கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

இஸ்லாத்தில் சொத்தை எப்படி பிரிப்பது? பெண்களுக்கும் சொத்து உண்டா?

 இஸ்லாத்தில் சொத்தை எப்படி பிரிப்பது? பெண்களுக்கும் சொத்து உண்டா?
ஏக இறைவனின் திருப்பெயரால்…..
சொத்துக்களை பங்கிடுவது பற்றி திருக்குர்ஆன் யாரும் புரிந்து கொள்ளும் வகையில் அழகாக சொல்­யிருக்கிறது. திருக்குர்ஆன் அத்தியாயம் 4 : 11/ 12
”இரண்டு பெண்களின் பாகம் போன்றது ஓர் ஆணுக்கு உண்டு” என்று உங்கள் பிள்ளைகள் விஷயத்தில் அல்லாஹ் வ­யுறுத்துகிறான்.
அனைவரும் பெண்களாகவும் (இரண்டு அல்லது) இரண்டுக்கு மேற்பட்டும் இருந்தால் (பெற்றோர்) விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பங்கு அவர்களுக்கு உண்டு.
ஒரே ஒரு பெண் மட்டும் இருந்தால் அவளுக்கு (மொத்தச் சொத்தில்) பாதி உள்ளது.
அவருக்குச் சந்ததி இருந்தால் அவர் விட்டுச் சென்றதில் பெற்றோர் ஒவ்வொரு வருக்கும் ஆறில் ஒரு பாகம் உண்டு.
அவருக்குச் சந்ததி இல்லாவிட்டால் அவர் விட்டுச் சென்றதற்குப் பெற்றோர் இருவரும் வாரிசாவார்கள். அவரது தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் உண்டு.
அவருக்குச் சகோதரர்கள் இருந்தால் அவரது தாய்க்கு ஆறில் ஒரு பாகம் உண்டு. (இவை யாவும்) அவர் செய்த மரண சாசனத்தையும் கடனையும் நிறைவேற்றிய பின்னரே.
உங்கள் பெற்றோர் மற்றும் பிள்ளைகளில் உங்களுக்கு அதிகமாகப் பயன் தருபவர் யார் என்பதை அறிய மாட்டீர்கள். (இது) அல்லாஹ் விதித்த கடமை. அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.
உங்கள் மனைவியருக்குக் குழந்தை இல்லா விட்டால் அவர்கள் விட்டுச் சென்றதில் பாதி உங்களுக்கு உண்டு.
அவர்களுக்குக் குழந்தை இருந்தால் அவர் கள் விட்டுச் சென்றதில் கால் பாகம் உங்களுக்கு உண்டு.
அவர்கள் செய்த மரண சாசனம், கடன் ஆகியவற்றை நிறைவேற்றிய பிறகே (பாகம் பிரிக்க வேண்டும்).
உங்களுக்குக் குழந்தை இல்லா விட்டால் நீங்கள் விட்டுச் சென்றதில் கால் பாகம் உங்கள் மனைவியருக்கு உண்டு.
உங்களுக்குக் குழந்தை இருந்தால் நீங்கள் விட்டுச் சென்றதில் எட்டில் ஒரு பாகம் அவர்களுக்கு உண்டு. நீங்கள் செய்த மரண சாசனம், கடன் ஆகியவற்றை நிறைவேற்றிய பின்பே (பாகம் பிரிக்கப்பட வேண்டும்).
இறந்த ஆணோ, பெண்ணோ பிள்ளை இல்லாதவராக இருந்து அவர்களுக்கு ஒரு சகோதரனோ, ஒரு சகோதரியோ இருந்தால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உள்ளது.
அதை விட அதிகமாக இருந்தால் மூன்றில் ஒரு பங்கில் அவர்கள் அனைவரும் கூட்டாளிகள்.
செய்யப்பட்ட மரண சாசனம், மற்றும் கடனுக்குப் பிறகே (பாகம் பிரிக்கப்பட வேண்டும்.) (இவை அனைத்தும் யாருக்கும்) பாதிப்பு ஏற்படாத வகையில் (செய்யப்பட வேண்டும்.)
இது அல்லாஹ்வின் கட்டளை. அல்லாஹ் அறிந்தவன்; சகிப்புத் தன்மை மிக்கவன்.
இந்த வசனத்திலே பெண்களுக்கும் கணவர் விட்டுச் சென்றதிலும் தகப்பனார் விட்டுச் சென்றதிலும் பங்கு இருப்பதை குறிப்பிடுகின்றது.
SOURCE:KADAYANALLUR AQSA

உம்ராச் செய்ய எளிய வழிகாட்டி


அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும், உம்ராவையும் முழுமைப்படுத்துங்கள்! (அல் குர்ஆன் 2 : 196)

அகிலத்தின் நேர் வழிக்குரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதாகும். அதில் தெளிவான சான்றுகளும் மகாமே இப்ராஹீமும் உள்ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார். அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. யாரேனும் (ஏக இறைவனை) மறுத்தால் அல்லாஹ் அகிலத்தாரை விட்டும் தேவையற்றவன். (அல் குர்ஆன் 3 : 96, 97)

ஹஜ், உம்ராவின் அவசியத்தையும் சிறப்புகளையும் தாங்கள் அறிந்திருப்பீர்கள். பணம் மற்றும் உடலால் நாம் செய்யும் தியாகம் அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமானால் இப்புனித வழிபாட்டை குர்ஆன் மற்றும் நபி வழி முறைப்படி நிறைவேற்ற வேண்டும்.


எனவே ஹஜ், உம்ராவின் முறைகளை எளிதாகவும் சுருக்கமாகவும் இதில் கூறியுள்ளோம். இதனைப் படித்துப் பயன்பெற வேண்டுகிறோம். அல்லாஹ் நம்
அனைத்து வணக்கங்களையும் ஏற்றுக் கொள்வானாக!

உம்ரா செய்யும் முறை
  • எல்லையிலிருந்து இஹ்ராம் அணிந்து கொள்ளவேண்டும்.
  • தவாஃப் செய்ய வேண்டும்.
  • ஸயீ செய்ய வேண்டும்.
  • மொட்டையடிக்க வேண்டும்.
  • பெண்கள் ஆண் துணை அதாவது மஹ்ரம் (மணமுடிக்கவிலக்கப்பட்டவர்கள்) இல்லாமல் ஹஜ், உம்ரா செய்வது தடுக்கப்பட்டுள்ளது.
இஹ்ராம் அணியும் முறை

இஹ்ராம் அணிவதற்கெனஎல்லைகள் உள்ளன. அந்த இடம் வந்தவுடன்குளித்து, நறுமணம் பூசி இஹ்ராம் ஆடையை அணிந்து கொள்ளவேண்டும்.

விமானத்தில் வருபவர்கள் விமானத்தில் ஏறுவதற்கு முன்பே குளித்து, நறுமணம் பூசி இஹ்ராம் ஆடையை அணிந்து கொள்ளவேண்டும். ஆண்களுக்கு இஹ்ராமுடைய ஆடை, தைக்கப்படாத இரு வெள்ளை துணிகள் ஆகும். அதில் ஒன்றை வேட்டியைப்போல் உடுத்திக்கொள்வது, மற்றொன்றை மேனியில் போர்த்திக்கொள்வது.

இஹ்ராமின்போது பெண்கள் தாம் விரும்பும் ஆடைகளை அணிந்து கொள்ளலாம். ஆனால் உடலை சரியாக மறைக்காமலோ, அழகை வெளிக்காட்டும் விதமாகவோ இருக்கக்கூடாது. மேலும் முகத்தையும், முன்னங்கைகளையும் மறைக்கக் கூடாது.

தல்பிய்யா

எல்லை வந்ததும் உம்ராச் செய்பவர், லப்பைக்க உம்ரதன் என்று நிய்யத் சொல்லி உம்ராவை துவக்கிவிட்டு தல்பிய்யாவை தொடர்ந்து கூறவேண்டும்.

லப்பைக், அல்லாஹீம்ம லப்பைக், லப்பைக் லாஷரீக லக லப்பைக், இன்னல் ஹம்த வன்னிஃமத்த லக வல் முல்க் லாஷரீக லக்.

பொருள் : உன்னுடைய அழைப்பை ஏற்று வந்தேன். அல்லாஹ்! உன்னுடைய அழைப்பை ஏற்று வந்தேன். உன்னுடைய அழைப்பை ஏற்று வந்தேன். இணை துணையற்ற உன்னுடைய அழைப்பை ஏற்று வந்தேன். நிச்சயமாக புகழனைத்தும் உனக்கே உரித்தாகும்! மேலும்அருட்கொடையும், அரசாட்சியும் உன்னுடையதே! உனக்கு எவ்வித இணை துணையில்லை.

தல்பியாவை இஹ்ராம் அணிந்ததிலிருந்து கஃபாவிற்குள் நுழையும் வரை சொல்ல வேண்டும். ஆண்கள் தல்பியாவை சத்தமாகவும், பெண்கள் மெதுவாகவும் கூறவேண்டும். இஹ்ராமின் எல்லைக்கு உட்பகுதியில் இருப்பவர்கள், தாம் வசிக்கும் இடத்திலிருந்தே இஹ்ராம் அணிந்து கொள்ள வேண்டும்.

இஹ்ராம் அணிந்துள்ளவர்கள் செய்யக்கூடாதவைகள்

  • திருமண ஒப்பந்தம் மற்றும் அது சம்பந்தமான பேச்சுக்களில் ஈடுபடுவது.
  • மனைவியுடன் கூடுவது. (உடலுறவு கொள்வது).
  • வேட்டையாடுவது.
  • உடலுக்கோ, ஆடைக்கோ நறுமணம் பூசுவது.
  • தலையில் படக்கூடிய தொப்பி, தலைப்பாகை போன்றவற்றைக் கொண்டு தலையை மறைப்பது.
  • முடி, நகம் வெட்டுவது.
  • கெட்டவார்த்தைகள், வீண் பேச்சுக்களில் ஈடுபடுவது.
  • தைக்கப்பட்ட ஆடை மற்றும் காலுறை அணிவது.
கஃபத்துல்லாவை அடைந்தவுடன்...


பிஸ்மில்லாஹி வஸ்ஸலாது வஸ்ஸலாமு அலா ரஸூலில்லாஹ் அல்லாஹீம்மஃப்தஹ் லீ அபுவாப ரஹ்மதிக

என்று கூறிய பின்பு தவாஃப் செய்ய ஆரம்பிக்க வேண்டும் ஆரம்பிக்கும் முன் தோளில் உள்ள துண்டை வலப்புற அக்குளின் கீழாக விட்டு இடப்புற தோள் மேலாக விட வேண்டும். வலதுபுற தோள் புஜம் திறந்தும், இடப்புற தோள் புஜம் மூடியும் இருக்க வேண்டும்.

தவாஃப் செய்யும் முறை


கஃபாவை ஏழு முறை சுற்றுவது ஒரு தவாஃப் ஆகும். கஃபாவில் ஹஜ்ருல் அஸ்வத் என்ற கல்லிலிருந்தோ அல்லது அதற்கு நேராக நின்றோ சுற்ற ஆரம்பித்து மீண்டும் அதனை வந்தடைவது ஒரு சுற்றாகும்.

பிஸ்மில்லாஹி அல்லாஹீ அக்பர் என்று கூறி சுற்றை ஆரம்பிக்க வேண்டும். ஒவ்வொரு சுற்று முடிந்ததும் (வாய்ப்பு இருந்தால்) ஹஜ்ருல் அஸ்வத் கல்லை முத்தமிடவேண்டும். முடியவில்லையெனில் அதனை நோக்கி வலது கையை உயர்த்தி அல்லாஹீ அக்பர் என்று கூறவேண்டும். ஹஜ்ருல் அஸ்வத்தை முத்தமிடாவிட்டால் தவாஃபில் எந்தக் குறையும் ஏற்படாது. எனவே ஹஜருல் அஸ்வதை முத்தமிடுவதற்காக போட்டிபோட்டு பிறருக்குத் துன்பம் தரலாகாது.

முதல் மூன்று சுற்றுக்களில் நடையை நெருக்கமாக வைத்து தோள்களை உலுக்கி (விரைவான நடை போன்று) செல்லவேண்டும். (முதல் மூன்று சுற்றுகள் முடிந்ததும் விரும்பினால் தோள்களை மறைத்துக் கொள்ளலாம்) ஏனைய நான்கு சுற்றுக்களை சாதாரணமாக நடந்து செல்லவேண்டும்.

தவாஃபின் போது நமக்கு தெரிந்த திக்ர், துஆ மற்றும் நம் தேவைகளை கேட்டு வரலாம். குர்ஆனை ஓதிக்கொண்டும் வரலாம். ஆனால் ருக்னுல் யமானி மற்றும் ஹஜ்ரத் அஸ்வத் ஆகிய இரண்டுக்கும் இடைப்பட்ட தூரத்தில்...

ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹஸனதன் வஃபில் ஆகிரத்தி வஹஸனதன் வகினா அதாபன்னார்

பொருள் : 'எங்கள் இறைவா! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் நன்மையை (வழங்குவாயாக!) நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக! என்ற துஆவை மட்டும் ஓத வேண்டும்.

இவ்வாறாக ஏழு சுற்றுக்களை முடித்துக்கொண்டு எட்டாவது முறையும் ஹஜ்ரத் அஸ்வத்தை முத்தமிட முடிந்தால் முத்தமிட்டுவிட்டு, முடியாவிட்டால் வத்தஃகிதூ மிம்மகாமி இப்றாஹீம முஸல்லாஹ் என்று ஓதியவாறு மகாமே இப்ராஹீமிற்கு நேர் பின்னே நின்று தொழ வேண்டும். அதாவது நமக்கும் கஃபத்துல்லாவிற்கும் இடையில் மகாமே இப்ராஹீம் இருக்குமாறு தொழ வேண்டும். இந்த முதல் ரக்அத்தில் அல்ஹம்து சூராவிற்கு பின் குல் யாஅய்யுஹல் காபிரூன் - அத்தியாயம் 109 ஐயும், இரண்டாவது ரக்அத்தில் அல்ஹம்து சூராவிற்கு பின் குல்ஹீவல்லாஹீஅஹது (இஃக்லாஸ்) அத்தியாயம் 112 ஐயும் ஓத வேண்டும்.

ஸூரத்துல் காபிரூன்


بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ

قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ ﴿١﴾ لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ ﴿٢﴾ وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ ﴿٣﴾ وَلَا أَنَا عَابِدٌ مَّا عَبَدتُّمْ ﴿٤﴾ وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ ﴿٥﴾ لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ ﴿٦﴾



ஸூரத்துல் இஃக்லாஸ்

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ
قُلْ هُوَ اللَّـهُ أَحَدٌ ﴿١﴾ اللَّـهُ الصَّمَدُ ﴿٢﴾ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ ﴿٣﴾ وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ ﴿٤﴾


இவ்வாறாக தொழுகையை முடித்துக்கொண்டு ஸம் ஸம் தண்ணீரை அருந்த வேண்டும். இதன் பின்னர் ஸயீ (தொங்கோட்டம்) செய்வதற்காக ஸஃபா வாயில் வழியாக உள்ளே பிரவேசிக்க வேண்டும்.

ஸஃபா வாயில் வழியாக பிரவேசிக்கும் போது...



இன்னஸ்ஸஃபா வல் மர்வத மின் ஷஆஇரில்லாஹ்
பொருள் : ஸஃபாவும், மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்கள். என்ற மறைவசனத்தை ஓதிவிட்டு ஸஃபாவின் மீது கொஞ்சம் உயர்ந்து கிப்லாவை முன்நோக்கி அல்லாஹ்வை ஒருமைபடுத்தி

அல்லாஹீ அக்பர் - அல்லாஹீ அக்பர் - அல்லாஹீ அக்பர்

லாயிலாஹ இல்லல்லாஹ் வஹ்தஹீ லாஷரிகலஹீ லஹீல் முல்கு வலஹீல் ஹம்து வஹீவ அலா குல்லி ஷையின் கதீர், லாயிலாஹ இல்லல்லாஹீ வஹ்தஹீ, அன்ஜ(ண)ஸ வஃதஹ், வனஸர அப்தஹ், வஹஜமல் அஹ்(ண)ஸாப வஹ்தஹ் என்ற திக்ரை ஓத வேண்டும்.

பின்பு இரு கைகளையும் உயர்த்தி இயன்ற அளவு பிரார்த்தனை செய்ய வேண்டும். இவ்வாறு மும்முறை செய்ய வேண்டும். பின்பு ஸஃபா மலையிலிருந்து இறங்கி மர்வாவை நோக்கி நடக்க வேண்டும். இடையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மேலே பச்சை நிற விளக்குகளை அடைகின்ற போது ஆண்கள் விரைந்து செல்ல வேண்டும். யாருக்கும் சிரமத்தை ஏற்படுத்த கூடாது. அடுத்த பச்சை நிற விளக்குகளை அடைந்தவுடன் விரைவை நிறுத்தி நடக்க வேண்டும். மர்வாவை அடைந்தவுடன் சற்று உயர்ந்து நின்று கஃபாவை முன்னோக்கி இரு கைகளையும் ஏந்தி லாயிலாஹ... என்ற முன்னர் ஓதிய துஆவை மும்முறை ஓதிவிட்டு ஸஃபாவை நோக்கி நடக்க வேண்டும். இடையில் பச்சை நிற விளக்கு வந்தவுடன் விரைந்து செல்ல வேண்டும். அடுத்த பச்சை நிற விளக்கு வந்தவுடன் விரைவை நிறுத்தி நடக்க வேண்டும். இவ்வாறாக ஸஃபாவில் ஆரம்பித்து மர்வாவில் முடிவது ஒரு சுற்று, மர்வாவில் ஆரம்பித்து ஸஃபாவில் முடிவது இரண்டாவது சுற்று, இவ்வாறாக ஏழாவது சுற்று மர்வாவில் முடிவடையும். ஸஃபா, மர்வா அனைத்து சுற்றுக்களிலும் நமக்கு விருப்பமான துஆக்களை கேட்கவேண்டும். திருமறை வசனங்களையும் ஓதலாம்.

ஸயீயை முடித்துக் கொண்ட பின் ஆண்கள் மொட்டையிட்டுக் கொண்டும், பெண்கள் தங்கள் தலைமுடியிலிருந்து ஒரு அங்குலம் அளவிற்கு குறைத்து கொண்டும் இஹ்ராமிலிருந்து விடுபட வேண்டும்.


(இஹ்ராமிலிருந்து விடுபட) மொட்டையிட்டுக் கொண்டவருக்கு மும்முறை பரக்கத் வேண்டி நபி (ஸல்) அவர்கள் துஆ செய்துள்ளார்கள். மொட்டையிடாமல் முடியை குறைத்து கொண்டவருக்கு ஒரு முறை மட்டுமே துஆ செய்துள்ளார்கள். எனவே ஆண்கள் மொட்டையிட்டு இஹ்ராமிலிருந்து விடுபடுவதே சிறந்ததாகும்.


இத்துடன் உங்கள் உம்ரா இனிதே நிறைவு பெறுகிறது (இன்ஷா அல்லாஹ்)
நன்றி-DUBAITNTJ

மீஸான் (தராசு)- - இப்னு தாஹிரா


இவ்வுலகத்தில் நன்மை செய்தவர்களும் தீமை செய்தவர்களும் மறுமை நாளில் அவரவர்களின் நன்மை, தீமைகளை தெளிவாகக் காண்பார்கள். இவ்வுலகில் மிக மிகச் சிறியதாக நினைத்தவை கூட அவர்களின் பதிவுப் பட்டியலில் இடம் பெற்றிருக்கும். 


அணு அளவு நன்மை செய்தவர் அதைக் காண்பார். அணு அளவு தீமை செய்தவர் அதைக் காண்பார். (அல்குர்ஆன் 99:7,8)

பதிவேடு வைக்கப்படும். அதில் உள்ளவற்றின் காரணமாக குற்றவாளிகள் அச்சமடைந்திருக்கக் காண்பீர்! இந்த ஏட்டுக்கு என்ன வந்தது? சிறியதையோ பெரியதையோ ஒன்று விடாமல் பதிவு செய்துள்ளதே! எனக் கூறுவார்கள். தாங்கள் செய்தவற்றைக் கண் முன்னே காண்பார்கள். உமது இறைவன்எவருக்கும் அநீதி இழைக்க மாட்டான். (அல்குர்ஆன் 18:49)

இந்திய ராணுவத்தில் முஸ்லிம்கள் 3 சதவீதம் உயிர் தியாகத்தில் 6 சதவீதம்

இந்தியாவின் மிகப்பெரிய சிறுபான்மை சமூகமான முஸ்லிம்கள் நாட்டின் மக்கள் தொகையில் 15 சதவீதமாவர். ஆனால், இந்தியாவின் ராணுவத்தில் அவர்களின் எண்ணிக்கையோ வெறும் 3 சதவீதம்தான்.

கடந்த 2010 ஆம் ஆண்டு 187 ஜவான்கள் தங்கள் உயிரை தேசத்திற்காக தியாகம் செய்துள்ளனர். அதில் 6.41 சதவீதம்பேர் முஸ்லிம்களாவர். அவ்வாறெனில் தங்களது சதவீதத்திற்கு அதிகமாகவே உயிர் தியாகம் புரிந்துள்ளனர் முஸ்லிம் ராணுவத்தினர். 12 முஸ்லிம்கள் தங்களது இன்னுயிரை தேசத்திற்காக தியாகம் செய்துள்ளனர். அதில் 10 பேர்கள் தரைப் படையில் பணியாற்றியவர்களாவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திரம் கிடைத்து 62 ஆண்டுகள் கழிந்த பொழுதும் ராணுவத்தில் தேர்வுச் செய்யப்படும் முஸ்லிம்களின் எண்ணிக்கை வெகு குறைவாகவே உள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த வரலாற்றாய்வாளர் டாக்டர் உமர் காலிதி அவர்கள் மிகுந்த ஆய்வுச் செய்து, ஆவணங்களின் ஆதாரத்துடன் வெளியிட்ட Khaki and Ethnic Violence(காக்கியும், இன வன்முறையும்) என்ற நூலில் இதுக்குறித்து தெளிவாக குறிப்பிட்டிருந்தார்.

ராணுவத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கையை எடுத்துரைத்தது இந்நூல். இது பாராளுமன்றத்தில் சூடான விவாதத்திற்கும் காரணமானது.

5 ஆண்டுகளுக்கு முன்பு முஸ்லிம்களின் பிற்போக்குத் தன்மையைக் குறித்து விசாரணை மேற்கொண்ட சச்சார் கமிஷன் அறிக்கை ராணுவத்திடம் முஸ்லிம்களின் எண்ணிக்கை எவ்வளவு என கேள்வி எழுப்பிய பொழுது, மத ரீதியாக எந்த எண்ணிக்கையும் தரமாட்டோம் என ராணுவம் பதிலளித்தது.

ராணுவத்தில் ஒவ்வொரு மதத்தினரின் எண்ணிக்கை எவ்வளவு? என்பதற்கு எவ்வித அதிகாரப்பூர்வமான அறிக்கையும் இல்லை. 3 சதவீதம் என்பது பொதுவான ஊகமாகும். 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களில் முஸ்லிம் வீரர்களின் எண்ணிக்கை 29 ஆயிரம் இருக்கலாம். ஆனால், இந்த எண்ணிக்கை ஜம்மு கஷ்மீர் காலட்படையில் இடம்பெற்றிருக்கும் 50 சதவீத முஸ்லிம்களை குறைத்தால் இன்னும் மிகக் குறைந்த சதவீதமாகும். இருந்த போதிலும், கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசு ராணுவத்தில் அதிக அளவில் சிறுபான்மை மக்களை சேர்ப்பதற்கு உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு(2010) நாட்டிற்காக உயிரைத் தியாகம் செய்த முஸ்லிம்களின் விபரம்:
source:twocircles.net&பாலைவனத் தூது

கோணுழாம்பள்ளத்தில் பெண்கள் பயான்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
  • அந்நூர் - ஆலிமா, மாணவிகள் பங்கேற்பு!
  • ஜமாத்தார்கள் முந்நின்று நடத்தினர்!
  • பொதுக்கூட்டம் போல் பெண்கள் பயான்!

தஞ்சை வடக்கு மாவட்டம் கோணுழாம்பள்ளம் கிளை சார்பாக பெண்கள் பயான் ஏற்பாடு செய்யப்பட்டு, கோனுலாம்பல்லம் ‘மின்ஹாஜ் உலும் மதரஸா’ –வில் பயான் நடந்தது இதில் அன்நூர் இஸ்லாமியக் கல்லூரியை சேர்ந்த சகோ: நஸ்ரின் நிஹாரா (மூன்றாம் ஆண்டு மாணவி) “தொழுகையின் நன்மைகள்” என்ற தலைப்பிலும், சகோ: சுமையா (ஆலிமா) “சகாபாக்கள் பெண்களின் தியாகம்” என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள். இதில் மாவட்ட செயலாளர் சுவாமிமலை ஜாபர், காட்டூர் சாதிக் மற்றும் திருப்பனந்தாள் கிளை நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர் இந்நிகழ்ச்சிளை கிளை தலைவர் முபாரக் அலி, செயலாளர் நௌசாத் அலி, பொருளாளர் சலாமத்துல்லாஹ் மேலும் கிளை நிர்வாகிகள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். பெண்கள் 150 பேர், ஆண்கள் 50 பேர் என கலந்துக்கொண்டு இவர்கள் காட்டிய ஆர்வம் ஒரு குட்டி பொதுக்கூட்டமே நடத்து போல் இருந்தது.
குறிப்பு: இந்த பெண்கள் பயானுக்கு கோணுழாம்பள்ளம் ஊர் நாட்டாமை மற்றும் ஜமாத்தினர் கலந்துக்கொண்டதோடில்லாமல் அன்று நடந்த செலவினங்களை இவர்களே செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி; தஞ்சை TNTJ

உழைப்பு.நபிகள் நாயகம்.


சில பேரு இப்பிடிதாங்க,தான் எந்த முயற்சியும் பண்ணாம,இறைவன் பாத்துக்குவான் என்று சோம்பேறியாக காலம் தள்ளுவார்கள்.கேட்டா,அவன் எல்லாத்தையும் பாத்துக்குவான்,அவன் தருவான்,நாம ஏன் கவலைப்படணும் என்று சொல்லி முடங்கிக் கிடப்பார்கள்.


அது தப்புங்க.இறைவன் மேல நாம் முதல்ல நம்பிக்கை வைக்கனும்தான்.ஆனா அதுக்காகாக வேண்டி,நான் நம்புறேன் அதுனால எந்த முயற்சியும் பண்ண மாட்டேன்னு சொலது சரி இல்லங்க.

எந்த ஒண்ணா இருந்தாலும்,நாம முயற்சி பண்ணனும்,அதோட இறைவனுடைய உதவியை நாடி,அவனிடம் துவா(பிரார்த்தனை)செய்ய வேண்டும்.

உதாரணமா,ஒரு காரியம் பண்ணவேண்டும்,இல்ல எதோ ஒரு செயல் பண்ண வேண்டும் என்றால்,அந்த காரியம் நிறைவேற,செயல் துவங்க,நாம் முயற்சி எடுத்து-அந்த காரியம் நிறைவேற உழைக்க வேண்டும்.அத்துடன் நிறுத்தாமல்,யா அல்லாஹ்,என் இறைவனே,இந்த காரியத்தில் இறங்கிவிட்டேன்,(இறங்க இருக்கிறேன்)அந்த நல்ல காரியம் நிறைவேற நீதான் உதவி செய்ய வேண்டும் என்று இறைவனிடம் பொறுப்பு சாட்ட வேண்டும்.

இதைத்தான் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் சொன்னார்கள்,"ஒட்டகத்தை கட்டிவிட்டு,அதன் பாதுகாப்புக்கு இறைவனிடம் துவா செய்யுங்கள்"என்று.

ஒட்டகத்தை கட்டாமல்,அது பாட்டுக்கு விட்டு விட்டு,இறைவன் பாத்துக் கொள்வான் என்று இருந்து விடக் கூடாது என்று நபி அவர்கள் வலியுறுத்தினார்கள்.

எனவே,சோம்பித்திரியாமல்,நன்கு முயற்சிக்க,உழைக்க வேண்டும்,அத்துடன் அல்லாஹ்விடம் அந்த முயற்சி,உழைப்பு வெற்றி பெற பிரார்த்தனை செய்ய வேண்டும்.சரிதானுங்களே
நன்றி : அன்போடு உங்களை இணையத்தளம்.

ஊடகங்களின் மறைத்தலும் திரித்தலும் தீர்வு என்ன?

ஊடகங்களின் நன்மையும் தீமையும்

பாரெங்கும் பரந்து வாழும் பலதரப்பட்ட மக்களிடம் தகவல்களைக் கொண்டு சேர்ப்பதில் மீடியாக்கள் எனப்படும் ஊடகங்களின் பணி மகத்தானது. உலகின் ஒருகோடியில் நடைபெறும் ஒரு நிகழ்வை மறுகோடியில் வசிப்பவர்களால் உடனுக்குடன் அறியவும் அது குறித்து பேசவும் முடிகிறதெனில் பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி, இணையம் ஆகிய ஊடகங்களின் மூலமே இது சாத்தியமாகிறது. ஊடகத்துறையால் மனித சமூகம் அடைந்த பயன்கள் கணக்கிலடங்கா.

மனித குல நன்மைக்காக உருவாக்கப்பட்ட ஊடகங்களில் சிலவற்றைத் தவிர பெரும்பாலும் வியாபாரத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருப்பதும், பரபரப்பை ஏற்படுத்தும் நோக்கத்தில், இல்லாதவற்றை இட்டுக்கட்டுவதையும் உள்ளவற்றை மறைப்பதையும் திரிப்பதையுமே தமது குறிக்கோளாகக் கொண்டிருப்பதும் வேதனை தரும் உண்மை.

அகில உலகத்தையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் இந்த ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் செய்திகளும் தகவல்களும் நல்லவையாக இருப்பின் மனித குலத்திற்கு நன்மை அளிக்கவும் தீயவையாக இருப்பின் தீமை அளிக்கவும் செய்கின்றன. ஊடகங்கள் மூலம் உரத்துச் சொல்லப்படும் கருத்துகள்தாம் மக்களின் உள்ளங்களில் ஊடுருவி ஓர் இனத்தை அல்லது தேசத்தை வழிநடத்தவோ வழிகெடுக்கவோ செய்கின்றன. சீர்கேடு-சீரமைப்பு ஆகிய இரண்டுமே ஊடகங்களால் சாத்தியப்படும்.

மறைத்தலுக்கும் திரித்தலுக்கும் காரணம்

உலகம் முழுவதும் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராகப் பெருமளவில் களம் இறங்கியுள்ள ஊடகங்கள் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் குறித்த செய்திகளை மறைத்தும் திரித்தும் வெளியிடுவதையே தங்கள் குறிக்கோளாகக் கொண்டிருப்பதற்குச் சில காரணங்களும் இருக்கின்றன.
நாகரிகம் என்ற பெயரில் அநாச்சாரங்களிலும் கேடுகெட்டக் கலாச்சாரங்களிலும் ஊறிப்போன மேற்குலகும் அவற்றின் மூலம் பணம் சம்பாதிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட முதலாளித்துவமும் இவற்றுக் கெல்லாம் பெரும் சவாலாக, தனிமனித-சமூக ஒழுக்கத்தை வலியுறுத்தும் இஸ்லாத்தின் வளர்ச்சியைப் பொறுக்காமல் இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்களின் மீதும் அவதூறுச் சேற்றை அள்ளி இறைத்து இஸ்லாத்தின் மீது களங்கத்தை ஏற்படுத்துவதே இவர்களின் நோக்கம். அதன் மூலம் காட்டாற்று வெள்ளமெனக் கரைபுரண்டோடும் இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்திவிடலாம் என்பது இவர்களின் கனவு. அதற்காக இவர்கள் தம் ஆதிக்கத்தில் வைத்திருக்கும் ஊடகங்களைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

இந்தியா போன்ற கலாச்சாரப் பெருமை வாய்ந்த நாடுகளின் ஊடகங்கள் இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் களங்கம் ஏற்படுத்தக் களம் இறங்கியிருப்பதற்கான காரணம் வேறுவிதமானது.

ஆண்டாண்டுக் காலமாக ஒரு சாராரை அடிமைப்படுத்தி, பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பித்து, அடக்கி ஒடுக்கி வைத்திருந்தவர்கள், இஸ்லாம் இந்த மண்ணில் வேரூன்றி ஏற்றத் தாழ்வுகளை வேரறுத்து சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்தியபோது அதன்பால் கவரப்பட்டு கோடானு கோடி மக்கள் விடியலைத்தேடி, சத்தியத்தை நோக்கி வருவதையும் அதன் காரணமாக இவ்வளவு காலமும் தமக்கு அடிபணிந்து, தலைவணங்கிச் சேவகம் செய்து வந்தவர்கள் வீறுகொண்டு எழுந்து நிமிர்ந்து நிற்பதைக் கண்டு பொறுக்காமல், தம் கைவசம் இருக்கும் ஊடகங்கள் மூலம் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பான செய்திகளை மறைத்தும் திரித்தும் தங்கள் கைவரிசையைக் காட்டுவதன் மூலம் இந்திய மண்ணில் இஸ்லாம் அடைந்து வரும் அசுர வளர்ச்சியைத் தடுத்து நிறுத்திவிடலாம் என்பது இவர்களின் எண்ணம். இதையும் மீறி இஸ்லாம் வளர்ந்து வருகிறது என்பது வேறு விஷயம்.

வெகுவேகமாகப் பரவி வரும் சத்திய இஸ்லாத்தின் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக உலக அளவில் யூத கிறிஸ்தவ சக்திகளும், நமது தேச அளவில் சங்பரிவார சக்திகளும் தம் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்களைப் பயன்படுத்தி இஸ்லாத்திற்கெதிராகவும் முஸ்லிம்களுக்கெதிராகவும் திட்டமிட்டு வதந்திகளைப் பரப்புவதையும் உண்மைச் செய்திகளை இருட்டடிப்பு செய்வதையும் தமது கொள்கையாகவே கொண்டுள்ளன.

ஊடகங்களின் பாரபட்சமான போக்கு

தீவரவாதத்திற்கு மதம், இனம், மொழி, தேசம் என்னும் எந்த வேறுபாடும் இல்லை. தீவிரவாதம் முற்றிலுமாக வேரறுக்கப்படவேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் முஸ்லிமல்லாத ஒருவன் அவன் சார்ந்துள்ள மதத்தின் பெயராலோ, இனத்தின் பெயராலோ, மொழியின் பெயரலோ தீவிரவாதத்தில் ஈடுபட்டால் அந்த மதம், இனம், மொழி, ஆகியவற்றின் அடைமொழியுடன் அவன் அழைக்கப்படுவதில்லை. அதே செயலை ஒரு முஸ்லிம் செய்து விட்டால் 'முஸ்லிம் தீவிரவாதி' அல்லது 'இஸ்லாமியத் தீவிரவாதி' என்னும் அடைமொழியுடன் வெளியிட எந்த ஊடகமும் தயங்குவதில்லை.

எந்த இடத்தில் என்ன குற்றம் நிகழ்ந்தாலும் அக்குற்றத்தில் தொடர்புடையவர்கள் முஸ்லிம்களாக இருந்து விட்டால் அதைப் பெரிதுபடுத்தித் தலைப்புச் செய்தியாக வெளியிடுவதும், அதே குற்றத்தை மற்றவர்கள் செய்தால் அச்செய்தியை ஒரு மூலையில் சாதராணச் செய்தியாக வெளியிடுவதும், பல்லாயிரக் கணக்கில் முஸ்லிம்கள் கலந்து கொள்ளும் மாபெரும் மாநாடுகள், பேரணிகள் என்றால் சில நூறு பேர்கள் கலந்து கொண்டதைப்போலப் பத்திரிகைகளில் வெளியிடுவதும் தொலைக்காட்சி செய்திகளில் காண்பிக்கும்போது மாநாடு அல்லது பேரணி தொடங்குவதற்குமுன் மக்கள் வந்துசேரத் தொடங்கிய நிலையில் உள்ள காட்சிகளை மட்டும் வெளியிடுவதும்தான் அவர்களின் 'ஊடக தர்மம்'.

முஸ்லிம் வீடுகளில் பழைய பேட்டரிகளும் துண்டு ஒயர்களும் காய்கறி நறுக்கப் பயன்படுத்தும் கத்திகளும் கண்டெடுக்கப் பட்டால் அவை 'பயங்கர ஆயுதங்கள்'; ஆனால் பாசிச சக்திகளின் அங்கத்தவர் வீடுகளில் துப்பாக்கிளும் வெடிகுண்டுகளும் டெட்டனேட்டர்களும் கிடைத்தால் அவற்றைப் பரப்பிவைத்து எந்த காவல்துறையும் படம் காட்டாது.

பல்வேறு வகைகளிலும் முஸ்லிம்கள் குறித்த செய்திகள் மறைக்கப்படுவதையும் திரிக்கப்படுவதையும் அன்றாடம் கண்டு கண்டு நமது மனம் குமுறுகிறது.

இதற்கான தீர்வு என்ன?

"நமக்கென்று தனியாக நாளிதழும் தொலைக்காட்சியும் தேவை" இதுவே முஸ்லிம்கள் பெரும்பாலானோரின் பதிலாக இருக்கும். ஆம், தேவைதான் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு ஆகிய இவ்விரண்டையும் தொடங்குவதும் தொடங்கியதைத் தொய்வின்றித் தொடர்ந்து நடத்துவதும் பலரும் நினைப்பதுபோல் அவ்வளவு எளிதான காரியமல்ல.

இலாப நோக்கம் இல்லாவிட்டாலும் நஷ்டம் இல்லாமல் தொடர்ந்து நடத்துவதற்கு வாசகர்களாகிய நாம் நமது பங்களிப்பைச் சரியான முறையில் நல்குவதிலும் பெரும் வியாபார நிறுவனங்கள் பொறுப்புடன் தமது விளம்பரங்களைத் தந்துதவுவதிலும்தான் அவற்றின் எதிர்காலம் அடங்கியுள்ளது.

1.நமக்கென்று தனியாக ஊடகம் தொடங்கும் திட்டம்

முஸ்லிம்களுக்கெனத் தனியொரு நாளிதழ் தொடங்குவதானாலும், தொலைக்காட்சித் தொடங்குவதானாலும் அதற்கான ஏற்பாட்டைச் சமுதாய அக்கரை கொண்ட செல்வந்தர்களும் தொழிலதிபர்களும் செய்ய முன்வரவேண்டும். இவ்விதம் தொடங்கப்படும் ஊடகங்கள் இயக்கச் சார்பில்லாதவையாக இருக்க வேண்டும் என்பது மிக முக்கியம்.

நாளிதழ் தொடங்கத் திட்டமிடுபவர்கள், அண்டை மாநிலமான கேரளத்தில் அண்மையில் தொடங்கப்பட்ட 'மாத்யமம்' நாளிதழ், அதற்கு முன்னதாக நீண்ட காலமாக நடந்து வரும் பல்வேறு நாளிதழ்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு வெகுவேகமாக முன்னேறி வளைகுடாப் பதிப்பு வரை பல்வேறு பதிப்புகளை வெளியிடும் அளவுக்கு வளர்ந்திருப்பதையும் முன்னுதாரணமாகக் கொண்டு தமது திட்டத்தை அமைத்துக் கொள்ளலாம்.

2.கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்பு

தனியாகத் தொலைக்காட்சி தொடங்குவது என்னும் பெரும் திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்துவது சற்றுச் சிரமம்தான் என்றாலும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் இஸ்லாமிய கேபிள் ஒளிபரப்புகளைத் தொடங்கலாம்.

நம் சமுதாயம் குறித்து மறைக்கப்பட்டவற்றை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதும் திரிக்கப்பட்டவற்றின் உண்மை நிலையை பகிரங்கப்படுத்துவதும் இத்தகைய கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்பின் மூலம் செயல்படுத்துவது எளிது.

சமீபத்தில் குமரி மாவட்டத்தில் ஒரு கிறிஸ்தவ சகோதரர் இஸ்லாமிய கேபிள் ஒளிபரப்பைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருப்பது மட்டுமின்றி உயரிய இஸ்லாத்தின் உன்னதக் கொள்கைகளால் கவரப்பட்டு அவரே இஸ்லாத்திற்கு மாறியதும் இங்குக் குறிப்பிடத் தக்கது.

நமக்கென நாளிதழும் தொலைக்காட்சியும் தொடங்கப்படும்போது நமது செய்திகள் உள்ளது உள்ளபடி உலகுக்கு உணர்த்தப்படும். அதற்கான காலம் கனிந்து வரும், இன்ஷா அல்லாஹ்.

இப்போதைக்கு நாம் செய்ய வேண்டியது என்ன?

3.தனியார் தொலைக்காட்சிகளைப் பயன்படுத்திக் கொள்ளுதல்

சமுதாய இயக்கங்கள் அவ்வப்போது தனியார் தொலைக்காட்சிகளில் தினந்தோறும் நேரத்தை ஒதுக்கி நிகழ்ச்சிகள் நடத்துகின்றன. இந்த நிகழ்ச்சிகளில் அவ்வப்போது மறைக்கப்பட்ட, திரிக்கப்பட்ட நம் சமுதாயச் செய்திகளின் உண்மை நிலவரங்களை விளக்கிச் சொல்வதிலும், உண்மை நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

4.ஊடகத்துறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல்

இனிவரும் அடுத்த தலைமுறையினராவது கல்வியில் மேம்பாடு அடைய வேண்டும் என்னும் உயரிய நோக்குடன் சமுதாய இயக்கங்கள் ஆண்டு தோறும் மாணவர்களுக்கென கல்வி வழிகாட்டுதல் சேவைகளை கோடை விடுமுறையில் வழங்கி வருகின்றன. அதன் காரணமாக அண்மைக் காலமாக உயர்கல்வி கற்பதில் நம் சமுதாய மாணவர்கள் அதிக அக்கரை எடுத்து வருவதும், பெற்றோர்கள் தம் பிள்ளைகளை உயர்கல்வி பயில ஊக்கப்படுத்துவதும் பாராட்டுக்குரியன.

உயர்கல்வி பற்றிய தெளிவை வழங்கும்போது ஊடகத்துறை பற்றியும் இதழியல் பற்றியும் மாணவர்களுக்கு எடுத்துக் கூறி அதிகமதிகம் நம் சமுதாய மாணவர்களை இத்துறையில் கவனம் செலுத்தும்படி உற்சாகப்படுத்தினால், நம் சமுதாயத்தில் ஊடகவியாலளர்கள் அதிகமதிகம் உருவாக வாய்ப்புகள் ஏற்படும். பரவலாக ஊடகத்துறையில் நாம் ஊடுருவும்போது பெருமளவில் மறைத்தலும் திரித்தலும் தவிர்க்கப்படும்.

ஊடகங்களில் பணிபுரிபவர்கள் பொதுவாக அவற்றின் நிர்வகத்துக்கு கட்டுப்பட்டுத்தான் செயல்பட முடியும் என்றாலும், செய்தியாளர்கள் செய்திகளை வழங்கும் விதத்தில்கூட மறைத்தலும் திரித்தலும் நடக்கின்றன என்பதும் உண்மை. நம் சமுதாயச் செய்தியாளர்கள் அதிகமாகும்போது அவர்கள் உண்மையான செய்திகளை உள்ளது உள்ளபடி தருவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு.
5. சமுதாயப் பத்திரிகைகள் ஊடகப் பயிற்சிப் பட்டறைகளை உருவாக்குதல்

நம் சமுதாயத்தின் பிரபலமான பத்திரிகைகள், குறிப்பாக வார இதழ்கள், பத்திரிகைத் துறையில் ஆர்வமுள்ள, எழுத்தாற்றல் மிக்க இளைஞர்களுக்குக் கட்டுரைப்போட்டிகள், செய்திசேகரிப்புப் பயிற்சிகள் ஆகியவற்றை நடத்துவதன் மூலம், திறமையானவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அனுபவம் உள்ள ஊடகவியலாளர்களைக் கொண்டு பயிற்சி அளித்து சிறந்த பத்திரிகையாளர்களாக உருவாக்க வேண்டும். இத்திட்டத்தின் மூலம் ஆண்டு தோறும் சிலரையாவது தேர்ந்தெடுத்து அதற்கான பயிற்சியை அளித்தால் நம் சமுதயத்திலும் நாளடைவில் சிறந்த பத்திரிகையாளர்கள் உருவாக வழிபிறக்கும்.

6.பத்திரிகைகளுக்கு வாசகர் கடிதம் எழுதுதல்

நாம் அன்றாடம் வாசிக்கும் பத்திரிகைளில் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான தகவல்களை நாம் காண நேர்ந்தால் அத்தகவல் தவறானதாக இருப்பின் சரியான தகவலை தகுந்த ஆதாரங்களுடன் உடனுக்குடன் அப்பத்திரிகைக்கு மறுப்புக்கடிதம் எழுத வேண்டும்.

எங்கோ ஓர் இடத்தில் நடந்ததாக நாம் படிக்கும் செய்தி பற்றிய உண்மை நிலை நமக்குத் தெரியாது தான். ஆனால் அவரவர் வசிக்கும் பகுதியில் நடந்ததாக ஒரு தவறான செய்தியை காணும்போது அப்பகுதியைச் சேர்ந்தவர்களாவது இது பற்றிய உண்மை நிலையை அறிந்து தமது மறுப்பையும் உண்மை நிலையையும் தெரிவிக்கலாம் அல்லவா?

நாம் எழுதும் கடிதங்களை சம்பந்தப்பட்ட பத்திரிகை பிரசுரிக்காவிட்டாலும் (பெரும்பாலும் பிரசுரிக்க மாட்டார்கள் என்பது வேறு விஷயம்) மனம் தளராமல் தொடர்ந்து ஒவ்வொரு தவறான தகவலுக்கும் நமது எதிர்ப்பைக் கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும். இதற்காகப் பெரும் பொருள் செலவு செய்யவேண்டியதில்லை ஒரு சாதாரண அஞ்சலட்டையேகூடப் போதும். மேலும் மேலும் தொடர்ந்து மறுப்புகளும் எதிர்ப்புகளும் வரும்போது அடுத்தடுத்த செய்திகளிலாவது கொஞ்சம் அடக்கியே வாசிப்பார்கள்.

7. தொலைக்காட்சிகளுக்கு மறுப்பைத் தெரிவித்தல்

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இவ்விதம் தவறான தகவல்கள் வரும்போது, தொலைபேசி மூலம் நேயர்கள் நேரடியாக தொடர்பு கொள்ளும் நிகழ்ச்சிகள் நடக்கும் தருணத்தைப் பயன்படுத்தி, நம் சமுதாயம் தொடர்பாக தவறான தகவல் வெளியிட்ட அவர்களின் தவறான போக்கை கண்டிக்க வேண்டும். உடனே இணைப்பை அவர்கள் துண்டித்தும் விடலாம்; ஆனாலும் நடுநிலையான நேயர்கள் அவர்களை இனம் கண்டு கொள்வார்கள் அல்லவா?

8. நீதிமன்றங்களில் வழக்குத் தொடுத்தல்

சமுதாயத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் தவறான தகவல்களை வெளியிடும் ஊடகங்களுக்கு எதிராக நீதி மன்றங்களில் வழக்குத் தொடரலாம். இவ்விதம் வழக்குத் தொடுப்பது பற்றிய விபரங்களை அறிய சமுதாயத்தில் அக்கரை கொண்ட வழக்குரைஞர்களை அனுகலாம். இலவச சட்ட ஆலோனைகள் வழங்க எத்தனையோ நல்ல வழக்குரைஞர்கள் நம் சமுதாயத்தில் இருக்கின்றனர். அவர்களை அணுகி ஆலோசனைகள் பெறலாம்.

9. ஊடகங்களின் பேட்டிகளைப் பயன்படுத்திக் கொள்ளுதல்

அவ்வப்போது பத்திரிகைள் மற்றும் தொலைக்காட்சிகள் சார்பாக ஏதேனும் பிரச்சினைகள் குறித்து சமுதாயத் தலைவர்களிடம் பேட்டி காண்பது வழக்கம். அத்தகைய பேட்டிகளை சமுதாயத் தலைவர்கள், மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக் கொணரவும் திரிக்கப்பட்ட செய்திகளைத் தெளிவாக விளக்கிச் சொல்லவும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

10.குறுஞ்செய்திகள் எனப்படும் எஸ் எம் எஸ் தகவல் பரிமாற்றம்

கைபேசி எனப்படும் செல்போன்கள் பட்டி தொட்டியெங்கும் பரவலாகப் பலரிடமும் உபயோகத்துக்கு வந்து விட்ட இக்காலத்தில் நமது கைகளில் உள்ள நமது கைபேசிகளையே நாம் ஓர் ஊடகமாக்கி அவ்வப்போது இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் குறித்த தவறான செய்திகள் ஊடகங்களில் படிக்க/பார்க்க நேர்ந்தால் அவற்றின் உண்மை நிலையைச் சுருக்கமாகக் குறுஞ்செய்திகள் எனப்படும் எஸ்எம்எஸ் மூலம் நமக்குத் தெரிந்தவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். குறிப்பாக மாற்று மத நண்பர்களுக்கு உண்மையை உணர்த்தலாம். பல கைபேசி இணைப்பு நிறுவனங்கள் இலவச எஸ்எம்எஸ் சேவையை வழங்குகின்றன. இத்தகைய இலவச சேவைகளை ஆக்கப்பூர்வமான வழிகளில் நாம் பயன்படுத்தலாம்.

11.ஜும்ஆ மேடைகள் என்னும் அற்புதமான ஊடகம்

ஊடகங்கள் உலகத்தில் உலாவரத் தொடங்குமுன்பே மிகச்சிறந்த ஊடகமாகிய ஜும்ஆ மேடைகள் நம்மிடம் இருக்கின்றன என்பதை நாம் உணரத் தவறிவிட்டோம்.

ஜும்ஆ மேடைகளில் தொழுகையையும் நோன்பையும் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்காமல், சமுதாயத்திற்கு ஏற்பட்டுள்ள களங்கத்தைத் துடைத்தெறிவதும், நம் சமுதாயத்தைப் பற்றிய தவறான கண்ணோட்டத்தைக் களைவதும் கூட மார்க்கத்திற்கு உட்பட்டதுதான் என்பதை உணர்ந்து அந்தந்த வாரங்களில் நாம் சந்திக்கும் பிரச்சனைகளின் உண்மை நிலை குறித்து மக்களுக்கு உரை நிகழ்த்தும் ஆலிம்கள் உணர்த்த வேண்டும்.

ஜும்ஆ பிரசங்கம் நடத்தும் ஆலிம்கள் அவரவர் பகுதிகளில் நடக்கும் சம்பவங்கள் குறித்த விரிவான தகவல்களைத் திரட்டி அந்த வார ஜும்ஆ பிரசங்கத்தில் அது பற்றி விளக்க வேண்டும். ஆலிம்களாகிய மார்க்க அறிஞர்கள் அதற்கேற்பத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

செய்தி ஊடகங்களில் பெரும்பாலும் பொய்யான தகவல்கள் திரும்பத் திரும்பத் கூறப்படுவதால் அவற்றைக் கேட்கும் நம் சமுதாயத்தவர் சிலர் கூட இவை பற்றிய உண்மை நிலையை அறியாதிருக்கலாம். அத்தகையோர் இந்த ஜும்ஆ உரைகளைக் கேட்பதன் மூலம் உண்மையை உணர்ந்து கொள்வர்.
பெரும்பாலான பள்ளிகளில் ஜும்ஆ உரைகள் ஒலிபெருக்கி மூலம் ஒலிபரப்பப்படுவதால் பள்ளிக்கு வெளியே இருக்கும் மாற்றுமத சகோதரர்களின் செவிகளையும் இச்செய்திகள் சென்றடையும்.

12. ஊடகங்களைப் புறக்கணிக்கும் கட்டாயம்

டென்மார்க் பத்திரிகை ஒன்று கடந்த ஆண்டு நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறித்த கேலிச்சித்திரம் வெளியிட்டதையும், அதற்கு ஆதரவாக அந்நாட்டு அரசு, "அது பத்திரிகை சுதந்திரம்" என்று சப்பைக் கட்டு கட்டியதையும் கண்டித்து உலகம் முழுதும் வாழும் முஸ்லிம்கள், குறிப்பாக டென்மார்க் அரசின் தயாரிப்புகளைப் பெருமளவில் இறக்குமதி செய்து வந்த மத்திய கிழக்கு நாடுகள் டென்மார்க் தயாரிப்புகளைப் புறக்கணித்ததால் அந்நாட்டின் பொருளாதாரத்தையே ஆட்டம் காணச் செய்தோமே! அந்த முன்னுதாரணத்தைப் பின்பற்றி நமக்கு எதிராகச் செயல்படும் அனைத்து ஊடகங்களுக்கும் எதிராக நாம் களம் இறங்க வேண்டும். நமக்கு எதிராக எழுதும் பத்திரிகைகளைக் காசு கொடுத்து வாங்குவதை முதலில் நாம் நிறுத்த வேண்டும். நமக்கெதிராக செயல்படும் தினமலர் போன்ற பத்திரிகைகளை முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும்.

13.மக்கள் சக்திப் போராட்டம்

நம் சமுதாயத்திற்கு எதிராகக் கங்கணம் கட்டிக் கொண்டு களம் இறங்கியுள்ள ஊடகங்களைக் கண்டறிந்து அவற்றை நாம் விழிப்புடன் கண்கானித்து வரவேண்டும். இதற்கென அறிஞர் குழு ஒன்றை அமைத்துக் கண்கானித்து, விஷமத்தனத்தை அவை அரங்கேற்றும்போது அதற்கு எதிராக முழு சமுதாயமும் ஒன்றினைந்து அத்தகைய ஊடகங்களுக்கெதிராக வீதியில் இறங்கி ஜனநாயக முறையில் போராடவேண்டும்.

சமீபத்தில் நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம் குறித்து டென்மார்க் பத்திரிகையின் கேலிச்சித்திரத்தை வேண்டுமென்றே மறுபிரசுரம் செய்த தினமலருக்கு எதிராக நாம் போராடியதும், நமது வீரியமான போராட்டத்தைக் கண்டு அஞ்சி அவர்கள் பகிரங்க மன்னிப்புக் கேட்டதும் நினைவிருக்கலாம்.

14. இணையம் - நமக்கு வாளும் கேடயமும்

ஊடகங்களில் அதிநவீனமானதும் உலகம் முழுவதும் இப்போது பரவலாக உபயோகத்திற்கு வந்து விட்டதுமான இன்டர்நெட் எனப்படும் இணையத்தில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

இஸ்லாத்திற்கெதிரான கருத்துக்களைத் திட்டமிட்டு பரப்புவதில் பத்திரிகை, தொலைக்காட்சி ஆகியவற்றையெல்லாம் விட அதிகமாகப் பொய்யும் புரட்டும் மறைத்தலும் திரித்தலும் இணையத்தில் கொடிகட்டப்பறக்கின்றன.

நேருக்கு நேர் நின்று போராட நெஞ்சுரம் இன்றி ஒளிந்து கொண்டு புறமுதுகில் குத்தும் கோழைகள் ஒருபுறம், கொடிய நஞ்சைத் தேன் கலந்து கொடுப்பதுபோல் இஸ்லாத்தின் பெயரால் முஸ்லிம்களைக் கவரும் விதத்தில் இணையத்தில் சில கருத்துக்களைப் பதித்து, துவக்கத்தில் இஸ்லாமியப் பதிவுகளைப்போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி, பின்னர் வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவதைப்போல் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களைத் திணிக்கும் தளங்கள் ஒருபுறம், பகிரங்கமாகவே இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக வன்முறையைத் தூண்டும் சங்பரிவாரச் சதித்தளங்கள் இன்னொரு புறம், இவ்விதம் அநேக சவால்களை இணையத்தில் நாம் அன்றாடம் சந்திக்க நேருகிறது.

இணையத்தில் உலாவரும் இஸ்லாமியச் சகோதரர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இணையத்தைக் கையாள வேண்டும். ஈமானின் வலிமையை இதயத்தில் தேக்கி இணைய எதிரிகளை இணையத்தின் மூலமே தோற்கடிக்க வேண்டும்.

சில புகழ்பெற்ற இணைய தளங்கள் இலவசமாகப் பதிவுகளை உருவாக்க வழிவகை செய்து வைத்துள்ளன. அவற்றை முறையாகப் பயன்படுத்தி இஸ்லாத்திற்கெதிரான சவால்களை இணையத்தில் முறியடிக்க வேண்டும்.

நாம் உருவாக்கிய பதிவுகளை நமக்கு அறிமுகமானவர்களுக்கு மட்டுமே கொடுத்துப் படிக்கச் சொல்வதை விடுத்து முறையாக இணைய தளங்களின் தேடுபொறிகளிலும் பதிவுகளைத் திரட்டும் தமிழ்மணம், தமிழ்வெளி, திரட்டி, போன்ற அனைத்துப் பதிவுத்திரட்டிகளிலும் பதிந்து வைத்தால்தான் நமது பதிவுகளும் அவற்றின் மூலம் நாம் சொல்லும் கருத்துக்களும் அனைவரையும் சென்றடையும்.

வலைப்பதிவுகளில் இஸ்லாத்திற்கெதிரான கருத்துக்களைக் காண நேர்ந்தால் உடனுக்குடன் அவற்றுக்குப் பின்னூட்டங்களின் மூலம் பதில் கொடுக்க வேண்டும். பின்னூட்டங்கள் இடும்போது சரியான தகவல்களை ஆதாரங்களுடன் பதிக்க வேணடும்.

பதில் சொல்லும் அளவுக்கு போதிய ஆற்றல் நமக்கு இல்லாவிட்டால் இதே விஷயம் குறித்துப் பல்வேறு முஸ்லிம் வலைப்பதிவர்கள் தரும் தகவல்களை நன்றியுடன் குறிப்பிட்டு அவற்றுக்கான தொடுப்புகளைக் கொடுக்க வேண்டும்.

இணையத்தில் உலா வரும் இஸ்லாத்திற்கெதிரான தகவல்களுக்கு திறமையுடன் பதில் அளிக்கும் சகோதரப் பதிவர்களான அபூமுஹை, நல்லடியார், இறைநேசன், வஹ்ஹாபி, ஜீஎன், இப்னுபஷீர், மரைக்காயர், அபூசாலிஹா போன்ற சிறந்த பதிவர்கள் அருமையாக இப்பணியைச் செய்து வருகின்றனர். இவர்களைப்போல் இன்னும் ஏராளமான பதிவர்கள் அற்புதமாகவும் அமைதியாகவும் அழகாகவும் இணைய எதிரிகளை எதிர்கொண்டு வருவதைத் தொடர்ந்து இணையத்தில் உலா வருபவர்கள் அறிவார்கள். இவர்களின் பதிவுகளை ஊன்றி கவனித்தால் ஏராளமான தகவல்கள் நமக்குக் கிடைக்கும்.

15. முஸ்லிம் பதிவர்கள் நடத்தும் பொதுவான பதிவுகள்

மொழி, கலை, இலக்கியம், கதை, கவிதை, கட்டுரைகள் இப்படிப் பொதுவானவற்றில் ஆர்வம் கொண்ட முஸ்லிம் பதிவர்கள் இணையத்தில் நிறைய பேர் இருப்பது ஆறுதலான விஷயம். இஸ்லாமியப் பதிவுகள் எழுதும் எழுத்தாளர்களைவிடப் பொதுவான பதிவுகள் எழுதும் எழுத்தாளர்கள், இணையத்தில் இஸ்லாம் குறித்து மறைக்கப்படும் திரிக்கப்படும் செய்திகளை வெளிக் கொணர்வதற்கு மிகவும் ஏற்றவர்கள் எனலாம்.

இஸ்லாமிய பதிவுகளை முஸ்லிம்கள் மட்டுமே பெரும்பாலும் பார்வையிடுவர். எனவே இஸ்லாமியப் பதிவுகளில் எடுத்துவைக்கப்படும் கருத்துகள் முஸ்லிம்களை மட்டுமே சென்றடையும். ஆனால் பொதுவானவற்றில் ஆர்வம் கொண்டு இணையத்தில் உலாவரும் அனைத்துச் சமய சகோதர சகோதரிகள் கவனத்திற்கு நம்மைப் பற்றிய உண்மைகளை இத்தகைய வலைப்பதிவர்களால்தான் கொண்டு சேர்க்க முடியும்.

எனவே மொழி, இலக்கியம், கதை கவிதை கட்டுரைகளில் ஆர்வம் கொண்ட இஸ்லாமியப் பதிவர்களே! உங்கள் இலக்கிய ஈடுபாட்டுடன் நம் சமுதாயச் செய்திகளையும் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பான உண்மையான தகவல்களையும் இடையிடையே உங்கள் வாசகர்களுக்கு மத்தியில் கொண்டு செல்லுங்கள். நடுநிலையான நல்லவர்கள் உண்மைகளை உணர்ந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுங்கள். இதன் மூலம் இம்மையில் மட்டுமின்றி மறுமையிலும் வெற்றி பெறுவீர்கள். அல்லாஹ் உங்களுக்கு அளித்திருக்கும் அற்புதமான எழுத்தாற்றலை இஸ்லாத்திற்காகப் பயன்படுத்தியதற்கு அளப்பெரும் கூலியை நாளை மறுமையில் பெறுவீர்கள்.

16.இஸ்லாமிய இணைய தளங்களின் மேலான கவனத்திற்கு

பத்திரிகை, தொலைக்காட்சி ஆகிய ஊடகங்களைவிட இணையத்தில் இஸ்லாமிய எதிர்ப்பு எந்த அளவுக்கு இருக்கிறதோ அதைவிடவும் அதிகமாகவே இஸ்லாமியப் பிரச்சாரமும் நடக்கிறது என்பதே உண்மை. உலககெங்கும் இணைய வழியே இஸ்லாத்தை அறிந்து அதன்பால் ஈர்க்கப்பட்டவர்கள் அதிகம். இந்நிலையை உருவாக்கிய இஸ்லாமிய இணைய தளங்களைப் பாராட்ட வேண்டும்.

இஸ்லாமிய இணைய தளங்கள், இணைய உலகில் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான மறைத்தலையும் திரித்தலையும் சரியான முறையில் வெளிக் கொணர அதிக கவனம் எடுக்க வேண்டும். சதிகாரர்களின் சதியை துணிவுடன் தோலுரித்துக் காட்டிய தெஹல்கா போன்ற வீரமும் விவேகமும் நிறைந்த தளங்களைப்போல் உங்கள் தளங்களை பயன்படுத்தி உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரவேண்டும்.

சமூகத்தின்பால் நீங்கள் கொண்டுள்ள அக்கரை அவ்வப்போது நீங்கள் வெளியிடும் ஆக்கங்களில் பிரதிபலிக்க வேண்டும். புகழ் பெற்ற இஸ்லாமிய இணைய தளங்களுக்கென ஏராளமான வாசகர்கள் உள்ளனர். சமுதாயம் உங்கள் நிலைபாட்டை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.

நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அவமதித்த தினமலர் நாளிதழுக்கெதிராக 'சத்தியமார்க்கம்' போன்ற இணைய தளங்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று வளைகுடா நாடுகளில் வசிக்கும் வாசகர்கள், தாம் வசிக்கும் நாடுகளில் அந்த நாளிதழின் இணைய தளத்தை முடக்க மிகவும் ஆர்வத்துடன் செயல்பட்டதை இணையத்தில் தொடர்புடைய பலரும் அறிவர். எனவே எண்ணற்ற வாசகர்களைத் தம்வசம் கொண்டுள்ள இஸ்லாமிய இணைய தளங்கள் நம் சமுதாய மக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

17.மின்னஞ்சல் மூலம் உண்மையை உணர்த்துதல்

பல்வேறு இலவச மின்னஞ்சல் சேவைகள் இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தி மறைக்கப்பட்ட திரிக்கப்பட்ட கருத்துக்களின் உண்மையை விளக்கி எண்ணற்ற இணைய எழுத்தளர்கள் அற்புதமான மடல்களை எழுதிக் குவிக்கின்றனர். அத்தகைய மின்னஞ்சல்கள் நமக்கு வரும்போது சக நண்பர்களின் மின்னஞ்சல் முகவரிகளுக்கு அவற்றை அனுப்பிவைக்க வேண்டும். மடலாடற் குழுமங்களில் நமது மின்னஞ்சல் முகவரியை இணைத்துக் கொண்டு உண்மையை நம் சக நண்பர்களுக்கு மத்தியில் - குறிப்பாக - பிறமத நண்பர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

முடிவுரை

"உங்களில் எவரேனும் தீய செயல் நடப்பதைக் கண்டால் அவர் அதனைத் தம் கரங்களால் தடுக்கட்டும்; இயலாவிட்டால் நாவினால் தடுக்கட்டும்; (அதற்கும்) இயலா விட்டால் இதயத்தால் தடுத்து(ஒதுங்கி)க் கொள்ளட்டும். இது ஈமானின் பலவீனமான (இறுதி) நிலையாகும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ சயீத் (ரலி); ஆதாரம்: புகாரி.

மேற்காணும் நபிமொழிக்கேற்ப நமது சமுதாயத்திற்கெதிரான மறைத்தலும் திரித்தலும் நம் கண் முன்னே நடைபெறும்போது "நமக் கென்ன?" என்று ஒதுங்கி நிற்காமல் ஒவ்வொரு முஸ்லிமும் தம்மால் இயன்ற வழியில் இத்தகைய அநீதிக் கெதிராகக் களம் இறங்க வேண்டும்.

நம் சமுதாயம் விழிப்புடன் இருக்கிறது என்பதை ஊடக உலகம் உணர வேண்டும்.
இதை உணர்த்த வேண்டியது நமது கடமை என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் உணர்ந்தால் ஊடகங்கள் மட்டுமல்ல உலகமே இனி நம் கைகளில், இன்ஷா அல்லாஹ்
ஆக்கம்: சகோதரர் அப்துஸ்ஸலாம் மஸ்தூக்கா
நன்றி சத்தியமார்க்கம் இணையத்தளம்.