கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

திருக்குர்ஆன் தெளிவுரை : அறிவுக்கு அறை கூவல் !


”நீங்கள் சிந்தித்துப்பாருங்கள், ஆராய்ந்து பாருங்கள். உற்றுணர்ந்து பாருங்கள்’’ என்று மனிதனுடைய அறிவுக்கு அதிகமாக வேலை கொடுக்கும் திருவேதம் திருக்குர்ஆன்.

மனிதனுடைய அறிவு முதிர்ச்சி பெறாத ஒரு காலத்திலேயே இறையுண்மையை நிலைநாட்ட, மனிதனுடைய சக்திக்கு மீறிய அவனுக்கு அச்சந்தரக்கூடிய சில நிகழ்ச்சிகளோ, வார்த்தைகளோ போதுமானவைகளாக இருந்தன. அற்புதங்களைக் கொண்டே மக்களை நேர்வழியில் செலுத்தப்பட்டது

அந்தக்காலத்திலே.மனிதனுடைய அறிவு பக்குவப்பட்ட ஒரு நிலையிலே எதற்கெடுத்தாலும் ஏன்? என்ன? எப்படி? என்ற வினாக்களின் மூலம் விடை காணும் உள்ளுணர்ச்சி கொண்ட மனித சமுதாயத் தோற்றத்தின் புது யுகத்திலே, அறிவின் உச்சத்தை அடைந்து விட்டதாகப் பெருமையடிக்கும் மனித சமுதாயத்திற்கும் நல்வழி காட்டியாக அருளப் பெற்றது திருக்குர்ஆன். அறிவுக்கு உரிய மதிப்பை அளித்து அதை அறைகூவும் வேதம் திருக்குர்ஆனைப் போன்று பிறிதொன்று இருப்பதாக நாம் காண முடியவில்லை.

அறிவு மனிதனுக்கு இறைவனுடைய அருட்கொடை !  அமரர்களுக்கும் மேலானவனாக மனிதனை ஆக்கியதும் அறிவு தான். இத்தகைய அறிவைப்போதித்த முதல் ஆசிரியன் ஆண்டவனேயாகும்.

“ஆதமுக்கு அவன் எல்லாப் பொருள்களின் தன்மைகளையும் பெயர்களையும் கற்றுக் கொடுத்தான்’’ (திருக்குர்ஆன் 2:31)

‘’அவனே மனிதனைப் படைத்து அவனுக்கு பேசக்கற்றுக் கொடுத்தான்’’ (திருக்குர்ஆன் 55:3,4)

‘’உமது இறைவன் மாபெரும் கொடையாளி. அவன் தான் எழுதுகோலைக் கொண்டு எழுதக் கற்றுக் கொடுத்தான் (அன்றி) அதன் மூலம் மனிதன் அறியாதவைகளையெல்லாம் கற்றுக் கொடுக்கிறான்’’ (திருக்குர் ஆன் 96:4,5)- என்று நமக்கு அறிவிக்கிறது திருமறை.

‘’எழுத்தறிவித்தவன் இறைவனாகும்’’ எனச் சின்னஞ்சிறு வயதிலே நமக்குத் தமிழ் வகுப்புகளிலே சொல்லிக் கொடுக்கப்படுகிறது அப்போது நமக்குக் கொடுக்கப்படும் வியாக்கியானமெல்லாம் ‘’எழுத்தறிவித்துக் கொடுக்கக் கூடிய ஆசிரியர் இறைவனைப் போன்றவர்’’ என்பதாகும். மனிதனை பண்பாட்டுக்கு இறைவனுக்கு இணையாக்கும் அந்த விளக்கம் இஸ்லாமிய பண்பாட்டுக்கு ஒவ்வாததாகும். ஆனால் அந்தச் சொற்றொடரிலே உள்ள வெள்ளைக்கருத்து எவ்வளவு பெரிய உண்மையை திருக்குர்ஆன் வசனத்தை எடுத்துக் காட்டுகிறது என அறியும் போது நாம் வியக்காமல் இருக்க முடியவில்லை.

மனிதனுக்கு இறைவன் அறிவை அளித்திருப்பதெல்லாம் அதைக் கொண்டு இறையுண்மையை நன்குணர்ந்து தனக்கும் இறைவனுடைய மற்ற படைப்புகளுக்கும், இறைவனுக்கும் நல்லவனாக நடந்து மேலான பதவியை அவன் அடைய வேண்டும் என்பதற்காகவேயாகும்.

மனிதன் தனக்குக் கொடுக்கப்பட்டுள்ள அறிவை எவ்வளவுக்கெவ்வளவு நல்ல வழியில் அபிவிருத்தி செய்கிறானோ அந்த அளவிற்கு அவனுடைய தன்மையும், பதவியும் உயர்கின்றன. அறிவுடையோருக்குத் திருக்குர்ஆன் உயரிய மதிப்பை அளிப்பதுடன் ‘’குருடரும், பார்வையுடையோரும் சமமாக மாட்டார்கள். இருளும் ஒளியும் சமமாகா’’ (திருக்குர்ஆன் 35:19,20)

அவ்வாறே அறிவுடையோரும், அல்லாதாரும் சமமாகமாட்டார்கள் என்பதை அழகுற விளக்குகிறது.

அறிவைக் கொண்டு எத்தனையோ வகை ஞானங்களைப் பெற முடியும். எல்லா ஞானங்களிலும் இறைவனைப் பற்றிய ஞானம் பெறுவதே ஏற்றமுடையதாகும். இந்த ஞானம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.

‘’அல்லாஹ் தான் விரும்பியவர்களுக்கே ஞானக்கல்வியைக் கொடுத்திருக்கிறான். ஆதலால் எவர் ஞானக்கல்வி கொடுக்கப்படுகிறாரோ அவர் நிச்சயமாக அநேக நன்மைகளைப் பெற்று விடுவார்’’ (திருக்குர்ஆன் 2:269)

‘’நன்னம்பிக்கையுடையோரையும் கல்வி ஞானம் உடையோரையும் அல்லாஹ் பதவிகளில் உயர்த்துவான்’’ (திருக்குர்ஆன் 58:11) என இறைவனே கூறுகிறான்.

அறிவு எவ்வளவோ சிறப்பு தருவது என்றாலும் அந்த அறிவைக் கொண்டே மனிதன் எல்லாவற்றையும் அடைந்து விட முடியாது. ஏனென்றால் மனித அறிவு பூரணத்துவம் பெறாதது மாத்திரமன்றிப் பல சமயங்களில் நம்மை வழி தவறச் செய்யவும் கூடும். எனவே தான் இஸ்லாத்திலே அறிவோடு நம்பிக்கை பெரிதும் வற்புறுத்தப்படுகிறது. அறிவால் நம்பிக்கை உறுதிப்படுகிறது. நம்பிக்கையால் அறிவு தெளிவு பெறுகிறது. எனவே இறைநம்பிக்கையின் அடிப்படையிலே அறிவைப் பயன்படுத்த, பயன்படுத்த மனிதன் மேன்மையுறுகிறான்.

மனிதனுக்கு அறிவு அளிக்கப்பட்ட அந்த மகத்தான சம்பவத்தை பற்றி இறையின் மறை பின்வருமாறு கூறுகிறது.

‘’நிச்சயமாக நம்முடைய அமானிதத்தை (பொறுப்பை) ஏற்றுக் கொள்வீர்களா? என்று நாம் வானங்கள், பூமி, மலைகள் முதலியவற்றினிடத்தில் வினவினோம். அவை அதனைப் பற்றிப் பயந்து ‘அதனை’ ஏற்றுக்கொள்ளாது விலகிவிட்டன. எனினும் மனிதன் அதனைச் சுமந்து கொண்டான். ஆனால் அவன் தனக்குத்தானே தீங்கிழைத்துக் கொண்டவனாகவும், அறிவற்றவனாகவும் ஆகிவிட்டான்.’’ (திருக்குர்ஆன் 33:72)

விரிந்த மண்ணும், பரந்த பூமியும், உறுதியான மலைகளும் கூட பெறத் தயங்கிய அமானிதம் – பொறுப்பு, அறிவு மனிதன் அதைப் பெற்றுக் கொண்டதிலே அவனுடைய ஆற்றல் புலனாகிறது. ஆனால் அவன் ‘’தனக்குத்தானே தீங்கிழைத்தவனாகவும், மூடனாகவும் ஆகிவிட்டான்’’ என இறைவன் கூறுவதன் கருத்தை நாம் ஆராய வேண்டும்.

அறிவு நல்வழியிலே பயன்படுத்தப்படும் வரையில் தான் அதற்குப் பெருமையும், பயனும் இருக்கின்றன. தீமைக்காக அறிவு பயன்படுத்தப்படும் போது அது அந்த மனிதனுக்கு மட்டுமின்றிப் பிறருக்குமே அழிவைத் தருகிறது.
ஒரு அமானிதமோ, பொறுப்போ ஒரு சில நிபந்தனைகளுக்குட்பட்டே பிறரிடம் அளிக்கப்படுகின்றது. பொறுப்பேற்றுக் கொண்டவர் அந்நிபந்தனைகளை மீறுவது உலக வழக்கிலும் கடுங்குற்றமாகக் கருதப் பெறுகிறது.

அது போன்றே இறைவனும் மனிதனுக்கு அந்த மகத்தான பொறுப்பை ஒப்படைக்கும் போது சில நிபந்தனைகளை விதித்திருக்கிறான். அதுவே வேதத்தில் பொதிந்திருக்கிறது. வேத போதனைகளை மீறி அறிவு செல்லும்போதுதான் வரம்பு மீறிய குற்றத்திற்கிலக்காகிறது.

அப்படி வரம்பு மீறிச் செல்லும் அறிவைத் திருத்துவதற்காக அந்த அறிவையே அறை கூறுகிறது திருக்குர்ஆன்.
                                                                                            -    சிராஜுல் மில்லத்          
நன்றி : பிறைமேடை – ஏப்ரல் 16-30, 2011

0 கருத்துகள்: