கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

மழலைசொல் கேளாதார்!

நாம் செய்வது சரியா தவறா? என்பது சிலநேரம் பலருக்குத் தெரிவதில்லை; அதை மற்றவர்கள் சுட்டும்வரை! வழக்கமாக எனக்கு வந்த மின்மடல்களை வாசித்துக்கொண்டிருந்தபோது என் கவனத்தை ஒருமடல் வெகுவாக ஈர்த்தது.
உறவினர் ஒருவரிடமிருந்து வந்திருந்த மடலில் சொல்லப்பட்டிருந்த விசயம் 'சுருக்' என்று தைத்தது. நல்லவேளையாக அந்த மடலின் சாராம்சம் எனக்குப் பொருந்தவில்லை என்றாலும் இத்தகைய சூழலில் எவரும் இருந்திருந்தால் இனிமேல் தங்கள் நிலையை பரிசீலிக்க உதவும் என்பதால் பகிர்ந்து கொள்கிறேன்.

சவூதியிலிருக்கும் தனது தந்தையுடன் (இணைய) தொலைபேசியில் உரையாடியதை தனது பள்ளித் தோழியிடம் சாதாரணமாகத்தான் சொல்லியிருக்கிறாள் 9 வயதான அச்சிறுமி. ஆச்சரியமும் ஏக்கமுமாக அதைக்கேட்ட தோழி வகுப்பறையிலேயே கண்கலங்கியிருக்கிறாள். கேமராவுடன் இணைய இணைப்பும் இருப்பதால் எங்கள் வாப்பாவை பார்த்துக்கொண்டே பேசுவோம் என்றெல்லாம் சொல்லச்சொல்ல தோழியின் விம்மல் அழுகையாக மாறிவிட்டது!

ஏன் அழுகிறாய்? என்று வினவியபோது அந்த பிஞ்சு நெஞ்சம் தன் உள்ளத்திலிருப்பதைக் கொட்டிவிட்டாள்! ஆம்!! "இதுபோல் ஏன் எங்கள் வாப்பாவும் என்னிடம் பேசமாட்டேங்கிறார்கள்?" என்று துக்கம் தொண்டையை அடைக்க, தோழி கேட்டதற்கு என்ன பதில்சொல்வதென்று தெரியாமல் கவலையாக வீட்டுக்கு வந்து உம்மாவிடம் நடந்த நடந்த விசயத்தைச் சொல்லியிருக்கிறாள் அச்சிறுமி. இதுதான் அந்த மடலில் சொல்லப்பட்டிருந்த விசயம்! 

அடப்பாவமே! எந்த உறவுகளுக்காக தம் வாழ்நாளின் பாதியை வெளிநாடுகளில் அடகுவைத்து உழைத்துக்கொண்டு இருக்கிறோமோ அந்த உறவுகளில் ஒரு பிஞ்சு நெஞ்சின் நியாயமான ஆசையை நாம் பூர்த்தி செய்யவில்லையா? மணிக்கணக்கில் VOIP தொலைபேசியிலும் Skype, Yahoo, Gtalk இல் குடித்தனம் நடத்தும் நம்மவர்களில் எத்தனை பேர் இதுகுறித்து சிந்தித்திருப்போம்? கண்ணைவிற்று சித்திரம் வாங்குவது என்று இதைத்தான் சொல்வார்களா?

அந்தச்சிறுமியின் நியாயமான ஏக்கத்தின் பின்னணியில் அவள் அறியாத எதார்த்தமும் மறைந்துள்ளது. அதாவது வேலைநேரம் முடிந்து ஊருக்கு தொலைபேசியில் பேசலாமென்று உட்காரும்போது பணிசெய்யும் நாட்டிற்கும் அதிரைக்கும் இயற்கையான நேரஇடைவெளி. சவூதிக்கும் அதிரைக்கும் இரண்டரை மணிநேரம் இடைவெளி என்றால், துபாய்க்கு ஒன்றரை மணிநேரம். வளைகுடா நாடுகளில் வசிப்பவர்களுக்கு ஓரளவேணும் இந்த வாய்ப்புகள் வாய்க்கின்றன. சிங்கப்பூர், மலேசியா, புருணே போன்ற தூரக்கிழக்கு நாடுகளுக்கும் அனேகமாக இந்த பிரச்சினை இல்லை. ஆனால் ஏனைய தொலைதூர தேசத்திலிருக்கும் நம்மவர்களுக்கு இந்த வாய்ப்பு அரிது என்றே நினைக்கிறேன்.

தாயகத்திலுள்ளோருடன் தொலைபேசியில்பேசவாய்ப்பு கிடைக்கும்போது இச்சிறுமியின் வயதையொத்த குழந்தைகள் உறங்கியிருப்பர் அல்லது காலைநேரமாக இருப்பின் பள்ளிக்குச் சென்றிருப்பர். நெடுங்காலம் பிரிந்திருக்கும் கணவனுடன் தனிமையில் குழந்தைகள் தொந்தரவின்றி பேசலாம் என்று மனைவியும் இதை அறிந்தோ அறியமலோ வசதியாக எடுத்துக் கொண்டிருக்கக்கூடும். எனினும், இவற்றை எல்லாமே நாம் அறிந்து அதற்கேற்ப திட்டமிட்டால் களையக்கூடிய சாதாரண விசயம்தான்!

வெளிநாட்டில் காலம்தள்ளும் எம்போன்ற நண்பர்களுக்குச் சொல்லிக்கொள்வது என்னவெனில் குறைந்தது வாரம் ஒருநாளாகினும் நம் செல்லக்குழந்தைகளுடன் அதிகநேரம் தொலைபேசியில்பேசுங்கள். அவர்களின் விருப்பு வெருப்புகளை உரிமையுடன் விசாரித்துக் கேளுங்கள். சாத்தியப்படும் உறுதிமொழிகளை வழங்கியிருந்தால் உடனே நிறைவேற்ற முயற்சி செய்யுங்கள். இல்லையெனில் அடுத்த வாரம் பேசும்போது அதற்கான காரணத்தை விளங்கவைத்து வேறு வழிகளில் ஈடுசெய்யுங்கள்.

அவர்கள் தினமும் தாயுடன் இருப்பதால் அவர்களது குறும்புச்சேட்டைகளால் சிலநேரம் அடிவாங்கியும் இருப்பர். இதையும் நீங்கள் அறிந்துகொண்டு ஆறுதல் சொல்லுங்கள்.அதற்கான காரணத்தை தவறு அவர்கள்பக்கமிருந்தால் அதை எப்படி திருத்திக் கொள்வது/தவிர்த்துக் கொள்வதென்று உற்றநண்பனாக நல்ல ஆலோசனை வழங்குங்கள்! அப்புறம் என்ன? விடுமுறையில் ஊர்செல்லும்போது ஓடிவந்து உங்களை அணைத்துக்கொள்ள ஊரில் உங்களுக்கு ஓர் உயிர்தோழி காத்திருப்பாள்!

என்னதான் காசுபணம் சம்பாதித்தாலும் நமக்கென நேசம்கொள்வோரை சம்பாதிப்பது அவைஎல்லாவற்றையும்விட முக்கியம் என்பதை மறந்துவிடவேண்டாம்!

அன்புடன்,
N.ஜமாலுதீன்

நன்றி :-  http://adiraixpress.blogspot.com/

0 கருத்துகள்: