கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

புனிதமிக்க ரமலானே! உன் மீது எங்களின் சலாம் உண்டாவதாக!

இறை நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னிருந்தோர் மீது நோன்பு போல் உங்களின் மீதும் நோன்பு கடமை யாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் இறையச்சம் உடையவர்களாக ஆகக் கூடும்!. (திருக்குரான் 02:183 )
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
சொர்க்கத்தில் ரய்யான் என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது! மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்!. நோன்பாளிகள் எங்கே? என்று கேட்கப்படும். உடனே, அவர்கள் எழுவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் அடைக்கப்பட்டு விடும். அதன் வழியாக வேறு எவரும் நுழைய மாட்டார்கள்.
கண்ணியத்திற்கும், தோழமைக்கும் உரிய என் இனிய நண்பர்களே!. சகோதரர்களே! நாம் எதிர்பார்த்து காத்திருந்த புனிதமிக்க ரமலான் மாதம் இதோ நம்மை நோக்கி சில தினங்களில் வர இருக்கிறது. இன்ஷாஅல்லாஹ்! எல்லாப் புகளும் அல்லாஹ்விற்கே. மாதங்களில் சிறந்தமாதம், புனித மிக்க திருக்குரானை அல்லாஹ் நமக்கு இறக்கியருளிய மாதம், ஷைத்தான்களுக்கு விலங்கிடப் படுகின்ற மாதம், எல்லாவற்றிக்கும் மேலாக லைலதுல் கத்ர் எனும் சங்கைமிக்க ஓர் இரவைப் பெற்ற மாதம்.
லைலதுல் கத்ர்:
இந்த இரவைப் பற்றி அல்லாஹ் தன் திருமறையில் குறிப்பிடும் போது, உங்களில் லைலதுல் கத்ர் எனும் ஓர் இரவு உள்ளது. அது மிகப்பெரிய ஓர் இரவு. அந்த ஓர் இரவு (ஹைரும் மின் அல்பிஷ்சஹ்ர்) ஆயிரம் மாதங்களை விட சிறந்த ஓர் இரவாகும். இந்த இரவில் மலக்குமார்கள் விடியும் வரை ஒருவருக் கொருவர் சலாம் கூறிக்கொண்டிருப்பர். என்று அல்லாஹ் சொல்லிக்காட்டுகின்றான். அந்த இரவை இந்த ரமளானின் கடைசி பத்து நோன்பிற்குள் ஒற்றை படையில் வரும் தினத்தில் (அதாவது, நோன்பு 21,23,25,27 மற்றும் நோன்பு 29) அல்லாஹ் வைத்துள்ளான். இந்த ஐந்து தினங்களுக்குள் நாம் இதை தேடிக்கொள்ள வேண்டும். இந்த இரவில் நாம் செய்யும் துவாக்கள், மற்றும் நல்ல அமல்கள் இறைவனிடத்தில் நிச்சயமாக ஏற்றுக் கொள்ளப்படும்.
லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வனங்குகிறவரின் முன் பாவம் மன்னிக்கப் படுகின்றது. ரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. என அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் கூறினார்கள்.
தராவிஹ் தொழுகை:
ராமலானில் இரவுத் தொழுகையை அவரவர் தனியாகத் தொழுது கொள்ளும் இந்நிலையில் மக்கள் இருக்கும் பொழுது நபி(ஸல்) அவர்கள் மரணித்தார்கள். அபூ பக்ர்(ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் உமர்(ரலி) அவர்களின் ஆட்சியின் ஆரம்பக் காலத்திலும் நிலைமை இவ்வாறே இருந்தது!. என்று இமாம் இப்னு ஷிஹாப் ஸூரி(ரலி) கூறினார்கள்
அப்துர்ரஹ்மான் இப்னு அப்தில் காரீ(ரலி) அவர்கள் கூறினார்கள்:
நான் உமர்(ரலி) அவர்களுடன் ரமலான் மாதத்தின் ஓர் இரவில் பள்ளிவாசலுக்கு சென்றேன்.அங்கே மக்கள் பிரிந்து, பல குழுக்களாக இருந்தனர். சிலர் தனித்து தொழுது கொண்டிருந்தனர். அப்போது உமர் (ரலி). இவர்கள் அனைவரையும் ஓர் இமாமின் கீழ் திரட்டினால் அது சிறப்பாக அமையுமே!. என்று கூறிவிட்டு, அந்த முடிவுக்கு உறுதியாக வந்து, மக்களை உபை இப்னு கஅபு (ரலி) அவர்களுக்குப் பின்னால் திரட்டினார்கள். பின்னர், மற்றொரு இரவில் அவர்களுடன் நான் சென்றேன். மக்களெல்லாம் தங்கள் இமாமைப் பின் பற்றித் தொழுது கொண்டிருந்தனர். அப்போது உமர்(ரலி). இந்தப் புதிய ஏற்பாடு நன்றாக இருக்கிறது. இப்போது (இரவின் முற்பகுதியில்) நின்று வணங்குவதை விட, உறங்கிவிட்டுப் பின்னர் (இரவின் பிற் பகுதியில்) வணங்குவது சிறந்ததாகும்!. என்று கூறினார்கள். மக்கள் இரவின் முற் பகுதியில் தொழுது வந்தனர். இரவின் கடைசி நேரத்தில் தொழுவதைக் குறித்தே இவ்வாறு உமர்(ரலி) கூறினார்கள்.
ஆயிஷா(ரலி) அவர்கள் கூறினார்கள்:
நபி(ஸல்) அவர்கள் நள்ளிரவில் பள்ளிக்குச் சென்று தொழுதார்கள். அவர்களைப் பின்பற்றி மக்களும் தொழுதார்கள். விடிந்ததும் மக்கள் இதுபற்றிப் பேசிக் கொண்டார்கள். (மறுநாள்) முதல் நாளை விட அதிகமான மக்கள் திரண்டு நபி(ஸல்) அவர்கள் பின்னால் நின்று தொழுதார்கள். விடிந்ததும் மக்கள் இதுபற்றிப் பேசிக் கொண்டார்கள். மூன்றாம் இரவிலும் பள்ளிவாசலுக்கு நிறையப் பேர் வந்தனர். நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலுக்கு வந்து தொழுதார்கள். அவர்களைப் பின்பற்றி மக்களும் தொழுதனர். நான்கால் இரவில், பள்ளிவாசல் கொள்ளாத அளவுக்கு மக்கள் திரண்டனர். ஆனால் நபி(ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுகைக்குதான் வந்தார்கள். சுப்ஹுத் தொழுகையை முடித்ததும் மக்களை நோக்கி, நான் இறைவனை போற்றிப் புகழ்ந்து கூறுகின்றேன். நீங்கள் வந்திருந்தது எனக்கு தெரியாமல் இல்லை எனினும், இது உங்களின் மீது கடமையாக்கப்பட்டு, அதை நிறைவேற்ற இயலாமல் போய்விடும் என்று நான் அஞ்சினேன்!. எனக் கூறினார்கள். நிலைமை இப்படியே இருக்க, (ரமலானின் இரவுத் தொழுகையை மக்கள் தனித் தனியாகவே தொழுது கொண்டிருக்க) நபி(ஸல்) அவர்கள் மரணித்தார்கள்!. என்று அறிவிப்பாளர் இமாம் ஸூஹ்ரி(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
அபூ ஸலாமா இப்னு அப்திர் ரஹ்மான்(ரலி) கூறினார்கள்:
நபி(ஸல்) அவர்களின் தொழுகை ரமலானில் எவ்வாறு இருந்தது? என்று ஆயிஷா(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர், ராமளானிலும் ரமலான் அல்லாத மாதங்களிலும் பதினொரு ரக்அத்களை விட அதிகமாக நபி(ஸல்) அவர்கள் தொழமாட்டார்கள். நான்கு ரக்அத்கள் தொழுதார்கள். அதன் நீளத்தையும் பற்றிக் கோட்காதே! பின்னர் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் நீளத்தையும் அழகையும் பற்றிக் கோட்காதே! பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள் என்று கூறினார்கள்.
வீண் பேச்சுக்கள்:
மேலும் நோன்புடைய காலகட்டங்களில் நாம் மிகவும் ஒழுக்கமுடையவராகவும், வீண் பேச்சுக்களை தவிர்ப்பவராகவும் இருத்தல் மிகவும் அவசியம். உங்ககளிடத்தில் யாரேனும் வீண் வம்பிற்கோ, சண்டை சச்சரவிற்கோ வருவார்களேயானால் நீங்கள் அவர்களிடத்தில் நான் நோன்பாளியாக இருக்கின்றேன் என்று கூறிவிட்டு அவரிடத்தில் இருந்து விலகவேண்டும் என் நபி(ஸல்) அவர்கள் கூறியதையும் இங்கு நான் உங்களுக்கு நினைவுபடுத்துகின்றேன்.
எவரேனும் ஒரு நன்மையான காரியத்திற்கு சிபாரிசு செய்தால் அதில் ஒரு பாகம் அவருக்கு உண்டு. (அவ்வாறே) எவரேனும் ஒரு தீய காரியத்திற்கு சிபாரிசு செய்தால், அதிலிருந்து அவருக்கும் ஒரு பாகமுண்டு. அல்லாஹ் எல்லா பொருட்களையும் கண்கானிப்பவனாக இருக்கின்றான். (அல்குரான் 4:85)
பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடாதவர் தம் உணவையும் பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்விற்கு எந்தத் தேவையுமில்லை! என அபூஹுரைரா(ரலி) அவர்கள் கூறினார்கள்.
நோன்பு (பாவங்களிருந்து காக்கின்ற) கேடயமாகும். எனவே, நோன்பாளி கெட்ட பேச்சுக்களைப் பேசவேண்டாம்! முட்டாள் தனமான செயல்களில் ஈடுபட வேண்டாம்! யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் நாம் நோன்பாளி என்று இருமுறை கூறட்டும்! என உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அ(ந்த இறை)வன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை ,அல்லாஹ் விடம் கஸ்தூரியின் வாடையை விடச் சிறந்த தாகும்! (மேலும்) எனக்காக நோன்பாளி தம் உணவையும், பானத்தையும், இச்சையையும் விட்டு விடுகிறார்! நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது. அதற்கு நானே கூளிகொடுப்பேன்! ஒரு நன்மை என்பது அது போன்ற பத்து மடங்காகும்! (என்று அல்லாஹ் கூறினான்) என அபூஹுரைரா(ரலி) அவர்கள் கூறினார்கள்.
அதிகாலை உணவு:
நோன்புடைய காலத்தில் சிலபேர்கள் ஷஹ்ரு எனும் அதிகாலை உணவை அறவே தவிர்த்துவிட்டு நோன்பை தொடங்குகின்றனர். இவர்கள் இரவிலோ அல்லது நடு இரவிலோ உணவை உண்டுவிட்டு சுப்ஹு தொழுகையை கூட நிறைவேற்றாத வர்களாக உறங்கி விடுவதையும் நாம் காண்கின்றோம். இதுவும் நபி அவர்களால் கண்டிக்கப் பட்டதாக இருக்கின்றது. என் உம்மத்தின் நோன்பிற்கும் மாற்று கொள்கையை கொண்டவர்களின் நோன்பிற்கும் இடையே உள்ள வேறுபாடே இந்த சஹர் எனும் அதிகாலை உணவே ஆகும் எனக் கூறியுள்ளனர். எனவே இந்த விசயத்திலும் நாம் மிகவும் கண்டிப்புடன் இருக்கவேண்டும். நபியவர்கள் ஷஹரை பிற்படுத்திக் கொள்ளுங்கள் நோன்பு திறப்பதை முற்படுதி கொள்ளுங்கள் எனக்கூறியுள்ளார்கள். நீங்கள் சஹர் செய்யுங்கள் நிச்சயமாக சஹர் செய்வதில் பரக்கத் இருக்கிறது! இதை அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்கள் கூறினார்கள்.
இன்னும் பஜ்ரு (அதிகாலை) நேரம் என்ற வெள்ளை நூல் (இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள் பருகுங்கள் பின்னர், இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள்!.(திருக்குரான் 02:187)
ஒழுக்கப்பயிற்சி:
மேலும் நோன்பு என்பது வெறும் பசித்திருக்கமட்டும் இருக்க வேண்டிய கடமை அல்ல. அது ஒரு வணக்க வழிபாடாகும். ஏனெனில் அல்லாஹ் தன் அடியார்களை நோக்கி எவர் ஒருவர் கடமையான நோன்பிருந்து, அதற்கு உண்டான பேனுதலுடன் நடக்க வில்லையோ அவர்கள் பசித்திருந்து தாகித்து இருந்ததை தவிர வேறு ஒன்றையும் இந்த ராமலானை கொண்டு அடையமாட்டார் என கூறுகின்றான். இந்த ராமலானானது ஒரு ஒழுக்கப் பயிற்சியை அல்லாஹ் தான் அடியார்களுக்கு கற்றுக்கொடுக்க ஏற்படுத்திய மாதம். இந்த ஒரு மாதத்தில் நாம் மேற்கொள்ளும் கடுமையான பசி பயிற்சி, வீன் பேச்சுக்களை தவிர்த்தல், நல்ல அமல்களை அதிகப்படுத்துதல் போன்றவைகள் மீதமுள்ள பதினோரு மாதங்களில் நல்ல மனிதராக மாற்றவேண்டும். நோன்பின் பலனாக அதற்கான கூலியாக அல்லாஹ்வே நேரடியாக நமக்கு கூலியைத் தருவதாக வாக்களித்துள்ளான்.
இந்தப் பயிற்சியானது எப்படியான ஒரு இறையச்சதை ஏற்படுத்துகின்றது என்றால், நாம் பசித்திருக்கின்றோம் நம் ஒருவரைத்தவிர வேறு யாரும் நம்முடன் இல்லை. நாம் மட்டுமே தனித்தவராக ஒரு அறையில் இருக்கின்றோம் என்ற நிலையில் கூட, நம்மை சுற்றி தண்ணீரும் நல்ல உணவும் இருந்தும் கூட நம்மை வேறு யாரும் கவனிக்காத நிலையிலும் கூட, நாம் நோன்பு திறக்கும் நேரம் அடையும்வரை அந்த உணவை அருந்து வதில்லை. ஏனெனில் நம்மைப் படைத்த அல்லாஹ் நம்மைப் பார்த்து கொண்டிருகின்றான் என்ற உள்ளச்சமே தவிர வேறொன்றும் இல்லை. இந்த உள்ளச்சம் தான் மீதம் உள்ள மாதங்களிலும் நம்மிடையே நிலவவேண்டும். அதுதான் சிறந்த உள்ளச்சமாகும். இந்தப் பயிற்சியைதான் நாம் ரமலானில் பெறவேண்டும்.
உறுதிமொழி: 
நோன்பு காலங்களில் வழக்கத்தை விட பள்ளி வாசல்களில் கூட்டம் அலைமோதும். தொழுகைக்கு கூட இடம் கிடைக்காது. நோன்பு திறக்கவும் கூட்டம் அலைமோதும். நோன்பு முடிந்ததும் இவர்கள் எங்கேதான் செல்கின்றார்கள் என்று தெரியாது. எனவே நோன்பில் மட்டும்தான் அல்லாஹ் வாரி வாரி வழங்கு கின்றான். நம் கோரிக்கைகளை நிறைவேற்று கின்றான். மற்ற நேரங்களில் அவனுக்கும் நமக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்ற ஒரு நிலையை இன்ஷாஅல்லாஹ் இந்த நோன்பிலிருந்து மாற்ற வேண்டும். யாராவது நோன்பிற்குப் பிறகும் பள்ளியுடனான தொடர்பில் இல்லையோ அவர்களை தொடர்ந்து பள்ளியின் பக்கம் அழைத்துவர நாம் ஓர் உறுதிமொழி எடுக்கவேண்டும்.
நோன்புகாலங்களில் அதிகமாக குரானை ஒதிவாருங்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கும் எனக்கும் நேர்வழியை காட்டுவானாக. ஆமீன்.

0 கருத்துகள்: