கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

வேறு மதத்திலிருந்து இஸ்லாம் மார்க்கத்திற்கு மாறியவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க வேண்டும்


இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவருமான பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா அவர்கள் இன்று (27.02.2013) பிற்படுத்தப்பட்ட ஆணையத் தலைவர் நீதியரசர் ஜனார்த்தனன் அவர்களை நேரில் சந்தித்தார்கள்.

இச்சந்திப்பின் போது வேறு மதத்திலிருந்து இஸ்லாம் மார்க்கத்திற்கு மாறியவர்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தார்கள். அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:

“தற்போது நடைமுறையில் உள்ள அரசாணைகளின்படி இந்து தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்புகளிலிருந்து கிறிஸ்துவ மதத்திற்கு மதம் மாறியவர்களை பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக கருத அரசாணை உள்ளது போல இஸ்லாமிய மதத்திற்கு மதம் மாறும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர்களை பிற்படுத்தப்பட்ட அல்லது மிகப்பிற்படுத்தப்பட்ட வகுப்பாக கருத அரசாணை இல்லாததால் இஸ்லாம் மதத்திற்கு மாறிய வேறு மதத்தினரை பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என கருத இயலாது என அரசு தெரிவித்து வருகிறது. இவ்விஷயம் பிற்படுத்தப்பட்ட ஆணையத்தின் ஆய்வில் உள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

 புதிதாக இஸ்லாமிய மார்க்கத்திற்கு மாறியவர்கள் அரசு வேலைவாய்ப்பு பெற சாதிச் சான்றிதழ் இல்லாத காரணத்தால் ஏற்பட்ட சிக்கலில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள பல்வேறு தீர்ப்புகளில் வேறு மதத்திலிருந்து இஸ்லாத்திற்கு மதம் மாறியவர்களை பிற்படுத்தப்பட்ட வகுப்பு(முஸ்லிம்) எனக் கருதி வேலைவாய்ப்பளிக்குமாறு ஆணையிடப்பட்டுள்ளது.

நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள பின்பும் தமிழக அரசின் அரசாணை வெளியிடப்படாததால் அரசுப் பணிகளை பெறுவதற்கு காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இதன்காரணமாக பல இளைஞர்கள் வேலைவாய்ப்பிற்கான தகுதிகள் இருந்தும் வேலைவாய்ப்பில்லாமல் புறக்கணிப்பட்டுள்ளனர்.

எனவே பிற்படுத்தப்பட்ட ஆணையத்தின் பரிசீலனையில் உள்ள இந்து தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்புகளிலிருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறியவர்களை பிற்படுத்தப்பட்ட (முஸ்லிம்) வகுப்பினராக அங்கீகரித்து ஆணை வெளியிட உரிய நடவடிக்கை விரைந்து எடுக்க வேண்டும்.”

மேலும் இவ்விஷயம் தொடர்பான சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புரை நகல்களையும் ஆணையத் தலைவரிடம் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ வழங்கினார்.

இவ்விஷயம் குறித்து மிக கவனத்துடன் கேட்டறிந்த ஆணையத் தலைவர் நீதியரசர் ஜனார்தனன் அவர்கள் வேறு மதத்திலிருந்து இஸ்லாம் மார்க்கத்திற்கு மாறியவர்களுக்கு பிற்படுத்தப்பட்ட(முஸ்லிம்) சான்றிதழ் வழங்குவதில் பின்பற்றப்பட வேண்டிய சட்ட நடைமுறைகளை அறிக்கையாக அரசுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்தார்கள்.
http://tmmk.in/

0 கருத்துகள்: