கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

இவர்களா நம் தலைவர்கள்?!

leader-with-followersஇன்றைய தேவையை அக்கறையுடன் எடுத்துரைக்கும் ஆக்கம்
[ கண் மூடித்தனமாக தலைவர்களின் பின்னால் போகும் இளைஞர்களே...!
செத்த நாயிலும் கேவலமான நம் வாழ்க்கை எந்த உரிமையும் இல்லாத நமக்கு, ஒற்றுமைக்காக பாடுபடாத இந்த தான் என்ற ஈகோ பிடித்த தலைவர்களின் பின்னால் உங்கள் மாபெரும் சக்தியை வீணடித்துக் கொண்டிருக்கின்றீர்கள்
எப்போதாவது உங்களை நோக்கி கேள்விக் கேட்டிருக்கின்றீர்களா? அல்லது உங்கள் தலைர்களை நோக்கி இந்த கேள்விகளை கேட்டு இருக்கின்றீர்களா?
இந்த வாழ்கையை எப்போது மாற்றிக் கொள்ளப் போகிறீர்கள்? எப்போதாவது ஒற்றுமையைப் பற்றி நீங்கள் சிந்தித்தது உண்டா? செத்த பிணம் போல, ஆட்டு மந்தைகளைப் போல சுயமாக சிந்திக்காமல் எத்தனை நாளைக்கு இந்த தலைவர்களின் பின்னால் ஓடி உழைக்கப் போகிறீர்கள்? எத்தனை நாளைக்கு இந்த தலைவர்களின் பின்னால் கொடி பிடித்துக் கொண்டு இருக்கப் போகிறீர்கள்?
சுயமாக சிந்தியுங்கள், உங்களுக்குள்ளே கேள்வி கேட்டுக் கொள்ளுங்கள், தலைவர்களையும் கேள்வி கேளுங்கள். நாளை நம் சமுதாயம் ஒற்றுமையாய் ஓரே அணியின் கீழ் ஒரே குடையின் கீழ் நிற்க பாடுபடும் தலைவரை இனம் காணும் வரை எந்த தலைவரின் பின்னாலும் உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள்.
தலைவர்களே...! நாங்கள் நன்றாக உங்கள் முகம் நோக்கி கேள்வி கேட்போம்தான். பொது வாழ்க்கைக்கு வந்து விட்டால். மக்களுக்கு நல்லது செய்கிறேன் என்று மக்களின் உழைத்த பணங்களில் சந்தா, நன்கொடை, புத்தக விற்பனை செய்து உங்கள் கழகத்தை மட்டும் பலப்படுத்த அல்ல எங்கள் சமுதாயத்திற்கும் பாதுகாப்பும், சமூக உரிமையையும் பெற்றுத் தரத்தான்.
நம்மிடையே ஒற்றுமையை வளர்க்கத்தான். இதையெல்லாம் செய்ய இயலாது என்றால் நல்ல ஒரு பர்தாவை போர்த்திக் கொண்டு உங்கள் வீட்டிலேயே முடங்கிப்போங்கள், உங்களை எவரும் கேள்வி கேட்க மாட்டார். நீங்கள் முடங்கிப் போவதால் எம் சமுதாயம் ஒன்றும் அழிந்து விடாது. ஒரு புரட்சியையும், ஒற்றுமையையும் எங்களுக்குள் கொண்டு வர எம்மில் ஒருவன் பிறந்திருப்பான் அல்லது இறைவன் பிறக்க வைப்பான் இன்ஷா அல்லாஹ்...
ஒற்றுமையாய் வாழ கற்றுக்கொள்ளுங்கள், எங்களுக்கும் கற்றுக் கொடுங்கள் இல்லையேல் புதியவர்களுக்கு வழி விட்டு ஒதுங்கி ஓடிப்போய் வீட்டோடு ஒளிந்து கொள்ளுங்கள்.]
என் அன்புக்குறிய சகோதரர்களே, அஸ்ஸலாமு அலைக்கும்,
இறைவனைப் புகழ்ந்தவனாக துவங்குகிறேன்..
ஒரு சாதாரண தமிழ் நாட்டின் முஸ்லீம் குடிமகனாக தற்போது நம் சமுதாயத்தில் உள்ள ஒற்றுமை நிலை குறித்து என் மனதில் தோன்றுபவைகளை கொட்டி வைத்திருக்கிறேன். தவறுகள் இருப்பின் இறையோனுக்காய் மனம் பொறுக்கவும்.
நம்முடைய சங்கங்கள்:
இந்த தலைவர்களும், அவர்களுடைய சங்கங்களும் நம் சமுதாயத்திற்காக எதையாவது செய்யாதா என்ற ஏக்கத்தில், எதிர் காலம் எம் சமுதாயத்திற்கு எதையாவது ஒரு நல்ல பாகாப்புத் தன்மையை அளிக்காதா என்ற நோக்கில் நானும் ஒவ்வொரு நாளும் இந்த அமைப்புகளையும் அதன் தலைவர்களையும் கூர்ந்து நோக்கி கவனித்துக் கொண்டுதான் வருகின்றேன்.
என்னால் முடிந்த அளவில் உடலாளும், உழைப்பாலும், பணத்தாலும் ஒரு சாதாரண தொண்டனாக இந்த சங்கங்களுக்கு, அமைப்புகளுக்கும் உழைத்தும் என்னுடைய சிறப்பான பங்களிப்பை தந்தும் என்னுடைய கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணத்தில் இந்த கழகங்களுக்காக நன்கொடையும், நிதியுதவியும் செய்து அவர்களின் புத்தக, ஆடியோ, வீடியோ, சி.டி போன்றவைகளையும் நானும் வாங்கியும், பிறருக்கு விற்பனை செய்தும் அதன் மூலமாகவும் இந்த சங்கங்களின், அமைப்புகளின் நிதி நிலையை கூட்டி இருக்கிறேன்.
ஆனால் இந்த சங்கங்களும், தலைவர்களும் நமக்காக இதுவரை என்ன சாதித்திருக்கிறார்கள் என்று ஒரு தொலைநோக்கு பார்வையில் பார்த்தால் எஞ்சி நிற்பது பூஜ்யம்தான்;. இந்த சங்கங்களையும், அமைப்புகளையும் அதன் தலைவர்களையும், அவர்களின் செயல்பாடுகளையும் இந்த அமைப்புகளுக்குள் நடக்கும் கோஷ்டி பூசல்கள் சண்டைகளையும் நினைத்தால் சலிப்பும், வெறுப்பும்தான் மிஞ்சுகிறது. நம்முடைய ஓற்றுமை மற்றும் நம் சமூக மக்களின் பாதுகாப்பு என்பது இன்னும் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.
இந்த சங்கங்கள் அமைப்புகள் என்ன செய்தார்கள் நமக்காக:
நம் சமுதாயத்திற்காக இந்த அமைப்புகள் ஓன்றுமே செய்யவில்லை பூஜ்யம்தான் என்று நாம் சொல்லும் போது, தான் என்ற கர்வம் பிடித்து உழலும், தாம் சொல்வதே சிறந்தது, தாம் நடத்தும் அமைப்பே சிறந்தது என்று மார்தட்டிக் கொள்ளும் நம் தலைவர்களுக்கு கோபம் வரலாம். சிலவைகளை செய்கிறார்கள். அவைகளை பற்றியும் காண்போம்.
கூட்டங்கள், மாநாடுகள் போடுகிறார்கள்:
நாங்கள் கூட்டங்கள் போடுகிறோம், மாநாடு போடுகிறோம் என்று சொல்வார்கள் அதில் கூட மார்க்க அறிஞர்களைப் போல யாரும் உரைகளை நிகழ்த்துவதில்லை. மற்ற அமைப்பினரை சாடுவதற்காகத்தான் அதிக நேரம் வாய் கிழிய பேசுகிறார்கள். மற்றவர்களை திட்டுவதற்காகவே எம் மக்களிடம் வசூல் செய்து மாநாடு போட்டு மார்தட்டி பேசி பிற அமைப்புகளை குறை கூறுவதிலேயே விரயம் செய்கிறார்கள். தம் அமைப்புக்கு விளம்பரம் தேடிக் கொள்கிறார்கள், வேறு எதாவது உபயோகமான விளைவுகள் அந்த மாநாடுகளால் நிகழ்ந்தது என்று இந்த தலைவர்கள் சொல்வார்களா. கூட்டத்தை கூட்டி நம் மக்களின் நேரத்தையும், செல்வத்தையும் செலவழித்ததை தவிர எதையாவது உருப்படியாக இந்த அமைப்புகள் செய்திருக்குமா என்று இந்த தலைவர்கள் சொல்லட்டும்.
பத்திரிக்கைகள், புத்தக வெளியீடுகள்:
பத்திரிக்கைகள், புத்தக வெளியீடுகள் செய்கின்றார்கள், இதில் இறைமறை தமிழில், மற்றும் பயனள்ள ஹதீஸ் தொகுப்புகளை வெளியிட்டவர்களுக்காக நம் சமுதாயம் கடமைப்பட்டுள்ளது. அவர்களுக்காக நாம் எப்பவும் நம் ஆதரவை தெரிவித்துக் கொண்டும் இருக்கிறோம். அவர்கள் உழைப்பும், பணியும் பாராட்டத்தக்கது. இவைகளை தவிர்த்து குப்பைகளாக வெளிவந்து கொண்டிருக்கும் மற்ற அமைப்புகளின் பத்திரிக்கை வெளியீடுகள் பற்றிப் பார்ப்போம்.
இந்த பத்திரிக்கைகளின் தரம் கூட அதை பார்த்தால் தெரிந்துவிடும். ஏதோ பெயருக்கு சங்க நிதிக்கு வலு சேர்க்க வேண்டும் என்பதற்காகவும், தம் அமைப்பின் கொள்கை விளக்க வெளியீடாகவும் வெளியிடப்படும் சஞ்சிகைகளாகவும், மற்ற அணியினரை தாக்கி அறிக்கைப் போர் நடத்தவும்தான் அவைகள் உதவி இருக்கின்றனவே தவிர அவைகள் நம் இளைஞர்களுக்குள் ஒரு எழுச்சியையோ, எம் பெண்களுக்கு உள் நாட்டில் என்ன நடக்கிறது என்பதையோ புரிந்து கொள்ள முடியாத அளவில்தான் இருக்கிறது. அதில் வெளிவரும் கட்டுரைகள் மிக பழைய செய்திகளை தாங்கியிருக்கும். அது கூட எதாவது இணையத்தில், அல்லது ஆங்கில பதிப்பின் தழுவல்களை சுட்டு எழுதியிருப்பார்கள்.
கூடுவாஞ்சேரியில் பள்ளியில் நடந்த கலவரத்தை பற்றி தெரியாத அந்த ஊர்க்கார இளைஞரின் கையில் தவழும் நம் சங்க கொள்கை முழக்க பத்திரிக்கையில் ஈராக்கையும், பாலஸ்தீனையும், அமெரிக்காவையும் பற்றிய கட்டுரைகள். ஈராக், பாலஸ்தீனம் பற்றி நாம் கவலை கொள்ள வேண்டும் வேண்டாம் என்று சொல்லவில்லை ஆனால் முதலில் நம் ஊர் அரசியல், சமூக சதிகளை இளைஞர்கள், பெண்கள் மத்தியில் பரப்ப வேண்டும். மற்ற பத்திரிக்கைளை பார்த்தாவது நமது பத்திரிக்கைகளின் தரத்தை கூட்ட எந்த தலைவராவது தாம் நடத்தும் பத்திரிக்கைகளில் முயன்றதுண்டா… ?
ஏற்கனவே படிப்பறிவிலும், பொது அறிவு, அரசியல், சமூக சிந்தனைகளில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் நம் சமுதாய மக்களை இன்னும் அதள பாதாளத்தில் தள்ளும் முயற்சியாகவே இந்த பத்திரிக்கைகள் விளங்கி வருகின்றன. நாமும் இந்த குப்பைகளை வாங்கி நம் காசை கரியாக்கிக் கொண்டிருக்கிறோம். மக்களிடம் விழிப்புணர்வையும், ஒற்றுமையையும் வளர்க்க எந்த பத்திரிக்கையாவது முயன்றதுண்டா என்று சிந்தித்துப் பார்க்கவும்.
இணையத்தளங்கள், மற்றும் மிண்ணணு ஊடகங்கள்:
நம்முடைய அமைப்புகள், சங்கங்களிடையே இணையத்தளங்களுக்கு குறைவில்லை, ஆனால் அவைகள் இதுவரை என்ன பணியாற்றிருக்கிறது என்று காண்போம்.
அந்த இணையத்தளங்களை திறந்தாலே முதல் பக்கத்தில், தலைப்பு செய்தியாக, குண்டர்கள், ரவுடிகள் என்று மற்ற நம் அணியினரை தாக்கியே செய்திகள் அனுதினம் வந்து கொண்டிருக்கிறது. மற்ற அணியினரை சாடியே அதிக பக்கங்களை செலவிடுகிறார்கள் இன்டர்நெட் என்பது இன்றைக்கு எத்தனை வலிமையான ஊடகம் அவற்றை எப்படி பயன்படுத்தி பயன்பெறலாம் என்று என்றைக்காவது இந்த சங்கங்களும் அதன் நிர்வாகிகளும் ஒரு நொடியேனும் சிந்தித்திருப்பார்களா. ?
சின்ன சின்ன குழுக்களாகவும். தனி நபர்களின் ஆர்வத்தாலும் நம் சமுதாய சகோதரர்களால் நடத்தப்படும் இனையத்தளங்கள் எத்தனை வலிமையாக நடை போடுகிறது என்பதையாவது இவர்கள் உணர்ந்திருப்பார்களா ? அழைப்புப்பணி மற்றும் குர்ஆன், சுன்னாவையும் பரப்புவதில் தனிநபர் இணையத்தளங்கள் எத்தனை நன்றாக இயங்குகிறது என்பதை ஏற்றுக் கொள்வதற்கு கூட முடியாத நிலையில்தான் இன்று நம் சங்கங்களும் அதன் நிர்வாகிகளும் தான் என்ற அகந்தையில் உழல்கின்றார்கள். எப்போதாவது நம்மிடம் இருக்கும் சிறிய ஊடகங்களை வலிமையாக்க, ஆக்கபூர்வமாக உபயோகிக்க எந்த சுயநல தலைவர்களாவது சிந்தித்திருப்பார்களா ?
ஆடியோ, வீடியோ, சி.டி வெளியீடுகள்:
நம் அமைப்புகளின் மற்ற அணியினரை தாக்கியும், சுய நிலை விளக்கம் என்று வரும் ஆடியோ, வீடியோ சீ.டி வெளியீடுகளை மாற்று மதத்தினர் பார்த்தால் உங்களுக்குள்ளே இவ்வளவு குழுக்களும், குழப்பங்களும் பிரச்னைகளும் இருக்கிறதா என்று ஓடியே போய்விடுவான். அந்த அளவிற்கு தரம் தாழ்ந்து மற்றவரை தாக்கி வரும் வெளியீடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உபயோகமான வெளியீடுகள் பற்றி மட்டும் இனி யோசிப்பார்களா இந்த தலைவர்கள்.
பாதிக்கப்பட்ட நம் சமுதாய மக்களுக்கு உதவிகள்:
கலவரங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்கின்றனர், ஆனால் கலவரம் வருவதற்கு முன்பாக என்ன பாதுகாப்பு நடவடிக்கைகளை, நமக்குள் ஒற்றுமை நிலையை ஏற்படுத்தி வைத்தீர்கள் என்பதுதான் நம் கேள்வி. அதில் கூட பொது வசூல் செய்த பணத்தை பொதுவாக உதவிகள் செய்வது கிடையாது. பாதிக்கப்பட்ட எல்லோரையும் ஒன்றாக பார்ப்பது கிடையாது. தம் அமைப்பை சார்ந்தவர்களுக்கு மட்டுமே உதவிகள் செய்வது என்ற பாகுபாட்டையும், பிரிவினையையும் இந்த தலைவர்கள் என்றாவது களைய முயற்சித்து இருப்பார்களா ?
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:
இனக் கலவரங்களால் நம் மக்கள் பாதிக்கப் படுவதற்கு முன் இந்த அமைப்புகள் என்ன பாதுகாப்பு நடவடிக்கைகளை செய்து வைத்தார்கள்;. பாதிக்கப் படும் வரை பார்த்துக் கொண்டிருந்து விட்டு எதிரிகளிடம் அடி வாங்கியும், வெறித்தனமாக எம் பெண்களை சூறையாடி மானபங்கம் செய்தும், எம் குழந்தைகளையும், இளைஞர்களையும், வெட்டி நெருப்பில் வீசி எறிந்தும், நம் சமுதாய மக்களின் சொத்துக்களை கொள்ளையடித்தும், அழித்தும் எல்லாம் முடிந்த பின்னர் அவர்களுக்காக பொது வசூல் செய்து நாடோடி கேம்ப்களில் வீடு, வாசல், சொத்து உறவினர்களை இழந்து நிற்கும் அவர்களுக்கு எதாவது உதவியை செய்து விட்டு அவர்களுக்காக பரிதாபப்படும் ஏஜெண்டுகளாகதான் நம் சங்கங்கள் இதுவரை இருந்து வந்திருக்கிறது. இத்தனை அடிபட்டும், உதைபட்டும் நம்மில் ஒற்றுமை வேண்டும் என்றும், நம் எதிரிகளை சந்திக்க அவர்களின் சதிகளை முறியடிக்க நாம் ஒன்றுபட்ட சமுதாயமாக இருக்க வேண்டும் என்று எந்த தலைவராவது அதற்காக பாடுபட்டார்களா.
ஈகோ மற்றும் தான் என்ற கர்வம் பிடித்த தலைவர்கள்:
ஏதேதோ பெரிய லாஜிக்கெல்லாம் பேசும் தலைவர்கள், கூட்டங்களில் சவால் விடும் தலைவர்கள் மிக சாதாரண விஷயமாக ” நீங்கள் ஒற்றுமை என்னும் கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் ” என்று எம் தலைவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் போதித்ததை மட்டும் காதில் போட்டுக் கொள்ள யாரும் தயாராக இல்லை. இதைப்பற்றி நினைத்தாவது பார்த்திருப்பார்களா.
எல்லா தலைவர்களும் ஈகோவால், தான் என்ற மமதையால். தான் சொல்வதே சிறந்தது, தன் கட்சியே உயர்ந்தது என்றும். வறட்டு பிடிவாதம் பிடிக்கின்றார்களே ஒழிய நம் சமுதாயத்திற்கும் அதிலும் குறிப்பாக நம் பெண்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பை ஏற்படுத்தி வைத்திருக்கின்றோம் நாம் என்ன நிலையில் இன்று இருக்கின்றோம் என்று இந்த தலைவர்கள் உணர்வார்களா. அநேக குடும்பங்களில் ஆண்கள் எல்லாம் வெளிநாடுகளில் இருக்க பெண்களும், குழந்தைகளும், முதியவர்களுமே இருக்கும் நம் சமுதாய மக்களின் பாதுகாப்பு நிலை என்ன என்று உணர்வார்களா இந்த தலைவர்கள்.
பம்பாய், குஜராத், பாபரி மஸ்ஜித், கோவை (இன்னும் எத்தனையோ) சம்பவங்கள் நடந்து நடு ரோட்டில் எம் பெண்களை மானபங்கப்படுத்தி, எம் குழந்தைகளை கொன்று தீயில் போட்டு எரித்த பின்னர் எஞ்சி அறைகுறையாக செத்து ஏதாவது ஒரு அகதிகள் கேம்பில் இருப்பவர்களுக்கு பொது வசூல் செய்து உதவி செய்வதுதான் நம் கழகங்கள் செய்யும் பணியா ? அதற்காகத்தான் இவர்கள் கழகம் நடத்துகிறார்களா ?
இந்த சம்பவங்கள் நடந்து முடிந்த பின்னர் எல்லாம் கூடி ஆர்பாட்டம் செய்ததில் என்ன நன்மையை இதுவரை கண்டோம் என்று நம் எல்லோரும் அறிந்ததே. அதையேனும் இந்த தலைவர்கள் உணர்வார்களா.?
பிற சிறிய கட்சியினரின் ஒற்றுமை நிலை:
சில சிறிய கட்சிகளும், சிறிய சாதி சார்ந்த கட்சிகளும் தங்கள் ஒற்றுமையால் அரசியலிலும், சமூகத்திலும் நல்ல அந்தஸ்தை பெற்று தம்மை சார்ந்து இருக்கும் மக்களுக்காக போராடுவதையும் நாம் கண்கூடாக பார்க்கின்றோம். அதற்கு ஒரே காரணம் அவர்களுக்குள் இருக்கும் ஒற்றுமை என்பதுவும் யாம் அறிந்ததே. இந்த தலைவர்களுக்கு இது கூட தெரியாதா என்ன.
பா.ம.க, ம.தி.மு.க போன்ற சிறிய கட்சிகள் தங்கள் ஒற்றுமையினால் இன்று அரசியலில் எத்தனை பலம் வாய்ந்ததாக இருக்கிறது என்பதை நாம் அறிவோம். அந்த அமைப்பை சேர்ந்த மக்களுக்கு அவைகள் எத்தனை சிறப்பாக செயல்படுகிறது என்பதை இந்த தலைவர்கள் சிந்தித்தார்களா.
போர்களமாய் பிற அணியினருடன்:
இவை எல்லாவற்றையம் விட அசிங்கமான செயல் இப்பபோது நம்மிடையே பிரிந்து கிடக்கும் கழகங்களிடையே காண முடிகிறது. நமக்குள்ளாகவே அடித்துக் கொள்வதும். ஒருவர் மற்றவரை தாக்கி அறிக்கைப் போர் என்று எல்லா ஊடகங்களிலும் எவரையாவது திட்டியும், புறம் பேசியும் வசை பாடியும் போர்களமாகதான் காட்சியளிக்கிறது. காவல் நிலையங்களுக்கு கூட சென்று மற்ற அணியினர் மீது புகார்கள் தந்தும். வழக்குகள் தொடர்ந்தும் தங்கள் தரத்தையும் தாழ்த்திக் கொள்ள இந்த மார்க்க அறிஞர்களும், இந்த அமைப்புகளும், தலைவர்களும் தயங்குவதில்லை.
இந்த தலைவர்களுக்கு:
இந்த தலைவர்களுக்கு ஒன்று நாம் சொல்லிக் கொள்ள விரும்புகிறோம். நம் எதிரிகள், அந்நிய சக்திகள் நம்மை வேறறுக்க காத்துக் கொண்டிருக்கிறார்கள், அதற்கு முன்னால் நீங்களாகவே நமக்குள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு பலவீனப்பட்டுப் போகாதீர்கள் அவர்களிடமும் கொஞ்சம் உதை வாங்குவதற்காக பிரிந்து கிடந்து பலவீனப்பட்டுக் கொண்டிருக்கும் நீங்கள் உங்கள் சக்தியை கொஞ்சம் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். நம் எதிரிகள் எல்லோரும் ஓரணியில் நின்று உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். தக்க தருணம் பார்த்து நம் மீது பாயவும் காத்திருக்கிறார்கள் என்பதை எப்பவும் மனதில் வைத்து செயல்படுங்கள்.
நம் அரசியல் நிலை:
அரசியலில் மிக சாதுர்யமாக காய்களை நகர்த்தித்தான் நம் எதிரிகள் நம்மை பந்தாடிக் கொண்டிருக்கிறார்கள் ஆகவே நாமும் பல்வேறு மதங்கள் வாழும் இந்த சமுதாயத்தில் நம் குரல் பாராளுமன்றத்திலும், நாடாளு மன்றத்திலும் ஒலிக்க வேண்டும், நமக்கென்று நம்முடைய குறைகளை எடுத்து வைக்க நம் பிரதிநிதிகள் அரசியலில் பங்கு வகிக்க வேண்டும் என்ற எண்ணமாவது தோன்றியிருக்கிறதா இதுவரை அதற்கான எந்த முன்னேற்பாடுகளை செய்து வைத்திருக்கின்றீர்கள். அரசியலே வேண்டாம் என்று நாம் ஒதுங்கி விலகிப் போய்விட முடியாது.
என்ன நிலையை தேர்வு செய்வது:
அரசியலையும், ஆண்மீகத்தையும் ஒன்றாக போட்டு நாம் குழப்பிக் கொள்ளவும் வேண்டாம்.
இரண்டையும் ஒன்றாக போட்டு குழப்புவதால்தான் பிரச்னைகள் அதிகம் வருகிறது. ஆகவே இரண்டு பிரிவுகளாக பிரித்து செயல்படுவதில் எந்த பிரச்னையும் இருக்காது.
மதம் சார்ந்த பிரச்னைகளை அணுக தனிப் பிரிவும், அரசியல், சமூக பிரச்னைகளை அணுக அரசியல் பிரிவும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். குர்ஆன், சுன்னா, தொளஹீத் இப்படி எந்த விதமான பிரச்னைகளையும், தீர்வையும் தருவதற்காக அதற்கான அறிஞர்களைக் கொண்ட பிரிவை ஏற்படுத்தி அவர்கள் முற்றிலும் மதம் சார்ந்த பிரச்னைகளுக்கும் தொப்பி போட்டு தொழலாமா, வேண்டாமா, விரலசைத்து தொழலாமா வேண்டாமா என்ற பிரச்னைகளை அவர்கள் பார்த்துக் கொள்ளட்டும்.
அது போலவே ஒரே அமைப்பாக, ஒரே தலைவர், ஒரே குடையின் கீழ் ஒரு அரசியலமைப்பில், நம்மிடம் உள்ள அரசியல், சமூக சிந்தனைகள் அதிகம் நிறைந்தவர்கள், படித்தவர்கள், அரசியலில் முதிர்ச்சி உள்ளவர்கள், சமூக அரசியல் ஞானம் அதிகம் உள்ளவர்களை அரசியல் பிரிவில் ஏற்படுத்தி தேர்தல் காலங்களில், மற்றும் சமூக, அரசியல், சட்ட பிரச்னைகள் நமக்கு வரும்போது அவர்கள் பாடுபடும் வகைக்கு நாம் ஒத்துழைக்க வேண்டும். நிச்சயமாக நம்மிடம் அரசியல் பிரிவு வேண்டும். நாமும் அரசியலில் பங்காற்றித்தான் நம் உரிமைகளையும், பாதுகாப்பையும் பெற முடியும் என்பது மிக தெளிவானது. இதில் எந்த குழப்பமும் இல்லை. இதில் மார்க்க விஷயங்களை நுழைத்து குழம்பிக் கொள்ள வேண்டாம்.
இன்று நம் நிலை:
நம் எதிரிகள் அவர்கள் செய்ய துடிப்பதை நாமே செய்து கொள்கிறோம் சிறிய சிறிய குழுக்களாக பிரிந்து கிடக்கிறோம். நம் எதிரிகள் நம்மை பகடைக் காய்களாக ஆக்கி அரசியல் களத்தில் நம்மை பந்தாடி விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள். பெண்களை, முதியவர்களை, குழந்தைகளை மட்டும் வீட்டில் விட்டு விட்டு வெளிநாட்டில் வாழும் ஆண்கள் எல்லோரும் இந்த அமைப்புகள் எல்லோரும் ஒன்று கூடி ஒரு நல்ல தீர்வையும், நம் மக்களுக்கு நல்ல பாதுகாப்புத் தன்மையையும் தராதா என்று காத்திருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் நாளுக்கு நாள் புதிய அமைப்புகள் தோன்றுவதும், நான்தான் தலைவர் என்று புதிய தலைவர் வருவதும் தினசெய்திகளாக இருக்கிறது.
ஒன்றாக பலமாக இருந்த அமைப்புகள் தனிப்பட்ட தொலைநோக்கு பார்வையில்லாத தலைவர்களின் அகம்பாவத்தால், தான் என்ற கர்வத்தால் நாளுக்கொரு அமைப்பாக உடைந்து மக்கள் மத்தியில் பலவீணப்பட்டு கிடக்கிறார்கள். சில நேரங்களில் இவர்கள் ஒருவேளை நம் எதிரிகளின் கைக்கூலிகளோ என்று சந்தேகப்படும் அளவிற்கு இந்த அமைப்புகளின் செயல்பாடுகள் இருந்து வருகிறது. ஒருவர் மற்ற சகோதரரையும், மற்ற அணியினரையும் அப்படித்தான் நடத்திக் கொள்கிறார்கள். நம் சமுதாயத்தின் முன்னேற்றம், பாதுகாப்புத் தன்மை என்பது இன்னும் ஒரு பெரிய கேள்விக் குறியாகத்தான் தொக்கி நிற்கிறது.
இளைஞர்களுக்கு:
கண் மூடித்தனமாக தலைவர்களின் பின்னால் போகும் இளைஞர்களே…செத்த நாயிலும் கேவலமான நம் வாழ்க்கை எந்த உரிமையும் இல்லாத நமக்கு, ஒற்றுமைக்காக பாடுபடாத இந்த தான் என்ற ஈகோ பிடித்த தலைவர்களின் பின்னால் உங்கள் மாபெரும் சக்தியை வீணடித்துக் கொண்டிருக்கின்றீர்கள் எப்போதாவது உங்களை நோக்கி கேள்விக் கேட்டிருக்கின்றீர்களா. அல்லது உங்கள் தலைர்களை நோக்கி இந்த கேள்விகளை கேட்டு இருக்கின்றீர்களா. இந்த வாழ்கையை எப்போது மாற்றிக் கொள்ளப் போகிறீர்கள்? எப்போதாவது ஒற்றுமையைப் பற்றி நீங்கள் சிந்தித்தது உண்டா? செத்த பிணம் போல, ஆட்டு மந்தைகளைப் போல சுயமாக சிந்திக்காமல் எத்தனை நாளைக்கு இந்த தலைவர்களின் பின்னால் ஓடி உழைக்கப் போகிறீர்கள்? எத்தனை நாளைக்கு இந்த தலைவர்களின் பின்னால் கொடி பிடித்துக் கொண்டு இருக்கப் போகிறீர்கள்? சுயமாக சிந்தியுங்கள், உங்களுக்குள்ளே கேள்வி கேட்டுக் கொள்ளுங்கள், தலைவர்களையும் கேள்வி கேளுங்கள். நாளை நம் சமுதாயம் ஒற்றுமையாய் ஓரே அணியின் கீழ் ஒரே குடையின் கீழ் நிற்க பாடுபடும் தலைவரை இனம் காணும் வரை எந்த தலைவரின் பின்னாலும் உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள்.
தலைவர்களுக்கு:
அரசியலையும் மதத்தையும் போட்டு மக்களை குழப்பாதீர்கள், அரசில் பிரிவு, மதம் சார்ந்த பிரிவுகளை ஏற்படுத்தி அந்தந்த பிரச்னைகளை அந்தந்த துறைகளில் நிபுணத்துவம், முதிர்ச்சியும் பெற்ற நம் பெரியார்களை, அறிஞர்களை கொண்டு தீர்வுகாண முயலுங்கள், எல்லாம் எனக்கு தெரியும், நான்தான் தலைவர் என்ற அகந்தையில், தலைவர்கள் தான் என்ற கர்வத்தில், சுயமாக மமதையில் உழலாதீர்கள்.
தலைவர்களே நாங்கள் நன்றாக உங்கள் முகம் நோக்கி கேள்வி கேட்போம்தான். பொது வாழ்க்கைக்கு வந்து விட்டால். மக்களுக்கு நல்லது செய்கிறேன் என்று மக்களின் உழைத்த பணங்களில் சந்தா, நன்கொடை, புத்தக விற்பனை செய்து உங்கள் கழகத்தை மட்டும் பலப்படுத்த அல்ல எங்கள் சமுதாயத்திற்கும் பாதுகாப்பும், சமூக உரிமையையும் பெற்றுத் தரத்தான். நம்மிடையே ஒற்றுமையை வளர்க்கத்தான். இதையெல்லாம் செய்ய இயலாது என்றால் நல்ல ஒரு பர்தாவை போர்த்திக் கொண்டு உங்கள் வீட்டிலேயே முடங்கிப்போங்கள், உங்களை எவனும் கேள்வி கேட்க மாட்டான். நீங்கள் முடங்கிப் போவதால் எம் சமுதாயம் ஒன்றும் அழிந்து விடாது. ஒரு புரட்சியையும், ஒற்றுமையையும் எங்களுக்குள் கொண்டு வர எம்மில் ஒருவன் பிறந்திருப்பான் அல்லது இறைவன் பிறக்க வைப்பான் இன்ஷா அல்லாஹ்…
ஒற்றுமையாய் வாழ கற்றுக்கொள்ளுங்கள், எங்களுக்கும் கற்றுக் கொடுங்கள் இல்லையேல் புதியவர்களுக்கு வழி விட்டு ஒதுங்கி ஓடிப்போய் வீட்டோடு ஒளிந்து கொள்ளுங்கள்.
எம் சமுதாயத்தில் எல்லோரும் ஓற்றுமையாக ஒரே குடையின் கீழ் ஓரே அணியாக எல்லோரும் சகோதரர்களாக நின்று குரல் கொடுக்கும் நாளை (இன்ஷா அல்லாஹ்) மிக ஆதங்கத்துடன், ஆவலுடன் எதிர் பார்த்தவனாக இறைவனிடம் கையேந்தியவனாய்.
- ஸுலைமான்
Source :http://www.nidur.info/

0 கருத்துகள்: