கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

உழைக்கும் மனப்பான்மை குறைந்து வருகிறது

சட்டையின் மடிப்புக் கலையாமல், உடம்பு கசங்காமல், வியர்வை வராமல், நகத்தில் அழுக்குப்படாமல் வாழ வழியுண்டா? உபதேசம் செய்யும் உயர்ந்த மனிதனாக இருந்துவிட வாய்ப்புண்டா? அத்தகைய வாழ்க்கையை நிரந்தரமாக்கிக்கொள்ள முடியுமா? இதுவே இன்றைய சமுதாயத்தின் தேடுதலாக இருக்கின்றது. காரும், பங்களாவும் எடுபிடி ஆட்களும், உழைக்காமல் வரும் நிரந்தர வருமானமும், மாலை மரியாதையுமான விளம்பர வாழ்க்கையும்தான் இன்றைய சமூகத்தின் குறிக்கோளாகவும் இருக்கின்றது.

அதை நோக்கியே சமுதாயம் நகர்ந்துகொண்டும் இருக்கிறன்றது. காரணம் மக்களின் கண்ணுக்கு முன்னால் உல்லாசமாகத் திரிகின்ற பெரும்பாலோர் உழைக்காமல் வளம் தேடிக்கொண்டிருப்பதுதான்.

ஏன் இந்த நிலை?

உழைக்கும் மனம் மாறக் காரணம் என்ன? இத்தகையபோக்கு வளர்ந்ததற்குக் காரணம் என்ன? என்பதை நுணிகி எண்ணிப் பார்க்க வேண்டும். பலர் கடினமாக உழைக்கிறார்கள். நாள் முழுவதும் கடுமையாக உழைக்கிறார்கள். வியர்வை சிந்துகிறார்கள். ஆனால் தினம் பத்து ரூபாய் கூலிகூடக் கிடைப்பதில்லை. அதுவம் மாதம் முழுவதும் கிடைப்பதில்லை. நிரந்தரமற்ற, நம்பிக்கையற்ற ஒரு வாழ்க்கையாக இருக்கிறது. இத்தகைய நிலையிலுள்ள ஓர் இளைஞனைப் பார்க்கிறான். அவன் பத்தாம் வகுப்போ பதினொன்றாம் வகுப்போ படித்தவன். ஏதோ ஒரு எழுத்தர் வேலையில் இருக்கிறான். காலையில் 10 மணிக்கு அலுவலகம் போகின்றான்; மாலை 5 மணிக்கு வீடு திரும்பிவிடுகின்றான். நிரந்தரமான வருவாய்; ஞாயிறு விடுமுறை. ஆண்டுதோறும் ஊதிய உயர்வு. பதவி உயர்வு. இப்படிச் சாதாரண வாழ்க்கையாக இருந்தாலும், இந்த நிரந்தர வாழ்க்கையைக் கண்டு, உடல் உழைப்பை மேற்கொள்ளும் இளைஞன் என்ன நினைக்கிறான்? ஓ.. நாம் ஏமாந்துவிட்டோம். இனி நம் மகனையாவது இப்படிப் படிக்க வைத்து உடல் கசங்காத வாழ்க்கையை ஏற்படுத்தித்தர வேண்டும் என்று நினைக்கின்றனர்.

இவர் அடுத்தவரை…..

இந்த எழுத்தர் என்ன நினைக்கிறார்? நாம் பலருக்குக் கை கட்டி நிற்கவேண்டி இருக்கிறது. நம் மகனைக் கல்லூரிப் படிப்புவரை படிக்கவைத்து மேலாளர் ஆக்கிவிட்டால், அவனிடத்தில் பலர் கைகட்டி நிற்கும்படி செய்துவிடலாம், வருமானமும் கூடுதல், வேலையும் குறைவு மேலே போகப் போகக் கையெழுத்தும் பொறுப்பும்தானே வேலை. கையெழுத்தைப் போடுகிறார்கள் பொறுப்பை யார் ஏற்கிறார்கள்? இந்த நாட்டில் ஏழ்மைக்கும் அறியாமைக்கும் யார் பொறுப்பு? தலைமைப்பீடத்திலும், தலைமைப் பதவியில் இருந்தவர்களும் இருப்பவர்களும்தானே! அவர்கள் பொறுப்பு ஏற்பார்களா? மாட்டார்கள். விளக்கம் தருவார்கள், போகட்டும் நாமாவது புத்திசாலித்தனமாக நடந்துகொள்ளலாம் என்று நினைக்கின்றார்.

அலுவலர் சுகம் தேடி.

இந்த மேலாளர் என்ன நினைக்கின்றார்? இன்னும் கொஞ்சம் படித்திருந்தால் உயர் அலுவலர் ஆகி இருக்கலாம். தனியாக கார், பங்களா, பணியாள் மற்ற வசதிகள் எல்லாம் கிடைத்திருக்கும். அலுவலக நேரத்திலேயே நம் சொந்த வேலைகளையும் கவனித்துக் கொள்ளலாம். அல்லது 5 மணி ஆனால், கடமை முடிந்தது. அடேடே! இந்த வாழ்க்கையை பிடிக்க ஏமாந்து விட்டோமே? நம் மகனையாவது இப்படிப்பட்டதொரு வேலையில் அமர்த்திப் பார்க்கவேண்டும் என்று நினைக்கின்றார். அவருடைய நோக்கம் அதுவாகப்போய்விடுகிறது.

தொழில் துறையில்

இதே போல்தான் தொழில் துறையிலும், அடிப்படை உழைப்பாளி அப்படியே அமிழ்ந்துபோய் இருப்பான். ஆனால் அத்தகையவர்கள் உழைப்பை எல்லாம் சேர்த்து வியாபாரம் செய்பவன், அத்தகைய உழைப்பே இல்லாமல் இருமடங்கு மும்மடங்கு வருமானம் பெறுவான். அதனால் உழைப்பவன் என்ன நினைக்கின்றான்? இதை விடுத்து ஒரு பெட்டிக் கடையாவது வைத்து வாழளாம். அதில் உழைப்புக் குறைவு, வருவாழ் அதிகம் என்று தெரிந்திவுடன் அத்தகைய முறையில்தன் தொழிலை விரிவுபடுத்திக்கொள்கிறான்.

உயர்மட்டக் குறிக்கோள்.

இனி நாம் இழப்பதற்கு என்று நம்மிடம் ஒன்றுமே இல்லை என்று, வாய்ச்சொல்லையே முதலீடாக்கிச் சிலர் அரசியலில் புகுகிறார்கள். சிலர் இளமையும் வளமுமாக உள்ள உடம்பை முதலீடாக்கியே சினிமாவில் புகுகின்றார்கள். குறைந்த உழைப்பு, நிறைய வருமானம் என்பது அவர்கள் முதல் கட்ட நோக்கமாக இருக்கிறது. பிறகு உழைப்பே இல்லாமல் நிரந்தர வருமானம் என்பது அவர்கள் உயர்மட்டக் குறிக்கோளாகிவிடுகிறது.

இரண்டு கண்களும் பார்க்கின்றன

இத்தகைய வாழ்க்கையை உழைக்கின்ற ஒவ்வொரு இரண்டு கண்களும் பார்க்கின்றன. இனி உழைத்துக் கொண்டே இருந்தால் வாய்க்கும் கைக்கும் மற்றாத, இந்த நிரந்தரமில்லாத பத்துரூபாய் வாழ்க்கைதான். அதனால் முதலில் கிராமத்தை விட்டு நகரத்திற்குப் போக வேண்டும் என்று நினைக்கின்றான். நகரத்துக்கு வருகின்றான். அங்கேயும் இவன் நினைப்பதுபோல அந்த வாழ்க்கை கிடைப்பதில்லை. ஏமந்துபோகின்றான். பழைய நிலையிலும் தாழ்ந்து போகிறான். இன்னும் சிலர் எதற்கும் துணிகிறார்கள்; ஏமாற்றுகிறார்கள், தீய சக்திகளாக உருவாகிறார்கள்.

ஒரு கேள்வி

ஒவ்வொரு உள்ளத்திலும் ஒரு கேள்வி எழுகிறது. அவர்கள் உழைக்காமல் வசதியோடு வாழ்கிறார்களே அது எப்படி? இது பலருடைய எண்ணத்தில் புகுந்து உழைக்கும் மனப்பான்மையைக் கெடுத்துவிடுகிறது. உழைக்காமல், தவறான வழியில் வருமானம் வந்தால் அதற்குத் தண்டனை இல்லை. அத்தகையவர்களைச் சமுதாயம் ஒதுக்கி வைப்பதற்குப் பதிலாக உயர்ந்த நிலையில் வைத்துக்கொண்டாடுகிறது. புகழாரம் சூட்டுகிறது. அதனால்; நாமும் ஏன் இந்த வழியைப் பினபற்றக்கூடாது என்று ஒவ்வொருவரும் அந்த வழியைப்பின்பற்றுகிறார்கள்.

வேளாண்மையா? வாணிபமா?

எடுத்துக்காட்டாக ஒன்றைக் காணலாம். கடுமையாக உழைத்துப் பயிர்த்தொழில் செய்கிறார்கள். ஒரு நாளைக்கு 15 மணி நேரத்திற்கு மேலாக உழைக்கிறார்கள். அந்த உழைப்புக்கு ஈடு இணை சொல்ல முடியாது. ஆனால் உழவர்கள் வாழ்க்கை வறுமையும் ஏழ்மையும் நிறைந்த வாழ்க்கையாகவே இருக்கிறது. அதே நேரத்தில், அதே குடும்பத்தில் ஒருவன் உழவுத்தொழிலை விடுத்து அதே பொருளை வாங்கி விற்று வணிகத்தில் ஈடுபடுகிறான். குறைந்த விலைக்கு வாங்குகிறான், காய் கறிகளையும் பழங்களையும் பாலையும் உழவன் எத்தனை நாளைக்கு வைத்திருக்க முடியும்? அன்றே விற்றாக வேண்டுமே! இல்லாவிட்டால் இதுவும் கிடைக்காதே என்ற அனுபவம். அதனால் கிடைத்த விலைக்கு விற்கிறான். இதை எல்லாம் வாங்கி ஒன்றுசேர்த்து வியாபாரி, நகரத்திற்கு எடுத்துச் சென்று இவ்வளவு விலைக்குத்தான் கொடுப்பேன் என்று பேரம் பேசுகிறான். நான்கைந்து வியாபாரிகள் ஒன்று சேர்ந்துகொண்டு நகரத்துக்குள் காய்கறிகள் போகாமல் செய்துவிடுகிறார்கள். மக்கள் என்ன செய்வார்கள்? சரி எந்த விலையானாலும் கொடு என்று வாங்குகிறார்கள். இப்படி அதிக உழைப்பே இல்லாமல் உற்பத்தி செய்பவர்களின் அவசர நிலையையும், வாங்குவோரின் அவசிய நிலையையும் பயன்படுத்திக்கொள்ள இலாபம் சம்பாதிக்கிறார்கள்.

ஒவ்வொரு துறையிலும் இதே நிலைதான். அதனால் அடிமட்டத்தில் உழைப்போரும் பொதுமக்களும் காலம் காலமாகப் பாதிக்கப்பட்டே வருகிறார்கள். இந்த இரு சாராரின் சூழ்நிலையையும் நன்கு புரிந்துகொண்ட புத்திசாலிகள். அரசியலிலிருந்து அலுவலர்கள், வணிகர்கள், ஏன் இந்த நாட்டைச் சீர்திருத்தப்போகிறோம் என்று கூறும் எழுத்தாளர்கள் வரை, எல்லோரும் உழைக்காமல் வழா வழி தேடுகிறார்கள். இந்த வகையில் வழிகாட்டிகளாக இருக்கிறார்கள். இதில் சிறுபான்மை விதிவிலக்காக இருக்கலாம். பெரும்பான்மை உழைக்காதவர்கள்தாம்.

அதனால், இளைஞர்கள் என்ன நினைக்கிறார்கள்? சினிமாவில் வாய்ப்புக் கிடைக்குமா? அரசியலில் புகலாமா? கமிஷன் வியாபாரத்தில் இறங்கலாமா? கடைகள் வைக்க வைத்த சொத்திருந்தால் திரையரங்கு கட்டவிடலாமா? என்று இப்படித்தான் உற்பத்தி இல்லாத தொழிலில் இறங்குகிறார்களே ஒழிய, தொழிற் சாலை தொடங்கலாமா, உற்பத்தித் துறையில் நாட்டத்தைச் செலுத்தலாம் என்ற மனப்பான்மை யாருக்கும் இல்லை. வேளாண்மைப் பட்டதாரிகள், பொறியியல் பட்டதாரிகள், கால்நடை மருத்துவப் பட்டதாரிகள் எல்லாம் தங்கள் தொழிலைச் செய்ய முன்வராமல் வங்கியில் கணக்கெழுதும் எழுத்தாளர்களாகப் போகிறார்களே ஏன்? குறைந்த உழைப்பு நிறைந்த வருமானம் இதுதான் காரணம். இன்னும் மருத்துவ பட்டம் பெற்றவர்கள் வங்கிக்கு விண்ணப்பிக்கவில்லை. அந்தக் காலமும் விரைவில் வந்துவிடும்.

என்ன செய்ய வேண்டும்?

1. நமது மனப்பான்மையில் மாற்றம் நிகழவேண்டிய கல்விமுறை அமைய வேண்டும். படித்து முடித்ததும் உற்பத்தியில் தொழில் துறையில் இறங்கவேண்டும் என்ற உணர்வுள்ள கல்வியை தனித்து நிற்கக்கூடிய தன்னம்பிக்கையை வளர்க்கும் கல்வியை அளிக்க வேண்டும்.

2. அரசு அடிப்படைத் தேவைகளான உணவு, உடை உறையுள் போன்ற உற்பத்தித் தொழிலுக்கு முன்னுரிமை கொடுத்துப் பேண வேண்டும். அப்போது நாட்டில் வறுமை, வேலையின்மை போன்றவை இயல்பாகவே இல்லாது ஒழிக்க முடியும்.

3. தவறான முறையில் உழைக்காமல் பணம் சேர்க்கும் வழிகைள அடைப்பதோடு அவ்வாறு பணம் சேர்க்கின்றவர்களுக்கும், அரசை ஏமாற்றுகின்றவர்களுக்கும் கடுமையான தண்டனை வழங்கவேண்டும். அத்தண்டனையின் மூலம் அவர்கள் மட்டுமல்லாது மற்றவர்களும் திருத்த வேண்டும்.

4. உடல் உழைப்பிற்கும் மூளை உழைப்பிற்கும் உள்ள ஊதிய இடைவெளி குறைக்கப்பட வேண்டும். ஒரு பண்பட்ட சமுதாயத்தை உருவாக்கவும், நாட்டில் எல்லாருக்கும் அடிப்படைத் தேவைகளாவது கிடைக்கவும் வழிசெய்ய இதுவே சிறந்த வழியாகும்.

5. உழைத்து முன்னேறியவர்களைச் சமுதாயம் பாராட்ட வேண்டும். எந்த வகையிலும் உழைக்கமால் வாழ்கின்றவர்களுக்குச் சமுதாயம் ஒவ்வொரு கட்டத்திலும் தடைவிதிக்க வேண்டும். ஒதுக்க வேண்டும். இத்தகைய கருத்துக்கள் பற்றி இளைஞர்கள், நல்லிதயம் கொண்டோர், சமுதாய நலங்கருதுவோர் தொடர்ந்து சிந்திப்பார்களாக.

நன்றி: இல.செ.கா.வின் ‘சிந்தனை மலடுகள் என்னும்’ நூலிலிருந்து..
http://www.thannambikkai.net/

0 கருத்துகள்: