நோன்புப் பெருநாளை அண்மித்த நாட்களில் இப்பொழுது நாம் இருக்கிறோம். ‘எவ்வளவு விரைவாக நோன்பு முடியப் போகிறது? நேற்றுத்தான் முதல் நோன்பு ஆரம்பித்த மாதிரி இருக்கிறது’ என்றெல்லாம் வியந்தபடி கதைத்துக் கொள்கிறோம். கிட்டத்தட்ட எல்லா இஸ்லாமிய வீடுகளிலும் பெருநாளுக்கான முதலாவது ஆயத்தம் குடும்பத்தவர்களுக்கான புத்தாடைகள் குறித்தான தேடல் தான். புனித ரமழானின் இறுதிப் பத்து நோன்புகளும் அனேகமாக, நமது புத்தாடைகளின் கொள்வனவிற்காகவும், அவற்றைத் தேடுவதற்காகவுமே கழிந்துவிடுகின்றன.
ரமழான் மாதம் குறித்து அந்நிய மத நண்பர் ஒருவர் இவ்வாறு சொல்கிறார். “நோன்பு மாதத்தில்தான் இரண்டு வகையான முஸ்லிம் பெண்களை வீதிகளில் பரவலாகக் காண முடிகிறது. புத்தாடைகளையும் புதுப் புதுப் பொருட்களையும் வாங்குவதற்காகக் கடை கடையாக ஏறி இறங்கும் முஸ்லிம் பெண்கள் ஒரு வகை. கந்தல் ஆடைகளோடு தெரு வழியே வீடுகள் தோறும், கடைகள் தோறும் யாசகம் கேட்டு வரும் முஸ்லிம் பெண்கள் மற்றொரு வகை”. இது அந்நிய மதத்தவர் ஒருவரது பார்வை மட்டுமல்ல. அனேகமானவர்களது கருத்தும் இதுவாகவே இருக்கிறது. உண்மைதான்....
இக்காலத்தில், தெருவுக்குத் தெரு, பளபளப்பான விளக்குகளாலும், அலங்கரிக்கப்பட்ட பொம்மைகளாலும் மின்னும் புடைவைக் கடைகளிலும் ஆபரணக் கடைகளிலும் தான் நமது முஸ்லிம்களின் புனித ரமழானுடைய இறுதிப் பத்து நோன்புகளும் செலவிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆடைகளின் வடிவங்களில் நாளுக்கு நாள் மாறும் ஃபேஷன் குறித்து அறிந்து, புதுப் புது ஃபேஷன்களில் ஆடைகளைத் தேடியும், தனது தெருவில் உள்ளவர்கள், தனது அயலவர்கள், நண்பர்கள் வாங்கியிருப்பதைக் காட்டிலும் மேலானதாகவும் பெருமதியானதாகவும் வாங்கி உடுத்தி, அவற்றின் பெருமையைப் பீற்றிக்கொள்ளவும் ஆசைப்பட்டு, பல கடைகள் வழியே ஏறியிறங்கித் தமது காலத்தையும் பணத்தையும் வீணாக்கிக் கொண்டிருப்பவர்கள் இன்று நம்மில் அனேகம் பேர். ஒரு சுன்னத்தான வழிமுறையைப் பின்பற்றுவதற்காக, பல பர்ளுகளை விட்டு விடும் அபாயமும் இக் காலத்தில்தான் மிக அதிகமாக நிகழ்கின்றது.
‘பெறுமதியானதை வாங்கிவிட்டேன். ஒரு முறைதான் அணிந்தேன். வீட்டுப் பாவனைக்கும் உடுத்த முடியாது. வெளிப் பயணங்களுக்கும், வைபவங்களுக்கும் உடுத்தலாமென்றால் வாங்கிய சில மாதங்களிலேயே அவற்றின் ஃபேஷன் சீக்கிரம் மாறிவிட்டிருக்கிறது’ என்று நம்மில் எத்தனை பேர் போன பெருநாட்களுக்கு வாங்கிய உடைகளை, ஒருமுறை அணிந்துவிட்டு அப்படியே எடுத்துப் பத்திரமாக மடித்து வைத்திருக்கிறோம்?
நோன்புப் பெருநாளுக்கொரு புத்தாடை. ஹஜ்ஜுப் பெருநாளுக்கொரு புத்தாடை. அடுத்த பெருநாட்கள் வரவிருக்கும் ஒரு வருட இடைவெளியில் வரும் வைபவங்களுக்காக வாங்கப்படும் புத்தாடைகள் என நமது அலமாரிகள் ஒவ்வொரு வருடமும் எத்தனை புத்தாடைகளால் நிறைகின்றன? உண்மையில் நாம் நமது தேவைக்காகத்தான் அவற்றை வாங்கி அடுக்கி வைத்திருக்கிறோமா?
நமது முன்னோரின் காலத்திலென்றால் வீட்டு வேலைகளும் தோட்ட வேலைகளும் நிறைந்து காணப்பட்ட காலமென்பதால், அணிந்திருந்த ஆடைகள் எளிதில் கிழிசல் கண்டிருக்கும். ஆனால் இக்காலத்தில் எல்லாவற்றுக்கும் இயந்திரங்கள் வந்த பிறகு, நம்மில் யாருமே கிழிந்து கந்தலாகும் வரை எந்த உடையையுமே அணிவதில்லை. ஒரு ஆடையில் நிறம் சற்று மங்கியதும், அல்லது பொத்தானொன்று கழன்றதுமே அந்த ஆடையை ஓரமாக்கி விடுகிறோம். மானத்தை மறைக்க ஆடையணிவதற்குப் பதிலாக ஒரு பகட்டுக்காகவும், பிறரிடம் தனது அந்தஸ்தினை அதிகரித்துக் கொள்வதற்காகவுமே ஆடையணியும் பழக்கம் இன்று தோன்றியிருக்கிறது.
மறைக்கப்பட வேண்டிய உடலை வெளிக்காட்டும் விதமான மெல்லிய துணியாலான ஆடைகளையும், இறுக்கமான ஆடைகளையுமே நாகரீகமான உடைகளாக இன்று ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டியபடி உள்ளன. அவற்றில் மதிமயங்கிப் போன நாமும் அவ்வாறான ஆடைகளைத் தேடியவாறே கடை கடையாக ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறோம். இங்கெல்லாம் அதிக பணத்தையும், நேரத்தையும் வீணாக்காமல் ஆடைகளை வாங்குவது எப்படி எனப் பார்ப்போம்.
ஆடைகளை வாங்க முற்படும்போது அவை உருவாக்கப்பட்டிருக்கும் துணியின் மீது முதலில் கவனம் செலுத்துங்கள். நமது தோலுக்கும், நாம் வசிக்கும் பிரதேசத்தின் கால நிலைக்கும் அவை ஒத்து வருமா, தாக்குப் பிடிக்குமா என்பவற்றையும் தீர்மானித்து, பொருத்தமானவற்றை மட்டுமே வாங்குங்கள். மிக அதிகமான விலையுடைய ஆடைதான் நல்ல ஆடை எனவும் தரத்தில் சிறந்த ஆடை எனவும் எண்ணமிருந்தால், அந்த எண்ணத்தை முதலில் விட்டொழியுங்கள். பிரமாண்டமான கடைகளில் உள்ள ஆடைகளின் விலையானது, அக் கடைகளின் மின்சாரச் செலவு, ஊழியர்களுக்கான வேதனம், இறக்குமதி வரிகள், இலாபம் என அனைத்தும் உள்ளடங்கியதென்பதை நினைவில் வைத்திருங்கள். எனவே நல்ல தரமான ஆடைக்கும், அவற்றின் விலைக்கும் சம்பந்தமேயில்லை. நேர்த்தியான, ஒழுங்கான ஆடைகள் வீதியோரத்திலுள்ள சிறிய கடைகளிலும் கூட மலிவு விலைககளில் கிடைக்கும்.
இன்றைய காலத்தில் பட்டுத் துணியால் நெய்யப்பட்ட நாகரீகமான ஆடைகளை ஆண்கள் பரவலாக அணிகிறார்கள். ஹராமென இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ள பட்டாடைகளை அணிவதை விட்டும் ஆண்கள் தவிர்ந்திருங்கள். அதேபோல பெண்கள், மெல்லிய துணிகளாலான மற்றும் உடலோடு ஒட்டிப் பிடிக்கும் இறுக்கமான ஆடைகளை வாங்குவதை விட்டும் தவிர்ந்திருங்கள். அடுத்தது முக்கியமாக, பெரிய கடைகள், வாங்கப் போகும் ஆடையை அணிந்து பார்க்கவென்று சிறிய அறைகளைக் கொண்டிருக்கும். அவற்றின் கண்ணாடிச் சுவர்களில், மேற்கூரையில் இரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த கேமராக்கள், ஆடை மாற்றுபவர்களைப் படம்பிடித்து இணையத்தில் உலவவிட்ட சம்பவங்கள் பரவலாக இருப்பதால், அவற்றில் போய் ஆடை மாற்றிப் பார்ப்பதை இயன்றவரை தவிர்ந்துக்கொள்ளுங்கள்
இவ்வாறாக, பெருநாளைக்கான ஆடைகளை வாங்கிவிட்டோம். இனி அவற்றைப் பெருநாளன்று குளித்து, ஆசையோடு அணியப் போகிறோம். பிறகு? அவற்றைக் கழுவி, அலமாரிக்குள் நிறைந்திருக்கும் மற்ற ஆடைகளோடு மடித்துவைத்து விடுவதால் நன்மை கிடைத்துவிடுமா? எல்லாம் வல்ல இறைவன், நமக்கு வசதியைத் தந்திருக்கிறான். விருப்பம் போல புத்தாடைகளை வாங்கிக்கொள்ள நம்மால் முடிந்தது. ஆனால் தொழுகைக்கு அணிந்து செல்வதற்குக் கூட ஒழுங்கான ஆடையில்லாமல் நமது ஊரில், அயல் கிராமங்களில், யாசகம் கேட்டு வருவோரில் என எத்தனை பேர் வருந்திக் கொண்டிருக்கிறார்கள் தெரியுமா?
எங்கோ ஒரு ஊரில் நல்லவிதமாக வாழ்ந்தவர்கள், யுத்தச் சூழலால், சுனாமியால், வெள்ளத்தால் இடம் பெயர்ந்து அகதிகளாக்கப்பட்டு முகாம்களிலிருந்து, உதவி கேட்டு நம்மிடம் வருகிறார்கள். அவர்களுக்குச் சில்லறைகளையும், அரிசியையும் கொடுத்து விடுவதோடு நமது ஸதகாக் கடமைகள் நிறைவு பெற்றுவிடுகின்றன என எப்படி இருந்து விட முடியும்? தொழுகைக்குச் செல்ல வழியில்லாமல், கந்தலாடைகளோடும் கண்ணீரோடும் அவர்கள் நின்றிருக்கையில், மனம் நிறைந்த பூரிப்போடு பெருநாளை எவ்வாறு நம்மால் பூரணமாகக் கொண்டாடிவிட முடியும்?
ரமழான் என்பது ஏழைகளின் பசியை மாத்திரம் உணரச் செய்யும் மாதமல்ல. அவர்களது அத்தனை குறைகளையும் நீக்கிவிடவென வரும் மாதம் அது. வசதியும், உதவுவதற்கான உள்ளமும் கொண்ட எல்லா இஸ்லாமியரும், தன்னிடம் மேலதிகமாக உள்ளவற்றைக் கொடுத்து உதவுவதில் ஒரு பொழுதேனும் தயங்கக் கூடாது. அலமாரிகளில் அடுக்கி வைக்கப்பட்டு, வீணாகப் பூச்சிகளரிக்க விடப்பட்டுள்ள உங்களது ஆடைகள், இன்னுமொரு ஏழையின் மானத்தை மறைக்க உதவும்.
ஃபேஷன் போய்விட்டதெனச் சொல்லி நீங்கள் ஒதுக்கி வைத்திருக்கும் ஆடைகள், இன்னுமொரு வறியவருக்கு புத்தாடைகளாகத்தான் இருக்கும். உங்கள் குழந்தைகளின் பாதங்களின் அளவை விடச் சிறிதாகிவிட்டன என்று மூலையில் போட்டு வைத்திருக்கும் சப்பாத்துகள், கல்லும் முள்ளும் தீண்டும் ஏழைக் குழந்தைகளின் பாதங்களை அலங்கரிக்கட்டும். இவ்வாறாக இல்லாதவர்களுக்குக் கொடுத்து உதவுவது, உங்களுக்கு மனநிறைவைத் தருவதோடு, இவை போன்ற உங்கள் ஸதகாக்களும், அவர்களது பிரார்த்தனைகளும் உங்களுக்கான நன்மைகளையும் அதிகரிக்கச் செய்யும்.
அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் பின் வருமாறு அறிவிக்கிறார்.
“ஒருவர் இறைவழியில் ஒரு ஜோடிப் பொருட்களைச் செலவு செய்தால் அவர் சொர்க்கத்தின் வாசல்களிருந்து, ‘அல்லாஹ்வின் அடியாரே! இது (பெரும்) நன்மையாகும்! (இதன் வழியாகப் பிரவேசியுங்கள்!)’ என்று அழைக்கப்படுவார். (தம் உலக வாழ்வின் போது) தொழுகையாளிகளாய் இருந்தவர்கள் தொழுகையின் வாசல் வழியாக அழைக்கப்படுவர்; அறப்போர் புரிந்தவர்கள் ‘ஜிஹாத்’ எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்; நோன்பாளிகளாய் இருந்தவர்கள் ‘ரய்யான்’ எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்;
தர்மம் செய்தவர்கள் ‘சதகா’ எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்!’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) ‘இறைத்தூதர் அவர்களே! என் தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! இந்த வாசல்கள் அனைத்திலிருந்தும் அழைக்கப்படும் ஒருவருக்கு எந்தத் துயரும் இல்லையே! எனவே, எவரேனும் அனைத்து வாசல்கள் வழியாகவும் அழைக்கப்படுவாரா?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்க ‘ஆம்! நீரும் அவர்களில் ஒருவராவீர் என்று நம்புகிறேன்!” என்றார்கள். (ஸஹீஹ் புஹாரி – 1897)
ரமழான் மேற்கூறிய அனேகக் கடமைகள் ஒன்றாகச் சங்கமிக்கும் மாதம். இம் மாதத்தில் அதிகம் அதிகமாக ஸதகாக்கள் கொடுத்து ஏழை மக்களை இன்புறச் செய்வதோடு, நமது நன்மைகளையும் அதிகப்படுத்திக் கொள்வோம். புனித ரமழானின் பகல்களில் நோன்புகளை நோற்று, இரவுகளில் நின்று வணங்கி, ஸகாத், ஸதகா கொடுத்து, பாவ மன்னிப்பு வேண்டிக் கையேந்தி நிற்கும் நாம்,வாங்கப் போகும் புத்தாடைகளிலும் இஸ்லாமிய நடைமுறையைப் பின்பற்றுவோம் இன்ஷா அல்லாஹ்.
இது, ரமழானில் மாத்திரமல்ல. புதிதாக ஒவ்வொரு ஆடை வாங்கும்போதும், நீங்கள் அணியாமல் வெறுமனே வைத்திருக்கும் நல்ல ஆடையொன்றை, சப்பாத்துச் சோடியொன்றை இல்லாதவரொருவருக்கு கொடுப்பதற்காக எடுத்து வையுங்கள். பரீட்சைகளுக்காக நீங்கள் வாங்கிப் படித்த புத்தகங்களை, அந்தப் பரீட்சை முடிந்ததும், அவை உங்களுக்குத் தேவையற்றதெனில், பரீட்சையை எதிர்பார்த்திருக்கும், புத்தகங்களை வாங்க வசதியற்றிருக்கும் ஏழை மாணவர்களுக்கு அவற்றைக் கொடுத்துவிடுங்கள். அத்தோடு ஏழை, எளியோருக்கு, தேவையுள்ளோருக்கு எதைக் கொடுக்கும் போதும் உங்கள் குழந்தைகளை முன்னிலைப்படுத்துங்கள்.
ரமழான் மேற்கூறிய அனேகக் கடமைகள் ஒன்றாகச் சங்கமிக்கும் மாதம். இம் மாதத்தில் அதிகம் அதிகமாக ஸதகாக்கள் கொடுத்து ஏழை மக்களை இன்புறச் செய்வதோடு, நமது நன்மைகளையும் அதிகப்படுத்திக் கொள்வோம். புனித ரமழானின் பகல்களில் நோன்புகளை நோற்று, இரவுகளில் நின்று வணங்கி, ஸகாத், ஸதகா கொடுத்து, பாவ மன்னிப்பு வேண்டிக் கையேந்தி நிற்கும் நாம்,வாங்கப் போகும் புத்தாடைகளிலும் இஸ்லாமிய நடைமுறையைப் பின்பற்றுவோம் இன்ஷா அல்லாஹ்.
இது, ரமழானில் மாத்திரமல்ல. புதிதாக ஒவ்வொரு ஆடை வாங்கும்போதும், நீங்கள் அணியாமல் வெறுமனே வைத்திருக்கும் நல்ல ஆடையொன்றை, சப்பாத்துச் சோடியொன்றை இல்லாதவரொருவருக்கு கொடுப்பதற்காக எடுத்து வையுங்கள். பரீட்சைகளுக்காக நீங்கள் வாங்கிப் படித்த புத்தகங்களை, அந்தப் பரீட்சை முடிந்ததும், அவை உங்களுக்குத் தேவையற்றதெனில், பரீட்சையை எதிர்பார்த்திருக்கும், புத்தகங்களை வாங்க வசதியற்றிருக்கும் ஏழை மாணவர்களுக்கு அவற்றைக் கொடுத்துவிடுங்கள். அத்தோடு ஏழை, எளியோருக்கு, தேவையுள்ளோருக்கு எதைக் கொடுக்கும் போதும் உங்கள் குழந்தைகளை முன்னிலைப்படுத்துங்கள்.
குழந்தைகள் கைகளினால் அவற்றைக் கொடுக்கும்படி செய்யுங்கள். ஸதகா கொடுக்கும் அந்நற்பழக்கம், குழந்தைகளையும் தொற்றிக் கொள்ளும். உங்களை முன்மாதிரியாகக் கொண்டே உங்கள் குழந்தைகள் வளருவார்கள் என்பதால் ஈகைக் குணம் கொண்ட ஒரு நல்ல சந்ததி உங்களிலிருந்து உருவாகி விடுவார்கள். அவர்களிலிருந்து வரும் நன்மைகள், நீங்கள் மரணித்த பின்பும் உங்களைச் சேர்ந்துகொண்டே இருக்கும்.
சிந்திப்போம் சகோதரர்களே!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக