கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

தற்பெருமையும், ஆணவமும் கொண்ட ஒவ்வொருவரும் நரகவாதியே !

                                 ஏகஇறைவனின் திருப்பெயரால்....

                  وَلَا تُصَعِّرْ خَدَّكَ لِلنَّاسِ وَلَا تَمْشِ فِي الْأَرْضِ مَرَحًا إِنَّ اللَّهَ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُورٍ }
                    وَاقْصِدْ فِي مَشْيِكَ وَاغْضُضْ مِن صَوْتِكَ إِنَّ أَنكَرَ الْأَصْوَاتِ لَصَوْتُ الْحَمِيرِ

மனிதர்களை விட்டும் உனது முகத்தைத் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் கர்வமாக நடக்காதே! கர்வம் கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்.திருக்குர்ஆன்.31:18.

''நீ நடக்கும் போது நடுத்தரத்தைக் கடைப் பிடி! உனது குரலைத் தாழ்த்திக் கொள்! குரல்களில் வெறுக்கத்தக்கது கழுதையின் குரலாகும்'' (என்றும் அறிவுரை கூறினார்).திருக்குர்ஆன்.31:19.


தற்பெருமையும், ஆணவமும் கொன்ட ஒவ்வொருவரும் நரகவாதியே !

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
தன்னைப் போன்று எவரும் உண்டா ? என்ற மமதை சிலருக்கு வரும். அது வந்து விட்டாலே உலக வாழ்க்கையை ஆடம்பரமாகவும், சொகுசாகவும் வைத்துக் கொள்ளத் தூண்டும், சொகுசும் ஆடம்பரமும் வந்து விட்டால் தனக்கு கீழுள்ளோர் மீது ஆதிக்கம் செலுத்தத் தூண்டும், தன்னை மதிக்காதவர் மீது வெறுப்பைத் தூண்டும், தன்னை சமமாக கருதுபவரை புறக்கனிக்கத் தூண்டும்.
அவ்வாறான சிந்தனை யாருக்கெல்லாம் வரும் ?

பாட்டன், முப்பாட்டன் சேர்த்து வைத்த மிதமிஞ்சியப் பொருளாதாராத்தின் வாரிசுகள்.


உயர்ந்த அரசப் பதவியை வகிப்பவரகள்.


குறுகிய காலத்தில் முறையற்ற வழியில் மலை போல் பொருளீட்டியவர்கள்.

மேற்காணும் வர்க்கத்தினரிடம் ஏற்கனவே இருக்கின்ற செல்வத்துடன் தொடர்ந்து கொட்டுகின்ற செல்வத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்றுத் தெரியாமல் விழிப் பிதுங்குவதே அவர்களை பெரும்பாலும் தடம் புரளச் செய்து விடுகின்றது.

அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் மொத்தம் இரண்டு அல்லது மூன்று பேர் இருப்பர் ஆனால் அவர்களின் வீட்டு வாசலில் டூ வீலரிலிருந்து ஃபோர் வீலர் வரை பஸ்ஸைத் தவிர அனைத்து வாகனமும் அணி வகுத்து நிற்கும் அவைகளும் ஆறு மாதத்திற்கு ஒரு முறை லேட்டஸ்ட் மாடலில் மாறிக் கொண்டே இருக்கும்.

நடுத்தர வர்க்கத்தினர் சாதாரண ஒரு டூ வீலரை வைத்துக் கொண்டு இவர்களின் வித விதமான வாகனங்களுக்கு மத்தியில் வாழ்க்கையை நகர்த்துவதற்குள் போதும் போதும் என்றாகி விடும்.


இன்னும் அவர்கள் நடத்தும் ஆடம்பர விருந்துகள், களியாட்டங்கள், கலேபரங்கள் அனைத்தையும் நடுத்தர வர்க்கத்தினர் முகம் சுளிக்காமல் சகித்துக் கொள்ள வேண்டும். அவர்களின் பகட்டையம், படாடோபத்தையும் எதிர்த்து கேள்விகள் கேட்டால் அதற்கு அவர்கள் பதிலளிக்காமல் தங்களின் எடுபிடிகளை விட்டு பதிலளிக்க விடுவார்கள்,
பல இடங்களில் அளிக்கப்பட்டும் இருக்கிறது எதிர்த்தப் பின்னர் எப்பொழுது எங்கு என்ன நடக்கும் என்றேத் தெரியாது அதற்காக எப்பொழுதும் கழுத்தைத் தயராகவே வைத்துக்கொள்ள வேண்டும்.

அதனால் பணத் திமிர் பிடித்துத் திரியும் படா டோபப் பேர்வழிகளின் வரம்பு மீறல்கள் எதையும் கண்டு கொள்ளாமல் வெந்ததை உண்டு விட்டு விதி வந்தால் சாக வேண்டியது தான் எனும் சங்கட நிலை நடுத்தரவர்க்கத்தினருக்கு ஏற்படுகிறது.

புது பணக்காரர்களின் அல்டாப்.
இதில் பூர்வீக பணக்காரர்களை விட புது பணக்காரர்களின் அல்டாப் அறவேத் தாங்க இயலாது புதிதாக பணத்தைக் கண்டவர்கள் தங்களிடம் வசதி வந்துவிட்டதைப் பிறருக்குக் காட்டுவதற்காக அவர்கள் அமைத்துக் கொள்ளும் நடை, உடை பாவனை பூமியேப் பிளந்து விடுமோ எனும் அளவுக்கு இருக்கும்.

இவர்களில் சிலர் பைசாவைப் பார்ப்பதற்கு முன் சமமாகப் பழகியவர்களை எங்காவது பார்க்க நேரிட்டால் பல வேளைகளில் சிரிக்கவும் கூட மாட்டார்கள், எதையாவதுக் கேட்டு விடுவாரோ அல்லது பழைய ஞாபகத்தில் நெருங்கி வந்து உட்கார்ந்து பிளேடைப் போட்டு விடுவாரோ என்றெண்ணி பார்க்காதது போல் பாவனை செய்வார்கள் அல்லது சடேரென முகத்தையும் கூட திருப்பி விடுவார்கள் அதையும் மீறி நேருக்கு நேர் சந்திக்க நேரிட்டால் உங்களை எங்கேயோ பார்த்த ஞாபகமாக இருக்கிறதே என்று வேண்டுமென்றேக் கூறிப் புறக்கனிப்பார்கள்.

பணமும் பதவியும் வரும் பொழுது பலருக்கு பகட்டும் பந்தாவும் கூடவே வந்து பழைய வாழ்க்கையை மறக்கடிக்கச் செய்வதற்கு எது காரணம் ?

அவைகள் வராமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் ?

நபித்தோழரின் வாழ்க்கையில் ஓர் நாள்

அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப்(ரலி)அவர்கள் மிகப்பெரும் செல்வந்தரும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களால் சொர்க்கத்திற்கு நன்மாராயம் கூறப்பட்ட 10 பேரில் ஒருவருமாவார் அவரின் வணிகக் கூட்டம் நகருக்குள் வரும் பொழுது நகரேக் குலுங்கும் அப்படிப்பட்ட செல்வந்தர் பல வேளைகளில் தங்களுடைய தோழர் முஸ்அப் பின் உமைர்(ரலி) அவர்கள் அடக்கம் செய்யப்பட்டப் பொழுது போதாத கஃபன் துணியை காலுக்கும் தலைக்கும் இழுத்து கடைசியில் இலைகளை கூடுதலாக வைத்து அடக்கம் செய்த வறுமை நிலையை நினைத்து அழுவார்களாம். உயர் தர உணவு வகைகள் அவருக்கு முன் வைக்கப்பட்டால் கடந்த காலத்தில் இஸ்லாமிய வளர்ச்சிக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டு உணவுக்குக் கூட வழியில்லாமல் வாடிய நபித் தோழர்களை நினைத்து அழுவார்களாம்.

நபித்தோழர் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களை அவர்களிடம் குவிந்து கிடந்த செல்வம் தடம் புரளச் செய்யாததற்கு எது காரணம்? தான் கஸ்டப்படும்பொழுது தன்னுடன் நெருங்கிப் பழகிய தோழர்களின் நட்பை மறக்கடிக்கச் செய்யாததற்கு எது காரணம் ?

இறையச்சத்தைத் தவிற வேறெதுவும் இல்லை!

இறையச்சம் என்ற கடிவாளம் பூட்டப்பட்டால் மட்டுமே வாழ்க்கை பயணத்தில் ஆடம்பரம், ஆணவம் என்ற பள்ளத்தில் சறுக்கி விழ விடாமல் இழுத்துப் பிடித்து நிருத்தும்.

செல்வங்களை வாரிசுகளுக்காக சேர்ப்பது, பாட்டன் முப்பாட்டனுடைய செல்வத்துக்கு வாரிசாக இருப்பது, அவற்றை அனுபவிப்பது யார் மீதும் குற்றமாகாது. அதற்கு இஸ்லாத்தில் தடையும் இல்லை, மாறாக தாராள அனுமதி உண்டு ஆனால் அதை இஸ்லாம் அனுமதித்த வழியில் அனுபவிக்க வேண்டும் அதை விட்டுச் செல்வதற்கு முன் அதை அனுபவிக்கும் வாரிசுகளுக்கு தான் எவ்வழியில் பொருளீட்டினோமோ அவ்வழியில் பொருளீட்டவும், தான் எவ்வாறு அதை அனுபவித்தோமோ அதேப் போன்று அனுபவிக்கவும் வஸியத் செய்வதுடன் இறையச்சத்தையும், ஒழுக்கத்தையும் சேர்க்க மறக்கக் கூடாது.

இறையச்சம் எவரிடத்தில் இல்லையோ அவரே முறையற்ற வழிகளில் பொருளாதாரத்தை ஈட்டி அவற்றை முறையற்ற வழிகளிலும் செலவிடுகின்றார். அதனால் மேற்காணும் தீயபண்புகள் குடிகொண்டு விடுகின்றது.

இறையச்சம் எவரிடத்தில் இருக்குமோ அவர் முறையான வழிகளில் பொருளீட்டுவதுடன், பாட்டன், முப்பாட்டன் விட்டுச் சென்ற செல்வத்தையும் முறையாக பராமரிப்பார் செல்வத்திற்கு மேல் செல்வம் குவிந்தாலும் மேற்காணும் பகட்டும், பந்தாவும் வரவே வராது !

அழகிய உபதேசம்.
லுக்மான் (அலை) அவர்கள் தங்கள் மகனுக்கு செய்த உபதேசம் உலகம் முடியும் காலம் வரை உலக மக்கள் அனைவரும் பின்பற்றியொழுகக் கூடிய சிறப்பான உபதேசமாகும்.

அல்லாஹ்வை மட்டும் வணங்கு, அல்லாஹ்வுக்கு இணைவைக்காதே, சகமனிதர்களைப் பார்த்து முகத்தை திருப்பாதே, பெருமை அடிக்காதே, கர்வம் கொள்ளாதே, சப்தத்தை உயர்த்தாதே, நடையில் நடுநிலையை பேணு.
இதில் எந்த ஒன்று எவரிடத்தில் இல்லையோ அவர்களை அல்லாஹ் நேசிக்க மாட்டான், மாறாக வெறுப்பான் என்று முத்தாய்ப்பான உபதேசங்களைக் கூறினார்கள்.

மனிதர்களை விட்டும் உனது முகத்தைத் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் கர்வமாக நடக்காதே! கர்வம் கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்.திருக்குர்ஆன். 31:18


''நீ நடக்கும் போது நடுத்தரத்தைக் கடைப் பிடி! உனது குரலைத் தாழ்த்திக் கொள்! குரல்களில் வெறுக்கத்தக்கது கழுதையின் குரலாகும்'' (என்றும் அறிவுரை கூறினார்). திருக்குர்ஆன். 31:19

மனிதர்களில் சிலர் இப்படியும் பிற்காலத்தில் தோன்றுவார்கள் என்பதை நன்கறிந்த இறைவன் தன் தூதர் லுக்மான் (அலை) அவர்கள் மூலமாக அவர்களின் மகனுக்கு மேற்காணும் அறிவுரைகளை கூறச் செய்து அதை முஹம்மது(ஸல்) அவர்களுக்கு இறக்கி அருளிய இறுதி வேதம் திருமறைக்குர்ஆனிலும் இடம் பெறச் செய்தான்.

நரகவாசிகள்

இந்த பிரபஞ்சத்தை படைத்து அதில் உயிரினங்களை தோற்றுவித்து அவைகள் உண்டு புசித்து களைப்பாறுவதற்கு ஏற்றாற்போல் இந்த பூமியை வடிவமைத்துக் கொடுத்த சர்வ வல்லமை பொறுந்திய இறைவன் ஒருவன் மட்டுமே பெருமைக்குரியவன்; அவனல்லாது வேறு யாருக்கும் பெருமை வரக் கூடாது என்பதற்காக பெருமை, வல்லமை இரண்டும் எனக்குரியது அதில் யாரும் போட்டி இடக் கூடாது என்று இறைவன் கூறுவதாகவும் மீறினால் அதற்கு தண்டனை நரகத்தைத் தவிற வேறில்லை என்று இறைவனின் இறுதித்தூதர்(ஸல்)அவர்கள் நமக்கு எச்சரிக்கை செய்து விட்டார்கள்.

கண்ணியம் அ(ந்த இறை)வனுடைய கீழாடையாகும். பெருமை அவனுடைய மேலாடையாகும். (அல்லாஹ் கூறினான்:) ஆகவே (அவற்றில்) யார் என்னோடு போட்டியிடுகிறானோ அவனை நான் வதைத்து விடுவேன். என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூசயீத் அல்குத்ரீ (ரலி)இ அபூஹுரைரா (ரலி) ஆகியோர் அறிவிக்கிறார்கள். முஸ்லிம். 5114

நரகவாதிகளை உங்களுக்கு அறிவிக்கட்டுமா? தற்பெருமையும், ஆணவமும் கொண்ட ஒவ்வொருவரும் தான். என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக ஹாரிஸா இப்னு வஹப்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நானே உயர்ந்தவன் என்று இறைவனிடம் இப்லீஸ் தர்க்கம் செய்தக் காரணத்தால் தான் அவன் மீது இறைவன் கடும் கோபம் கொண்டு சிறுமை அடைந்தவனாக இங்கிருந்து வெளியேறு என்றுக் கூறி விரட்டினான்.

''இங்கிருந்து நீ இறங்கி விடு! இங்கே நீ பெருமையடிப்பது தகாது. எனவே வெளியேறு! நீ சிறுமையடைந்தவனாவாய்'' என்று (இறைவன்) கூறினான்.திருக்குர்ஆன். 7:13

சொர்க்கவாசிகள்.

இறைவனுக்கு மட்டும் உரிய பெருமை யாரிடம் இல்லையோ யார் அதை முற்றிலுமாக தடை செய்து கொள்கின்றாரோ அவருக்கு கீழ்காணும் இன்பம் மிகுந்த சுவனம் வேறெந்த செயலாலும் தடைப்படாது என்று இறைவனின் இறுதித்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

'இரண்டு சொர்க்கங்கள் உண்டு. அவற்றின் பாத்திரங்களும் இதரப் பொருட்களும் வெள்ளியால் ஆனவை (வேறு) இரண்டு சொர்க்கங்களும் உள்ளன. அவற்றின் பாத்திரங்களும் இதரப் பொருட்களும் பொன்னால் ஆனவையாகும். 'அத்ன்' எனும் சொர்க்கத்தில் இருப்பவர்கள் தங்கள் இறைவனைக் காண்பதற்கு, அவன் மேலுள்ள 'பெருமை' எனும் மேலாடை தவிர வேறெந்தத் தடையும் இராது. என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' புகாரி 7444.

பூமியில் ஆணவத்தையும், குழப்பத்தையும் விரும்பாதவர்களுக்காக அந்த மறுமை வாழ்வை ஏற்படுத்தியுள்ளோம். நல்ல முடிவு (இறைவனை) அஞ்சுவோர்க்கே. திருக்குர்ஆன் 28: 83.
அன்புள்ள சகோதரர்களே ! யாருக்காவது தான் ஒருப் பெரிய ஆள் என்றப் பெருமை இருந்தால் இந்தப் புனித ரமலான் மாதத்தில் தவ்பா செய்து விடுங்கள், பதவி வந்தப் பிறகு அதிகாரத்தைப் பயன்படுத்தி தனக்கு கட்டுப்படாத, கீழ்படியாத யாரையாவது அதிகார துஷ்பிரயோகம் செய்திருந்தால் இந்தப் புனித ரமலான் மாதத்தில் தவ்பா செய்துவிட்டு சம்மந்தப்பட்டவரை சந்தித்து வருத்தத்தை தெரிவித்துக் கொள்ளுங்கள், பணமும் புகழும் வந்தப் பின்னர் பழைய தோழர்களை புறக்கனித்திருந்தால் இந்தப் புனித ரமலான் மாதத்தில் அவர்களை சந்தித்து முகமன் கூறி இணைந்து விடுங்கள், தன்னிடம் குவிந்துள்ள பொருளாதாரத்தால் ஆடம்பர வாழ்க்கையை அமைத்துக்கொண்டு ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினருக்கு மன உலைச்சலைக் கொடுத்திருந்தால் இந்தப் புனித ரமளான் மாதத்தில் தவ்பா செய்து விட்டு பெரும் செல்வந்தர் அப்துல்ரஹ்மான் இப்னு அவஃப்(ரலி) அவர்களின் எளிய வாழ்க்கையை நிணைவு கூர்ந்து திருந்திக் கொள்ளுங்கள்.

எழுதியதுப் போன்று என்னையும், வாசித்ததுப் போன்று உங்களையும் அமல் செய்யும் நன் மக்களாக வல்ல அல்லாஹ் ஆக்கி அருள் புரிவானாக !

அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்! பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், நெருங்கிய அண்டை வீட்டாருக்கும், தூரமான அண்டை வீட்டாருக்கும், பயணத் தோழருக்கும், நாடோடிகளுக்கும், உங்கள் அடிமைகளுக்கும் நன்மை செய்யுங்கள்! பெருமையடித்து, கர்வம் கொள்ளும் எவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான். திருக்குர்ஆன் 4:36.

وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ


நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன் 3:104

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அழைப்புப் பணியில் அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்.

0 கருத்துகள்: