கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

சபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம்!


சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும்!
“உங்களில் எவரேனும் சபைக்குச் சென்றால் ஸலாம் கூறட்டும். அங்கிருந்து எழ நாடினாலும் ஸலாம் கூறட்டும்.  ஏனெனில் முன்னால் (ஸலாம்) கூறியது பின்னால் (எழுவதற்கு கூறியதாக) ஆகாது” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி), ஆதாரம்: அபூதாவுத், திர்மிதி, இப்னுஹிப்பான்.

ஒருவரை ஒழுப்பிவிட்டு அவருடைய இடத்தில் அமர்வது கூடாது!

ஒருவர் இன்னொரு மனிதரை, அவர் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து எழுப்பிவிட்டு, பிறகு இவர் அந்த இடத்தில் அமர வேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), ஆதாரம்: புஹாரி

சபையில் இடம் கேட்பவருக்கு நகர்ந்து இடம் கொடுக்கவேண்டும்!

ஈமான் கொண்டவர்களே! சபைகளில் ”நகர்ந்து இடங்கொடுங்கள்” என்று உங்களுக்குச் சொல்லப்பட்டால் நகர்ந்து இடம் கொடுங்கள்; அல்லாஹ் உங்களுக்கு இடங்கொடுப்பான்; தவிர, ‘எழுந்திருங்கள்’ என்று கூறப்பட்டால் உடனே எழுந்திருங்கள்; அன்றியும், உங்களில் ஈமான் கொண்டவர்களுக்கும்; கல்வி ஞானம் அளிக்கப்பட்டவர்களுக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துவான் – அல்லாஹ்வோ நீங்கள் செய்பவற்றை நன்கு அறிந்தவனாக இருக்கின்றான். (58:11)

ஒருவர் அமர்ந்திருந்த இடத்தில் தான் உட்காருவதற்காக அவரை எழுப்பிவிடலாகாது என்றாலும் நெருக்கமாக அமர்ந்து (அவருக்காக) இடம் கொடுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), ஆதாரம்; புகாரி, முஸ்லிம்.

சபையில் முன்னர் அமர்ந்திருந்தவருக்கே இட உரிமை!

ஒரு இடத்தில் அமர்ந்திருப்பவர் எழுந்து சென்றுவிட்டு திரும்பி வந்தால் அவர்தான் அவ்விடத்தில் (அமர்வதற்கு) அதிகம் உரிமையுள்ளவர்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி), ஆதாரம்: முஸ்லிம்

சேர்ந்து அமர்ந்திருக்கும் இருவருக்கிடையில் அவர்களுடைய அனுமதியின்றி அமர்வது கூடாது!

சேர்ந்து அமர்ந்திருக்கும் இருவருக்கிடையில் அவ்விருவரின் அனுமதியின்றி அமரக்கூடாது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அம்ர் இப்னு ஷூஐப் (ரலி), ஆதாரம்: அபூதாவுத்

மக்களைத் தாண்டிக் கொண்டு முன்னே செல்வது கூடாது!

ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆ பிரசங்கம் செய்துக் கொண்டிருக்கும் போது ஒரு மனிதர் மக்களை தாண்டிக் கொண்டு முன்னேறி சென்றார். அவரிடம் நபி(ஸல்) அவர்கள் உட்கார்வீராக மக்களுக்கு சிரமம் கொடுக்கிறீர்கள் மேலும் தாமதமாக வந்திருக்கின்றீர் என்றார்கள். அஹ்மத், அபூதாவூத், நஸயீ : அப்துல்லாஹ் பின் புஸ்ர்(ரலி)

வட்டமான சபையின் நடுவில் அமர்வது கூடாது!

வட்டமாக கூடியுள்ள ஒரு சபையின் நடுவில் உட்கார்பவனை நபி(ஸல்) அவர்கள் சபித்துள்ளனர். அபூதாவூத் : ஹுதைஃபா(ரலி)

சபைகளை அலட்சியப்படுத்தி செல்வது கூடாது!

“நபி (ஸல்) அவர்கள் மக்களுடன் பள்ளிவாசலில் அமர்ந்திருந்தபோது மூன்றுபேர் வந்து கொண்டிருந்தனர். அவர்களில் இருவர் நபி (ஸல்) அவர்களை முன்னோக்கி வந்தனர். மற்றொருவர் சென்றார். அவ்விருவரும் நபி (ஸல்) அவர்களின் சபையில் வந்து நின்றார்கள். அவ்விருவரில் ஒருவர் வட்டமான அந்தச் சபையில் ஓர் இடைவெளியைக் கண்டபோது அதில் அமர்ந்தார். மற்றவரோ சபையின் பின்னால் அமர்ந்து வெட்கப்பட்டு (கடைசியில் உட்கார்ந்து)விட்டார். எனவே அல்லாஹ்வும் வெட்கப்பட்டான். மூன்றாமவரோ அலட்சியப்படுத்திச் சென்றார். எனவே அல்லாஹ்வும் அவரை அலட்சியப்படுத்தினான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : அபூ வாக்கித் அல்லைஸீ (ரலி).

அல்லாஹ்வை புகழ்ந்து பேச ஆரம்பிக்க வேண்டும்!

“அல்லாஹ்வை புகழ்ந்து ஆரம்பிக்கப்படாத செயற்பாடுகள் இடையில் அறுந்துவிடும்’ அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி) ஆதாரம்: அபூதாவுத்

சபைகளில் நல்லவற்றையே பேசவேண்டும்!

“நபியே எதனை பேசிய போதிலும் நல்லதையே பேசுமாறு எனது அடியார்களுக்கு குறிப்பிடுங்கள்.ஏனெனில் ஷைத்தான் அவர்களுக்கிடையில் குழப்பங்களை ஏற்படுத்தி விடுவான்” (அல்குர்ஆன் 17:53)

“அல்லாஹ்வையும், மறுமையையும் நம்பியவர் பேசினால் நல்லதையே பேசட்டும். அல்லது மௌனமாக இருக்கட்டும்”. ஆதாரம்:  புஹாரி, முஸ்லிம்

அவசியம் புறக்கணிக்கப்பட வேண்டிய சபை!

(முஃமின்களே!) ‘அல்லாஹ்வின் வசனங்கள் (சிலரால்)நிராகரிக்கப்படுவதையும், பரிகசிக்கப்படுவதையும் நீங்கள் கேட்டால், அவர்கள் இதைவிட்டு வேறு விஷயத்தில் ஈடுபடும் வரையில் அவர்களோடு நீங்கள் உட்கார வேண்டாம் என்று வேதத்தின் மூலம் அவன் உங்கள் மீது (கட்டளை) இறக்கியுள்ளான். அவ்வாறு உட்கார்ந்தால் நீங்களும் அவர்களைப் போன்றவர்களே. நிச்சயமாக அல்லாஹ் நயவஞ்சகர்களையும், காஃபிர்களையும் நரகத்தில் ஒன்றாகச் சேர்த்துவிடுவான். (4:140)

(நபியே!) நம் வசனங்களைப் பற்றி வீண் விவாதம் செய்து கொண்டிருப்போரை நீர் கண்டால், அவர்கள் அதைவிட்டு வேறு விஷயங்களில் கவனம் செலுத்தும் வரையில் நீர் அவர்களைப் புறக்கணித்து விடும்; (இக்கட்டளையைவிட்டு) ஷைத்தான் உம்மை மறக்கும்படிச் செய்துவிட்டால், நினைவு வந்ததும், அந்த அநியாயக்கார கூட்டத்தினருடன் நீர் அமர்ந்திருக்க வேண்டாம். (6:68)

சபையின் இறுதியில் சபைகளில் ஏற்பட்ட தவறுகளுக்கான பரிகாரம்!

சபையில் அமரும் போது (தேவையற்ற) பேச்சுக்கள் அதிகமாகி விடுகிறது. எனவே சபையிலிருந்து எழுவதற்கு முன்னால்

ஸூப்ஹானக்கல்லாஹூம்ம வபிஹம்திக்க அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லா அன்த அஸ்தஃபிருக வ அதூபு இலைக’

என்று சொன்னால் அவருக்கு சபையில் ஏற்பட்ட தவறுகள் மன்னிக்கப்பட்டுவிடும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி), ஆதாரம்: அபூதாவுத், திர்மிதி.
சுவனத்தென்றல்

0 கருத்துகள்: