புதுடெல்லி:புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற புனித பயணம் மேற்கொள்ளும் முஸ்லிம்களுக்கு 5 வருடங்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் மானியத்தை ஆயுளில் ஒருமுறையாக நிர்ணயித்துள்ளதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ஹஜ் புனித பயணம் குறித்து உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி எழுப்பிய சில கேள்விகளுக்கு பதில் அளித்து மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பிரமாணப்பத்திரத்தில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹஜ் தொடர்பாக மத்திய அரசு மேற்கொள்ளும் முக்கிய மாற்றங்களில் இது முதலாவது மாற்றமாகும். ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை மானியம் என்பதை ஆயுளில் ஒருமுறை அளித்தால் போதும் என்று மத்திய அரசு முடிவுச் செய்துள்ளது.
இதுவரை ஹஜ் கடமையை நிறைவேற்ற இயலாதவர்களுக்கு ஹஜ்ஜிற்கு செல்லும் வாய்ப்பை உறுதிச்செய்ய இத்தீர்மானம் உதவும் என்று மத்திய அரசு பிரமாணப்பத்திரத்தில் கூறியுள்ளது. அதேவேளையில் 2012-ஆம் ஆண்டு அரசு ஹஜ் கமிட்டி வழியாக செல்லும் புனித பயணிகளுக்கு எவ்வளவு தொகை மானியமாக வழங்கப்படும் என்பதை தற்பொழுது கூறவியலாது என்றும், ஹஜ் கடமையை நிறைவேற்றிவிட்டு அவர்கள் இந்தியா திரும்பிய பிறகே இதுக்குறித்து விளக்கமாக கூற இயலும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.
70 வயதுக்கு அதிகமானவர்களுக்கும், 3 தடவை விண்ணப்பம் அளித்து ஹஜ்ஜிற்கு செல்ல வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கும் மத்திய அரசு அளிக்கும் ஹஜ் மானியத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று பிரமாணப்பத்திரத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், மத்திய அரசு அளிக்கும் மானியம் தொடர்பாகவும், மாநில ஹஜ் கமிட்டிகளுக்கு எந்த அளவுகோலின் படி ஹஜ் சீட்கள் ஒதுக்கீடு செய்யப்படுவது தொடர்பாகவும் தகவல்களை அளிக்க மத்திய அரசுக்கு கட்டளையிட்டது.
source:http://www.thoothuonline.com/
0 கருத்துகள்:
கருத்துரையிடுக