தி.மு.க. தலைமையிலான அணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லிக் கட்சி இடம் பெற்றுள்ளது. இந்த கட்சிக்கு முதலில் 3 தொகுதிகளை தி.மு.க. ஒதுக்கீடு செய்திருந்தது. தி.மு.க.-காங்கிரஸ் கட்சிகளிடையே தொகுதி பங்கீடு செய்தபோது சிக்கல் ஏற்பட்டதால் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி காங்கிரசுக்கு ஒரு தொகுதியை விட்டுக் கொடுத்தது.
இந்த நிலையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும், தமிழ் மாநில தேசிய லீக் கட்சியும் கருணாநிதி முன்னிலையில் இணைந்தன. இந்த நிலையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர்களிடம் சில விஷயங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. குறிப்பாக காயிதே மில்லத் பேரன் தாவூத் மியாகான் கடும் அதிருப்தி அடைந்தார்.
இந்த நிலையில் இன்று காலை சென்னை ராயப்பேட்டையில் தாவூத் மியாகான் தலைமையில் இயங்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் 2011 தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான அணிக்கு ஆதரவு தெரிவிப்பது என்றும், அந்த அணியில் சேர்ந்து போட்டியிடுவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுகுறித்து தாவூத் மியாகான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இஸ்லாமியர்கள் சம உரிமை பெறுவதற்காக காயிதே மில்லத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை தொடங்கினார். இந்த இயக்கம் தோன்றி 63 ஆண்டுகள் ஆகி விட்டது. ஆனால் பல்வேறு கட்சியினரிடமும் பலர் இந்த கட்சியை அடகு வைத்து விட்டனர். இதனால் முஸ்லிம்களின் உரிமைகள் புறக்கணிக்கப்பட்டு விட்டன. தி.மு.க. அரசு கடந்த 2 ஆண்டுகளில் முஸ்லிம்களுக்காக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை. குழப்பம் ஏற்பட்டு முஸ்லிம்களுக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. 3.5 சதவீத இட ஒதுக்கீட்டால் ஏற்கனவே இருந்ததை விட குறைவான பலன்களே கிடைக்கிறது. எனவே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அ.தி. மு.க.வை ஆதரிக்க முடிவு செய்துள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தாவூத் மியாகான் கூறி உள்ளார்
நன்றி:மாலைமலர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக