில் கலந்து கொண்டு குருதிக் கொடையளித்தனர்.
கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி மருத்துவமனையின் இரத்ததானக் குழு மக்களிடமிருந்து இரத்ததானம் பெறுவதற்காக 25 படுக்கைகள் ஏற்பாடு செய்திருந்தது. காலை 8:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை நடைபெற்ற இம்முகாமில் கலந்து கொண்ட 302 பேரிடமிருந்து 288 யூனிட் இரத்தம் தானமாக பெறப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வாலண்டியர் குழு தங்களது வாகனங்கள் மூலமாக மக்களை நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து மருத்துவமனைக்கு அழைத்து வருவது அவர்களை திரும்ப அழைத்து செல்வது மக்களுக்கு வழி காட்டுவது போன்ற பணிகளை சிறப்பான செய்திருந்தனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டல இரத்ததான பொறுப்பாளர் சோழபுரம் ஹாஜா, இந்த முகாம் பற்றி குறிப்பிடும் போது, இது போன்ற முகாம்கள் மட்டுமின்றி அவசர தேவைக்காக எந்த நேரத்தில் இரத்தம் தேவைப்படினும் அதை நாங்கள் ஏற்பாடு செய்து கொடுக்கின்றோம். இது மட்டுமின்றி மருத்துவ உதவிகள், வாழ்வாதார உதவிகள் போன்ற மனிதாபிமான பணிகளை நாங்கள் பல வருடங்களாக தொடர்ந்து செய்து வருகிறோம் என்று குறிப்பிட்டார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டல தலைவர் அப்துர்ரஹ்மான் நவ்லக் கூறுகையில், "சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற நாட்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடத்துவது, கருத்தரங்கம் என்ற பெயரில் வெறுமனே கூடிக் கலைவது, தொலைக்காட்சிகளின் முன்னே போஸ் கொடுப்பது போன்றவற்றை தவிர்த்து மக்களுக்கு பயனுள்ள வகையில் இரத்ததான முகாம்களை நடத்தி வருகின்றோம். இந்திய குடியரசு தினம், இந்திய சுதந்திர தினம் போன்ற நாட்களில் மட்டுமின்றி வருடத்திற்கு 6 முறை இதுபோன்ற மாபெரும் முகாம்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தி வருகின்றது. கடந்த 2013ம் ஆண்டு நாங்கள் 1000 யூனிட் இரத்தானம் வழங்கியுள்ளோம். ஒரே நாளில் அதிகமானோர் இரத்ததானம் செய்ததில் சவுதி அரேபியாவில் தொடர்ந்து பல வருடங்களாக முதலிடத்தில் இருந்து வருகின்றோம். இது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம் சார்பாக நடத்தப்பட்ட 27வது முகாமாகும்." என்று குறிப்பிட்டார்.
- ரியாதிலிருந்து முஹம்மது மாஹீன்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக