கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

துபை சர்வதேச திருக்குர்ஆன் மாநாட்டில் மணிச்சுடர் நாளிதழுக்கு விருது !


தமிழக முஸ்லிம்களின் ஒரே நாளிதழுக்கு வெள்ளி விழா ஆண்டில் சர்வதேச அங்கீகாரம் !!

அமீரக காயிதெமில்லத் பேரவை தலைவர் குத்தாலம் ஏ லியாக்கத் அலி பெற்றார்! 

துபை : துபையில் வருடந்தோறும் ரமலான் மாதத்தில் நடைபெற்று வரும் துபை சர்வதேச திருக்குர்ஆன் மாநாட்டினையொட்டி திருக்குர்ஆன் மனனப் போட்டி நடைபெற்று வருகிறது. 16 ஆவது ஆண்டாக நடைபெற்று வரும் இப்போட்டி கடந்த 27.07.2012 வெள்ளிக்கிழமை முதல் துபை சேம்பர் ஆஃப் காமர்ஸ் ஆடிட்டோரியத்தில் நடைபெற்று வருகிறது.

மணிச்சுடருக்கு சர்வதேச அங்கீகாரம்
துபை சர்வதேச திருக்குர்ஆன் மாநாடு குறித்த செய்திகளை சிறப்புற வெளியிட்டு வரும் ஊடகங்களுக்கு  மாநாட்டின் நிறைவு நாளுக்கு முன்னதாக விருது வழங்கி கௌரவிப்படுத்துவது வழக்கம். இவ்வாண்டு திருக்குர்ஆன் மனனப் போட்டி குறித்த செய்திகளை சிறப்புற வெளியிட்டு வரும் மணிச்சுடர் நாளிதழுக்கு விருது வழங்கப்பட்டது.

இவ்விருதினை மணிச்சுடர் நாளிதழின் இயக்குநர்களில் ஒருவரும், அமீரக காயிதெமில்லத் பேரவையின் தலைவருமான குத்தாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி அவர்களிடம் விருது வழங்கும் குழுவின் தலைவர் இப்ராஹிம் பு மெல்ஹா வழங்கினார்.


குத்தாலம் அல்ஹாஜ் ஏ லியாக்கத் அலி
துபை சர்வதேச திருக்குர்ஆன் மாநாட்டுக் குழு மணிச்சுடர் நாளிதழுக்கு வழங்கிய விருதினைப் பெற்ற குத்தாலம் அல்ஹாஜ் ஏ லியாக்கத் அலி நமது செய்தியாளரிடம் தெரிவித்ததாவது :

மணிச்சுடர் நாளிதழை சிராஜுல் மில்லத் மர்ஹும் அல்ஹாஜ் ஏ.கே. அப்துஸ் ஸமது சாஹிப் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் உலகெங்கிலும் வாழ்ந்து வரும் தமிழக முஸ்லிம் சமுதாயம் சமுதாயச் செய்திகளை அறிந்து கொள்ள உதவும் வகையில் நாளிதழின் அவசியத்தை உணர்ந்து ’உண்மை சொல்வோம் நன்மை செய்வோம்’ எனும் கருத்தினை மையமாகக் கொண்டு துவக்கினார்.
சிராஜுல் மில்லத்தின் மறைவுக்குப் பின்னர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் மணிச்சுடர் நாளிதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்று சிறப்புற நடத்தி வருகிறார்.
மணிச்சுடர் நாளிதழின் வெள்ளி விழா ஆண்டாம் இருபத்தந்தாம் ஆண்டில் இவ்விருது கிடைத்துள்ளது இதன் சமுதாயப் பணிக்கு மட்டுமல்ல சர்வதேச அங்கீகாரமாகும் என்றார்.

இவ்விருதினை மணிச்சுடர் நாளிதழின் நிர்வாகத்திற்கும், நாளிதழ் வளர்ச்சியில் உறுதுணையாக இருந்து வரும் புரவலர்கள், விளம்பரதாரகள், செய்தியாளர்கள், ஏஜெண்டுகள் உள்ளிட்ட அனைவருக்கும் சமர்ப்பிப்பதாக தெரிவித்துள்ளார்.

விருது பெறும் போது அமீரக காயிதெமில்லத் பேரவைத் தலைவர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலியுடன் பொதுச்செயலாளர் ஏ. முஹம்மது தாஹா, பொருளாளர் ஹமீதுர் ரஹ்மான், மணிச்சுடர் நாளிதழின் அமீரகச் செய்தியாளரும், துபை மண்டலச் செயலாளருமான முதுவை ஹிதாயத், சர்வதேச திருக்குர்ஆன் விருது வழங்கும் குழுவில் இடம் பெற்றுள்ள ஒரே இந்தியர் என்ற பெருமையினைப் பெற்றுள்ள தமிழகத்தின் மதுக்கூரைச் சேர்ந்த நூருல் அமீன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தலைவர்கள் பாராட்டு
இவ்விருது பெற்ற செய்தியினை தாய்ச்சபைத் தலைவரும், மணிச்சுடர் நாளிதழின் ஆசிரியருமான முனீருல் மில்லத் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீனுக்கு அமீரக காயிதெமில்லத் பேரவைத் தலைவர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி அலைபேசி வாயிலாக தெர்வித்தார்.
எம். அப்துல் ரஹ்மான் எம்.பி.
மணிச்சுடர் நாளிதழுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைப்பதை அறிந்து பெரு மகிழ்வு அடைவதாக காயிதெமில்லத் பேரவையின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. தான் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மேலும் இதற்காக பாடுபட்ட அமீரக காயிதெமில்லத் பேரவை நிர்வாகிகளுக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

திருக்குர்ஆன் மாநாடு சர்வதேச மனனப் போட்டி
துபை சர்வதேச திருக்குர்ஆன் மாநாட்டினையொட்டி நடைபெறும் சர்வதேச அளவிலான மனனப் போட்டி ஹிஜ்ரி 1418 ஆம் ஆண்டு துவங்கியது. துவக்கமாக 57 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றுள்ளனர். கடந்த ஆண்டு 78 நாடுகளும் இவ்வாண்டு அதிகபட்சமாக 88 நாடுகளும் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பங்கேற்பாளர்கள்
இப்போட்டியில் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள இஸ்லாமிய விவகார அமைச்சகம் அல்லது தலைசிறந்த அரபுக்கல்லூரிகள் மூலம் போட்டியாளர் தேர்வு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
போட்டியாளர்கள் திருக்குர்ஆனை நன்றாக மனனம் செய்தவராகவும், ஆணாகவும், 21 வயதுக்கு மேற்படாதவராகவும், இப்போட்டியில் இதற்கு முன்பு பங்கேற்காதவராகவும் இருத்தல் அவசியம்.
போட்டியாளர்களுக்கான விசா, தங்குமிடம், உணவு, போக்குவரத்து, மருத்துவம் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுகிறது. 16 வயதுக்குட்பட்டவருடன் பங்கேற்க பாதுகாவலரும் வரலாம். மேலும் உடல்நிலையினைக் கருத்தில் கொண்டு விதிகள் தளர்த்தப்படும்.

பரிசுத்தொகை
இப்போட்டியில் முதல் இடம் பெறுவோருக்கு 250,000 திர்ஹமும், இரண்டாம் பெறுபவருக்கு 200,000 திர்ஹமும், மூன்றாம் இடம் பெறுபவருக்கு 150,000 திர்ஹமும் வழங்கப்படும்.
இதேபோல் திர்ஹம் 65,000 ( 4 வது ), 60,000 ( 5 வது ), 55,000 ( 6 வது ), 50,000 ( 7 வது ), 45,000 ( 8 வது ), 40,000 ( 9 வது ), 35,000 ( 10 வது ) இடம் பெறுவோருக்கு வழங்கப்படும். 80 சதவீதத்திற்கு மேற்பட்ட மதிப்பெண் பெறுவோருக்கு திர்ஹம் 30,000 மும், 70 முதல் 79 சதவீதம் பெறுபவருக்கு 25,000 திர்ஹமும், 70 சதவீதத்திற்கு கீழ் மதிப்பெண் பெறுபவருக்கு 20,000 திர்ஹமும் பரிசுத் தொகை வழங்கப்படும்.

2011 ஆம் ஆண்டு
2011 ஆம் ஆண்டு நடைபெற்ற 15 ஆவது ஆண்டுப் போட்டியில் லிபியா முதல் பரிசினையும், நைஜீரியா இரண்டாம் இடத்தினையும், சோமாலியா மூன்றாம் இடத்தினையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தியா
இந்தியாவிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் இப்போட்டியில் பங்கேற்று வருகிறார்கள். பெரும்பாலும் வட மாநிலத்தவரே இப்போட்டியில் பங்கேற்கின்றனர்.
13 ஆம் ஆண்டான ஹிஜ்ரி 1430 ஆண்டு நடைபெற்ற போட்டியில் இந்தியாவின் ஹாஃபிஸ் சயீத் இப்ராஹிம் அஹமது முஹம்மது முதல் பரிசினைப் பெற்றார்.
5 ஆம் ஆண்டான ஹிஜ்ரி 1422 ஆம் ஆண்டில் தமிழகத்தின் மதுரையை சேர்ந்த முஹம்மது முனவர் ஹமீத் அப்துல் சலாம் இரண்டாவது இடத்தைப் பெற்றார்.

சர்வதேச இஸ்லாமிய அறிஞர் விருது
துபை சர்வதேச திருக்குர்ஆன் மாநாட்டினையொட்டி வருடந்தோறும் சிறந்த இஸ்லாமிய அறிஞருக்கான விருது வழங்கப்படுகிறது.
முதலாம் ஆண்டான ஹிஜ்ரி 1418 ல் எகிப்தைச் சேர்ந்த ஷேக் முஹம்மது சரவியும், ஹிஜ்ரி 1419 ல் இந்தியாவின் ஷேக் அபுல் ஹசன் அலி நத்வியும், ஹிஜ்ரி 1420 ல் அமீரகத்தின் மறைந்த அதிபர் ஷேக் சையித் பின் சுல்தான் அல் நஹ்யானும் பெற்றனர்.
அதனைத் தொடர்ந்து ஷேக் யூசுஃப் அப்துல்லா அல் கர்ளாவி, அல் அசார் பள்ளிவாசல், டாக்டர் அப்துல் ரஹ்மான் அல் சுதேஷ், கிங் பஹத் குர்ஆன் அச்சகம், அமீரகத்தின் தற்போதைய அதிபர் ஷேக் கலீஃபா பின் ஜையித் அல் நஹ்யான் ஆகியோர் பெற்றுள்ளனர்.
இவ்வாண்டு யூசுஃப் எஸ்டேஸ் இவ்விருதினைப் பெறுகிறார்.
விருது பெறுவோருக்கு நற்சான்றிதழும், ஒரு மில்லியன் திர்ஹமும் பரிசாக வழங்கப்படுகிறது.
சொற்பொழிவுகள்
துபை சர்வதேச திருக்குர்ஆன் மாநாட்டினையொட்டி ஒவ்வொரு ஆண்டும் ஆங்கிலம், அரபி மொழி, மலையாளம், பெங்காலி ஆகிய மொழிகளில் தலைசிறந்த மார்க்க அறிஞர்களைக் கொண்டு சிறப்புச் சொற்பொழிவுகள் நடத்தப்படுகின்றனர்.
தமிழ் மொழியிலும் இத்தகைய சொற்பொழிவுகள் நடத்தப்பட வேண்டும் என்பது அமீரகத் தமிழ் மக்களின் நீண்ட நாள் ஆசை. வரும் ஆண்டில் இவ்வாசை நிறைவேறுமா ? பொறுத்திருந்து பார்ப்போம்.
நன்றி: முதுவை ஹிதாயத்


0 கருத்துகள்: