கும்பகோணத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் மரங்கள் முறிந்து விழுந்தன. மேலும் மின்கம்பங்கள் சாய்ந்தன. அக்னி நட்சத்திரம் தொடங்கியதில் இருந்து கும்பகோணம் பகுதியில் கடுமையான வெயில் அதிகமாக இருந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு ஏற்பட்டது.
கடந்த சிலநாட்களுக்கு முன்பு சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்ததால் வெப்பம் குறைந்து பூமியில் குளிர்ச்சி ஏற்பட்டது. நேற்று வரை மேகமூட்டம் காணப்பட்டு வெயிலின் தாக்கம் அதிகம் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் நேற்று மாலை சுமார் 5 மணியளவில் கும்பகோணம், சுவாமிமலை, சென்னை சாலை, மானம்பாடி, சோழபுரம் உள்பட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
அதே நேரத்தில் சூறாவளி காற்றும் வேகமாக வீசியதால் சாலையோரத்தில் இருந்த மரங்கள் முறிந்து விழுந்தன. கும்பகோணம்சென்னைபை பாஸ் சாலை அருகே பெரிய மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் இருந்து வந்தவர்களும், இங்கிருந்து சென்றவர்களும் மாற்றுப்பாதை வழியாக செல்ல முடிந்தது. இதுபோல கும்பகோணம் நகரில் அரசு தலைமை ஆஸ்பத்திரி அருகிலும், நீதிமன்ற சாலை, கிழக்கு போலீஸ் நிலையம் அருகிலும் இருந்த மரங்கள் முறிந்து விழுந்தன.
மேலும் கும்பகோணம் பகுதியில் கடிச்சம்பாடி, திருப்புறம்பியம், ஆலமன் குறிச்சி, வலையப்பேட்டை, சுவாமிமலை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 30க்கும் மேற்பட்ட மின்கம்பங்களும் சாய்ந்தன. இதனால் சுமார் 3 மணி நேரம் மின்சார வினியோகம் பாதிக்கப்பட்டது. கும்பகோணம் பகுதியில் அரசு தலைமை ஆஸ்பத்திரி அருகே முறிந்து விழுந்த மரத்தினை தீயணைப்பு துறையினர் உடனடியாக அகற்றினர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக