கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

பிஜேபி மட்டுமல்ல, அனைத்து கட்சிகளும் முஸ்லீம்களுக்கு எதிரானவை தான் : நீதிபதி சச்சார்


லக்னோ : முஸ்லீம்களின் பொருளாதார, சமூக மற்றும் கல்வி நிலை குறித்து ஆராய்வதற்காக பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவின் பேரில் 2005ல் தில்லி உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ராஜேந்தர் சச்சார் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அக்குழு முஸ்லீம்களின் நிலை குறித்து தெரிவித்த ஆய்வு முடிவுகள் முஸ்லீம்களின் பின் தங்கிய நிலையை தெளிவாக சுட்டி காட்டியது.

லக்னோவில் சோசலிச கட்சி ஏற்பாடு செய்த கருத்தரங்கில் பேசிய அக்குழுவின் தலைவரான ராஜேந்தர் சச்சார் நிமேஷ் புலனாய்வு அறிக்கையை உ.பி அரசு உடனே வெளியிட வேண்டும் என்று கூறினார். 2007 ல் உத்தரபிரதேசத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பந்தமாக ஆஸம்கரிலிருந்து காலித் முஜாஹித் மற்றும் தாரிக் காசிமி ஆகிய இருவர் கைது செய்யப்பட்டது சம்பந்தமான உண்மை நிலையை அறிய அமைக்கப்பட்டது தான் நிமேஷ் கமிட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

நிமேஷ் கமிட்டி தன் அறிக்கையை ஆகஸ்டு 21 அன்றே உ.பி அரசிடம் சமர்பித்த பிறகும் ஏன் உ.பி அரசு அறிக்கை வெளியிட மறுக்கிறது என்று வினா எழுப்பிய ராஜேந்தர் சச்சார் இது இரு இளைஞர்களின் வாழ்வு குறித்த பிரச்னை மாத்திரமல்ல என்றும் குண்டு வெடிப்பில் இறந்து போனவர்களுக்கான நியாயமாகவும் உண்மை குற்றவாளிகள் சமூகத்தில் தோலுரிக்கப்பட வேண்டும் என்று கூறினார். மேலும் தான் மற்றும் பிற முஸ்லீம் சிறைவாசிகள் சிறையில் படும் உளவியல் பிரச்னைகள் குறித்து தாரிக் எழுதிய கடிதத்தையும் நிருபர்களிடம் காண்பித்தார் சச்சார்.

சமீப காலமாக முஸ்லீம் இளைஞர்கள் பத்து ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த பிறகு நிரபராதியாக விடுதலையாவது முஸ்லீம்கள் இவ்வரசின் மீது நம்பிக்கை இழக்க காரணமாகி விடும் என்று எச்சரித்த சச்சார் மேலும் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை நொறுங்கி போய் விடும் என்றும் கூறினார்.

பாஜக மாத்திரம் மதவாத கட்சி என்று கூறுவது தவறு என்று கூறிய சச்சார் மத்தியிலும் தில்லியிலும் காங்கிரஸ் அரசுகள் இருக்கும் போதும் முஸ்லீம்கள் தவறாக பெருவாரியாக தீவிரவாத குற்றச்சாட்டில் சிறை வைக்கப்படுகிறார்கள் என்று வேதனை தெரிவித்தார். காங்கிரஸ் ஆட்சியின் போது தான் தில்லியில் 16 முஸ்லீம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு பின் ஜாமியா ஆசிரியர்கள் சங்கத்தின் அறிக்கை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார்கள் என்றார்.

புனேவின் யர்வாடா ஜெயிலில் போலீஸ் காவலில் கதீல் சித்திகி இறந்ததை குறித்து கருத்து தெரிவித்த சச்சார் நாஜிசம் ஒரு போதும் இந்தியாவில் வெற்றியடைய விட கூடாது என்றார். சவூதி அரேபியாவில் இந்திய உளவு துறையிடம் ஒப்படைக்கப்பட்ட ஃபஸீஹ் மஹ்மூத் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட வேண்டும் என்றும் கூறினார்.

அந்நிய முதலீடு குறித்து கருத்து தெரிவித்த சச்சார் கிழக்கிந்திய நிறுவனம் இந்தியாவை அடிமைப்படுத்தியதை விட மோசமான அடிமைத்தனத்துக்கு வழிவகுக்கும் செயல் என்று கூறினார்.  இந்நிகழ்வை ஏற்பாடு செய்த சோசலிச கட்சியின் பொது செயலாளர் ஓம்கார் சிங் தாம் ஆட்சிக்கு வந்தால் அப்பாவி முஸ்லீம் இளைஞர்களை சிறையில் இருந்து விடுவிப்போம் என்று சமாஜ்வாதி கட்சி கூறியதாகவும் ஆனால் சமாஜ்வாதி ஆட்சிக்கு பின் முஸ்லீம் இளைஞர்கள் சிறையில் அடைக்கப்படுவது அதிகரித்திருக்கவே செய்திருக்கிறது என்றும் கூறினார்.
http://www.inneram.com

0 கருத்துகள்: