கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

பால், காய்கறியில் ஆக்சிடோசின் நஞ்சு! உணவில் பயங்கரவாதம்!

பெருகி வரும் மக்கள் தொகையின் விளைவாக உணவுத் தேவை வேகமாக அதிகரித்து வருகிறது. இதைப் பயன்படுத்தி பல குறுக்கு வழிகளில் உணவுப் பொருள்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. குறுகிய காலத்துக்குள் அதிக அளவில் உணவுப் பொருள்களைத் தயாரித்து லாபம் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் பெரும்பாலான தயாரிப்பாளர்களிடம் அண்மைக் காலமாக மேலோங்கி வருகிறது.

இதன் காரணமாக முன்பை போல உணவில் சுகாதாரத்தையோ, வளமிக்க சத்தையோ பெற முடிவதில்லை. இதனால் ஒருகாலத்தில் உணவே மருந்தாகிய காலம் போய், இன்று உணவே விஷமாகி வருகிறது. அந்த அளவுக்கு நாம் சாப்பிடும் பெரும்பாலான உணவுப் பொருள்களில் ஏதாவது ஒரு வகையில் விஷத்தன்மை கலக்கிறது அல்லது கலக்கப்படுகிறது.
பசுமைப்புரட்சி என்ற பெயரில் பயிர்கள் அனைத்தும் விஷத்தன்மையோடு வளர்கிறது என்றால், அவை உணவுப் பொருளாக விற்பனைக்கு வரும்போது அவற்றில், மேலும் பல வகைகளில் கலப்படம் செய்யப்பட்டு விஷத்தன்மை சேர்க்கப்படுகிறது. இதனால் இப்பொருள்களைச் சாப்பிடும் நாமும் தொற்றுநோய்களின் களமாக மாற்றப்படுகிறோம். உணவு விஷமாகி வருவதால், இன்று மனிதர்களைப் பல்வேறு தொற்றுநோய்கள் தாக்குகின்றன.
பெண்கள் பிரசவத்தின்போது நஞ்சைப் பிரித்தெடுப்பதற்காக மருத்துவர்கள் பயன்படுத்தும் ஒருவகை ஹார்மோன்தான் ஆக்சிடோசின் என்பது. இந்த மருந்தை மிகவும் குறைந்த விலைக்கு அனைத்து மருந்துக் கடைகளிலும் வாங்கலாம்.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பெண்கள் பிரசவத்துக்கும் மற்றும் சில நோய்களுக்கும் மருந்தாகப் பயன்படுத்தப்பட்ட ஆக்சிடோசின், இப்போது மாடுகளில் அதிகம் பால் சுரப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.
இந்தப் பாலைச் சாப்பிடும் நபர்களைப் புற்றுநோய், குறைந்த ரத்த அழுத்தம் போன்றவை தாக்குவதற்கு அதிகம் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனாலும் மாடு வளர்ப்போரில் சில பேராசைக்காரர்கள் மாடுகளுக்கு இந்த வகை மருந்தை ஊசியின் மூலமாகச் செலுத்துவதை நிறுத்தவில்லை. இந்த மருந்து ஊசி போடப்பட்ட மாட்டின் பாலைச் சாப்பிடும் மனிதர்களுக்கே புற்றுநோய் போன்றவை வருகிறதாம். அந்த மருந்தை தினமும் உட்கொள்ளும் மாடுகளின் நிலைமையோ அதைவிட மோசம்.
உதாரணமாக 10 ஆண்டுகள் வாழ வேண்டிய மாடுகள், இந்த மருந்தால் 5 ஆண்டுகளுக்குள் மடிந்துவிடுவதாக சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.
மருத்துவப் பயன்பாட்டைத் தவிர்த்து வேறு எந்தப் பயன்பாட்டுக்கும் இந்த ஹார்மோனைப் பயன்படுத்தக்கூடாது என அரசு உத்தரவிட்டது. உத்தரவிட்டதோடு அரசு திருப்தியாகிவிட்டது எனலாம். ஆனால், இன்றும் நம் ஊரில் சிறிய மருந்துக்கடைகளில் இந்த மருந்தை மருத்துவரின் எந்தப் பரிந்துரைச் சீட்டும் இல்லாமல் வாங்கிவிடலாம். அந்த அளவுக்கு தாராளமயமாக ஆக்சிடோசின் விற்பனை செய்யப்படுகிறது.
அதேவேளையில் ஆக்சிடோசின் ஆலகால விஷமாக தனது விஷத்தன்மையை விஸ்தரித்து வருகிறது. மாடுகளுக்கு மட்டும் செலுத்தப்பட்ட இந்த மருந்து, இப்போது காய்கறிச் செடி வளர்ப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.
விவசாயிகள் அதிக மகசூலைப் பெறுவதற்கு ஆக்சிடோசினை செடிகளில் செலுத்துவதாக மத்திய சுகாதாரத் துறை கூறுகிறது. இந்த மருந்தால் காய்கறிகள் அதிக பருமனையும், அழகான வடிவத்தையும், பசுமை நிறத்தையும் பெறுகின்றன.
குறிப்பாக பரங்கிக்காய், சுரைக்காய், தர்பூசணி, வெள்ளரிக்காய், கத்தரிக்காய் ஆகிய காய்கறிகளில் அதிகம் செலுத்தப்படுவதாக சுகதாரத் துறையே தெரிவிக்கிறது. ஆக்சிடோசின் செலுத்தப்பட்ட செடியின் காய்கறிகளைச் சாப்பிடும்போது நரம்புத் தளர்ச்சி, புற்றுநோய், குறைந்த ரத்த அழுத்தம், மலட்டுத்தன்மை, ஆண்மைக் குறைவு ஆகிய நோய்கள் ஏற்படும் என மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகச் சென்று கொண்டிருக்கிறது.
ஆக்சிடோசின் கொடுக்கப்படும் மாடுகளைக் கூட ஒருகாலகட்டத்தில் கண்டு கொள்ளலாம். ஆனால் காய்கறிகளை இனம் கண்டுபிடிப்பது மிகவும் கடினம். இந்த காய்கறிகளைச் சாப்பிட்டவுடன் நமக்கு எந்தவிதப் பாதிப்பும் தெரியாது. வெகுநாட்கள் சென்ற பின்னர்தான் ஆக்சிடோசின் மனித உடலுக்குள் தனது வேலையைக் காட்டத் தொடங்கும்.
விலங்குகளுக்கோ, தாவரங்களுக்கோ ஆக்சிடோசினைப் பயன்படுத்தக்கூடாது என தடை இருந்தாலும்,  இந்த மருந்து மிகவும் குறைந்த விலையில் கிடைப்பதே, விவசாயிகள் இதை அதிகம் பயன்படுத்துவதற்குக் காரணமாக கூறப்படுகிறது. இதன் விளைவாகவே இந்த குறுக்கு வழியை விவசாயிகள் தேர்ந்தெடுக்கின்றனர். இன்றைய நிலவரப்படி 1 மில்லி ஆக்சிடோசின் ரூ.15-இல் இருந்து ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இது தாவரங்களுக்கும், விலங்குகளுக்கும் கொடுக்கும் சத்தான உரப்பொருள்களைக் காட்டிலும் பலமடங்கு விலை குறைவாகும்.
பெரிய விளைவையும், பாதிப்பையும் ஏற்படுத்தும் இப்பிரச்சனையின் ஆழத்தை அரசு உணரவில்லையென்றே கூற வேண்டும். அதன் காரணமாகத்தான், இன்றும் மக்களிடம் சாதாரணமாக ஆக்சிடோசின் நடமாடுகிறது. அரசு இனியும் ஆக்சிடோசின் விஷயத்தில் தெளிவான, கடுமையான நடவடிக்கையை எடுப்பதற்கு காலதாமதப்படுத்தினால், நாளைய தலைமுறையை நோயுள்ளதாக்கும் செயலில் அரசுக்கும் முக்கிய பங்கு இருக்கும்.
நன்றி:சமூக நீதி
 
 

குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள்

குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்களில் இன்று செல்பேசியும் இடம் பெற்றுவிட்டது. அம்மாவுடைய போன், அப்பாவுடைய போன் மற்றும் மாமா, மாமிகள் வைத்திருக்கும் செல்போனை அந்தக் குழந்தைகள் வாங்கி பெரியவர்கள் பேசுவதுபோலவே காதில் வைத்து “ஹலோ” சொல்வதை பெரும் பேறாகக் கருதி உள்ளம் மகிழ்வார்கள்.
“என்னமா பேசுது பாரு; அதுல என்னென்ன ஆப்ஷன் இருக்குன்னு எனக்குத் தெரியாது. அதுக்கு நல்லா தெரியும்” பெருமை பொங்க தன் பிள்ளை செல்போன் நோண்டுவதை பெற்றோர் ரசிப்பார்கள்.
என்னதான் விலைதந்து செல்போன் வாங்கினாலும் அதில் அனைத்தும் விஷத்தன்மையுள்ள கதிரலைகளின் வாயிலாகத்தான் இயங்குகின்றன. பெரியவர்களின் எலும்பு ஓரளவு வளர்ச்சியடைந்து கனமாகி இருக்கும். பாதிப்புகள் இதனால் சற்று குறைவு. ஆனால் குழந்தைகள் எலும்பு மெலிதானது. இதனால் கதிரலை உடனடியாக அவர்களை ஊடுருவி தாக்கும் அபாயம் உண்டு.
நாடெங்கும் இரண்டரை இலட்சம் கதிரலை பரப்பும் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2ஜி, 3ஜி என்பது இந்தக் கோபுரங்களிலிருந்து கதிரலை பீய்ச்சி அடிக்கும் திறனைக் குறிப்பது. 2ஜி தகவல் பரிமாறலாம், சேமிக்கலாம், இணையத்தோடு தொடர்பு கொள்ளலாம். 3ஜி இவை அனைத்தையும் தாண்டி முன்னிலும் வேகமான செயல்பாடுள்ளது. நடந்தபடியே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை, வீடியோக்களை பார்க்கும் வகையில், செல்பேசியில் உள்ள அலை ஈர்ப்புத்திறன் கூட்டப்பட்டுள்ளது. அதைப்போல் அலைவீச்சும் பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அணுகுண்டு கதிர்வீச்சு போலவே இந்தக் கதிரலைகள் வான்வெளி முழுவதும் வியாபித்து தொலைத் தொடர்பை உருவாக்குகிறது.
அறிவியலின் தொலைத்தொடர்பு மகத்தான கண்டுபிடிப்பு இந்த 3ஜி. அதே நேரம் இது ஓர் அறிவியலாகவும் உள்ளது. இளம் பிள்ளைகள் 3ஜி வசதியுள்ள மொபைல்களை கையாளும் போது அதன் கதிரலை பயன்படுத்தும் மனிதனின் மண்டையோட்டை, செவித்திறனை, தோலை, மூளையை வெகுவாக பாதிக்கும் என்கிறார் மும்பை ஐ.ஐ.டி. பேராசிரியர் கிரிஷ்குமார். இதற்காக இவர் நாடெங்கும் உள்ள அலைக்கற்றை கோபுரங்கள் வெளியிடும் கதிர்வீச்சை ஆய்வு செய்து இந்த முடிவை தெரிவித்துள்ளார்.
3ஜி என்பதை மூன்றாம் தலைமுறை அலைக்கற்றை என்பார்கள்.  ஆனால், அடுத்த தலைமுறை புற்றுநோயாளிகளாக மாறும், மாற்றும் அபாயம் உள்ளதாகத்தான் அதன் முடிவுகள் தெரிவிக்கின்றன.
பெல்ஜியம், போலந்து, பின்லாந்து, பிரான்ஸ், இஸ்ரேல், ருசியா முதலிய நாடுகளில் உள்ளவர்கள் கதிரலை உடலில் பட்டால் ஏற்படும் ஆபத்தை உணர்ந்த படிப்பாளிகள் என்பதால், அங்கெல்லாம் மொபைலை குழந்தைகள் தொட ஊக்குவிப்பதில்லை.
மீறி என்னதான் நடந்துவிடும் நம் குழந்தைக்கு, பார்த்துவிடலாமே! என  எண்ணும் பணமுள்ள படிப்பில்லாதவர்கள் தங்கள் குழந்தை தவறி கீழே விழுந்தால் ஏற்படும் சிராய்ப்பு, இரத்தக் கசிவை கண்களால் பார்க்க இயலும். ஆனால் கதிரலை பாதிப்பு என்பது சட்டென்று தெரியாது. காலப் போக்கில் தான் அது தெரிய வரும்.
நரம்பு மண்டலம் தாக்கப்படுவதால் மனநல பாதிப்பு, இனம் புரியாத தலைவலி, நினைவாற்றல் குறைபாடு, தலை கிறுகிறுப்பு, அடிக்கடி உடல் சிலிர்ப்பு, தசைப்பிடிப்பு, மரத்துப்போதல், தசை மற்றும் மூட்டுக்களில் வலி, மனச்சிதைவு, உறக்கமின்மை இவைகளுடன் சமயங்களில், கைகால் செயலிழப்பு, வலிப்பு, மனநோய் என பலவும் கதிர்வீச்சால் உண்டாவது. குறிப்பாக விலை என்ன இருந்தாலும் சில மொபைல்களில் தொடர்பு கொண்டால் உரிய சிக்னல் கிடைக்காமல் நீண்ட நேரம் அழைப்பு சென்றபடி இருக்கும். இது போன்ற நிலை ஆபத்தானது. வலுவில் கதிரலையை தன்னால் இயன்ற அளவைவிட கூடுதலாக திறனை பயன்படுத்திடும்போது அந்த செல்பேசி பன்மடங்கு கதிரலையை நமக்குள் பரவ விடுகிறது.
ஆக நாகரீக பெருமைக்கான ஒரு சாதனமாக செல்பேசி இருந்தாலும் ஏகப்பட்ட ஆபத்தையும் உள்ளடக்கியுள்ளதால்  உங்கள் குழந்தைகள் கையில்மட்டும் தயவு செய்து தராதீர்கள். அவர்கள் அழிவை அறியாத பிஞ்சுகள். அவர்கள் உடல் நலனோடு நோய் நொடியின்றி வாழ, அவர்களுக்காகத்தான் நான் சம்பாதிக்கிறேன் என்பது உண்மையானால் உங்கள்  மொபைலை தயவு செய்து அவர்களிடம் விளையாட்டாகக் கூட தராதீர்கள்.
ஆயிரக்கணக்கான கோடிகளை இதில் முதலீடு போட்டு தொழில் செய்யும் நிறுவனங்களுக்கு உங்கள் மீதும் உங்கள் குழந்தைகள் மீதும் அக்கறை இருக்கும் என எதிர்பார்ப்பது தவறு. நாம்தான் கேடு வரும் முன்பு காத்துக் கொள்ள வேண்டும்
நன்றி :- சமூகநீதி முரசு
 

தேச வளர்ச்சியில் இஸ்லாமியர்களின் பங்கு

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
“இஸ்லாமியர்கள் தேசிய உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும்” எனவும், “தேசத்தைப் பாதுகாக்க இந்திய பண்பாட்டைப் பின்பற்ற வேண்டும்” எனவும் இந்து மத சார்பு இயக்கங்கள் அறைகூவல் விடுவது வழக்கமாகி விட்டது. இஸ்லாமியர்கள் தேச நலனில் அக்கறை இல்லாதவர் போலவும், தேச வளர்ச்சியில் பங்களிக்காதவர்கள் போலவும் நினைக்க வைக்கிற முயற்சியே இந்த அறைகூவல்கள். இந்த சிந்தனையை இந்து மத சார்பு இயக்கங்கள் பரப்ப முடிவதற்கு காரணம் “தேச விடுதலைக்கு இஸ்லாமியர்கள் ஆற்றிய பெரும் பணிகள்” பற்றி நம்மில் பெரும்பாலானவர்கள் மறந்து விட்டதுதான்.

மகாத்மா காந்தி ‘கள்ளுக்கடை மறியல்’ நடத்த அறிவித்தபோது மதுரையில் பங்கு பெற்றவர்கள் பத்தொன்பதுபேர். அதில் இஸ்லாமியர்கள் பத்துபேர்! கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி அவர்கள் சுதேசிக் கப்பல் வாங்க முடிவு செய்தபோது அதற்காக ஆரம்பித்த அறக்கட்டளையில் இருந்த தூத்துக்குடி ஹாஜி பக்கிர் முகம்மது அவர்கள் பத்து லட்ச ரூபாய் அளித்தார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது! மகாகவி பாரதியார் தனது பத்திரிக்கை மூலமாக வேண்டுகோள் விடுத்ததில் கிடைத்த நன்கொடை சில நூறு ரூபாய்கள்தான்! அதே போன்று, காந்திஜி “வெள்ளையர் அளித்த பட்டம் பதவிகளைத் துறக்க வேண்டும்” என அறிவுறுத்தியபோது பெருமளவில் முஸ்லிம்கள் தங்கள் கல்வி, பதவி, பட்டங்களைத் துறந்து தேச பக்தியை வெளிப்படுத்தினர். பலரும் ஆங்கிலேயர் கொடுத்த பட்டங்களைத் துறக்காமல் இருந்த நேரம் அது! அந்த நேரத்தில் காயிதே மில்லத் அவர்கள் தனது படிப்பை நிறுத்தி இருக்கா விட்டால் குறைந்த பட்சம் ஒரு பாரிஸ்டராகி இருக்க மாட்டாரா?

இந்திய தேசிய ராணுவத்தை (ஐ.என்.ஏ) நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் துவங்கியபோது ரங்கூன் சென்று அங்குள்ள இந்தியரிடம் உதவி வேண்டியபோது, வள்ளல் ஹபீப் கொடுத்த தொகை எவ்வளவு தெரியுமா? ஒரு கோடி ரூபாய் (அந்த காலத்தில்). மேலும், நேதாஜி அவர்கள் ஐ.என்.ஏ.வில் முதல் ராணுவ ஜெனரலாக நியமித்தது ஷா நவாஸ் கான் என்கிற வீரனைத்தான்! நேதாஜி அமைத்த “மாதிரி அமைச்சரவை”யில் இருபது மந்திரிகள் இருந்தனர். அதில் ஐந்து பேர் முஸ்லிம்கள்!

சுதந்திரம் கிடைத்த நேரத்தில் (அந்த கடினமான காலத்தில்) இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக இருந்தவர் மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்கள்தான்! இவ்வாறு இஸ்லாமியர்கள் செய்த தியாகங்களைப் பற்றி எழுதிக்கொண்டே போகலாம்! சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்ற நூற்றுக் கணக்கான முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த தியாகிகளைப் பற்றி படித்துப் பாருங்கள்! அர்ப்பணித்தவர்களை மறக்க முடியுமா?
நன்றி : கீற்று

பிரிட்டனில் இஸ்லாத்தை தழுவுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

லண்டன்,ஜன.5:கடந்த பத்தாண்டுகளில் பிரிட்டனில் இஸ்லாத்தை தங்களது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
britain womens
ஃபைத் மேட்டர்ஸ் நடத்திய ஆய்வில்தான் இஸ்லாத்தை தழுவுபவர்களின் எண்ணிக்கை நினைத்தைவிட ஆச்சரியப்படத்தக்க வகையில் அதிகம் என தெரியவந்துள்ளது.
இஸ்லாத்தை பற்றிய தவறான பிரச்சாரம் பிரிட்டனில் பரப்பப்பட்டு வந்தாலும் ஆயிரக்கணக்கான பிரிட்டன் மக்கள் இஸ்லாத்தை தங்களது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொள்கின்றனர் என ஃபைத் மேட்டர்ஸ் நடத்திய சுதந்திர ஆய்வு தெளிவுப்படுத்துகிறது.
பழைய புள்ளிவிபரங்களின் படி 14 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரையிலான நபர்கள் இஸ்லாத்தை தழுவுவதாக கணக்கிடப்பட்டிருந்தது. ஆனால், மக்கள் தொகை கணக்கெடுப்பில் மதமாறுபவர்களின் எண்ணிக்கையை குறிப்பிடாதது சிக்கலை ஏற்படுத்துகிறது.
ஒரு லட்சம் பேராவது இதுவரை இஸ்லாத்தை ஏற்றிருக்கலாம் என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு பிரிட்டனின் தலைநகரில் மட்டும் 1400 பேர் இஸ்லாத்தை தழுவியுள்ளனர்.
பிரிட்டனில் தேசிய அளவில் வருடந்தோறும் 5200 பேர் இஸ்லாத்தை தழுவி வருகின்றனர். ஜெர்மனியிலும், பிரான்சிலும் இஸ்லாத்தை தழுவுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 4000 ஆகும்.
கடந்த 2001 ஆம் ஆண்டில் பிரிட்டனில் 60,699 பேர் இஸ்லாத்தை தழுவியதாக கணக்கிடப்பட்டுள்ளது.
source:times of India

இஸ்லாமியர்களுக்கு ஏற்ற முதலீடு... ஷரியா முதலீடுகள்

இஸ்லாம் மதச் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு செய்யப்படும் பங்கு சார்ந்த முதலீடுகள் உலகெங்கிலும் அதிகமாகி வருகிறது. ஷரியாவுக்கு உட்பட்டு முதலீடு செய்ய விரும்பும் இஸ்லாமிய முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டிலும் மற்ற பிற மாநிலங்களிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர்.

ஷரியாவுக்கு உட்பட்ட முதலீடு என்றால் என்ன, அவ்வகையான முதலீடுகள் இந்தியாவில் என்னென்ன உள்ளன என்பதைப் பற்றி சற்று விரிவாக எடுத்துச் சொல்லவே இந்தக் கட்டுரை. முதலில் ஷரியாவுக்கு உட்பட்ட முதலீடுகள் என்றால் என்ன என்பதை சுருக்கமாகப் பார்த்துவிடுவோம்.

ஷரியா முதலீடு...?
ஷரியா என்பது இஸ்லாமியச் சட்டமாகும். இந்தச் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு செய்யப்படும் முதலீடு, ஷரியாவுக்கு உட்பட்ட முதலீடுகள் என்று கூறப்படுகிறது.

வேகமாக வளர்ந்து வரும் துறை!

இன்றைய தேதியில் உலக அளவில் அதிவேகமாக வளர்ந்து வரும் துறைகளில் ஷரியா முதலீட்டுத் துறையும் ஒன்று. நமது கேரள அரசாங்கம் சென்ற ஆண்டு ரூ.1,000 கோடி அளவில் இஸ்லாமிய வங்கி ஒன்றை ஆரம்பித்து, அடிப்படைக் கட்டுமானத் துறைக்கு உபயோ கிக்கத் திட்டமிட்டது. தற்போது நீதிமன்றம் அதற்குத் தடை உத்தரவு கொடுத்துள்ளது என்றாலும், இந்த வங்கி தொடங்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிமாக உள்ளன.

லண்டனைச் சார்ந்த எஃப்.டி.எஸ்.இ. நிறுவனம் இஸ்லாமிய முதலீடுகள் ஆண்டுக்கு 15 - 20% வளர்ந்து வருவதாகக் கூறுகிறது. பங்கு சார்ந்த முதலீடுகள் 2010-ல் 53 பில்லியன் டாலருக்கு மேலாக (கிட்டத்தட்ட ரூபாய் இரண்டரை லட்சம் கோடிக்கு மேல்) சென்றுவிடும் என்று கூறுகிறது. மொத்தத்தில் இது ஒரு வளரும் துறை.

உலகத்தில் உள்ள அனைத்துப் பெரிய நிதி நிறுவனங்களும் இந்தத் துறையில் இருக்கும் தொழில் வாய்ப்புக்களைக் கருதி இதில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளன. அதே போல் சட்ட நிறுவனங்களுக்கும் இந்த முதலீடுகளினால் நல்ல வாய்ப்பு. உலகெங்கிலும் உள்ள பங்குச் சந்தைகளில் ஷரியா குறியீடுகள் பெரும்பாலும் வந்துவிட்டன. அதேபோல் சில இ.டி.எஃப். திட்டங்களும் செயல்பட ஆரம்பித்துவிட்டன.

ஷரியாவுக்கு உட்பட்ட முதலீடுகள்...!
ஷரியாவுக்கு உட்பட்ட முதலீடுகள் எவை என்று கேட்டால், ஷரியா சட்டமானது, குறிப்பிட்ட வட்டிக்குக் கடன் கொடுப்பதையோ அல்லது வாங்குவதையோ ஹராம் (தடை செய்யப்பட்டது) என்று கூறுகிறது. ஆகவே ஃபிக்ஸட் டெபாஸிட் போன்ற கடன் திட்டங்கள் ஷரியாவுக்கு உட்பட்ட முதலீடுகள் ஆகாது. பன்றிக்கறி, மதுபானங்கள், சூதாட்டம், நிதித்துறை, புகையிலை போன்ற துறைகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களில் முதலீடு செய்வது ஹராம் ஆகும்.

இஸ்லாம் மதத்தைச் சார்ந்த முதலீட்டாளர்கள், தாங்கள் பங்குச் சந்தையில் அல்லது மியூச்சுவல் ஃபண்டுகளில் செய்யும் முதலீடுகள் சரியானதுதானா என்று தெரிந்து கொள்ள விரும்புகின்றனர். தங்களின் மதச்சட்டம் அறிவுறுத்துகிறபடிதான் தாங்கள் நடந்து கொள்கி றோமா என்கிற கேள்வியும் அவர்களின் மனதில் எழுந்திருக்கிறது. இதனால் சமீபகாலமாக ஷரியாவுக்கு உட்பட்ட முதலீடுகளில் முதலீடு செய்ய விருப்பமுள் ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் இந்த முறை முதலீட்டைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமும் அதிகரித்துக் கொண்டு வருகிறது.

நிஃப்டி ஷரியா!

நமது தேசியப் பங்குச்சந்தை இரண்டு ஷரியா குறியீடுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. நிஃப்டி ஷரியா மற்றும் சி.என்.எக்ஸ். 500 ஷரியா என்பதே அந்த இரண்டு திட்டங்கள். இவைகள் முறையே நிஃப்டி 50 மற்றும் நிஃப்டி 500 குறியீடுகளில் இருந்து ஃபில்டர் செய்தவையாகும். இந்த ஃபில்டர் எவரால் எவ்வாறு செய்யப்படுகிறது?


தேசியப் பங்குச்சந்தையில் உள்ள பல குறியீடுகளை, தேசியப் பங்குச்சந்தை, எஸ் அண்டு பி (ஸ்டாண்டர்ட் அண்டு புவர்ஸ்) நிறுவனத்தின் கூட்டுடன் நிர்வகித்து வருகிறது. அவ்வாறே ஷரியா குறியீடுகளையும் நிர்வகித்து வருகிறது. எஸ் அண்டு பி நிறுவனம் ஷரியா குறியீடுகளுக்காக 'ரேட்டிங்ஸ் இன்டெலிஜென்ஸ் பார்ட்னர்ஸ்' (ஆர்.ஐ.) என்ற லண்டன்/குவைத் நாட்டைச் சேர்ந்த நிறுவனத்துடன் கைகோத்துள்ளது. இந்நிறுவனத்துக்கு லண்டன், குவைத் மற்றும் பெங்களூருவில் அலுவலகங்கள் உள்ளன. இந்த ஆர்.ஐ. நிறுவனம் நிறைய இஸ்லாமிய ஆராய்ச்சியாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளதுடன், ஷரியா மேற்பார்வை வாரியத்துடனும் கைகோத்து வேலை செய்கிறது. இந்த ஷரியா வாரியத்தில் சவுதி அரேபியா, கனடா, சிரியா போன்ற நாடுகளில் இருந்து கல்விமான்கள் இடம் பெற்றுள்ளனர்.


கடைப்பிடிக்கும் விதிமுறைகள்!

ஷரியா குறியீட்டின் கீழ்வரும் நிறுவனங்கள் தொடர்ந்து கண்கானிக்கப்படுகின்றன. தேவையின் அடிப்படையில் இக்குறி யீட்டின் கீழ் உள்ள நிறுவனங்கள் மாற்றி அமைக்கப்படுகின்றன. இக்குறியீட்டில் இடம் பெறும் நிறுவனங்கள் கீழ்கண்ட ஃபில்டர்களைத் தாண்டி இடம் பெற்றுள்ளன.

1. துறை சார்ந்த ஃபில்டர்கள்: பன்றிக்கறி, மதுபானங்கள், சூதாட்டம், நிதித்துறை, புகையிலை போன்ற துறைகள் மற்றும் வேறு சில துறைகளில் ஈடுபட்டி ருக்கக்கூடாது.

2. அதிகக் கடன் வாங்கியுள்ள நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்யக்கூடாது. ஒரு காலத்தில் கடன் வாங்கியுள்ள எந்த நிறுவனப் பங்குகளிலும் முதலீடு செய்யக்கூடாது என்று கருதியவர்களும் உண்டு. ஆனால் இன்றைய நவீன பொருளாதாரத்தில் அவ்வளவு கடினமான பாதையை எடுத்தால், முதலீடு செய்யக் கிடைக்கும் பங்குகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிடும். ஆகவே அது போன்ற கருத்துக்களில் இருந்து சிறிது மாறி, இன்றைய தினத்தில், நிறுவனம் வாங்கியிருக்கும் கடன் அதன் பங்கின் மார்க்கெட் மதிப்புடன் ஒப்பிடும்போது 33%-க்கு அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்ற ஃபில்டரை கடைப் பிடிக்கின்றனர்.

3. தொழிலில் வர வேண்டிய பணம் (Accounts Receivable) மார்க்கெட் மதிப்புடன் ஒப்பிடும்போது 49%-க்கு குறைவாக இருக்க வேண்டும்.

4. நிறுவனம் தனது கையில் வைத்திருக்கும் பணம் மற்றும் வட்டி தரும் உபகரணங்கள், மார்க்கெட் மதிப்புடன் ஒப்பிடும்போது 33% குறைவாக இருக்க வேண்டும்.

5. ஷரியாவுக்கு உட்படாத வட்டி அல்லாத பிற வழிகளில் இருந்து வரும் வருமானம், மொத்த வருமானத்துடன் ஒப்பிடும்போது 5%-க்கும் குறைவாக இருக்க வேண்டும்.

6. ஷரியாவுக்கு உட்படாத முதலீடுகளினால் வரும் வருமானத்தை சுத்தப்படுத்துவதற்காக, முதலீட்டாளர் களுக்கு சுத்தப்படுத்த வேண்டிய விகிதத்தையும் இந்தக் குறியீடு தெரிவிக்கும்.

ஷரியா இ.டி.எஃப்.!
நம் இஸ்லாமிய முதலீட்டாளர்களுக்கு ஏற்ற இந்தியாவில் உள்ள ஷரியாவுக்கு உட்பட்ட முதலீடுகள் எவை என்று இப்போது பார்ப்போம்.

பெஞ்ச்மார்க் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் ஷரியா பீஸ் (Shariah BeES) என்ற இ.டி.எஃப்-ஐ நடத்தி வருகிறது. மார்ச் 2009-ல் துவங்கப்பட்ட இந்த இ.டி.எஃப், இந்தியாவின் முதல் ஷரியாவுக்கு உட்பட்ட இ.டி.எஃப். ஆகும். இது நிஃப்டி ஷரியா குறியீட்டை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. இதன் விலை நிஃப்டி ஷரியா குறியீட்டின் மதிப்பில் 1/10 ஆக இருக்கும். இந்த இ.டி.எஃப். நிஃப்டி ஷரியா குறியீட்டில் இடம் பெற்றுள்ள பங்குகளில் அதே அளவில் முதலீடு செய்யும். தற்போது இதன் விலை ரூ.127 ஆகும். இந்த ஃபண்ட் நிர்வகிக்கும் தொகை ரூ1.24 கோடியாகும். கடந்த ஓராண்டில் இந்த இ.டி.எஃப். 14.6% வருவாயைத் தந்துள்ளது. இதை டீமேட் கணக்கு மூலம்தான் வாங்க முடியும்.

ஷரியா மியூச்சுவல் ஃபண்ட்!
டாரஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் டாரஸ் எத்திக்கல் ஃபண்ட் என்ற திட்டத்தை நடத்தி வருகிறது. இந்த ஃபண்ட் இந்தியாவின், ஷரியாவுக்கு உட்பட்ட முதல் மியூச்சுவல் ஃபண்ட் திட்டமாகும். இது நிர்வகிக்கும் தொகை ரூ.24.58 கோடியாகும். இதன் என்.ஏ.வி. ரூ.23.21. இத்திட்டம் மார்ச் 2009-ல் துவங்கப்பட்டது. இதன் கடந்த ஓராண்டு கால வருமானம் 42.8% ஆகும். இந்த ஃபண்டை வாங்குவதற்கு டீமேட் கணக்கு தேவையில்லை. இந்த ஃபண்ட் வருடத்திற்கு ஒரு முறை எவ்வளவு பணத்தை சுத்தப்படுத்த வேண்டும் என்பதற்கான ஸ்டேட்மென்ட்டை முதலீட்டாளர்களுக்கு அனுப்பி வைக்கும்.

டாடா செலக்ட் ஈக்விட்டி என்ற திட்டத்தை டாடா மியூச்சுவல் ஃபண்ட் நிர்வகித்து வருகிறது. இந்தத் திட்டம் ஷரியாவுக்கு உட்பட்டு நடக்கும் என்று கூறாத போதிலும், மதுபானம், புகையிலை, நிதித்துறை மற்றும் வட்டி கொடுக்கும் உபகரணங்களில் முதலீடு செய்வதில்லை என்று அறிவித்து, அவ்வாறே நிர்வகித்தும் வருகிறது. இந்த ஃபண்ட் 139 கோடி ரூபாயை நிர்வகித்து வருகிறது. இதன் தற்போதைய என்.ஏ.வி. ரூ 63.31. இத்திட்டம் மே 1996 முதல் நடைமுறையில் இருந்து வருகிறது. ஆரம்பம் முதல் ஜூன் 30, 2010 வரையில் ஆண்டுக்கு 18.97% வருமானமாகக் கொடுத்துள்ளது. கடந்த ஓராண்டில் 37.5% -யும் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆண்டிற்கு 19.5% -யும் வருமானமாகக் கொடுத்துள்ளது.

மேற்கண்ட திட்டங்கள் தவிர, நேரடியாகப் பங்குகளில் முதலீடு செய்பவர்களுக்கு நிறைய வாய்ப்புக்கள் உள்ளன. நாம் மேலே கண்ட 6 ஃபில்டர்களை அடிப்படையாகக் கொண்டு நிறுவனப் பங்குகளை தேர்வு செய்து முதலீடு செய்யலாம். நிஃப்டி ஷரியா குறியீட்டில் இடம் பெற்றுள்ள ஷரியாவுக்கு உட்பட்ட சில லார்ஜ் கேப் பங்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்,
இன்ஃபோசிஸ்,
எல். அண்ட் டி,
பார்தி ஏர்டெல்,
ஹிந்துஸ்தான் யூனிலிவர்,
ஒ.என்.ஜி.சி.,
பி.ஹெச்.இ.எல்.,
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்,
என்.டி.பி.சி.,
டாடா பவர்.

மேற்கண்ட முதலீடுகளுடன், தங்கம்/வெள்ளி போன்றவற்றிலும், ரியல் எஸ்டேட்டிலும் நேரடியாக முதலீட்டாளர்கள் முதலீடு செய்யலாம். டெலிவரி அடிப்படையில் முதலீடு செய்யும்போது அவை ஷரியாவுக்கு உட்பட்ட முதலீடுகளே!
குறிப்பு இங்கு நாங்கள் குறிப்பிட்டுள்ள திட்டங்களையோ அல்லது பங்குகளையோ அவற்றின் செயல்பாட்டுத் திறனை வைத்துக் கொடுக்கவில்லை. மாறாக ஷரியாவுக்கு உட்பட்டு முதலீடு செய்ய இந்தியாவில் என்னென்ன வாய்ப்புகள் இருக்கிறது என்பதை மட்டுமே தெரிவிக்க முனைந்துள்ளோம். முதலீட்டாளர்கள் அவரவர் ரிஸ்க் எடுக்கும் திறன் மற்றும் வசதிக்கு ஏற்ப தங்களது முதலீட்டை மேற்கொள்ளவும்
(நாணயம் விகடன் (ஆகஸ்ட் 15, 2010) இதழில் திரு.சொக்கலிங்கம் பழனியப்பன். டைரக்டர் ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் அவர்கள் இஸ்லாமிய பங்கு முதலீடுகள் குறித்து எழுதிய கட்டுரையை நமது இணையத்தள வாசகர்களுக்கு நன்றியுடன் அளிக்கின்றோம்)

Courtesy:Makkal Urimai

அவுங்க பச்சைக் காய்கறிக்கு மாறிட்டாங்க ! நீங்க …?

அமெரிக்காவில், பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை நாக்கில் சப்பு கொட்டி சாப்பிடும் ‘பர்கர்’ வகைதான் ‘ஹாட்டாக்ஸ்’ என்பது. ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு அதிகரிக்கவும், ஒபிசிட்டி என்று உடல் எடை அதிகரிப்பதற்கும் இந்த சிக்கன், மட்டன் பர்கர்தான் காரணம் என்று டாக்டர்கள் எச்சரிக்கை செய்தபின் இப்போது குழந்தைகளை இதன் பிடியில் இருந்து மீட்க பெற்றோர் போராடி வருகின்றனர்.
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும்போது, மதிய வேளையில் சாப்பிடும் உணவுகளில் அதிக கொலஸ்ட்ரால், உறைந்த கொழுப்பு உள்ள உணவு வகைகள் டிபன் பாக்சில் அதிகம் இடம் பிடிக்கின்றன. போதாக்குறைக்கு, ‘ஹாட்டாக்ஸ்’ பர்கரையும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவதால், பள்ளிப் பருவத்திலேயே ஒபிசிட்டிக்கு ஆளாகிவிடும் ஆபத்து ஏற்படுகிறது. அதனால் புரோட்டின், நார்ச்சத்துள்ள உணவுகளுக்கு மாற வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இதன் விளைவு, இப்போது அமெரிக்கர்கள் பலரும் காய்கறி, பழங்களுக்கு மாறி வருகின்றனர். கேக், ஐஸ்கீரிம், பர்கர், குளிர் பானங்களை குறைத்து வருகின்றனர். குழந்தைகளுக்கான சத்துணவுகளை பட்டியலிட்டுள்ளது அமெரிக்க சுகாதார நலத்துறை.
* அரிசி, கோதுமை உட்பட தானிய வகை உணவு தினமும் முக்கியம்.
* சுகாதாரமான நொறுக்குத்தீனி பாப் கார்ன்
* கேரட், வெள்ளரி, தக்காளி, வெங்காயம் கொண்டு தயாரிக்கப்பட்ட வெஜ் சாலட்.
* குழந்தைகளாக இருந்தால் பிசைந்த உருளைக்கிழங்கு உணவு.
* திராட்சை, பாதாம் உட்பட உலர்ந்த பழங்கள்.
* பழங்கள் அல்லது பழச்சாறுகள்
* மீன், முட்டை, பால்
* புரோட்டின் தரும் சோயாபீன்ஸ்
* வேர்க்கடலை போன்ற கடலை வகைகள்
* பசலைக்கீரை உட்பட கீரை வகைகள்
அமெரிக்காவில் உள்ள சராசரி மக்கள், தங்கள் வாழ்க்கை முறையை பல வகையில் மாற்றி வருகின்றனர். முந்தைய அதிபர் கிளிண்டன், இந்தியா வந்தபோது, குடும்ப கலாசாரத்தை பார்த்து வியந்தார். அதுபோல ’நான் ஒரு மகளை பெற்ற தந்தையாக கவலைப்படுகிறேன்’ என்று சமீபத்திய அமெரிக்க அதிபர் கூறியுள்ளார். இப்படி அதிபர்கள் மட்டுமல்ல, சாதாரண அமெரிக்கர்களும் சத்துள்ள இயற்கை உணவின் பக்கம் தங்கள் கவனத்தை திருப்பி வருகின்றார்கள்.
ஆனால், நாமோ அவர்களின் உணவுப் பழக்கத்திற்கு அடிமையாகி ஃபாஸ்ட்ஃபுட் ரெஸ்ட்டாரெண்ட்களை நோக்கி படையெடுத்து வருகிறோம். அமெரிக்காவில் பல ஆண்டுகளாக கொடி கட்டி பறந்த ஹாட்டாக்ஸ், பர்கர் உணவு வகை இப்போது குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸில் இடம்பெறுவதில்லை. அதற்கு பதிலாக, பழங்கள் தான் இடம் பெறுகின்றன.
அவர்கள் திருந்திவிட்டார்கள். நாம் எப்போது திருந்தப் போகிறோம்.


நன்றி :
நம்பிக்கை ( மலேசிய இஸ்லாமிய இலக்கிய மாத இதழ் )

பாக்கியம் பெற்ற ஆலிவ்!

மனிதர்களும் ஜின்களும் இன்னும் பிற உயிரினங்களும் தன்னை வணங்குவதற்காகவே அன்றி வேறெதற்காகவும் படைக்கப்படவில்லை என அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான். அவ்வாறு படைக்கப்பட்ட உயிரினங்களில் மனிதன் உயர்ந்த படைப்பாக படைக்கப்பட்டுள்ளான். பிற அனைத்துப் படைப்புகளும் மனிதனின் வாழ்வியல் தேவைகளைப் பூர்த்தி செய்யவே படைக்கப் பட்டுள்ளன.

அவ்வாறு இறைவனால் வழங்கப்பட்டுள்ள அருட்கொடைகளில் ஆலிவ் (Olive) மரங்கள் பல்வேறு அரபு நாடுகளை உள்ளடக்கிய பிரதேசமான 'ஷாம்' பகுதியில் மிகுதியாக உள்ளன. உலகின் ஆலிவ் விளைச்சலில் 95 விழுக்காடு இந்த 'ஷாம்' பகுதியை உள்ளடக்கிய மத்தியதரைக்கடல் பிரதேசத்தில் தான் விளைகிறது. இதன் காய்களிலிருந்து பெறப்படும் எண்ணை பல அரும் பயன்களைக் கொண்டுள்ளது. உணவாக, மருந்தாக, அழகு சாதனப் பொருளாக என பல்வேறு பயன்பாடுகளைக் கொண்ட ஆலிவ் பற்றி அல்லாஹ் தன் திருமறையில் சத்தியமிட்டுக் குறிப்பிடுகிறான்.

அத்தியின் மீதும், ஒலிவத்தின் (ஆலிவ்) மீதும் சத்தியமாக,ஸினாய் மலையின் மீதும் சத்தியமாக, மேலும் அபயமளிக்கும் இந்த (மக்கமா) நகரத்தின் மீதும் சத்தியமாக, திடமாக, நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம். மேலும் ஆலிவ் எண்ணையை பாக்கியம் பெற்ற எண்ணை என்றும் குறிப்பிடுகிறான். (அல்குர்ஆன் 95:1-4)

.....அது பாக்கியம் பெற்ற ஒலிவ (ஜைத்தூன்/ஆலிவ்) எண்ணை(யினா)ல் எரிக்கப் படுகிறது. (அல்குர்ஆன் 24:34)

பெருமானாரின் உணவுப் பொருட்களில் ஒலிவ மரத்தின் காயின் (ஆலிவின்) பங்கு முக்கிய இடத்தைப் பெறுகிறது.



"ஆலிவ் எண்ணையைச் சாப்பிடவும், உடலின் மீது தடவ (மசாஜ் செய்ய)வும் பயன் படுத்துவீராக! இது ஆசிர்வதிக்கப்பட்ட மரத்திலிருந்து வந்ததாகும்" என்று பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூ உஸைத் (ரலி), நூல்:திர்மிதி 7/25)

உலகிலேயே மிக அதிகமாக ஆலிவ் மரங்கள் அரேபியப் பிரதேசமான 'ஷாம்' பகுதியில் மிகுந்து உள்ளன. உலக ஆலிவ் விளைச்சலில் 95 விழுக்காடு ஷாம் பகுதியை உள்ளடக்கிய மத்திய தரைக்கடல் பகுதியிலேயே நடைபெறுகிறது. 'ஷாம்' என்று அறியப்பட்ட பிரதேசம், இஸ்லாமிய வரலாற்றில் முக்கிய இடமாகத் திகழ்ந்துள்ளது. இப்பகுதிக்கு சுமார் எழுபது இறைத்தூதர்கள் அனுப்பப் பட்டுள்ளனர். இறைத்தூதர்கள் மூலம் ஆசிர்வதிக்கப்பட்ட பூமியில் விளைந்ததால் 'ஆலிவ்' பாக்கியம் பெற்றது என்றும், அறிஞர்களில் சிலர் இதன் மருத்துவக் குணங்களால் அவ்வாறு சொல்லப் படுகிறது என்றும் விளக்கம் கொடுத்து உள்ளார்கள்.

அபூ நுஅய்ம் என்ற இஸ்லாமிய அறிஞர் நடத்திய ஆய்வில், ஆலிவ் எழுபது வகையான நோய்களைக் குணப்படுத்தும் மகத்துவமுடையது; அவற்றில் தொழுநோயும் ஒன்று என்று தெரிவிக்கிறார்.

"ஆலிவின் ஒவ்வொரு பகுதியும் பயன் மிக்கது. இதன் எண்ணை விளக்கேற்றவும் சமைக்கவும்,சருமத்தின் சொரசொரப்பை நீக்கி இயல்பான நிலையில் வைக்கவும் பயன்படுத்தப் படுகிறது.இதன் விறகுகள் பாலைவன வெளியில் நெருப்பூட்டவும், இதன் சாம்பல் பட்டுத் துணியைக் கழுவவும் பயன் படுத்தப் படுகிறன" என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

(பாலைவனங்களில் காற்றுடன் புழுதியும் கலந்து வீசுவதால் சாதாரண மரக்கட்டைகள் எரிக்கப்படும் போது எளிதில் அணைந்து விடும். ஆனால் ஆலிவ் விறகால் எரிக்கப்படும் நெருப்பு இவற்றை எதிர்கொண்டு நீண்ட நேரம் அணையாமல் இருக்கும்)

ஆலிவ் மரங்களின் ஆயுட்காலம் மற்ற மரங்களின் ஆயுட்காலத்தை விட அதிகம். இவை ஆயிரம் ஆண்டுகளுக்கும் அதிகமாக பயன் தருவன. மரமாகி நாற்பது ஆண்டுகள் கழித்தே ஆலிவ் காய்க்கத் தொடங்கும். இதன் பல்வேறு வகையான பலன்கள் 'திப்' எனும் இஸ்லாமிய மருத்துவ நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தகைய மருத்துவக் குணங்களையுடைய பசுமையான ஆலிவ் எண்ணை (Virgin Olive Oil) இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது என்று ஐரோப்பாவின் Annals of Internal Medicine என்னும் ஆய்வு சொல்கிறது. இந்த ஆய்வறிக்கையின் படி ஆலிவ் எண்ணையிலுள்ள நச்சு-எதிர்ப்புக் கலவை (Antioxidant Plant Compound), இதயம் சம்பந்தப்பட்ட நோய்களைக் குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது என்று தெரிவிக்கிறது. இதிலுள்ள பாலிபினால்ஸ் (Poliphenols) மற்ற எண்ணைகளை விட ஆலிவ் எண்ணையில் மிகுந்துள்ளது. இதயப் பாதுகாப்பில் முக்கியப் பங்காற்றுகிறது.

Virgin olive oil is the only vegetable oil that's rich in polyphenols, Dr. Maria-Isabel Covas, the study's lead researcher, told Reuters Health.

All vegetable oils other than virgin olive oil are submitted to a (refining) process in which polyphenols are practically lost," explained Covas, a researcher at the Municipal Institute for Medical Research in Barcelona, Spain.

அமெரிக்காவின் FDA (Food and Drug Administration) இரு தேக்கரண்டி (23 கிராம்) ஆலிவ் எண்ணையை தினமும் உட்கொண்டால் இதயம் சம்பந்தமான நோய்கள் எளிதில் அண்டாது என்ற மருத்துவக் கூற்றை ஏற்றுக் கொண்டுள்ளது.

Olive oil contains monounsaturated fat, which can lower total cholesterol and low-density lipoprotein (LDL, or "bad") cholesterol in your blood. According to the FDA, you get the most of these benefits by substituting olive oil for saturated fats, such as in butter, rather than just adding more olive oil to your diet.

படைத்தவனால் 'பாக்கியம் பெற்ற எண்ணை' என்று புகழாரம் சூட்டப்பட்ட ஆலிவின் அரும் மருத்துவக் குணங்களையும் சிறப்புக் கூறுகளையும் கருத்தில் கொண்டால், விஞ்ஞானம் அறியப்படாத காலத்தில் வாழ்ந்த எழுதப் படிக்கத் தெரிந்திராத முஹம்மது நபியால் 1400 வருடங்களுக்கு முன்பே சொல்லப்பட்டது போல் ஆலிவ் எண்ணை உண்மையில் பாக்கியம் பெற்ற எண்ணை என்பதில் மிகையில்லை.



அல்ஹம்துலில்லாஹ்! (படைத்தவனுக்கே புகழனைத்தும்)



கட்டுரை ஆக்கம்: நல்லடியார்

நன்றி சத்தியமார்க்கம் இணையத்தளம்.