கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

உஹது மலைக்காற்று!


உஹது மலை உச்சியிலே உலவிக் கொண்டிருந்த ஊதக்காற்றுக்கு உடை மாற்றும் நேரம்.

உலாவந்த நிலா மேகத்துக்குள் மறைந்து கொண்டது. பனிச்சட்டையை மாற்றிக் கொண்ட காற்று சீரான சட்டையைப் போட்டுக் கொண்டது.

ஊதக்காற்று சீதளக் காற்றாய் மாறிய போது அதன் பயணம் வடக்கை நோக்கி இருந்தது.

அப்போது மதீனாவிலிருந்து எழுந்து வந்த குரல் காற்றின் கன்னங்களை வருடியது.

‘அல்லாஹு அக்பர்… அல்லாஹு அக்பர் – இறைவன் பெரியவன்… இறைவன் பெரியவன்’ என்ற பிலாலின் குரல் மஜ்ஜித் நபவியிலிருந்து எழுந்து நான்கு திக்குகளிலும் தொழுகைக்கான அழைப்பை அலைமோதச் செய்து கொண்டிருந்தது.

மதீனாவின் எல்லையை அடைந்ததோ இல்லையோ சீதளக் காற்றுக்கு சிறகு முளைத்தது, விரைந்தோடிய காற்று அண்ணலாரின் இல்லங்களுக்குள் சென்று சென்று வந்தது.

ஈச்சமரக் கீற்றுகளால் வேயப்பட்ட அந்த இல்லங்கள் மண் மதில்களால் ஆனவை. மஸ்ஜிதுந் நபவியின் மேற்கிலிருந்த இல்லத் தொகுப்பில் ஒரே அளவிலான பல அறைகள் இருந்தன. அறைத் தடுப்பாக ஈச்சமரத்தட்டிகளும் பச்சை செங்கற்களும் திகழ்ந்தன. பத்தடிக்குப் பத்தடி என்பார்களே அந்த அளவிலான அறைகள்.

பள்ளிவாசலை அடுத்திருந்த முதல் அறையில் ஆயிஷா, இரண்டாவது அறையில் ஹஃப்ஸா, மூன்றாவது அறையில் ஸவ்தா என இறைநம்பிக்கையாளர்களின் அன்னையர்கள் வாழ்ந்தார்கள்.

இல்லங்களுக்குள் நுழைந்து பார்த்த காற்று ஏமாற்றத்துடன் திரும்பியது.

அடுத்து அக்காற்று அண்ணலாரின் பாசமகள் ஃபாத்திமாவின் இல்லத்துள் நுழைந்தது. அங்கு ஃபாத்திமாவும் இல்லை.

அண்ணலாரைத் தொடர்ந்து மகளிரெல்லாம் வைகறைத் தொழுகைக்காக மஸ்ஜிதுந் நபவிக்குச் சென்றுள்ளது இப்போதுதான் காற்றுக்குப் புரிந்தது.

பள்ளிவாசலுக்குச் சென்று பார்க்கலாமே என்றெண்ணிய காற்று அண்ணலாரின் அண்டைவீட்டார் முன் நின்றது. அப்போதுதான் அண்டை வீட்டுக்காரர்களான ஸஅத் இப்னு உபாதா, ஸஅத் இப்னு முஆத், அமாரா இப்னு ஹஸ்ம், அபூஅய்யூம் ஆகியோர் பள்ளிவாசலுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

பள்ளிவாசல் வீதியில் நின்ற காற்று அண்ணலாரின் தோழர்கள் தங்கியிருந்த திண்ணைக்கு வந்தது. தோழர்கள் அப்போதுதான் பள்ளிவாசலை நோக்கி நடை பயிலத் தொடங்கியிருந்தார்கள்.

அவர்கள் இன்று முஸ்லிம்களாக இருந்தாலும் அவர்களோடு ஒரு நாடோ, ஒரு குலமோ சம்பந்தப் பட்டிருந்தது. பல்வேறுவகை மலர்கள்; ஒரு சரத்தில்! ஈரானிலிருந்து வந்த ஸல்மான் ஃபார்ஸி, ரோம தேசத்திலிருந்து வந்த ஸுஹைப், அபிசீனியா தந்த கறுப்புத் தங்கம் பிலால், தவ்ஸ் குலத்தைச் சேர்ந்த அபூஹுரைரா, குறைஷிகுலத்து ஸஅத் இப்னு அப்பாஸ் என திண்ணைத் தோழர்கள் பலரும் பள்ளிவாசலுள் நுழைந்தார்கள்.

காற்றும் நுழைந்தது.

இகாமத் சொல்லப்பட வைகறைத் தொழுகை நடத்தி முடிக்கப்பட்டது.

தொழுகையை நடத்தி முடித்த அண்ணலார் பிரார்த்தனைக்குப் பின் சிற்றுரை ஒன்றை நிகழ்த்தினர். இறைவனை வாழ்த்திய அண்ணலார் ஒரு முக்கிய கருத்தை எடுத்துரைத்தனர்.

“அவ்ஸ் – கஸ்ரஜ் என இருந்தவர்களும் குறைஷிகளாக இருந்தவர்களும் இப்போது முஸ்லிம்களாக மாறிவிட்டோம். யத்ரிப்வாசிகள் – மக்காவாசிகள் எனப் பிரிந்திருந்தோர் இப்போது ஒரே கூடாரத்தின் அடியில் கூடிவிட்டோம். ஆதரவு தந்தவர்களும் ஆதரவு தேடி வந்தவர்களும் இப்போது ஒரே சமுதாயமாக மாறிவிட்டோம். இங்கே யத்ரிபில் வாழ்பவர்கள் உழவுத் தொழிலைச் செய்பவர்கள். மக்காவிலிருந்து வந்து இங்கே வாழ்பவர்கள் வணிகத்தை மேற்கொண்டோர். இப்போது இங்கு புதிய சூழல் உருவாகியுள்ளது. மக்காவாசிகள் யத்ரிப்வாசிகளோடு இணைந்துவிட்டதால் அவர்கள் உழவுத் தொழிலையும் மேற்கொள்ளும் நிலை. யத்ரிப்வாசிகள் மக்காவாசிகளோடு ஒன்றிப் பிணைந்து விட்டதால் வணிகத்தையும் கற்றுக் கொள்ள வேண்டிய நிலை” எனக் கூறிய அண்ணலார் இனி எவ்வாறெல்லாம் அன்ஸாரிகளும் முஹாஜிர்களும் நடந்து கொள்ள வேண்டும் எனப் பேசிக் கொண்டிருந்தனர்.

பள்ளிவாசலுக்குள் இருந்து அண்ணலாரின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த காற்றுக்கு இருளைக் கிழிக்க கட்டியங்கூறும் கீழைவான் சிவப்பைக் காண ஆசைவந்தது; அது மதீனாவின் கிழக்குப் பக்கமாய் ஓடிப்போய் பார்த்தது.

அண்ணலாரின் உரை நிறைவுற்றிருந்தது. தோழர் ஒருவர் “என்ன காற்றைக் காணோம்? அதிகாலையிலேயே புழுங்குகிறது” என்றார்.

“ஆமாம்” என மற்றொரு தோழர் சொல்லி முடிக்கும் முன்பே பள்ளிவாசலின் கூரையை அசைத்த காற்று உட்புறம் சென்று அண்ணலாரை ஆசைதீர பார்த்துக் கொண்டிருந்தது.

அண்ணலார் பள்ளிவாசலை விட்டு வெளியேறி தோழர்களுடன் பேசிக் கொண்டே தம் இல்லத்தை நோக்கி நடந்தனர்.

செம்பு சேராத பொன்மேனி; சீதள நிலவாய்த் தோன்றும் முகம்; நடுத்தரமான உயரம்; கச்சிதமான தலை; கறுமையும் அடர்த்தியும் கொண்டு கழுத்துவரை தொங்கும் கற்றைக் குழல்; தோற்றப் பொலிவுக்கு மேலும் அழகூட்டும் அகலமான நெற்றி; தொங்கும் பிறையாய் வளைந்து அடர்த்தியாகவும் தனித்தனியாகவும் காட்சி தரும் மெல்லியு புருவங்கள்; பொருத்தமான மூடிகளாகப் பொருந்தித் திறக்கும் இமைகள்; வெண்ணிலவில் கருமணியாய் கண்கள்; காண்பவரைக் கவர்ந்திழுக்கும் வெண்திரையில் சிவப்புக் கோடுகள்; வெட்கமும் நாணமும் கலந்து மனதைக் கவரும் சூதில்லாத பார்வை; நீண்ட எடுப்பான மூக்கு; இதமான மொழி பேசும் இதழ்கள்; புன்னகை தவழும் பல்வரிசை; முக தீபகற்பத்தில் மூன்று பக்க தாடி; எழில் தவழும் நீண்ட கழுத்து; விரிந்த மார்பு; உயர்ந்த தோள்கள்; உறுதியான கரங்கள்; அகலமான மணிக்கட்டுகள்; மெல்லிய விரித்த உள்ளங்கைகள்; அளவான விரல்கள்; உருண்டு திரண்ட கால்கள்; வார்க்கப்பட்டது போல் வாய்ந்த குதிகால்கள்; முன்பக்கம் இலேசாகக் குனிந்து அழுத்தி வைத்து நடக்கும் பாதங்கள்; மேட்டிலிருந்து பள்ளத்தை நோக்கி இறங்குவதுபோன்ற நடை.

புறஎழிற்கோவை போற்றத்தக்கவையாக இருக்க அக எழிற்கோவையைப் பற்றி அலசலாமா?

உண்மை பேசுதல், ஒவ்வொரு வேலையையும் நேர்மையுடன் செய்தல், வம்புகளை விட்டு விலகியிருத்தல், சண்டை – சச்சரவுகளைத் தவிர்த்தல் தனிமையில் அமர்ந்து சிந்தனை செய்தல் எனப் பட்டியல் நீளும். பார்ப்பவர்கள் முதல் பார்வையிலேயே ஈர்க்கப்படுவார்கள்.

அண்ணலார் தம் இல்லம் வர, விடைபெற்றனர்; தோழர்கள் தம்தம் இடங்களுக்குச் சென்றனர்.

முன்பே அண்ணலார் முடிவெடுத்திருந்தபடி அன்றையப் பொழுதை அவர்கள் ஆயிஷா வீட்டில் கழிக்க வேண்டும். அதன்படி அண்ணலார் முதல் வீட்டுக்குச் சென்றனர்.

தொழுதுவிட்டு முன்னரே வந்திருந்த ஆயிஷா அண்ணலாரை வரவேற்றார். அண்ணலாரின் மீது அளவற்ற அன்பு கொண்டிருந்த காற்று இணையர் இருவருக்கும் இடையே புகுந்து இதம் பாடல் பாடிக் கொண்டிருந்தது.

“கோடுபோட்ட சட்டை உங்களுக்குப் பொருத்தமாக இல்லை. கழட்டி வைத்துவிடுங்கள்” என்றார் ஆயிஷா, அண்ணலாரின் புதுச் சட்டையைப் பார்த்து.

“யெமனிலிருந்து கொண்டுவந்தது இந்தச் சட்டை; இது எனக்குப் பொருத்தமாக இல்லையா!”

“ஆளை மாற்றிக் காட்டும் சட்டை உங்களுக்கு வேண்டாம். நீங்கள் இதை அப்துல்லாஹ் இப்னு உபைக்குக் கொடுத்துவிடுங்கள்.”

“இறைவன் அளித்த ஏகத்துவத்தை ஏற்றுக் கொள்வதில் தடுமாறிக் கொண்டிருக்கும் இப்னு உபை நாம் கொடுக்கும் பருத்தி ஆடையை  ஏற்றுக் கொள்வாரா?” எனப் புன்னகைத்த அண்ணலாரைப் பார்த்த காற்று தான் காலையில் மாற்றிக் கொண்ட சட்டையைப் பார்த்துக் கொண்டது. அது இப்போது காலைக் காற்றாக மாறியிருந்தது.

அண்ணலார் அன்னையாருடன் பேசிக் கொண்டிருந்தனர். அன்னையார் காலை உணவுக்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார்.

மரக்கட்டிலில் அமர்ந்த வண்ணம் அண்ணலார் சுருட்டி வைக்கப்பட்ட தோலாலான படுக்கையைப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஈச்சமர நார்கள் நிறைக்கப்பட்ட தலையணை, தண்ணீர் குடிக்கும் குவளை, அளவை மரக்குவளை ‘சாஉ’, மரப்பாத்திரம், தண்ணீர்க் குடுவை, எண்ணெய்ப் போத்தல், கண்ணாடி, சீப்பு, சுர்மா குச்சி, அத்தர் சீசா, போர்வை, சாக்கு என அவை ஒவ்வொன்றும் அதனதன் இடத்தில் இருந்தன.

ஆயிஷா கோதுமை மாவை எடுத்துக் கொண்டு ரொட்டி தயார் செய்ய வெளியில் வந்தார். அண்ணலாரின் இல்ல வளாகத்தில் யாருக்கும் தனித்தனி அடுப்புகள் கிடையாது. வெளியில் வைக்கப்பட்டிருந்த ஒரே அடுப்பில் தான் அனைவரும் சமைத்துக் கொள்ள வேண்டும்.

அந்த அடுப்பு கூட நபித்தோழர் ஸஅத் இப்னு ஸராரா அண்ணலாருக்கு அன்பளிப்பாக வழங்கிய அடுப்பு.சலிக்காமல் பேசிக் கொண்டிருந்து விட்டு ரொட்டி செய்ய வெளியில் வந்த அன்னையார் மாவைக் காட்டி “சலிக்காத மாவு” என்றார். “அதில் செய்யும் ரொட்டியைத் தான் நான் விரும்புகிறேன். அதனால்தான் நம் வீட்டில் சல்லடை இல்லை” என்றனர் நபிகள்.

வெப்பக் காற்றாக மாறிக் கொண்டிருந்த காலை காற்றின் உள்ளம் கொதித்தது.

அன்னையார் ரொட்டி செய்து முடித்திருந்தார். ரொட்டிக்கு தொட்டுக் கொள்ள ‘ஸுரைத்’ எனும் குழம்புச் சாறும் தயாரித்திருந்தார்.

அண்ணலாருக்கு மிகவும் பிடித்த குழம்பு ‘ஸுரைத்’. ஸுரைத்தில் ரொட்டியை ஊற வைத்து எடுத்துவிட்டால் அண்ணலார் அதை விருப்பத்தோடு உண்பர்.

“பெண்மணிகளில் சிறந்தவர் ஆயிஷா. உணவுவகைகளில் சிறந்தது ஸுரைத்” என அண்ணலார் புகழ்ந்துரைப்பார்.

“ஆயிஷா, சென்றமுறை நீர் சுரைக்காயில் ஆட்டுக்கால்களைப் போட்டு சமைத்திருந்தீர். அதில் கால் இருந்தது கை (காய்) இல்லை” என அண்ணலார் மொழிந்த போது அன்னையார் சிரித்துவிட்டார்.

காற்றுக்கும் சிரிப்பு வந்தது. அண்ணலாரின் நகைச்சுவையைக் கேட்ட காற்று ஆனந்தக் காற்றாக மாறியது.உணவுகளில் சிறந்த உணவான ஸுரைத்தில் ஊறிய ரொட்டிகளை அண்ணலார் உண்டபோது காற்று வேகமாக வீசியது. அண்ணலார் பூசியிருந்த அத்தரின் வாசனையை காற்று வாரிப் பூசிக் கொண்டது.

“ஸுரைத்தை ஃபாத்திமாவுக்கும் கொடுக்கலாமே!” என அண்ணலார் சொல்லி முடிக்கும் முன்பே ஃபாத்திமாவுக்குக் கொடுக்க அன்னையார் தயாராக வைத்திருந்த ஸுரைத் அண்ணலார் கரங்களை அடைந்தது.

ஸுரைத்தை எடுத்துக் கொண்டு அண்ணலார் அடுத்திருந்த ஃபாத்திமாவின் இல்லம் சென்றனர். மகளாரிடம் ஸுரைத்தைக் கொடுத்துவிட்டுப் பேசிக் கொண்டிருந்த அண்ணலார் திண்ணைத் தோழர்களிடம் சென்றனர்.

அப்போது திண்ணைத் தோழர்களிடமும் ஸுரைத் வந்திருந்தது. அதைப் பார்த்த அண்ணலாருக்கு ஆயிஷாவின் செயலைப் பாராட்டத் தோன்றியது.

அப்போது அங்கே சில முஹாஜிர்களும் அன்ஸாரிகளும் வந்தனர். அண்ணலாருடன் உரையாடிக் கொண்டிருந்த அவர்களுடைய பேச்சு ஸல்மான் ஃபார்ஸி முஹாஜிரா அன்ஸாரியா என்ற அடையாளத்தை நோக்கிச் சென்றது.

“ஸல்மான் நம்மைப்போல் தம் வீட்டைத் துறந்து வந்தவர். அதனால் அவர் நம் குழுவைச் சேர்ந்தவர்” என முஹாஜிர்கள் கூறினர்.

“இல்லை; அவர் ஏற்கெனவே யத்ரிபில் தங்கியிருந்தவர். எனவே அவர் நமது குழுவைச் சேர்ந்தவர்” என அன்ஸாரிகள் கூறினர்.

ஸல்மான் ஃபார்ஸி புன்னகைத்த வண்ணம் அண்ணலாரைப் பார்த்தார். அண்ணலார் அனைவரின் முகங்களையும் பார்த்து “ஸல்மான் அவரோ இவரோ அல்லர்; நம் குடும்பத்தைச் சேர்ந்தவர்” என்றனர்.“அண்ணலார் சொல்வது பெருமைபடத்தக்கதுதான் என்றாலும் நான் இஸ்லாத்தின் மகன் ஸல்மான் (ஸல்மான் இப்னு இஸ்லாம்) என்பதில் பெருமைப்படுகிறேன், பெரும் மகிழ்ச்சியடைகிறேன்” என ஸல்மான் மொழிந்ததைக் கேட்ட அண்ணலார் ‘அல்ஹம்துலில்லாஹ்’ எனக் கூறி விடைபெற்றனர்.

அங்கிருந்து புறப்பட்ட அண்ணலார் தம் மற்ற துணைவியர்களையும் சந்தித்துவிட்டு மஸ்ஜித் நபவிக்குள் சென்றனர்.

அண்ணலாரைப் பின் தொடர்ந்து சென்ற காற்று வெப்பத்தை வெளியில் உதறித்தள்ளிவிட்டுப் பள்ளிவாசலுக்குள் நுழைந்தது. அண்ணலாரைச் சுற்றி சுற்றி வந்தது.

அண்ணலார் உடலை வலப்பக்கமாய்ச் சாய்த்து கையால் தலையைத் தாங்கிய வண்ணம் சயனித்திருந்தனர். மதியத் தொழுகைக்கு இன்னும் நேரமிருந்தது.

அப்போது இருவர் ஒட்டகத்தைப் பக்கத்திலுள்ள மரத்தில் கட்டிவிட்டு பள்ளிவாசலை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அவர்களின் வருகையைக் கண்ணுற்ற பிலால் பள்ளிவாசலுக்கு வெளியில் வந்தார்.பின்னர் மூவரும் பேசிக் கொண்டே அண்ணலார் சயனித்திருந்த இடத்துக்கு வந்தபோது மூன்று திண்ணைத் தோழர்கள் பள்ளிவாசலுக்குள் நுழைந்து கொண்டிருந்தனர்.

சாய்ந்திருந்த அண்ணலார் எழுந்து வந்து புதியவர்களை வரவேற்றனர். முகமன் கூறிய அண்ணலார் அவர்களை அமரச் சொல்லி அளவளாவத் தொடங்கினர்.

“நாங்கள் பஹ்ரினிலிருந்து வருகிறோம். நாங்களிருவரும் சகோதரர்கள். எங்கள் குடும்பத்தினரும் எங்களைச் சேர்ந்தவர்களும் இயற்கையை வணங்கிக் கொண்டிருக்கிறோம். சிலை வணக்கம் எங்களிடையே கிடையாது. எங்களைக் கடந்து சென்ற வணிகர்கள் உங்களைப் பற்றியும் உங்களுடைய மார்க்கத்தைப் பற்றியும் சொன்னார்கள். நாங்கள் எங்களுக்குள் கலந்து பேசி உங்களைச் சந்திக்க முடிவெடுத்தோம்” என வந்தவர்களில் ஒருவர் சொல்லிக் கொண்டிருந்தார்.

“உங்களைப் பார்க்காமலேயே எங்களுக்கு உங்கள் மேல் அளவற்ற அன்பிருந்தது. இப்போது அவ்வன்பு அளவுக்கு அதிகமாகிவிட்டது. உங்களின் நிழலுக்கு வந்த எங்களுக்கு சுவனம் கிடைக்குமல்லவா!” என இரண்டாவது தோழர் கேட்டார்.

“இறைநம்பிக்கையும் தொழுகையும் நற்செயல்களும் உங்களுக்குச் சுவனத்தைப் பெற்றுத் தரும்.” எனக் கூறிய அண்ணலாரிடம் பஹ்ரின் சகோதரர்கள் பைஅத் – உறுதிமொழி அளித்தார்கள்.

அண்ணலாரைக் கட்டித் தழுவிய சகோதரர்கள் திண்ணைத் தோழர்களையும் கட்டித் தழுவினார்கள்.பிலாலின் வழிகாட்டலில் பஹ்ரின் சகோதரர்கள் உடல் கழுவி, உடை மாற்றிக் கொண்டார்கள்.

அப்போது சூரியன் மேலேறி மேற்கில் இறங்கத் தொடங்கியிருந்தது. பிலால் பெருங்குரல் எழுப்பி பகல் தொழுகைக்கான அழைப்பை விடுத்தார்.

பள்ளிவாசல் நிரம்பியது. அண்ணலார் தொழுகையை நிறைவேற்றி வைத்தனர். தொழுகைக்குப் பின் பள்ளிவாசலின் முன்புறத்தில் விருந்தினர்களுக்கான உணவு வழங்கப்பட ஏற்படாகியிருந்தது.

பிலாலும் இளைஞர் சிலரும் ஏற்பாடுகளைச் செய்தனர். அண்ணலாரின் இல்லங்களிலிருந்து உணவு வரவழைக்கப்பட்டது. அண்ணலாரும் அவர்களுடன் அமர்ந்து உணவுண்டனர்.

மாலைத் தொழுகை வரை அண்ணலாருடன் பஹ்ரின் சகோதரர்கள் உரையாடிக் கொண்டிருந்தனர். அவர்களைச் சூழ நபித்தோழர்கள் பலரும் இருந்தனர்.

“எங்களுக்கு மார்க்கத்தை விரிவாக சொல்லித்தர ஒரு தோழரை அனுப்ப வேண்டும்” என பஹ்ரின் தோழர்கள் கேட்க அண்ணலார் புன்னகைத்தபடி மறுமொழி கூறினர்.

“நீங்களிலிருவரும் இங்கேயே சில நாட்கள் தங்கி இஸ்லாத்தின் அடிப்படைகளைத் தெரிந்து கொண்டு சென்று பஹ்ரினில் உள்ளவர்களுக்குச் சொல்லுங்கள். ஜமாஅத் விரிவடையும் போது வேண்டுமானால் இங்கிருந்து ஒருவரை அனுப்பி விரிவான அழைப்பைச் செய்யலாம்” என அண்ணலார் கூற பஹ்ரின் சகோதரர்கள் அவ்வாறே செய்யலாம் என ஒத்துக் கொண்டனர்.

மாலைத் தொழுகைக்குப் பின் அண்ணலார் வீட்டுக்குச் சென்றனர். ஆயிஷாவிடம் வந்திருக்கும் விருந்தினரைப் பற்றிக் கூறினர்.

மாலைவானம் மந்தகாசமாக சிரித்துக் கொண்டிருந்தது. அதிகாலையில் புறப்பட்ட காற்று சுற்றிச் சுற்றி வீசு தென்றலாய் மாறிச் சிரித்தது. மாலையும் இரவும் சந்திக்கும் நேரத்திற்கு வரவேற்புக் கூறிக் கொண்டிருந்தது.

அண்ணலார் மையிருட்டாகும் முன்பே பள்ளிவாசலுக்குள் சென்றனர். அன்ஸாரிகள், முஹாஜிர்கள் என அனைவரும் அந்திமுனைத் தொழுகைக்காக குழுமினர். பஹ்ரின் சகோதரர்களும் அங்கேயே இருந்தனர்.

அப்போது அங்கே நபித்தோழர் உபாதா இப்னு ஸாயித் வந்தார். அவரை பஹ்ரின் சகோதரர்களுக்கு அறிமுகப்படுத்திய அண்ணலார் “இவர்தான் திண்ணைத் தோழர்களின் ஆசான். திருக்குர்ஆன் வசனங்களை இவர் தான் தோழர்களுக்குச் சொல்லிக் கொடுத்து வருகிறார். இவரிடமே நீங்களும் கற்றுக் கொள்ளுங்கள்” என்றனர்.

சூர்யன் தன் கதிர்களைச் சுருட்டிக் கொள்ள இருள் பூவுலகை வருடிக் கொள்ள அந்தித் தொழுகைக்கான அழைப்பை பிலால் விடுத்தார்.

பிலாலின் குரலுக்காகக் காத்திருந்த காற்று பேரொலியை மதீனாவின் இல்லங்களிலும் ஈச்சமரத் தோட்டங்களிலும் கொண்டு சேர்த்தது.

அண்ணலார் தொழுகையை முன்னின்று நடத்தினர். தோழர்கள் அண்ணலாரைத் தொடர்ந்து தொழுதனர்.தொழுகை நிறைவேறியபின் இரு கூடைகள் நிறைய கொடி முந்திரியும் பேரீச்சம் பழங்களும் பள்ளிவாசலுக்கு அன்பளிப்பாக வந்தன. அண்ணலார் அவற்றை அங்கிருந்த அனைவருக்கும் வழங்கினர்.

அதன்பின் அண்ணலார் நோயுற்றிருந்த நபித்தோழர் ஒருவரைக் காணச் சென்றனர். அப்போது அண்ணலாருடன் அபூபக்கரும் உமரும் சென்றனர்.

“உங்களுடைய நலத்துக்காக நாங்கள் பிரார்த்திக்கின்றோம்” என அண்ணலார் அருமைத் தோழர்கள் இருவருடன் சேர்ந்து பிரார்த்தித்தனர்.

பிரார்த்தித்த பின் அவர்களிடையே எந்தெந்த பிரார்த்தனைகள் அல்லாஹ்வால் மறுக்கப்படாத பிரார்த்தனைகள் என்ற உரையாடல் உருவாகியது.

“அநீதி இழைக்கப்பட்டவரின் பிரார்த்தனை, பயணத்தில் இருப்பவரின் பிரார்த்தனை, தம் குழந்தைகளுக்காக ஒரு தந்தை செய்யும் பிரார்த்தனை” என அண்ணலார் மொழிந்தனர்.

அவர்கள் நோயுற்றவரிடம் விடைபெற்றுக் கொண்டுதம் இல்லங்களுக்குச் செல்லவில்லை. நேராக பள்ளிவாசலை நோக்கி நடந்தார்கள்.

அவர்கள் நடந்துவரும்போது பஹ்ரின் சகோதரர்களின் இரவு உணவு பற்றிய பேச்சு வந்தது. அபூபக்கரே இரு விருந்தாளிகளுக்கும் உணவளிப்பதாகக் கூறினார்.

“என்ன உணவு?”

“ஹைஸ்…”

அண்ணலாருக்கு மிகப் பிடித்தமான உணவு ஹைஸ். பேரீச்சம் பழங்கள், நெய், சத்துமாவு கலந்து செய்யப்படும் ஹைஸ் விருந்தினருக்கான சிறந்த உணவு.

ஹைஸ் அண்ணலாருக்கு மிகப் பிடித்தமான உணவு என்பதை அறிந்திருந்த அபூபக்கர் “தாங்களும் இரவுச் சாப்பாட்டுக்கு வரவேண்டும்” என அண்ணலாரைக் கேட்டுக் கொண்டார்.

“இன்ஷா அல்லாஹ்.”

அவர்கள் உரையாடிக் கொண்டே பள்ளிவாசலுக்குள் நுழைந்தனர். அப்போது அந்தித் தொழுகையை நிறைவேற்றிய தோழர்களில் சிலர் இரவுத் தொழுகைக்காகக் காத்திருந்தனர். அவர்களோடு உரையாடிய அண்ணலார் ‘அந்தித் தொழுகையை நிறைவேற்றிவிட்டு இரவுத் தொழுகைக்காக காத்திருப்பதன் சிறப்பை’ பற்றி எடுத்துக்கூறினர்.

பேச்சுவாக்கில் நேற்று சிரியா செல்லும் வழியிலுள்ள தினச்சந்தைக்கு சென்று வந்ததைப் பற்றியும் நாளை கூபா பள்ளிவாசலுக்கு செல்லவிருப்பதைப் பற்றியும் அண்ணலார் மிகச் சாதாரணமாகக் கூறினர்.

காற்று மழைக்காற்றாக மாறியது; பொட்டுப் பொட்டாய் மழைமேகம் தூறியது.

பிலாலின் அழைப்புக் குரல் மழைக்காற்றோடு மோதியது. மழையைப் பொருட்படுத்தாமல் மஸ்ஜித் நபவியில் பெருங்கூட்டம் கூடியது.

அண்ணலார் இரவுத் தொழுகையை நிறைவேற்றினர். அபூபக்கர், பஹ்ரின் சகோதரர்கள் புடைசூழ இரவு உணவைச் சாப்பிட அண்ணலார் புறப்பட்டனர்.

தூறிய மழைத்துளிகளைக் காற்று உஹதுமலைச்சாரலுக்குக் கொண்டு சென்றது. உறங்காத காற்று உறது மலைக்கு ஒருநாளின் கதையைச் சொன்னது.

அண்ணலார் இரவு உணவு உண்டபின் மிக விரைவாக உறங்கச் சென்றனர். அதற்கான ஆயத்தங்களை ஆயிஷா செய்து வைத்திருந்தார்.

விரைவாக தூங்கினால்தான் நடுநிசித் தொழுகை – தஹஜ்ஜுத்துக்காக அண்ணலார் எழுந்திருக்க முடியும்.

படைப்பு: தாழை மதியவன்
நன்றி:http://www.thoothuonline.com/

0 கருத்துகள்: