சென்னை:பிப்ரவரி மாத இறுதிக்குள் அதாவது ஹஜ் பயண அறிவிப்பு வெளியாவதற்கு முன் வருகிற 2013-ஆம் ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்பவர்கள் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று மாநில பாஸ்போர்ட் அலுவலகம் அறிவித்துள்ளது.
இதுத்தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:
வரும் 2014-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரையில் செல்லுபடியாகக் கூடிய பாஸ்போர்ட் உள்ளவர்கள் மட்டுமே 2013-ம் ஆண்டுக்கான ஹஜ் பயணத்தை மேற்கொள்ள முடியும் என ஹஜ் கமிட்டி அறிவித்துள்ளது.
எனவே ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ளவர்கள் 2013-ம் ஆண்டு ஹஜ் பயணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் முன்பே பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்திருக்க வேண்டும். (அதாவது பிப்ரவரி மாத இறுதிக்குள்).
ஹஜ் பயணம் செய்ய உள்ளவர்கள் 2013-ம் ஆண்டு மார்ச் மாதம் 15-ம் தேதிக்குள் தங்களது பாஸ்போர்ட்டுடன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
முறைப்படி பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் அமல் தேதி காலாவதியாகாமல் உள்ளதா என பார்த்துக் கொள்ள வேண்டும். புதுப்பிக்க வேண்டிய நிலை இருந்தால் அதை உடனடியாக விண்ணப்பித்து புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளப்பட உள்ளவர்கள் தங்களது பாஸ்போர்ட்டில் 2 காலிப் பக்கங்கள் வைத்திருக்க வேண்டும். இவை விசா முத்திரைப் பதிக்க தேவைப்படும். ஆகையால், 2 காலிப் பக்கங்கள் இல்லாதவர்கள் தங்களது பாஸ்போர்ட்டை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு www.passportindia.gov.inஎன்ற இணைய தள முகவரியில் பார்த்துக் கொள்ளலாம். ஹஜ் பயணம் குறித்த விவரங்களுக்கு www.hajcommittee.com என்ற இணையதள முகவரியில் பார்த்துக் கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
http://www.thoothuonline.com
0 கருத்துகள்:
கருத்துரையிடுக