கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

சாதியற்ற சமூக அமைப்பே முஸ்லிம் சமுதாயம் என்ற அடிப்படையில் மிஸ்ரா குழு பரிந்துரைக்கு சட்ட வடிவம் கொடுக்க வேண்டும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கல்வி விழிப்புணர்வு மாநாட்டில் தீர்மானம்


முஸ்லிம் சமுதாயத்தை சாதி பிரிவினைக்குள் அடக்க முனையாமல் சாதியற்ற சமூக அமைப்பு என்ற அடிப்படையில் ரங்கநாத் மிஸ்ரா குழுவின் பரிந்துரைக்கு சட்ட வடிவம் கொடுத்து செயல்படுத்த வேண்டுமென கல்வி விழிப்புணர்வு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கல்வி விழிப்புணர்வு மாநாடு 2012 செப்டம்பர் 8 சனிக்கிழமை கும்பகோணத்தில் தேசிய பொதுச் செயலாளர், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் நடபெற்றது.

தேசிய தலைவரும் மத்திய மனிதவள மேம்பாடு மற்றும் வெளியுறவுத்துறைஇணைஅமைச்சருமான இ.அஹமது சாகிப் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்ட இந்த பிரமாண்டமான மாநாட்டில் நிiவேற்றப்பட்ட தீர்மனங்கள் வருமாறு .

1. இடஒதுக்கீடு சமூக நீதியின் சின்னம்!

தமிழகத்தில் 69 சதவீதம் இடஒதுக்கீடு நடைமுறையில் இருக்கிறது. இதில் 3.5 சதவீதம் முஸ்லிம் சமுதாயப் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்படுகிறது. இச் சதவீதம் போதியதன்று. இதனை குறைந்த பட்சம் ஐந்து சதவீதமாக உயர்த்தித் தர வேண்டுமென்னும் கோரிக்கையைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

இந்நிலையில், அண்மையில் தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவீதம் இட ஒதுக்கீட்டை எதிர்த்து வழக்குத் தொடுக்கப்பட்டு அதன் விசாரணை 10.09.2012 ல் சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற விருக்கிறது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பு எதுவாக இருப்பினும், தமிழகத்தில் 69 சதவீதம் இடஒதுக்கீடு மட்டுமின்றி, தமிழகத்தில் இடஒதுக்கீடு செய்யும் அதிகாரத்தைத் தமிழக அரசுக்கு வழங்க வேண்டும் என்னும் கோரிக்கையை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து வலியுறுத்தும்.

ஒவ்வொரு மாநில அரசும், அந்தந்த மாநில நிலைமைக்கு ஏற்ப இடஒதுக்கீடு அளிப்பதற்குரிய அதிகாரம் மாநில அரசுக்கே இருக்க வேண்டும் என்னும் அடிப்படையை இந்திய அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து உறுதி செய்ய வேண்டும்.

மாநில சுயாட்சிக்குக் குரல் கொடுப்பதும், மாநில அரசு இடஒதுக்கீட்டு அதிகாரம் பெறச் சட்டத்திருத்தத்துக்குக் கரம் கொடுப்பதும் சமூக நீதியில் நம்பிக்கையுள்ள அனைவரின் கடமையாகும் என்பதை இந்த மாநாடு வலியுறுத்துகிறது.

அதேபோல, மத்திய அரசின் வேலை மற்றும் உயர்படிப்புகளில் இந்திய முஸ்லிம் சமுதாயத்துக்குக்கென ஒட்டு மொத்தமாக 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்க நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா குழுவின் பரிந்துரையை மத்திய அரசு உடனடியாக நடைமுறைப்படுத்தும் வகையில் அரசியல் சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றும் இந்த மாநாடு வற்புறுத்துகிறது.

மத்திய அரசு, முஸ்லிம் சமுதாயத்தை அஷ்ரப், அஜ்லப், அர்ஸல் என்று சாதிப்பிரிவினைக்குள் அடக்க முனையாமல், சாதியற்ற சமூக அமைப்பே முஸ்லிம் சமுதாயம் என்னும் அடிப்படையில் ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரைக்குச் சட்ட வடிவு கொடுக்க வேண்டும் என்று இந்த மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது.

2. தமிழ்நாடு முஸ்லிம் கல்வி நிபுணர் குழுமம்

தமிழ்நாட்டில் இயங்கிவரும் 54957 துவக்கப்பள்ளி, உயர் நிலைப் பள்ளி மற்றும் மேனிலைப் பள்ளிகளில் முஸ்லிம் சிறுபான்மை யினரின் நிர்வாகத்தில் உள்ளவை நானூறுக்கும் குறைவானவை என்னும் அதிர்ச்சித் தகவல் சீரிய சிந்தனைக் குரியதாகும்.

இப்போது நடைபெற்றுவரும் பள்ளிகளில் பல பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டு மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டும் வருகின்றன என்பதும் யதார்த்த நிலையாகும்.

தமிழக முஸ்லிம் சமுதாயத்தில் குறைந்த பட்சம் மஸ்ஜிதை மையமாகக் கொண்டுள்ள ஒவ்வொரு மஹல்லா ஜமாஅத்திலும் ஒரு பள்ளிக் கூடமாவது உருவாக்கப்படுதல் அவசியமாகும்.

புதிய பள்ளிகளை அமைக்கவும், நடக்கும் பள்ளிகளின் தரம் உயர்த்தவும், பொருளாதாரச் சிக்கல்களைத் தீர்க்கவும், அவசியப்படின் நலிந்த பள்ளிக் கூடங்களை ஏற்று நடத்திடவும் ஆகிய கல்விப் பணிக்களுக்கென, தமிழகம் தழுவிய முஸ்லிம் கல்வி நிபுணர் குழுமம் உருவாக்குவது என இந்த மாநாடு முடிவு செய்கிறது.

சென்னைப் பல்கலை கழக முன்னாள் துணை வேந்தர் டாக்டர் சாதிக், டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் டாக்டர் பீர் முஸ்தபா ஹுசைன் போன்ற கல்வியாளர்கள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து கலந்தாலோசனை செய்து அவர்களின் ஒப்புதலுடன் இந்தக் கல்விக் குழுமத்தின் பட்டியலை வெளியிடுவது என்றும் முடிவு செய்யப்படுகிறது.

3. சுயநிதி பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள்

தமிழ் நாட்டில் இயங்கி வரும் சிறுபான்மை மற்றும் சுயநிதி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் மற்றும் பணியாளர்களுக்கு அரசு ஊதியம் வழங்க வேண்டும் என்ற நீண்ட நாளைய கோரிக்கையை ஏற்று கடந்த அரசு 26.02.2011 அன்று வெளியிட்ட அரசாணைகளில் 11307 ஆசிரியர்கள் 648 பணியாளர்கள் ஆக 11955 பணியிடங்களை ஏற்று ஆண்டுக்கு 331 கோடி ரூபாய் அனுமதி வழங்கியிருந்தது. 1991 - 1992 க்குப் பிறகு சுயநிதியில் இயங்கும் சிறுபான்மை மற்றும் சிறுபான்மை அல்லாத பள்ளிகளுக்கு அரசு மான்ய உதவியுடன் பணியிடம் அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு 31.05.1999 வரை மான்ய நிதி உதவியின்றி அரசால் அங்கீகரிக்கப்பட்டு தொடங்கப்பட்ட, நிலை உயர்த்தப்பட்ட, மற்றும் கூடுதல் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்ட பகுதி மான்ய உதவியின்றியும் முழுமையாக மான்ய உதவியின்றியும் செயல்படும் தனியார் பள்ளிகளுக்கு தற்போதைய நடைமுறையில் உள்ள ஆணைகளின்படி மான்யத்துடன் பணியிடங்கள் அனுமதிக்கலாம் என்று அரசு முடிவு செய்து, �தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் ஒழுங்குபடுத்தும் சட்டம் 1973� ல் திருத்தம் வெளியிட முடிவு செய்து, தோராயமாக 965 தனியார் பள்ளிகளுக்கு சுமார் 4851 ஆசிரியர் பணியிடங்களும் 648 ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் என 5499 பணியிடங்கள் 01.06.2011 முதல் அனுமதிக்கப்பட்டு, அரசுக்கு ஆண்டுக்கு 131 கோடியே 13 லட்சம் கூடுதல் செலவும் ஏற்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதேபோல் 1990 - 1991 ம் ஆண்டுவரை தொடங்கப்பட்ட 476 சிறுபான்மை மற்றும் 467 சிறுபான்மையினர் அல்லாத பள்ளிகளுக்கு கூடுதலாக தேவைப்படும் 6456 பணியிடங்கள் ரூ. 200 கோடி செலவில் அனுமதிக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அத்துடன் 1999ம் ஆண்டுக்கு பிறகு தொடங்கப்பட்ட பள்ளிகளுக்கு பணியிடங்கள் அனுமதிப்பது தொடர்பாக அடுத்த கல்வியாண்டில் பரிசீலித்து முடிவெடுப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் இந்த அரசாணைகள் செயல்படுத்தப்படாமல் முடக்கி வைக்கப்பட்டுள்ளது வேதனையளிக்கிறது. இந்த அரசாணைகளை நடைமுறைபடுத்துமாறு தமிழ்நாடு அரசை இம்மாநாடு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

4. இந்தியா - இலங்கை நட்புறவு

இலங்கை, இந்தியாவின் அண்டை நாடு. இந்தியாவும் இலங்கையும் சார்க் அமைப்பில் இடம் பெற்றுள்ள நட்பு நாடுகள்.

இந்தஇரு நாடுகளிடையான விளையாட்டு, வர்த்தக, கலாச்சார உறவுகள் காலம் காலமாக இருந்து வருவதாகும்.

சமீப காலமாக இலங்கையிலிருந்து தமிழகம் வரும் சுற்றுலா மற்றும் ஆன்மீக பயணிகளை தாக்குவதும், விளையாட்டு வீரர்களை திருப்பி அனுப்புவதும், இலங்கை மக்களுக்கெதிராக வெறுப்புணர்ச்சியை வளர்க்கும் வகையில் நடந்து கொள்வதுமான செயல்கள் அதிகரித்து வருகின்றன.

இதனால் இரு நாட்டு உறவுகள் சீர்கெடும் நிலை ஏற்படச் செய்வது இரு நாடுகளுக்கும் நன்மை பயக்காது.

எனவே இலங்கை மக்களுக்கும் இந்தியர்களுக்குமிடையில் பகைமை உணர்வு ஏற்பட இடமளிக்கும் எத்தகைய செயலிலும் ஈடுபடவோ, ஈடுபட அனுமதிக்கவோ செய்யாமல் ராஜதந்திர அணுகுமுறையோடு காரியமாற்ற வேண்டுமென அனைவரையும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

5. திருமணப் பதிவும் மத்திய அரசின் திருத்தச் சட்டமும்

இந்திய உச்ச நீதிமன்றம் சீமா அஸ்வானி குமார் வழக்கில் தீர்ப்புக் கூறிய போது, இந்தியாவில் நடைபெறும் எல்லாத் திருமணங்களையும் கட்டாயமாகப் பதிவு செய்ய வேண்டும் என்னும் வழிகாட்டுதலை 14.02.2006ல் அறிவித்தது.

அதன் தொடர்ச்சியாகத் தமிழகத்தில் கடந்த அரசு, திருமணப் பதிவு ( கட்டாய) சட்டம் கொண்டு வந்தது.

இந்தச் சட்டத்தில் சுப்ரீம் கோர்ட்டு கூறிய திருமணப் பதிவு கட்டாயமாக்கப்பட்டது; ஆனால், கோர்ட்டு கூறிய எளிய, சுலபமான, எல்லாரும் அணுகக் கூடிய பதிவு முறை தமிழகத்தில் இல்லை என்பதை ஆய்ந்து, தமிழகத் திருமணச் சட்டத்தில் திருத்தம் வேண்டி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை எழுப்பியது.

திருமணப் பதிவை எளியமுறையில் யாரும் பதிவு செய்யும் வகையில் அமைப்பதற்கு, பிறப்பு இறப்பு பதிவாளர் பொறுப்பில் திருமணப் பதிவுப் பொறுப்பையும் வழங்குமாறு பிறப்பு இறப்பு பதிவுச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டுமென்னும் கோரிக்கையை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தீர்மானமாக நிறைவேற்றி மத்திய அரசின் கவனத்துக்கு எடுத்துச் சென்றது.

நமது நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான் மத்திய சட்ட அமைச்சர் மாண்புமிகு சல்மான் குர்ஷித் அவர்களிடம் நேரில் பேசி இந்தச் சட்டத் திருத்தத்தின் அவசியத்தை வலியுறுத்தி வந்தார்.

இதன் தொடர்ச்சியாக தற்போது மத்திய அரசு, 1969ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பிறப்பு இறப்பு பதிவு சட்டத்தில், திருத்தங்கள் கொண்டு வந்து, ��பிறப்புகள், திருமணங்கள் மற்றும் இறப்புகள் பதிவுச் சட்டம் 2012�� என்னும் பெயரில் மசோதா ராஜ்ய சபையில் தாக்கல் செய்திருக்கிறது.

சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டுதலைக் கருத்திற் கொண்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் கோரிக்கையை ஏற்று, பிறப்பு இறப்பு பதிவுச் சட்டத்தில் திருமணப் பதிவையும் சேர்த்து சட்டத் திருத்தத்தை முன்மொழிந்துள்ள மத்திய சட்ட அமைச்சர் மாண்புமிகு சல்மான் குர்ஷித் அவர்களுக்கும் மத்திய அரசுக்கும் இந்த மாநாடு நன்றி தெரிவிக்கிறது.

ராஜ்ய சபாவில் இந்தச் சட்டத்தை நிறைவேற்றி, லோக் சபாவிலும் விரைவில் நிறைவேற்றும் முயற்சியை மத்திய அரசின் சட்டத்துறை மேற் கொள்ள வேண்டுமெனவும் இந்த மாநாடு கேட்டுக் கொள்கிறது.

6. ஆதிக்க சக்திகளின் அட்டூழியங்களுக்கு முடிவு வேண்டும்

இந்திய தேசத்தில் சட்ட ஒழுங்கைக் குலைத்தும், அமைதி கட்டுப்பாட்டைச் சிதைத்தும், மாநில மக்களுக்கிடையில் மோதலையும் புகைச்சலையும் உருவாக்கியும், இந்திய ஜனநாயக மரபுகளைச் சீரழித்தும், பாராளுமன்றத்தைத் தொடர்ந்து முடக்கியும் தேசத்தில் பாஸிச தத்துவத்தை நிலை நிறுத்தத் துடிக்கும் ஆதிக்க சக்திகளின் அரசியல் சூழ்ச்சிகளுக்கும் சூதுகளுக்கும் மக்கள் பலியாகிவிடக் கூடாது என்று இந்த மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது.

பாஸிசத்தின் உச்ச நிலையாக, வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமிலும் அதனைச் சுற்றியுள்ள மணிப்பூர், மிஜோராம், நாகலாந்து, இமாசல பிரதேசம் ஆகியவற்றிலும் பூர்வீகக்காலந்தொட்டு வாழையடி வாழையாக வாழ்ந்து வரும் முஸ்லிம் சிறுபான்மையினரை அந்நிய தேசத்தவர், வந்தேறிகள், பரதேசிகள், பிறதேசிகள் என்றெல்லாம் அவப்பெயர் சூட்டி, கலவரத்தைத் தூண்டி விட்டு, இலட்சக்கணக்கான மக்களை தமது ஊர் வீடுகளை விட்டுத் துரத்தியும், சுட்டுப் பொசுக்கியும், எரித்து நாசப்படுத்தியும் வரும் போக்கிற்கு உடனடியாக முடிவு கட்டும் வகையில் மாநில மத்திய அரசுகளின் நடவடிக்கைகள் அமைய வேண்டும் என்று இந்த மாநாடு கேட்டுக் கொள்கிறது.

7. சட்டப்படிப்புக்கு உதவி

தமிழக முஸ்லிம் மாணவர்கள் மத்தியில் சட்டக் கல்விக்கு ஆர்வம் மிகுந்திட வேண்டும் என்னும் எண்ணத்தில், பிரிக்கப்படாத தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஐவருக்கு அவர்களின் சட்டப்படிப்புக்கான முழுச் செலவையும் ஏற்று ஊக்கப்படுத்துவது என்றும், அதன் பொறுப்பை மாநாட்டு வரவேற்புக்குழு ஏற்பது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

8. காயிதெ மில்லத் பல்கலைக் கழகம்

இந்திய தேசிய விடுதலை வீரரும், அரசியல் சட்ட நிர்மாணியும், சமூக நல்லிணக்க நாயகரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாபெரும் தலைவருமாகத் திகழ்ந்து அனைவராலும் அனைத்து அரசியல் இயக்கங்களாலும் போற்றப்பட்டு வரும் காயிதெ மில்லத் அல்ஹாஜ் எம். முஹம்மது இஸ்மாயில் சாஹிப் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் தமிழகத்தின் பிரதானமாகவும் நடு நாயகமாகவும் உள்ள பகுதியில் �� காயிதெ மில்லத் பல்கலைக் கழகம்�� உருவாக்குவது என்று இந்த மாநாடு தீர்மானிக்கிறது.

9. தென்னக ரயில்வேக்கு வேண்டுகோள்

திருவாரூர் -சென்னை செல்லும் ரயில்கள் கும்பகோணம், தஞ்சை வழியாகச் செல்வதால் நூறு கிலோ மீட்டர் தூரம் அதிகப்படியாக பயணிக்க வேண்டியுள்ளதால் பயணிகளுக்கு ஏற்படும் அதிகப்படியான சிரமங்களைத் தவிர்த்திட, திருவாரூர்- சென்னை ரயில்களை மயிலாடுதுறை வழியாகச் செல்லும் முறையை நடைமுறைக்குக் கொண்டுமாறு தென்னக ரயில்வே நிர்வாகத்தை இந்த மாநாடு கேட்டுக் கொள்கிறது.

அதே போன்று, தென்காசி- திருநெல்வேலி அகல ரயில் பாதை பணிகள் முடிக்கப்பட்டு வெகு நாட்களாகியும் இதில் ரயில்கள் இயக்கப்படாததால் தென் மாவட்ட மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர், எனவே தென்காசி- திருநெல்வேலி அகல ரயில் பாதையில் ரயில்கள் இயக்க தென்னக ரயில்வேயை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

மகாபலிபுரம்-அரக்கோணம், புதுச்சேரி வழியாக கடலூர் வரை அகல ரயில் பாதை துரிதமாக அமைத்து வளர்ந்து வரும் இப்பகுதியில் சுற்றுலா, வர்த்தகம் செழிக்க வாய்ப்பு ஏற்படுத்துமாறு தென்னக ரயில்வே இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

காரைக்காளிலிருந்து ஆக்கூர், சீர்காழி வழியாக சென்னைக்கு ரயில் இயக்குமாறு தென்னக ரயில்வேயை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது

10. முஸ்லிமாக மதம் மாறியவர்களுக்கு பிற்பட்ட வகுப்புச் சான்று

சாதிச் சான்றிதழ் கேட்டு வருவாய் துறையில் விண்ணப்பிக்கும்போது முஸ்லிமாக மதம் மாறியவர்களுக்கு """" இஸ்லாமாக மதம் மாறியவர்"" என்றே சான்று வழங்கப்படுகிறது.

இதனால் நியாயமாக கிடைக்க வேண்டிய பிற்பட்ட வகுப்பினருக்குரிய எந்த வாய்ப்பையும் பெற முடியாமல் போய்விடுகிறது.

எனவே மதம் மாறிய முஸ்லிம்களுக்கு பிற்பட்ட லெப்பை வகுப்பைச் சார்ந்தவர் என வருவாய்த்துறையினர் சான்றளிக்க ஆணை பிறப்பிக்குமாறு தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

11. பிற்பட்ட முஸ்லிம் வகுப்பினருக்கான சலுகைகளை கண்காணிக்க குழு 

தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் மாணவ மாணவியர்களுக்கான கல்வித் உதவித்தொகை உள்ளிட்ட சலுகைகள் முறையாக வழங்கப் படுவதில்லை என்ற புகார்கள் வருகின்றன.

எனவே தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கான சலுகைகள் முறையாக வழங்கப்படுகிறதா என வட்டாட்சியர் மூலம் கண்காணிக்கப்படுவதுபோல், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு கல்வி வேலை வாய்ப்பு இட ஒதுக்கீடு, கல்வி உதவித் தொகைகள் உள்ளிட்ட சலுகைகள் முறையாக வழங்கப்படுகிறதா என கண்காணிக்க மாவட்டம்தோறும் கண்காணிப்புக்குழு ஏற்படுத்த வேண்டுமென தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

12. சிறுபான்மை தகுதிச் சான்று-முஸ்லிம் கல்வி நிறுவனங்களுக்கு வேண்டுதல்.

நடைமுறையில் உள்ள கட்டாய கல்வி சட்டம் சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் சுயாட்சியில் தலையிடுகிறது. 25 சதவீதம் இலவச கல்வியை மற்றவர்களுக்கு வழங்க வழி வகுக்கிறது.

உச்ச நீதி மன்றத்தை அணுகிய சிறுபான்மை கல்வி நிறுவனங்கள், சிறுபான்மை தகுதி சான்று பெற்ற சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு கட்டாய கல்விச் சட்டம் மற்றும் 25 சதவீத கல்வி செல்லாது என்ற தீர்ப்பை பெற்றுள்ளன எனவே இந்த தீர்ப்பை பயன்படுத்தி சிறுபான்மை கல்வி நிறுவன தகுதி சான்று விரைவாக பெற முஸ்லிம் கல்வி நிறுவனங்களை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

13. காரைக்காலில் அரசு மகளிர் கல்லூரி

புதுச்சேரி மாநிலத்தில் நாற்பது சதவீதத்திற்கு மேல் முஸ்லிம்கள் வாழும் காரைக்கால் மாவட்டத்தில் அம்மக்களுக்கு பயன்படும் வகையில் அரபி பாடதிட்டத்துடன் கூடிய அரசு மகளிர் கல்லூரி அமைக்க வேண்டுமென பதுச்சேரி மாநில அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது. இந்து அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் புதுச்சேரி வக்ஃப் வாரியத்தை பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை நலத்துறையின் கீழ் கொண்டுவரவும், வக்ஃப் வாரியத்திற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு அதைச் செயல்படச்செய்யும்படியும் புதுச்சேரி மாநில அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

14. கரும்பு டன்னுக்கு ரூபாய் 3000ஆக உயர்த்தி தர வேண்டுதல்

பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ள விவசாயிகளுக்கு இழப்பை ஈடுகட்டும் வகையில் கரும்பு டன்னுக்கு ரூ 3000/- ஆக உயர்த்தி தர வேண்டுமென்ற கரும்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை அரசு ஏற்று செயல்படுமாறு தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது. முப்போகம் விளையும் தஞ்சை தரணியில் தண்ணீர் இல்லாததால் குறுவைப்பயிர் நடமுடியாத நிலையில் தாளடி பயிர் விதைத்து வருகின்றனர். இதனை காப்பாற்றும் வகையில் மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து விடுமாறு தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

15. திருவாரூரில் மகளிர் கலைக் கல்லூரி

திருவாரூர் மாவட்டம் கொடிக்கால் பாளையம் தி. ஹாஜி இபுராஹிம்ஷா ராவுத்தர் வக்ஃப் எஸ்டேட்டுக்கு சொந்தமான 17 ஏக்கர் நிலம் திருவாரூர்- மாயவரம் பிரதான சாலையில் உள்ளது.

பல கோடிரூபாய் மதிப்புள்ள இந்த இடத்தை கல்லூரி அமைக்க அரசுக்கு இலவசமாக தயாராகி உள்ளனர்.

எனவே இந்த இடத்தில் பெண்கள் கலைக்கல்லூரி அமைக்குமாறு தமிழ்நாடு அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் 316 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க 2002ம் ஆண்டே உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு இதுவரை நிலம் ஒப்படைப்பு செய்யப்படவில்லை என்பது அம்மக்களை மிகுந்த வேதனைக்குள்ளாக்கியுள்ளது. எனவே 10 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ள இக்குறைபாட்டை தீர்த்து வைக்க தமிழக அரசும் மாவட்ட நிர்வாகிகளும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இம்மாநாடு வலியுறுத்துக்கிறது

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தை சுற்றியுள்ள 2000க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தும் வகையில் அரசு மகளிர் கலைக்கல்லூரியை விருத்தாச்சலத்தில் அமைத்து தருமாறு தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

16. கூட்டுறவு சங்கங்களுக்கு உறுப்பினர் சேர்க்கை 

கூட்டுறவு சங்கங்கள் எந்தப் பகுதியில் இயங்குகின்றதோ அப்பகுதி மக்கள் அதில் உறுப்பினராகி தங்களது பிரதி நிதிகளை தேர்வு செய்து அதன் நிர்வாகிகளாகவும் தேர்வு செய்யப்பட்டு பணி செய்வது வழக்கம்.

ஆனால் இத்தகையை கூட்டுறவு சங்கங்களுக்கு பல வருடங்களாக தேர்தல் நடத்தப்படாமல் தனி அதிகாரிகள் மூலம் நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது மேற்படி கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்துவதற்கான செய்திகள் வருகின்ற நிலையில் தகுதிப்பெற்ற புதிய உறுப்பினர்கள் சேர்க்காமல் ஆளும் கட்சி அணுசரனை பெற்றவர்களே உறுப்பினராக்கப்படுகின்றனர். தகுதி பெற்ற நபர்கள் உறுப்பினராக மறுக்கப்படுகின்றனர். இதனால் விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள், மற்றும் தொழிலாளர்கள் உறுப்பினராகி அரசு தரும் சலுகைகளை பெற முடியாத அவல நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். இது மக்களாட்சி தத்துவத்தை தகர்ப்பதோடு ஜனநாயகத்தை கேலிகூத்தாக்கும் செயலாகும்.

எனவே கூட்டுறவு சங்கங்களில் தகுதிப்பெற்ற அனைவரும் உறுப்பினராக சேர்வதற்கு அரசு தகுந்த உத்தரவுகள் பிறப்பிக்குமாறும் ஜனநாயக அடிப்படையில் கூட்டுறவு சங்கத் தேர்தல் நடத்துமாறும் தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

17. மதரஸாக்களில் ஆங்கில மொழி பயிற்சி

தமிழகத்தில் உள்ள அரபிக் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மார்க்கக் கல்வியில் சிறந்த மேதைகளாக திகழ்ந்திடவும் அவர்களின் கல்வி திறன் மேநாடுகளிலும் சென்றடையும் வகையில் மவ்லவி ஆலிம் களுக்கு ஆங்கில மொழிப் புலமையை உருவாக்குவதற்குரிய பயிற்சியை ஆங்கில அறிஞர்களை கொண்டு வழங்குவதற்கும் இந்த பயிற்சி திட்டத்தை வெற்றி பெற செய்வதற்கு அரபிக் கல்லூரிகளின் உலமாக்களும், நிர்வாகிகளும் மிகுந்த ஒத்துழைப்பு தருமாறு இந்த மாநாடு அன்போடு வேண்டுகிறது.

 18. திருச்சி சென்னை பாஸ்ட் பாசஞ்சர் ரயிலை மீண்டும் இயக்க கோரிக்கை

தஞ்சை பகுதி மக்கள் சென்னை செல்ல திருவனந்தபுரம் பாஸ்ட் பாசஞ்சர் அதன்பின் செங்கோட்டை பாசஞ்சர் பின்னர் சென்னை பாசஞ்சர் வண்டிகள் ஐம்பது ஆண்டுகளாக ஏழை மக்களுக்கும் நடுத்தர மக்களுக்கும் பயன்பட்டு வந்தன. தஞ்சை விழுப்புரம் அகல ரயில் பாதை அமைக்கும் முன் மேற்படி ரயில் நிறுத்தப்பட்டது மீண்டும் அகல ரயில் பாதை போக்குவரத்திற்கு திறக்கப்பட்டும் மேற்படி பாஸ்ட் பாசஞ்சர்கள் இயக்கப்படவில்லை. சென்னையிலிருந்து மதுரை பாசஞ்சர் ரயில் கும்பகோணம் தஞ்சை வழியாக 80 ஆண்டுகளுக்கு மேல் ஓடியும் நிறுத்தி விட்டார்கள். இப்போது சென்னைக்கு விரைவு ரயில் மட்டுமே இயக்கப்படுகின்றன.

எனவே பாமர மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் திருச்சி, சென்னை பாஸ்ட் பாசஞ்சர் ரயிலை தஞ்சை கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர் வழியாக இயக்குமாறு தென்னக ரயில்வேயை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

19. புலிகள் காப்பக விரிவாக்க திட்டம்

நீலகிரி மாவட்டத்தில் அரசு நடைமுறைப்படுத்த உள்ள புலிகள் காப்பக விரிவாக்க திட்டத்தால் தலைமுறை தலைமுறையாக அங்கு வாழ்ந்து வரும் மக்களின் வாழ்வாதரமும் நடமாட்டங்களும் பெருமளவில் பாதிக்கப்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

எனவே இத்திட்டத்தை மறு பரிசீலனை செய்து மக்களின் அச்சத்தை போக்குமாறு தமிழிகஅரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது. மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இத்தீர்மானங்களைகும்பகோணம் சுற்று வட்டார மாவட்டங்களின் நிர்வாகிகளான லால்பேட்டை அப்துர் ரஹ்மான் (அபூதாபி), தஞ்சை பி.எஸ். ஹமீது, வழூத்தூர் ஏ. பஷீர் அஹமது, மாநில பொருளாளர் எம்.எஸ். ஏ. ஷாஜஹான், கொள்ளிடம் ரஷீத் ஜான், கிளியனூர் கவிஞர் அஜீஸ், நாகை வடக்கு எம்.என். முபாரக் அபூ பாரிஸ், திருவாருர் எம்.எம். ஜலாலுதீன் , கிளியனூர் எம். அபுல் ஹஸன், திட்டச்சேரி டாக்டர் சம்சுதீன், தோப்புத்துறை நூர்தீன் (அமெரிக்க) காரைக்கால் ஏ. முஹம்மது இஸ்மாயில், தஞ்சை எஸ்.எம். ஜெய்னுல் ஆப்தீன், முத்துப்பேட்டை கே. முகைதீன் ஆடமை, எலந்தங்குடி சிட்டிசன் அப்துல் மஜீத், காரைக்கால் ஏ. முஹம்மது அலி, தஞ்சை ஆர் ஷாஜகான், திருவாரூர் கே.எம்.கே. அன்வர் அலி, ஆகியோர் முன் மொழிந்தனர்.
நன்றி:முஸ்லிம் லீக்

0 கருத்துகள்: