கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

குண்டு வெடிப்பு அரசியலும் முஸ்லிம் சமூகத்தின் பதட்டமும்


ஒவ்வொரு குண்டுவெடிப்பு சம்பவத்தையும் முஸ்லிம் இன மக்கள் மிகவும் பதட்டத்துடனையே எதிர்கொள்கிறார்கள். இதுவரை இந்தியாவின் வேறு பகுதிகளில் நடந்து வந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் தற்போது தமிழகத்திலும் நிகழ்ந்துள்ளது தமிழக முஸ்லிம் மக்களுக்கு பெரும் பீதியைத்தான் ஏற்படுத்தியுள்ளது. ஒரு கொலை, கொள்ளை சம்பவங்கள் நிகழ்ந்தாலே எவ்வாறு குற்றவாளிகளை போலீசார் செட் அப் செய்கிறார்கள் என்பது பத்திரிக்கைத் துறையில் இருக்கும் எனக்கு நன்றாகவே தெரியும். அப்படி இருக்கும்போது மிகவும் நுண்ணறிவு பெற்றவர்களால் நிகழ்த்தப்படும் குண்டு வெடிப்பு சம்பவங்களில் காவல்துறை அதிகாரிகள் 5 அல்லது 6 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்வது எனபது மிகவும் திறமையான விஷயம்தான்.

பெங்களூரிலோ ஹைதராபாத்திலோ குண்டு வெடித்தாலே மேலப்பாளையம், சென்னை, ராமநாதபுரம், மதுரை போன்ற பகுதிகளில் உள்ள முஸ்லிம்களை குறி வைக்கும் உளவுத் துறை அதிகாரிகள் தற்போது சென்னையில் நடந்த குண்டு வெடிப்பையொட்டி அன்று மாலையிலேயே 10க்கும் மேற்பட்ட முஸ்லிம்களை கைது செய்துள்ளதாக நமக்கு வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இன்னும் சில நாளைக்கு நிம்மதியாக அம்மக்கள் தூங்கமுடியாது என்பது உண்மை. குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்த உடனேயே பல்வேறு பகுதிகளில் உள்ள இஸ்லாமிய இளைஞர்கள் ஊரை காலி செய்து சென்றுள்ள சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது.

தொழிலாளர் தினமான நேற்று (மே1,2014) சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு ஒரு மணி நேரம் தாமதமாக வந்த பெங்களூரு-கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் எஸ்4, எஸ்5 பெட்டிகளில் இருக்கை எண் 28, 70 ஆகிய இருக்கைகளிலும் இரண்டு குண்டுகள் வெடித்ததில் ஆந்திர மாநிலம் குண்டக்கல் பகுதியை சேர்ந்த சுவாதி என்ற 24 வயது பெண் பலியானார். 14 பேர் படுகாயமடைந்தனர். இச்சம்பவத்தை யாரும் நியாயப்படுத்தமுடியாது. பிரதமர் கூறியதைப்போன்று இது கோழைத்தனமான செயல் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதே நேரத்தில் குண்டு வெடிப்புகளுக்கு பின்னால் இருக்கும் அரசியலையும் புரிந்துகொள்ள வேண்டும்.

ஒவ்வொரு குண்டு வெடிப்பு சம்பவமும் பல்வேறு தொடர்ச்சிகளின் நீட்சிதான். ஆனால் நாம் கடைசிக் கண்ணியை மட்டும் பிடித்து வைத்துக் கொண்டு உளவுத்துறை சொல்லித் தரும் பொய்யையே வாந்தி எடுக்கிறோம். மீடியாக்களும் உளவுத்துறை என்ன சொல்கிறதோ அதையே வாந்தியடுத்து வருகிறது. குண்டு வைப்பவர்கள் முஸ்லிம்களாகத்தான் இருக்கமுடியும் என்ற கருத்தியல் சர்வதேச அளவில் பரப்பப்பட்டு இன்று அவை மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இந்தியாவின் எங்கோ ஓர் ஓரத்தில் இருக்கும் பாமரன் கூட குண்டு வெடிப்பு என்றால் அதை முஸ்லிம்களோடு தொடர்புபடுத்திப் பார்க்கும் கருத்து பலமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கட்டமைப்பை உடைக்க ஏகாதிபத்திய நாடுகள் இந்துத்துவா பாசிசவாதிகள் மற்றும் இந்திய உளவுத்துறை செய்கின்ற பிரச்சாரத்திற்கு மறுதலிப்பு பணிகளை முஸ்லிம்கள் செய்திருக்க வேண்டும். ஆனால் போதுமான வேகத்தில் இந்த கருத்தியலுக்கு மாற்று கருத்தியலை முஸ்லிம்கள் செய்யவில்லை என்பது மிகவும் துரதிருஷ்டவசமானது.

குண்டு வெடிப்பு சம்பவங்களை வெறும் முஸ்லிம்களோடும், பாகிஸ்தானோடும் மட்டுமே நாம் பேசி வருவதால் குண்டு வெடிப்பின் அரசியல் பலமாக வெற்றி பெற்றுள்ளது. ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்கிறது என்றால் அதனால் லாபம் பெறுபவர்கள் யார் என்ற அடிப்படைக் கேள்வியை உங்களுக்குள்ளேயே எழுப்பிப் பாருங்கள்; பல்வேறு உண்மைகள் புலப்படும். 2006 ம் ஆண்டு பிப்ரவரி 8 ம் தேதி மாலேகானில் நடந்த குண்டு வெடிப்பு, 26 ஜூலை 2008ம் ஆண்டு நடந்த அஹமதாபாத் குண்டுவெடிப்பு, 19 பிப்ரவரி 2007ம் ஆண்டு நடந்த சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு, 18 மே 2007ம் ஆண்டு நடந்த ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு, 5 ஏப்ரல் 2006ம் ஆண்டு நடந்த அஜ்மீர் தர்ஹா குண்டு வெடிப்பு சம்பவங்களில் முதலில் இந்தியன் முஜாஹிதீன், லஷ்கர்-இ-தொய்பா போன்ற (உளவுத்துறையால் உருவாக்கப்பட்ட) தீவிரவாத இயக்கங்களின் பெயர்கள் கூறப்பட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து அப்பாவி இஸ்லாமிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டார்கள். பின்பு மகாராஷ்டிர மாநில தீவிரவாத எதிர்ப்பு படை அதிகாரி ஹேமந்த் கார்கரே இந்த குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு பின்னால் இந்துத்துவ தீவிரவாத அமைப்பான அபினவ் பாரத் மற்றும் பல்வேறு ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதை அம்பலப்படுத்தினார். இதன் பின்னால் உளவுத்துறையை சேர்ந்த சில அதிகாரிகளுக்கும் தொடர்பு இருந்தது வெட்ட வெளிச்சமானது. இந்நிலையில் இந்துத்துவ பயங்கரவாதிகளின் குண்டு வெடிப்பு அரசியலை அம்பலப்படுத்திய ஹேமந்த் கார்கரேயை முஸ்லிம் தீவிர வாதிகள் 26.11.2008 ம் ஆண்டு மும்பை தாக்குதலின் போது படுகொலை செய்ய வேண்டிய அவசியம் என்ன? இந்த அடிப்படை கேள்வியை நாம் எழுப்பியிருக்கிறோமா? அல்லது பத்திரிக்கைகள் எழுப்பியிருக்கிறதா?

ஹேமந்த் கர்கரே குண்டுவெடிப்பு சம்பங்களின் உண்மை நிலையை அம்பலப்படுத்தி முஸ்லிம்கள் மீதான களங்கத்தைத் துடைத்தவர். அவரை ஒரு முஸ்லிம் தீவிரவாதி படுகொலை செய்கிறான் என்றால் இந்த கதையை சிறு குழந்தைகள் கூட ஏற்றுக்கொள்ளாது. இந்த கதை குறித்து கேள்வி எழுப்பாத பத்திரிக்கையாளர்கள், அரசியல் வாதிகளை எதிர்கால சமூகம் காறி உமிழும் என்பது திண்ணம்.

இதே போன்று மூன்று சம்பவங்களை நான் இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். முதலில் காந்தி படுகொலை. காந்தியைப் படுகொலை செய்த கோட்சே கையில் முஸ்லிம் பெயரை பச்சைக்குத்தி கொண்டு சென்றுதான் காந்தியை சுட்டுக்கொன்றான். முதலில் காந்தியை படுகொலை செய்தது முஸ்லிம் என்ற பொய்தான் பரப்பப்பட்டது. இப்பொழுது உள்ளதைப் போன்ற வசதிகள் அப்போது இருந்தால் காந்தியை படுகொலை செய்தது முஸ்லிம்கள் தான் என்ற பொய் பலமாக பிரசாரம் செய்யப்பட்டு முஸ்லிம்கள் மீது அழியாத களங்கம் உருவாக்கப்பட்டிருக்கும். அதே போன்று சுதந்திரத்திற்கு பின்பு நடந்த இந்திராகாந்தியை படுகொலை செய்த பயங்கரவாத செயலை யாரும் மறக்க முடியாது. அதை தொடர்ந்து நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரமும் இந்திய ஜனநாயகத்திற்கு பெரும் இழுக்காக நிலைப்பெற்று விட்டது.

1984 ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி இந்திராகாந்தி அவரது மெய்காப்பாளர்களான சட்வான்ட் சிங், பீன்ட் சிங் ஆகியோரால் படுகொலை செய்யப்பட்டார். மிகவும் கொடூரமான இந்த செயலை இந்திய சமூகம் மிகவும் அதிர்ச்சிகரமாக கவனித்தது. இச்சம்பவத்திற்கு காரணமாக இந்திராகாந்தி அமிர்தரஸ் பொற்கோவிலில் சீக்கிய தீவிரவாதிகளுக்கு எதிராக நடத்திய ப்ளூ ஸ்டார் ஆப்பரேசனில் 492 பேர் படுகொலை செய்யப்பட்டதற்கு பழிவாங்கும் விதமாக இந்த படுகொலை நடந்த‌தாக இந்திரா காந்தியின் படுகொலை கதை முடிக்கப்படுகிறது. ஆனால் கதை அத்துடன் முடிவடையவில்லை. இக்கொலையின் பின்னணியில் உள்ள சிறு புள்ளிகள்தான் சட்வான்ட்சிங்கும் பீயான்ட் சிங்கும். இக்கதையின் நீட்சி மிகவும் உயராமான சிகரத்தை இழுக்ககூடியது. இந்திராகாந்தி பிரதமர் பதவி வகித்தது முதற்கொண்டு ரஷ்யா உட்பட கம்யூனிச நாடுகளுக்கு ஆதரவாகவே செயல் பட்டு வந்தார். இதனால் அமெரிக்கா இங்கிலாந்து போன்ற ஏகாதிப்பத்திய நாடுகளுக்கு பல்வேறு இடையூறுகள் இருந்தது. அந்த இடையூறுகளை அகற்ற அவர்கள் கண்டுபிடித்த இரைதான் இந்திரா மீதான சீக்கியர்களின் எதிர்ப்பு. அதை சரியாக பயன்படுத்திக்கொண்டு சீக்கியர்களை வைத்தே இந்திராவின் கதையை முடித்தார்கள். இந்த முட்டாள் காங்கிரசார் அம்பு எய்தவனை விட்டுவிட்டு இரையாக்கப்பட்ட சீக்கியர்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுப்பட்டு நாட்டை இரத்தக்காடாக்கினார்கள்.

மூன்றாவதாக 21 மே 1991 அன்று ஸ்ரீபெரும்புதூரில் வைத்து மனித வெடிகுண்டால் படுகொலை செய்யப்பட்ட ராஜீவ்காந்தி படுகொலை. இந்த படுகொலைக்கு விடுதலை புலிகள் அமைப்பினர் மீது குற்றம் சாட்டப்பட்டு பலர் கைது செய்யப்பட்டன் பலர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த பயங்கரவாத சம்பவத்தில் உள்ள உண்மையான அரசியலை நாம் இது வரை கேள்வி கேட்கவில்லை. விடுதலைப் புலிகளோடு தொடர்பு படுத்துவதோடு இச்சம்வத்தை முடித்துக்கொள்கிறோம். இதற்கு அப்பால் சந்திர சுவாமி, சுப்பிரமணிய சுவாமி, அமெரிக்கா தொடர்புகள் குறித்து நாம் கேள்வி எழுப்புவதில்லை. ராஜீவ் காந்தி படுகொலைக்கு இலங்கைக்கு சென்ற இந்திய அமைதிப் படையினர் நடத்திய மனித விரோத செயல்கள்தான் காரணம் என கூறப்பட்டது. ஆனால் அதற்கு அப்பாலும் பல சந்தேகங்களும் கேள்விகளும் இன்னும் நீடித்துக்கொண்டுதான் இருக்கின்றன.

இந்திய முதலாளிகளுக்கு இலங்கையின் வர்த்தகத்தை தாரைவார்த்துக் கொடுக்க ராஜீவ் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதன் ஒரு பாகமாகத்தான் முதற்கட்டமாக இலங்கையில் உள்ள ஆயுதக்குழுக்களுக்கு தேவையான ஆயுதங்களையும் பயிற்சியையும் இந்திய உளவுத்துறை ரகசியமாக செய்து வந்தது. பின்பு இந்தியா வளர்த்து விட்ட அதே ஆயுதக்குழுக்களை அடக்குவதற்காக ராஜீவ் இலங்கைக்குள் படையை அனுப்பி வைத்தார். அதற்கு பதிலாக இலங்கை அரசு இந்திய முதலாளிகளுக்கு இலங்கையில் தொழில் செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுக்க வேண்டும். இதுதான் 13வது சட்ட த்திருத்தத்திலும் கூறப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இலங்கையில் அமெரிக்கா போன்ற வல்லாதிக்க நாடுகளுக்கு வர்த்தகம் செய்யமுடியவில்லை. இலங்கையின் ஆதிக்கம் இந்தியாவின் கையில் குறிப்பாக ராஜீவின் கையில் இருந்தது. இதனால் ராஜீவை தீர்த்துக்கட்ட அவர்களுக்கு கிடைத்த இரைதான் புலிகள் இயக்கம். புலிகளுக்கும் அமெரிக்காவுக்குமிடையே தரகர்களாக வேலைபார்த்தவர்கள்தான் சந்திரசாமியும் சுப்பிரமணிய சாமியும். இந்த உண்மை குறித்து நமக்கு பேச அச்சம். அதனால் தான் ராஜீவ் காந்தி படுகொலை வெறும் புலிகள் இயக்கத்தினருடன் மட்டும் பொருத்திப் பார்க்கப்படுகிறது.

இவ்வாறு ஓவ்வொரு பயங்கரவாத சம்பவத்திற்கும் பின்னால் மிகப் பெரிய அரசியல் உள்ளது. உளவுத் துறை அதிகாரிகளின் கைக்கூலிகளை வைத்து குண்டு வைக்கச் சொல்லி அதை அப்பாவி இஸ்லாமிய இளைஞர்கள் மீது கட்டும் கொடூர செயல் நமது மதுரையில் நடந்துள்ளது. அத்வானி வரும் பாதையில் வைக்கப்பட்ட பைப் வெடி குண்டுகள் உட்பட அனைத்து வெடிகுண்டுகளும் உளவுத் துறையினரின் இன்பார்மரான வஹ்ஹாப் என்ற இளைஞரை வைத்து செய்யப்பட்டது என்பது அப்பட்டமாக வெளி வந்துள்ளது. இது தொடர்பான வழக்கும் மதுரை ஹைகோர்ட் கிளையில் நடந்து வருகிறது. இதே போன்று பல சம்பவங்கள் உளவுத்துறையினரின் மேற்பார்வையில்தான் நடக்கிறது. இவர்களேதான் முடிச்சும் போடுகிறார்கள் அவர்களேதான் அதை அவிழ்க்கவும் செய்கிறார்கள்.

இந்த கண்ணோட்டத்தில் நாம் குண்டு வெடிப்பு நிகழ்வுகளை பார்க்கவேண்டும். இந்துத்துவா வாதிகள் கூறுவதைபோன்று பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ என்று ஒற்றை வாக்கியத்திலோ அல்லது நமது உளவுத் துறை அதிகாரிகள் கூறுவதைப் போன்று இந்தியன் முஜாஹிதீன் என்று இல்லாத இயக்கத்தின் பெயரை தொடர்பு படுத்துவதினாலோ குண்டு வெடிப்பின் அரசியல் முற்றுப்பெற்று விடாது. பல்வேறு முடிச்சுகளும் கண்ணிகளும் அதில் உள்ளன. நமது நாட்டின் பொருளாதாரத்தை சீர் குலைப்பதால் லாபம் அடைகின்ற ஏகாதிப்பத்திய நாடுகளின் எல்லை வரை இதன் நீட்சி உள்ளது. இது குறித்த தொடர் வாசிப்பு முதலில் குண்டு வெடிப்பு சம்பவங்களால் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கும் முஸ்லிம் இளைஞர்களுக்கு தேவை.

நமது நாட்டில் உள்ள உளவுத்துறை அதிகாரிகளுக்கும் காவல் துறை அதிகாரிகளுக்கும் பயிற்சி கொடுப்பது அமெரிக்கா, இங்கிலாந்து, இஸ்ரேல் போன்ற ஆதிக்க நாடுகள்தான். 1995 முதற்கொண்டு இந்திய உளவுத் துறை மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு அமெரிக்கா 113 பயிற்சி வகுப்புக்களை நடத்தியுள்ளது. இதற்காக அமெரிக்கா பத்து மில்லியன் டாலர்களை செலவளித்துள்ளது. இது எதற்காக? எல்லாவற்றிற்கும் காரணங்கள் உண்டு. இவர்க்ளேதான் தீவிர வாத இயக்கங்களை உருவாக்குகிறார்கள். பின்பு இவர்களேதான் அதை நிர்மூல மாக்குகிறார்கள். விழிப்போடு இருக்க வேண்டியது இந்திய சாதாரண மக்கள்தான். இல்லாவிட்டால் இப்போது முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக நடக்கும் இந்த சதி நாளை தலித் மக்கள் முதற்கொண்டு அத்தனை பிற்படுத்தப்பட்ட மக்களையும் கண்டிப்பாக பாதிக்கும் என்பது திண்ணம்.

- ஷாகுல் ஹமீது((ibnsheik@gmail.com)
நன்றி:கீற்று 

0 கருத்துகள்: