கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

தலைமைக்கு எதிராக மாற்றுக் கருத்து: இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிலிருந்து ஃபாத்திமா முஸஃபர் நீக்கம்

fathima muzabarஇந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் பெண்கள் பிரிவின் தலைவியும், அக்கட்சியின் அவை உறுப்பினருமான சகோதரி ஃபாத்திமா முஸஃபர் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் தலைமைக்கு எதிராக மாற்றுக் கருத்து தெரிவித்து பிரச்சாரம் செய்ததால் அவர்மீது இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறது. தொகுதிக்கான பங்கீடு நடந்தபொழுது ஆரம்பத்தில் 3 தொகுதிகளை முஸ்லிம் லீக்கிற்காக ஒதுக்கிய கலைஞர் கருணாநிதி பின்னர் தங்கள் கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் தொகுதி ஒதுக்கீட்டில் ஏற்பட்ட பிரச்சனைகளை அடிப்படையாக வைத்து முஸ்லிம் லீக்கிற்கு வழங்கப்பட்ட 3 சீட்களில் ஒன்றை திரும்பப் பெற்று கொண்டது. தி.மு.க வின் இந்த செயல்பாட்டை சிறிதும் கண்டிக்காத முஸ்லிம் லீக் தலைவர்கள் அதை அப்படியே ஏற்றுக்கொண்டது.  இதனால் பலருக்கும் அக்கட்சியின் மீது அதிருப்தியும் ஆத்திரமும் ஏற்பட்டது.
இந்நிலையில் முஸ்லிம் லீக்கின் பெண்கள் பிரிவிற்கு தலைவியாக இருந்து வரும் ஃபாத்திமா முஸஃபர் அவர்கள் தாங்களாகவே ஒரு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்து அதில், கட்சியின் இந்த பலகீனத்தை கண்டித்தும், ஒதுக்கப்பட்ட தொகுதியை மீண்டும் தராவிட்டால் தி.மு.க அரசை எதிர்த்து வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பிரச்சாரம் செய்யப் போவதாகவும் அறிவித்தார்.
ஃபாத்திமா முஸஃபர் அவர்களுடைய இந்த செயலுக்கு பின்னர் தான் கட்சியிலுள்ள மற்றவர்களும் இதனை ஆதரித்து கட்சியின் தலைமைக்கு பெறும் நெருக்கடியை ஏற்படுத்தினர். இதன் பின்னர் முன்னர் கூறப்பட்டது போன்று முஸ்லிம் லீக்கிற்கு 3 தொகுதிகளை மீண்டும் ஒதுக்கியது. இத்தகைய செயலின் காரணமாகத்தான் ஃபாத்திமா முஸஃபர் அவர்கள் கட்சியிலிருந்து விலக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
காலம் சென்ற முஸ்லிம் லீக்கின் தலைவர் ஏ.கே.ஏ.அப்துல் சமத் அவர்களின் மகள் தான்  ஃபாத்திமா முஸஃபர். முஸ்லிம் லீக் கட்சிக்காக அயராது உழைத்தவர் ஆவார். நல்ல கல்வித் திறன் கொண்டவர் ஆங்கிலம், தமிழ், உருது போன்ற மொழிகளை சரளமாக பேசக்கூடியவர். இவர் கட்சியிலிருந்து விலக்கப்பட்டது தமிழக முஸ்லிம்களில் பலருக்கும் வருத்தத்தை அளித்துள்ளது.
கட்சியின் இந்த செயல்பாட்டை கண்டித்தும்,அவர் சில கேள்விகளை எழுப்பியுள்ளார். காயிதே மில்லத் அவர்களுடைய காலத்திலும், அப்துல் சமத் அவர்களுடைய காலத்திலும் இருந்த பெருமையும், கவுரவமும் தற்போது இல்லை, மேலும் அரசியல் கட்சிகளிடமும் அடிமை போன்று இருந்து கொண்டு அவர்கள் கூறும் எல்லாவற்றிற்கும் செவி சாய்த்துக் கொண்டிருக்க வேண்டுமா? என்றும்,  இழந்த பெருமைகளை மீட்பதற்காக போராடுவது கட்சியின் கொள்கைக்கு எதிரானாதா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
கட்சியில் புதிதாக இணைந்தவர்களுக்கு முன்னுரிமை அளித்து துறைமுகம் மற்றும் நாகப்பட்டினம் தொகுதியிலும் போட்டியிடுவதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சகோதரி ஃபாத்திமா முஸஃபர் அவர்கள் மேலும் கூறும்போது, “அடக்குமுறைகளுக்கு எதிராகவும், முஸ்லிம் லீக்கின் கவுரத்தை பாதுகாப்பதற்காக போராடும் போது ஷஹீத் அடையும் சூழ்நிலை ஏற்பட்டாலும் அதற்கு எப்போதும் தான் தயாராக இருப்பதாகவும், நபி(ஸல்) அவர்கள் கூறியதைப் போல் ஜிஹாதிலேயே மிகப்பெரிய ஜிஹாத் சத்தியத்திற்காக அசத்தியத்துடனும், அநீதியான ஆட்சியாளர்களை எதிர்த்து போராடுவதே ஆகும். எல்லாம் வல்ல அல்லாஹ் எனக்கு சத்தியத்தை உரைக்கக் கூடிய தைரியத்தை கொடுத்திருக்கிறான். இரட்டை நிலைபாடு இல்லாத முனாஃபிக் தனத்திலிருந்தும் அல்லாஹ் என்னை பாதுகாப்பான்” என்று கூறினார்.
source:http://www.thoothuonline.com

0 கருத்துகள்: