கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

பொன்னான நேரங்கள்-2

ஒரு மனிதனின் சராசரி ஆயுள்
ஒரு மனிதனின் சராசரி ஆயுளைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிடும் போது கூறினார்கள்.

عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « عُمُرُ أُمَّتِى مِنْ سِتِّينَ سَنَةً إِلَى سَبْعِينَ سَنَةً

எனது சமுதாயத்தவரின் ஆயுள் காலம் அறுபதிலிருந்து எழுபது வரையாகும் ( அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) ,நூல்: புகாரி-2501)
இன்று நமது ஆயுளில் இறைவணக்கத்திற்கு நாம் செலவிடும் காலம் எவ்வளவு? ஒரு ஆய்வுக்கணக்கு கூறுவதைக் கேளுங்கள்.
நாம் உலகில் 70 ஆண்டுகள் வாழ்வதாக இருந்தால் நாம் எவ்வாறெல்லாம் வாழ்வோம் என்பதற்கு ஆய்வு தரும் தகவலைப் பாருங்கள்:-
1. தூங்குவதற்கு 24 ஆண்டுகள் ,
2. உழைப்பதற்கு 14 ஆண்டுகள்,
3. பொழுது போக்கிற்கு 8 ஆண்டுகள்
4. சாப்பிடுவதற்கு 6  ஆண்டுகள்,
5. போக்குவரத்திற்கு 5 ஆண்டுகள்’
6. பேசுவதற்கு 4 ஆண்டுகள்,
7. கல்விக்கு 3 ஆண்டுகள்,
8. படிப்பதற்கு 3  ஆண்டுகள் ,
9. தொலைக்காட்சிக்கு 3 ஆண்டுகள்
என நமது 70 ஆண்டு கால வாழ்வே முடிந்து விடுகிறது.
நாம் தினந்தோறும் ஐவேளை அல்லாஹ்வை தொழுவதாக இருந்தால் நமது 70 ஆண்டு கால ஆயுளில் (அதாவது 25,550 நாட்களில்) ஐந்து மாதங்கள் (0.59%) மட்டுமே செலவாகும்.
நமது  வாழ்நாளில் நம்மைப்படைத்த நாயனை வணங்குவதற்காக ஒரு 5 மாதங்களைக் கூட  ஒதுக்க முடியாதா என்ன? என்று கேட்கிறது அந்த ஆய்வு.
நமது  மார்க்கத்தில் எத்தனையோ கடமைகள் உள்ளன. அவற்றில் தலையாயது இந்த ஐங்காலத் தொழுகைகள். இதைக் கூட நிறை வேற்றாமல் நம்மில் எத்தனையோ பேர் அலட்சியமாக இருந்து வருகின்றனர். தொழுவோரில் கூட உரிய வேளையில் தொழாது காலம் கடந்து நினைத்த நேரங்களிலெல்லாம் கடமை மறந்து தொழும் உணர்வினைக் காணுகிறோம்.
தொழாமல் வெட்டிப் பேச்சு பேசிக் கொண்டிருந்த நமது முஸ்லிம் சகோதரர்களைப் பார்த்து, சமீபத்தில் இஸலாத்தைத் தழுவிய டாக்டர் அப்துல்லாஹ் அவர்கள் ” இந்த தொழுகையை  விட இவர்களுக்கு என்ன முக்கிய வேலை இருக்கிறது? இவர்களெல்லாம் இறைவனுக்கு நன்றியுணர்வுமிக்க அடியார்களாக இருக்கவேண்டாமா ? எனக் கேட்டது  நம்மை வெட்கித் தலைகுனி யுமாறு செய்கிறது.
தொழுகைக்கு நாம் செலவிடும் நேரத்தைப் போல், கூட்டிக் கழித்துப் பார்த்தால் நன்மையான காரியங்களுக்கு நாம் செலவிடும் நேரங்களும்  மிகமிகவும் குறைவானதாகவே உள்ளது.சொந்த தேவைகளுக்கும், பொருளைத் தேடுவதற்கும் இராப்பகலாக உண்ணாது உறங்காது அயராது பாடுபடும் மனிதன் தன்னைப் படைத்த நாயனுக்காக சிறிது நேரத்தைக்கூட ஒதுக்கக் கூடாதா?
நேரத்திற்கு உவமை.
ஒரு முறை 950 ஆண்டுகள் வாழ்ந்த இறைதூதர் நூஹ் நபியிடம் (மரணத்தூதர்) உயிரைக் கைப்பற்ற வந்த வானவர்

يا أطول الأنبياء عمرا ،  كيف وجدت الدنيا؟

நபிமார்களில் நீண்ட காலம் உயிர் வாழ்ந்த இறைதூதரே! உலகம் எப்படி இருந்தது என்று கேட்டபோது

كدار، لها بابان دخلت من أحدهما ، وخرجت من الآخر

“உலகம் ஒரு வீட்டைப் போன்றது. அதற்கு இரு வாசல்கள் உள்ளன. ஒரு வாசல் வழியாக உள்ளே சென்று மறு வாசல் வழியாக வெளியேறுகிறேன்” என்றார்கள்.
இறுதிநாளில் விசாரணைக்கு வரும்போது இவ்வுலகின் கால அளவை மிகவும் அற்ப நேரமாகவே கருதுவார்கள் என்பதை அல்லாஹ் கூறுவதைக்  கேளுங்ள்.

كَأَنَّهُمْ يَوْمَ يَرَوْنَهَا لَمْ يَلْبَثُوا إِلَّا عَشِيَّةً أَوْ ضُحَاهَا

அதை அவர்கள் காணும்போது ஒரு மாலைப் பொழுதிலோ, ஒரு காலைப் பொழுதிலோ தவிர வாழவில்லை என்பது போல் அவர்களுக்குத் தோன்றும் (79:46)

وَيَوْمَ يَحْشُرُهُمْ كَأَن لَّمْ يَلْبَثُواْ إِلاَّ سَاعَةً مِّنَ النَّهَار يَتَعَارَفُونَ بَيْنَهُمِْ

அவர்களை அவன் எழுப்பும் நாளில் பகலில் சொற்ப நேரமே தங்கியிருந்தது போல்அவர்களில் ஒருவரையொருவர் புரிந்து கொள்வார்கள். (அவ்வாறு அவர்களுக்கத் தோன்றும்) 10:45

أن ما مضي لا يعود ، ولا يعوض

சென்று போன நேரம் திரும்பி வரவே செய்யாது.அதற்கு வேறு மாற்று பரிகாரமும் கிடையாது.
இன்று 2010 ஏப்ரல் 15 நேரம் 800 இரவு. இந்த நேரம் திரும்பி வருமா ?
நான்கு பொருட்கள் திரும்பி வராது.
1. சென்று போன வாழ்நாள்
2. சென்று போன நேரம்
3. வாயிலிருந்து வெளிவந்த வார்த்தைகள்
4. எய்யப்பட்ட அம்பு. என்றார் ஓர் அறிஞர்.
ஃபஜ்ரின் அழைப்பு
அறிஞர் ஹஸன் பஸரீ (ரஹ்) கூறும் செய்தி சிந்தனைக்குரியதாகும்.
ஓவ்வொரு நாளும் பொழுது விடியும் போது ஃபஜ்ரு ( விடியற்காலை ) மனிதனைப் பர்த்துக கூறும்
ஆதமின் மகனே! நான் புதிதாகப் பிறந்த ஒரு நாள். உனது ஒவ்வொரு செயலையும் உற்றுக் கவனித்துக் கொண்டிருக்கிறேன். நீ என்னை சரிகாகப் பயன் படுத்திக் கொள்வாயாக! நான் உன்னைவிட்டும் சென்று விட்டால் மீண்டும் கியாமத்-இறுதி நாள் வரை திரும்பி வரவே மாட்டேன் என்று.
சந்தர்ப்பம் ஓடிவிடுவதற்கோர் உவமை
கிரேக்க நாட்டுச்  சிற்பி ஒருவன் மனிதனிடம் வந்து போகும் சந்தர்பத்தை பின்வருமாறு படம் பிடித்துக் காட்டுகிறான். அது தான் (Statue of opportunity) சந்தர்ப்பம் என்னும் சிலை.

அந்த சிலைக்கு இரு இறக்கைகள் இருக்கும். முன்னந்தலையில் கூந்தலும் பின்னந்தலை வழுக்கையுமாக இருக்கும்.
உனக்கு இறக்கை எதற்கு ?
நான் மக்களிடம் பறந்து செல்வதற்காக!
முன்னந்தலையில் கூந்தல் எதற்கு?
மக்கள் என்னைப்பற்றிப் பிடித்துக் கொளவதற்காக!
ஏன் பெருவிரலில் நிற்கிறாய்?
சந்தர்பத்தைப் பயனபடுத்தாதோரிடமிருந்து கணநேரத்தில்      பறந்தோடி விடுவதற்காக!
பின்னந்தலை ஏன் வழுக்கையாக இருக்கிறது?.
சந்தர்பத்தை தவறவிட்டவர்கள் என்னைப் பற்றிப்பிடித்துக் கொள்ளாருப்பதற்காக!
சிற்பியின் கற்பனை எவ்வளவு அற்புதமானது பாருங்கள்.இதன் மூலம் நல்லதோர் பாடத்தை உலகுக்கு உணர்த்துகிறார்.
ஒரு முறை சந்தர்ப்பம் நழுவி விட்டால் அதே சந்தர்ப்பம் மீண்டும் வரவே செய்யாது என்பதற்கு இதைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும்?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:-

عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم-« نِعْمَتَانِ مَغْبُونٌ فِيهِمَا كَثِيرٌ مِنَ النَّاسِ الصِّحَّةُ وَالْفَرَاغُ »

(திர்மிதி 2473 , புகாரி 6412 பைஹகீ 6760,இப்னு மாஜா 4309)

عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم-

« إِنَّ الصِّحَّةَ وَالْفَرَاغَ نِعْمَتَانِ مِنْ نِعَمِ اللَّهِ مَغْبُونٌ فِيهِمَا كَثِيرٌ مِنَ النَّاس ،

(முஸ்னத் அஹ்மத் 2381, அத்தாரமீ 2763)
மக்களில் பெரும்பாலோர் இரு பெரும் அருட்கொடைகளில் அலட்சியமாக உள்ளனர்.ஒன்று ஆரோக்கியம், மற்றொன்று ஓய்வு நேரம்.
உடல் நலத்தோடிருக்கும் மனிதன் தனக்குக் கிடைக்கும் பொன்னான நேரங்களை எவ்வாறெல்லாம் வீண் விரயம் செய்கிறான் பாருங்கள்.
வீணாகும் நேரங்கள்!
வெட்டிப் பேச்சிலே நேரம் வீணாகிறது.  
அரட்டையிலே நேரம் வீணாகிறது.  
சின்னத்திரையிலே நேரம் வீணாகிறது.  
இனடர்நெட்டிலே நெரம் வீணாகிறத.
வேலை முடிந்து வந்ததும் சிலர் தூக்கத்திலே கழிப்பார்கள். மற்றும் சிலர் கடைத் தெருவை சுற்றி வருவர்கள்.வேறு சிலர் ஷாப்பிங் என்று வெளியே கிளம்பி விடுவார்கள். இன்னும் சிலர் பூங்கா கடற்கரை என உலா வருவார்கள். இவற்றுள் பயன் கருதிச் செல்வோர் மிகச் சிலரே! பலரும் பொழுதை பயன்படுத்தற்காக அல்ல, பொழுதைப் போக்கு வதற்காக கிளம்பி விடுகன்றனர். இறுதியில் பஜ்ருத் தொழுகையை கூட கோட்டை விட்டுவிடுவார்கள்.நம்மில் எத்தனை பேர் பஜ்ருத் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுது வருகிறார்கள்?
நம் சகோதரிகள் பெரும் பகுதி நேரத்தைத் தொலைக் காட்சியிலோ, தூக்கத்திலோ தொலைத்து விடுவார்கள். இவ்வாறு தொலைத்து விடும் நேரங்கள் மீண்டும் திரும்பி வருமா? சற்று சிந்தித்துப் பாருங்கள்.
கடந்த காலம் செல்லாத காசோலை (கரன்ஸி நோட்டு) எதிர்காலம் வாக்குறுதிச் சீட்டு. நிகழ் காலம் நம் கையிலுள்ள ரொக்கப் பணம் என்றார் ஓர் அறிஞர். நம் கையிலுள்ள பணத்தை நல்ல முறையில் பயன் படுத்தினால் தக்க பயனைப் பெறலாம். ஒரு வேளை அதை இழந்துவிட்டாலும் மீண்டும் பெற வாயப்புகள் உண்டு. ஆனால் காலத்தை செலவழித்தால் மீண்டும் பெற வாய்ப்பில்லை யல்லவா?ஆகவே (காலத்தை பணத்தைச் செலவு செய்வதை விட) மேலானதாகக் கருத வேண்டும்.
நேரத்தின் முக்கியத்துவமும் மேலாண்மையும் (Important of time and it;s management)
நாளொன்றுக்கு நமக்கிருக்கும 24 மணிநேரங்களில் 86,400 வினாடிகள் உள்ளன. அவற்றை எவ்வாறு செலவு செய்கிறோம்? என்பதை கணக்கிட்டுப் பார்க்க வேண்டும். நேரம் எல்லோருக்கும் பொதுவானது. சமமானது. சிலருக்கு நேரம் பற்றாக்குறையாக உள்ளது. இன்னும் சிலருக்கு நேரத்தைக் கழிப்பதே சிரமமாக இருக்கிறது. இவர்கள் நேரம் போகவில்லையே என அங்கலாய்ப்பார்கள். இதற்குக் காரணம் காலத்தை வகுத்துப் பயன்படுத்தத் தெரியாததேயாகும்
உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

حاسبوا قبل أن تحاسبوا وزنوا أعمالكم قبل أن توزن عليكم ( وكان يضرب قدميه بالدرة اذا جن الليل ويقول لنفسه ما ذا عملت اليوم؟

விசாரணை நாளில் உன்னிடம் கணக்குக் கேட்கப்படுவதற்கு முன் உனது கணக்கைப் பார்த்துக்கொள். உனது அமல்களை நிறுத்துப் பார்ப்பதற்கு முன் உனது அமல்களை எடை போட்டுக்கொள்!
மனிதனை எச்சரிக்கை செய்யும் மணிவாசகங்கள் இவை! சிந்தித்துப் பாருங்கள்.தன்னைத்தானே எச்சரித்தவர்களாய்  தம்மைப் பர்த்து இன்று என்னன்ன காரியங்களை நிறைவேற்றினாய்? என்று கேட்பார்களாம்!
வேலை, தொழில், கல்வி,வியாபாரம் போன்றவற்றில் ஈடுபட்டிருப்ப வர்களுக்கு ஓய்வு நேரங்கள் கிடைக்கவே செய்கின்றன. அந்த நேரங்களை அவர்கள் சரியாகப் பயன்படுத்துவதே இல்லை.
சொந்த தேவைகளுக்கும், உறக்கதத்திற்கும், தொலைக்காட்சிக்கும், எவ்வளவு நேரத்தைச் செலவிடுகிறார்கள் தெரியுமா? இதற்கு ஒரு கால அட்டவணையைத் தயாரித்தால் கண்டிப்பாக ஒவ்வொரு வருக்கும் ஏராளமான ஓய்வு நேரங்கள் கிடைப்பது தெரிய வரும்.அந்த ஓய்வு வேளைகளை திட்டுமிட்டுப் பயன்படுத்தினால் நாம் செயற்கரிய சாதனைகளைச் செய்யமுடியும்.
ஒரே ஒரு தடவை தான் பிறக்கிறோம்.
நாம் உலகில் ஒரே ஒரு தடவை தான் பிறக்கிறோம். மீண்டும் பிறக்கப்போவதில்லை. அந்த ஒரே ஒரு வாழ்க்கையை ஏனோ தானோ என்றா வாழ்ந்து விட்டுப்போவது? அவ்வாறாயின் நமக்கும் ஏனைய பிராணிகளுக்கும் என்னதான் வேற்றுமை?
ஓர் அறிஞர் கூறுகிறார்
எழுந்திரு! உலகோர் இயங்க உன்தோள் கொடுத்து உதவு! எத்தனை நாட்களுக்கு இந்த வாழ்வு? நீ உலகில் மனிதனாகப் பிறந்ததற்காக ஏதேனும் ஒரு நினைவுச் சின்னத்தை விட்டுச் செல்லவேண்டாமா? இல்லையேல் உனக்கும் மரத்திற்கும், மண்ணிற்கும்,கல்லிற்கும் என்னதான் வேற்றுமை?
எவ்வளவு ஆழமான வார்த்தைகள்? சிந்திக்க வேண்டிய வைரவரிகள்! நமது அற்புதமான வாழ்வை சாதாரணமாகவா வாழ்ந்துவிட்டுச் செல்வது? நாம் செய்ய வேண்டிய காரியங்கள் எவ்வளவோ உள்ளன.
Robert Frost என்ற அறிஞர் கூறிய மணிவாசகங்களை இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நெஹ்ரு தன் மேஜையின் மேல் எழுதிவைத்து நாள்தோறும் படித்து மிகப்பெரிய காரியங்களை சாதிப்பதற்காக தம்மைத் தயார்படுத்திக் கொள்வாராம். அது என்ன வாசகங்கள் தெரியுமா?

The woods are lovely and deep, 
But i have my promises to keep,
And miles to go before i sleep,  
And miles to go before i sleep.

நீண்டு செறிந்த எழிற்காடு- அதை                           
நீந்துவதே என் உறுதிப்பாடு ,  
தாண்டுவரைக் கல்லதுவும் நன்றோ?   
அதை தாண்டாதுறங்குவதும் நன்றோ?

‘என் வாழ்வில் நான் செய்யவேண்டிய பணிகள் ஏராளம் உள்ளன.நான் செல்ல வேண்டிய நெடிய பயணமோ வெகு தொலைவில் உள்ளது. அதற்காக இராப்பகலாக தூங்காது உழைக்க வேண்டியுள்ளது. இந்த நிலையா உடல் தளரும் வரை நெடிதாய் நின்றுழைப்பேன்’ என்ற மணிவாசகங்களைப் பாருங்கள்.
நினைவுச் சின்னம் என்பது  நல்லறங்களாகும்.
இதைப்ப்பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறுவதைக் கேளுங்கள்.

عن أبي هريرة رضيالله عنه قال قال رسول الله صلي الله عليه وسلم  اذا مات ابن آدم انقطع عمله ألا من ثلآث صدقة جارية  او علم ينتفع به أو ولد صالح يدعو له(رواه مسلم

ஒரு மனிதனின் மரணத்தின் பின் வருபவை மூன்று அவை:
1. நிலையான தர்மம்,2 கல்வி,3 நல்ல மகன் (சான்றோன்) என்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல் :முஸ்லிம்)
இந்த மூன்றையும் உள்ளடக்கியவாறு  ஏழு அறச் செயலகள் மரணத்திற்குப் பின் தொடருவதாக வரும் நபி மொழி நம் சிந்தனைக்குரியதாகும்.

عن أنس بن مالك قال رسول الله صلعم ‘ سبع يجري للعبد أجرهن وهو في قيره بعد موته ، من علم علما ، أوأجري نهرا ، أو حفر بئرا ، أو بني مسجدا أو ورث مصحفا أو ترك ولدا يستغفر له بعد موته (حسنه ألباني رحمه الله في صحيح الجامع برقم3596

1. நிலையான தர்மம்,2 கல்வி,3 நல்ல மகன் (சான்றோன் ) என்பதைத் தொடர்ந்து மேலும் நான்கைக் குறிப்பிட்டார்கள் , 4.ஓடும் ஆறு 5. கிணறு 6. பள்ளி வாசல் 7.முஸ்ஹப் (நன்னெறி நூல்கள்) இன்னொரு அறிவிப்பில் கனி தரும் பழங்கள் என எட்டாவதாகக் கூறிய ஆதாரமிக்க நபிமொழிகளும் உள்ளன.
நபிமார்கள் அத்தனை பேரும் உலகில் சாதிப்பதற்காகவே “அல்லாஹ்வின் தூதுவச் செய்தியை மக்களிடம் சேர்ப்பதற்காக இடைவிடாது கண் துஞசாது தமது நேரங்களையெல்லாம் கருமமே கண்ணாயிருந்து சாதித்த வரலாறுகளை” குர்ஆன் நெடுகிலும் காண முடிகிறது.
அவற்றிற் கெல்லாம் மகுடம் வைத்தாற் போல் பெருமானார் (ஸல்) வாழ்வு அமைந்ததைப் பார்க்க முடிகிறது. அவர்களின் தூதுவச் பிரச்சாரத்தை நிறுத்துவதற்காக எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. இறுதியில் ஆசைவார்த்தைகளைக் காட்டி
‘நீர் விரும்பினால் அரபு நாட்டிலேயே அழகிய பெண்ணை மணமுடித்துத் தருகிறோம்.அல்லது இந்த நாட்டிலேயே மிகப் பெரிய கோடிச் செல்வராக்குகிறோம்.அல்லது இந்த நாட்டின் மாமன்னராக் ஏற்றுக் கொள்கிறோம் என்றெல்லாம் கூறியபோதும்
“எனக்கு பெண்ணும் வேண்டாம்,மண்ணும் வேண்டாம் மணி மகுடமும் வேண்டாம்” என்று உதறிவிட்டு என்ன கூறினார்கள் தெரியுமா?

والله لو وضعوا الشمس في يميني والقمر في يساري علي أن أترك هذاالأمر

حتي يظهره الله أو أموت في سبيله ما تركته

‘உலக மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு சூரியனை வலக்கையிலும், சந்திரனை இடக்கையிலும் கொண்டு வந்து தந்தாலும் என் கொள்கையை விட மாட்மேன். ஒன்று அதில் நான் வெற்றி பெறுவேன். இல்லையேல் செத்து மடிவேன்’ என்று சூளுரைத்து 23 ஆண்டுகளிலே ஒரு நிமிடம் கூட வீண் விரயம் செய்யாது  போராடியதால் தான் ஆயிரம் ஆண்டுகளில் சாதிக்க முடியாத அரும் பெரும் காரியத்தை அவர்களால் சாதிக்க முடிந்தது.
அவர்கள் கைகட்டிக்கொண்டு இருந்திருந்தால் இன்று வரை கோடானு கோடி மக்கள் இஸ்லாத்தை ஏற்றிருப்பர்களா? இன்று 1823 மில்லியன் மக்கள் வரை இஸ்லாத்தைத் தழுவியிருப்பர்களா? இந்த டாக்டர் அப்துல்லாஹ் பெரியார் தாசன் தான் இஸ்லாத்திற்கு வந்திருப்பர்களா?
வீணாகக் கழியும் காலங்கள்
இன்றைய காலத்தில் பொழுதைக் கழிப்பதற்குத்தான் எத்தனையோ வகையான ஆபாசமான கேளிக்கை நிகழ்சிகள் மலிந்து கிடக்கின்றன.
சின்னத்திரை நிகழ்ச்சிகள் (டெலிவிசன்)பெரும்பாலான மக்கள் தங்கள் பொழுதைக் கழிப்பது தொலைக்காட்சியில் தான். அதில் வரும் விதவிதமான அலைவரிசைகளில் மனதைப் பறிகொடுத்து மெய்மறந்து விடுகிறார்கள். குழந்தைகள் முதல் கூன் வீழந்த கிழவர்கள் வரை இதற்குப் பலியாகிறார்கள்.
சிறந்த அலை வரிசைகளில் அறிவியல் நிகழ்சிகளும், அவசியமான நிகழ்சிகளும் இருந்தாலும் விரும்பிப் பார்ப்பது ஆடல், பாடல், நகைச்சுவை நிகழ்சிகள், திரைப்ப டங்கள், சீரியல்கள், கிரிக்கட் போட்டிகள் போன்றவை தான். இவற்றால் நம் எதிர்காலத்துக்குப் பயனுண்டா என ஆராய்ந்தால் எதுவுமே இல்லை. பொன்னான நேரங்கள் வீணாவது தான் மிச்சம்.
இதனால் எத்தனையோபேர்களின் அற்புதமான திறமைகள் பாழாகின்றன. சாதனைகள் தோல்விகளில் முடிகின்றன.

குழந்தைகள் பாதிப்பு
அமெரிக்காவில் குழந்தைகள் வாரம் ஒன்றிற்கு சராசரியாக 25 மணிநேரம் தொலைக் காட்சிகள் பார்ப்பதாக சி.என்.என் ஹெல்த் நியூஸ் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. பள்ளி மாணவர்களின் கல்வித் தரம் இதனால் வெகுவாகக் குறைந்துள்ளது. குடும்பச்சூழல்கள் பல பாழாகியுள்ளன.

இன்டெர்னெட்டினால் பாதிப்பு
அடுத்து கணினியின் அசுர வளர்ச்சியால் உலகில் பல்வேறு நன்மைகள் ஏற்பட்டாலும் இன்டர்நெட் தொடர்புகள் நமது இளைஞர்களை அதள பாதாளத்தில் தள்ளிக்கொண்டி ருக்கின்றன.

கைபேசியினால் பாதிப்பு
அடுத்து தொலைபேசித் தொடர்பு சாதனமான மொபைல்-கைப்பேசி அது மக்களைப் படுத்தும் பாடு சொல்லி முடியாது. இளைய சமுதாயத்தையும் சிறுவர்களையும் பாழ்படுத்தும் ஆபத்தான தீமையை விளைவிக்கும் நச்சுப் பொருளாகிவிட்டன.

தொலைபேசியினால் பாதிப்பு
அடுத்து நமது பொன்னான நேரங்கள் தொலைபேசியிலே தொலைந்து விடுகின்றன. ஆண்கள் வேலைக்குச் சென்றுவிட்டால் பெண்கள் நேரங்களைப் பாழாக்குவது தொலைபேசியில் தான். அடுத்தவர்களைப் பற்றிப் பேசுவதிலும், ஆடம்பரப் பொருட்களைப் பற்றித் தெரிந்து கொள்வதிலும் தான் கழிகின்றன.

வீண்பேச்சுகளும், வேண்டா வெறுப்புகளும்
நம்மில் இருவர் சந்தித்தால் அல்லது தொலைபேசியில் தொடர்பு கொண்டால் வீண் பேச்சுகளில் ஈடுகிறோம். பேச்சுத்துணைக்கு ஆளில்லை என தேடிக் கண்டு பிடித்து அரட்டை அடிக்கிறோம். முதலில் வீணான பேச்சுகள் பின்னர் அடுத்தவர் பக்கம் திரும்பி புறம் பேசுதலில் முடிகிறது.அது நரகிற்கே வழி கோலும் என்பதை நம்மில் எவரும் உணருவதில்லை.
நபி (ஸல்) கூறுகிறார்கள்
ஒருவன் தாம் பேசுபவை நன்மையான பேச்சா அல்லது தீமையான பேச்சா என ஆராயாமல் பேசினால் அதன் விளைவாக கிழக்கிற்கும் மேற்கிற்கும் மத்தியில் உள்ள தூரத்தைவிட அதிக தூரத்தில் நரகில் விழுவான். (புகாரி) அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி)
நம்மில் பெரும்பாலோர் தங்களின் பொன்னான நேரங்களை அறிந்தோ அறியாமலோ வீணடித்துக் கொண்டிருக்கின்றனர்.
நரகவாசிகளில் ஒரு சாராரிடம் நீங்கள் எதற்காக நரகத்திற்கு அழைத்துவரப்பட்டீர்கள் எனக் கேட்கும் போது அவர்கள்,

ُكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ

“நாங்கள் வீணாகப் பொழுதைக் கழித்தவர்களுடன் இருந்தோம்” (74: 45) என்று கூறுவார்கள்.

மற்றவர்களின் நேரத்தை வீணாக்குவது
தங்களின் நேரத்தை வீணாக்குவதுடன் மற்றவர்களின் நேரத்தையும் பாழாக்குவதையும்; இன்று அதிகமாகக் காணமுடிகிறது.
கண்ட கண்ட நேரங்களிலோ இரவு தூங்கும் வேளைகளிலோ போன் செய்து தொல்லை தருபவர்களைப் பார்க்கிறோம்.
ஒரு நாள் நள்ளிரவு அசந்து தூங்கிக் கொண்டிருந்தேன்.மணி இரண்டு இருக்கும். தொலைபேசி எண் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது. ஏதேனும் எமர்ஜென்சி செய்திகளாக இருக்கும் எனப் பதறிப் போய்  எடுத்தால், ஸலாம் சொல்லிவிட்டு ஹலோ யார்? மறுபுறம் தூங்கிறீங்களா?என்ற குரல் கேட்டது. ஆமாம் தூக்கத்திலிருந்து எழுப்பிவிட்டு தூங்கிறீங்களா எனக் கேட்டார்.நான் மீண்டும்  ஹலோ யார் பேசுறது? எனக்கேட்டேன். மறு முனையிலிருந்து ‘ யார் பேசுறதுன்னு கண்டு பிடியுங்களேன் அடுத்த போட்டி வினா.
இது Quiz Programe நடத்திற நேரம்மில்ல. முதல்ல உங்க பேர சொல்லுங்க.. எதாவது அவசரச் செய்தியா? இல்லை சும்மா தான் கூப்பிட்டேன் என்றாரே பார்க்கலாம் சர்வ சாதாரணமாக. அதற்கு இதுவா நேரம்? தயவு செய்து தூக்கத்திலே டிஸ்டர்ப் செய்யாதீங்க. உருப்படியா எதாவது வேலையைப் பாருங்க! என்று போனை வைத்து விட்டேன்.
பாருங்கள் வேலை வெட்டி இல்லாதவர்கள். இவர்களைப் பார்த்து தான்

عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « لاَ ضَرَرَ وَلاَ ضِرَارَ ».

லா ளரர வலா ளிரார தனக்கும் தீங்கு செய்யக் கூடாது. பிறருக்கும் தீங்கு செய்யக் கூடாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னு மாஜா-2431)
முன்னறிவுப்பு இன்றி வீட்டிற்கு வருவது

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَدْخُلُوا بُيُوتاً غَيْرَ بُيُوتِكُمْ حَتَّى تَسْتَأْنِسُوا وَتُسَلِّمُوا عَلَى أَهْلِهَا ذَلِكُمْ خَيْرٌ لَّكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ

அனுமதியின்றி அயலார் இல்லம் செல்லுவது கூடாது என குர்ஆன் கண்டிப்பதை 24:27 வது வசனத்தில் காண முடிகிறது.
ஆனால், தொலைபேசித் தொடர்பு வசதிகள் இருந்தாலும் எந்தவித முன்னறிவிப்பும் யுppழinஅநவெ ம் இல்லாமல் வீட்டிற்கு வரும் விருந்தாளிகளைப் பர்க்கிறோம். நாம் குடும்பத்துடன் அவசரமாக வெளியே செல்வதற்கு ஆயுத்தமாக இருப்போம். அந்த நேரத்தில், ஒரு வேலையாக வந்த இடத்தில் உங்கள் வீட்டிற்கும் வரலாமென்றி ருக்கிறோம். வீட்டில் இருக்கிறீர்களா? உங்கள் வீட்டு வாசலில் தான் நிற்கிறோம். கதவைத் திறக்கிறீர்களா? எனக்கேட்பார்கள்.
எவ்வளவு தர்ம சங்கடமான நிலை பார்த்தீர்களா? இதனால் தான் நேரம் காலம் பார்த்து ஓய்வு நேரம் பார்த்து அனுமதி பெற்றுச் செல்ல வேண்டும் என்பதையும், அனுமதிகிடைக்காமலும், நமது ஸலாத்திற்கு பதில் வராமலும் பிறரது இல்லம் செல்லாதீர்கள். அவர்களின் இந்த திடீர் வருகை இருவரது நேரங்களையும் வீணாக்குகிறது.
அடுத்து குறித்த நேரத்திற்கு வீட்டிற்கோ விருந்திற்கோ வருவதாக வாக்களிப்பார்கள். இதோ ஐந்து நிமிடத்தில் வந்து விடுகிறோம் என்பார்கள். ஆனால் அவர்கள் வீ;டடிலிருந்தே புறப்பட்டிருக்க மாட்டார்கள். இவ்வாறு குறித்த நேரத்தில் வராது நமது நேரங்களை வீணடிப்பவர்களையும் நம்மிடம் பார்க்கலாம்.
இவர்களுக்கு பாடம் புகட்டுவதற்காக அமரிக்க அதிபர் வாஷிங்டன் கடைபிடித்த நெறியைப்பாருங்கள்.
ஒருமுறை குறிப்பிட்ட நேரத்தில் விருந்தினர்கள் வராததால் தனியாக உணவருந்தத் துவங்கிவிட்டார். விருந்தினர்கள் சிறிது தாமதித்து வந்ததும் அவர்களிடம் சாப்பிட்டுக் கொண்டே வாஷிங்டன் கூறினார். ‘என்னுடைய சமயற்காரன் விருந்தினர்கள் வந்து விட்டார்களா எனக் கேட்கமாட்டான்.சாப்பிடும் நேரம் வந்துவிட்டதா என்று தான் கேட்பான்’.வந்தவர்கள் தாமதத்தின் விளைவைப் புரிந்து கொண்டார்கள்.
ஒருமுறை பிரஞ்சு மன்னன் நெப்போலியன் தமது தளபதிகளை விருந்துக்கு அழைத்திருந்தார். குறிப்பிட்ட நேரத்தில் அவர்கள் வந்து சேராததால் தனியாக அமர்ந்து உணவருந்த ஆரம்பித்து விட்டார். அவர் முடிக்கும் தறுவாயில் அவருடைய தளபதிகள் ஒருவர் பின் ஒருவராக உள்ளே நுழைந்தனர். சாப்பாட்டு மேசையிலிருந்து எழுந்து கொண்டே தளபதிகளே! சாப்பிடும் நேரம் முடிந்து விட்டதுஃ வேலை செய்யும் நேரம் துவங்கிவிட்டது. வாருங்கள். நாம் ஒரு நிமிடம் கூட வீணாக்காது இனி வேலையில் ஈடுபடுவோம் என்றாரே பார்க்கலாம்.
தாமதத்திற்கு கொண்டிக் காரணங்கள்.
சிலர் தாமதத்திற்கு நொண்டிக் காரணங்களை கூறிக் கொண்டிருப் பார்கள். தம்முடைய ஊழியன் ஒருவன் தாமதித்து வந்ததற்கு தம்முடைய கடிகாரத்தை நொண்டிச் சாக்காகக் கூறியதும், ‘ நீ வேறு ஒரு கிளாக்கை (கடிகாரத்தை) வைத்துக் கொள்ள வேண்டும். இல்லையேல் நான் வேறு ஒரு கிளர்க்கை (குமாஸ்தாவை) வைத்துக் கொள்ளுவேன்’ என்று கூறினார் வாஷிங்டன்.

ஒத்திபோடுவது.
உடனுக்குடன் செய்யவேண்டிய காரியங்களை ஒத்தி போடுவதும் ஒருவனை படுகுழியில் தள்ளிவிடும். காலம் என்னும் கடிகாரத்தில் ஒரே ஒரு சொல் தான் பொறிக்கப்பட்டிருக்கிறது. அது தான் ‘இப்பொழுது’ என்னும் சொல். இப்பொழுது என்பது வெற்றி வீரனின் தாரக மந்திரமாகும். ‘பின்பு’ என்பது தோல்வி அடைபவனின் ‘சாபச் சொல்’.
ஒருவேலையை ஒத்தி போடுவது என்றால் என்ன? அதைப் புதை குழியில் போட்டு மூடிவிடுவது தான். பின்பு பார்ப்போம் என்பதன் பொருள் என்ன? பின்பு ஒரு போதும் அதை ஏறிட்டுப்பார்ப்பதில்லை என்பது தான்.
நாளை (புக்ரா)
ஒருநாளின் மதிப்பு தெரியாததால் நாளை புக்ரா என சர்வசாதாரண மாகக் கூறிவிடுவார்கள்.
நாளை என்பது எத்தனை பேரின் வாழ்க்கையைப் பலி கொண்டிருக்கிறது? அதன் காரணமாக எத்தனை பேரின் தீர்மானங்கள், திட்டங்கள் எல்லாம் சிதறடிக்கப் பட்டிருக்கின்றன? அது எத்தனை சோம்பேறிகளுக்கும், திறமையற்றவர்களுக்கும், அடைக்கல நிலையமாக அமைந்திருக்கிறது.
நேரத்தை உரிய முறையில் கழித்திடுவோம்
காலத்தின் மீது சத்தியமிட்டு காலத்தைப் பேணிக் கொள்ளுஙகள (அல்குர்ஆன் 103:1-3)கூறுகிறான்.
வீணாய்க் கழிந்துவிட்ட காலங்களை எண்ணி வருந்தி விரக்தியடையாதீர். இனி வரும் காலங்களில் உங்கள் வாழ்வில் வசந்தம் வீச வழிமுறைகளை வகுத்துக் கொள்ளுங்கள்.
ஓர் அறிஞர் கூறினார்.
எதிர்காலத்தை எண்ணி வாழ்பவன் கோழை.இறந்த காலத்தை எண்ணி வேதனைப்படுபவன் நடமாடும் பிணம். நிகழ் காலத்தை எண்ணி வாழ்பவன் வாழப்பிறந்தவன்.
அலி (ரலி) அவர்கள் கூறினார்கள்.
கடந்த காலம் கடந்து விட்டது. வருங்காலம் சந்தேகத்திற்குரியது. எனவே இருக்கும் காலத்தில் செயலாற்றிக் கொள்.
ஓய்வு வேளைகளில் நற்பணியாற்றுவது

وَلَقَدْ مَكَّنَّاكُمْ فِي الأَرْضِ وَجَعَلْنَا لَكُمْ فِيهَا مَعَايِشَ قَلِيلاً مَّا تَشْكُرُونَ

(மனிதர்களே!) நிச்சயமாக நாம் உங்களை பூமியில் வசிக்கச் செய்தோம். அதில் உங்களுக்கு வாழ்க்கை வசதிகளையும் ஆக்கித்தந்தோம் -எனினும் நீங்கள் நன்றி செலுத்துவதோ மிகவும் சொற்பமேயாகும். (அல்குர்ஆன் 7:10)
நமக்குக் கிடைத்திருக்கும் ஓய்வுநேரங்களை அல்லாஹ்வுக்கு விருப்பமான மற்றும் அவனது தூதர் நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிகளில் பயன்படுத்தி அல்லாஹ்வின் நேசத்தைப் பெறுவோம்.
குர்ஆன் ஓதுதல் மற்றும் மனனம் செய்தல்,                                           உபரியான வணக்கங்களில் அதிகம் ஈடுபடுதல்
அழைப்புப்பணியை மேற்கொள்ளுதல்,
இறை நினைவுகளில் திக்ர் செய்தல் (பிரார்த்தனை செய்தல்)
சமூகப்பணி செய்தல்

وَلِكُلِّ أُمَّةٍ أَجَلٌ فَإِذَا جَاء أَجَلُهُمْ لاَ يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلاَ يَسْتَقْدِمُونَ

( அல்அஃராப் 7:34),(யூனுஸ்10:49) அந்நஹலு 16:61
மரணவேளை வந்துவிட்டால் மலக்குகள் மனித உயிரை ஒருகணம் முந்தவோ பிந்தவோ காலம் தாழ்த்தாமல் அவனுக்குக் குறிக்கப்பட்ட நேரத்தில் அவன் உயிரை கனகச்சிதமாக பிடுங்கி எடுத்துவிடுவார்கள். அந்த நிலை நமக்கு வரும்முன் மரணத்தை நோக்கிய இந்த வாழ்க்கைப் பயணத்தில் கிடைக்கப் பெற்ற இந்த அரிய நேரத்தை சரியான முறையில் பயன்படுத்த இன்றே ஆயத்தமாகுவோம். திசை தெரியாத பயணத்தை மேற்கொள்வது போல நம் வாழ்வை அமைத்துக் கொள்ளாமல் மறுமையில் வெற்றியடையக் கூடிய வழிகளறிந்து அதன்படி நடந்து மறுமையில் சொர்க்கத்தை அடையும் பாக்கியத்தை நமக்கு நல்கிட அவனே போதுமானவன்.
காலம் கண்போன்றது நேரம் பொன் போன்றது என்பார்கள். ஆனால் அந்தபொன்னைவிட,முத்துக்கள் பவளங்களை விட ஏன் வைரக்கற்களைவிடவும் விலையுயர்ந்தது.
விலைமதிப்பற்ற நேரம் சென்று விட்டால் மீண்டும் திரும்பி வராது: திருமறை குர்ஆன் இரு நிலைகளைக் குறிப்பிடுகிறது.
முதல் நிலை.
உலகில் இருக்கும் காலத்தைத் தவறவிடுவதால் பேரிழப்பு ஏற்படுகிறது.மரணவேளையில், எனக்கு இன்னும் சிறிது அவகாசம் கிடைத்தால் இழந்த காலத்தை ஈடு செய்து தவறவிட்ட நன்மைகளை யெல்லாம் நிறைவேற்றி வருவேனே என்று மனிதன் துடிதுடித்து
அங்கலாய்க்கும்  நிலையை அல்லாஹ் படம் பிடித்துக் காட்டுகிறான். (முனாபிகூன் 9,10)
அடுத்த நிலை
மறுமையில் ஒவ்வொரு மனிதருக்கும் அவரவர் உலகில் செய்த
செயல்களுக்கெல்லாம் நீதி வழங்கி கூலி கொடுக்கப்படும் போது நல்வவர்கள்சுவர்க்கத்திற்கும், தீயவர்கள் நரகத்திற்கும் அனுப்பப்படுவார்கள். அந்த வேளையில்நரகவாசிகள் வேண்டுவர்களாம். இந்த உலகிற்கு மீண்டும் ஒரு முறை அனுப்பப்பட்டால்நாங்கள் புதியதோர் வாழ்க்கை வாழ்ந்து நல்ல அமல்கள் செய்து வருவோமே என்று கதறுவர்களாம்.
அப்போது அவர்களிடம் கூறப்படும்.

قد انتهي زمن العمل وجاء زمن الجزاء

‘வேலை செய்யும் காலம் முடிந்து விட்டது.இப்போது கூலிவழங்கும் நேரம் வந்து விட்டது.

وَهُمْ يَصْطَرِخُونَ فِيهَا رَبَّنَا أَخْرِجْنَا نَعْمَلْ صَالِحاً غَيْرَ الَّذِي كُنَّا نَعْمَلُ أَوَلَمْ نُعَمِّرْكُم مَّا يَتَذَكَّرُ فِيهِ مَن تَذَكَّرَ وَجَاءكُمُ النَّذِيرُ فَذُوقُوا فَمَا لِلظَّالِمِينَ مِن نَّصِيرٍ.

இன்னும் அ(ந்நரகத்)தில் அவர்கள் ‘எங்கள் இறைவா! நீ எங்களை (இதை விட்டு) வெளியேற்றுவாயாக! நாங்கள் வழக்கமாகச் செய்து கொண்டிருந்த (தீய)வற்றை விட்டும் ஸாலிஹான (நல்ல) அமல்களை செய்வோம்’ என்று கூறிக் கதறுவார்கள். (35:37)
(அதற்கு அல்லாஹ்) ‘சிந்தித்துப் பார்க்கக் கூடியவன் அதில் சிந்திக்கும் பொருட்டு, நாம் உங்களுக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கவில்லையா? உங்களிடம் அச்சமூட்டி எச்சரிப்பவரும் வரவில்லையா? ஆகவே நீங்கள் (செய்த அநியாயத்தின் பயனைச்) சுவையுங்கள். ஏனென்றால் அநியாயக்காரர்களுக்கு உதவியாளர் எவருமில்லை’ (என்று கூறுவான்).     நன்றி;அல்பாக்கவி.காம்

0 கருத்துகள்: