கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

முல்லை பெரியாறு சுருக்கமான வரலாறு !

கேரளத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி மேற்கு நோக்கி கடலில் கலந்த பெரியாறு, முல்லை நதிகளுக்கு இடையே அணை கட்டும் பணியை 1874-ல் தொடங்கியவர் பிரிட்டனைச் சேர்ந்த பொறியாளர் பென்னிக்குயிக்.அரசு நிதி உதவியுடன், அடர்ந்த வனப்பகுதியில் 3 ஆயிரத்து 500 அடி உயரத்தில் மேற்கொள்ளபட்ட இந்த அணை கட்டும் பணி ஆரம்பக்கட்டத்தில் தோல்வி அடைந்தது. இதனால் அரசு தனது நிதி உதவியை நிறுத்திவிட்டது. எனினும், பென்னிக்குயிக் தனது சொத்துக்களை விற்று, அணை கட்டும் பணியைத் தொடர்ந்தார்.

1886-ல் அன்றைய திருவாங்கூர் மகாராஜாவுக்கும், அப்போதைய சென்னை மாகாண அரசுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் பெரியாறு அணை கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. 1895-ல் திட்டம் முடிக்கப்பட்டது.

1886ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29-ம் நாள் ஓர் ஒப்பந்தம் கையெழுத்தாயிற்று. அது திருவாங்கூர் மன்னருக்கும் சென்னையில் இருந்த பிரிட்டிஷ் அரசுக்கும் இடையே பெரியாற்றில் ஓர் அணை கட்டவும், அதில் தேங்கும் நீரினை ஒரு குகை மூலமாகத் திருப்பி, சென்னை மாகாணத்தில் இருந்த மதுரை, ராமநாதபுரம் ஜில்லாக்களில் வறண்ட நிலங்களில் பாசனம் செய்யவும் வகை செய்தது. இந்த ஒப்பந்தம் 999 ஆண்டுகளுக்குச் செல்லுபடி ஆகும் என்றும் குறிக்கப்பட்டது.
அதன்படி 1895-ம் ஆண்டு அணை கட்டி முடிக்கப்பட்டு செயல்படத் தொடங்கியது. அறுபது ஆண்டுகள் எவ்வித சிக்கலும் இன்றி பாசனம் நடந்து வந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் இந்தியா சுதந்திரம் அடைந்தது. அங்கே கேரள அரசு உதயமானது. இங்கே தமிழ்நாடு அரசு ஏற்பட்டது.

1955-ம் ஆண்டு பெரியாறு தண்ணீர் தமிழ்நாட்டில் நுழையும் இடத்தில் மின் உற்பத்தி செய்வதற்கு ஒரு திட்டம் வகுக்கப் பெற்றது.

அதற்காக ஒரு புதிய ஒப்பந்தம் போடப்பட வேண்டும் என்று முடிவாகி 1970-ம் ஆண்டு மே மாதம் 29-ம் நாள் கேரள அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே, பழைய ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக புது ஒப்பந்தம் கையெழுத்தாயிற்று. முதல் ஒப்பந்தத்தில் அணை கட்டுவதால் நீரில் முழ்கும் 8000 ஏக்கர் நிலத்துக்கு வாடகையாக ஆண்டுதோறும் ஏக்கருக்கு 5 ரூபாய் வீதம் மொத்தம் 40,000 ரூபாய் பிரிட்டிஷ் நாணயமாக சென்னை அரசாங்கம் திருவாங்கூர் மன்னருக்குத் தர வேண்டும் என்று இருந்தது (திருவாங்கூர் சமஸ்தானத்தில் அப்போது சக்கரம் என்ற பெயரில் வேறு நாணயம் புழங்கி வந்ததால் பிரிட்டிஷ் நாணயம் என்று குறிக்கப்பட்டது).

மின் உற்பத்திக்காக போடப்பட்ட புதிய ஒப்பந்தத்தில், மூழ்கடிக்கப்பட்ட நிலம் 8000 ஏக்கருக்கு வாடகை 30 ரூபாய் என உயர்த்தப்பட்டது. அதன்படி 2,40,000 ரூபாய் ஆண்டுதோறும் கேரள அரசுக்குத் தமிழ்நாடு அரசு செலுத்தி வருகிறது.

கடந்த 27 ஆண்டுகளாக பெரியாறு அணையின் முழு நீர்மட்டம் 152 அடியிலிருந்து 136 அடியாக குறைக்கப்பட்டு விட்டதால், நீரில் மூழ்கும் நிலம் 8000 ஏக்கராக இல்லாமல் 4677 ஏக்கராகக் குறைந்துவிட்டது. இவ்வாறு வெளிப்பட்ட நிலங்களில் கேரள அரசு பலவிதமான சுற்றுலா கேளிக்கை சாதனங்களை நிறுவியுள்ளது. ஆனால் தமிழ்நாடு அரசு 8000 ஏக்கருக்கான வாடகைப் பணத்தினை தவறாமல் செலுத்தி வருகிறது.
http://tamizhanban.wordpress.com/

0 கருத்துகள்: