கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

பயனுள்ள மருத்துவக் குறிப்புகள்


பயனுள்ள எளிய மருத்துவக் குறிப்புகளை, சகோதரி (கல்லை) நூர்ஜஹான் அவர்கள் தொகுத்து நமக்கு அனுப்பியுள்ளார். நோய்களுக்கு அல்லாஹ் நிவாரணம் அளிக்க வேண்டிப் பிரார்த்தனைகளோடு வாசகர்கள் பயனடைவதற்காக அவற்றை இங்குத் தருவதில் மகிழ்கிறோம்! - நன்றி சத்தியமார்க்கம்.காம்.


(01) மாரடைப்புநடுமார்பில் வலி, மார்பில் இறுக்கிப்பிடித்ததுபோல் உணர்வு, மார்புப் பகுதியிலிருந்து இடது தோள்பட்டைவரை வலி பரவுதல், பின் மார்பின் நடுப்பகுதியில் வலி ஏற்பட்டு, கழுத்து வரைக்கும் பரவுதல், அதிக வியர்வை, வாந்தி, மயக்கம் ஆகியவை மாரடைப்புக்கான முக்கிய அறிகுறிகளாகும். அதிகப் பதட்டம், மன அழுத்தம் உள்ளவர்கள், புகை-மதுப்பழக்கம் உள்ளவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

(02) சிறுநீரகம்பெரும்பாலானவர்களுக்கு சிறுநீர்ப்பாதையில் நோய்த்தொற்று ஏற்படும். இதற்கு காரணம் இன்றைய பரபரப்பான வாழ்க்கைமுறை. சிறுநீர் வெளியேறும்போது எரிச்சல், கடும் மஞ்சள் நிறத்தில் வெளியேறுதல், புளிச்ச வாசனை, அதிக நுரை, அடி வயிற்றில் வலி ஆகியன இருந்தால் உங்களுக்கு, சிறுநீரகக்கல் பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். வெளிறிய மஞ்சள் நிறத்தைத் தவிர்த்து வேறு நிறத்தில் சிறுநீர் வெளியேறினால் உடனே மருத்துவரை அணுகிப் பரிசோதித்துக்கொள்வது நலம் பயக்கும்.

(03) மறதிஇளமையில் மறதி என்பது வேறு! ஆனால் அளவுக்கு அதிகமான மறதி முதுமையில் ஏற்படும். இதற்கு 'அல்ஸைமர் நோய்' என்று பெயர். இந்த நோயைக் கட்டுபடுத்தும் ஆற்றல் மஞ்சளுக்கு உண்டு. மேலும் கடுக்காய், நெல்லிக்காய், இஞ்சி ஆகிய உணவுப்பொருட்கள் வயதான பிறகும், நோய்கள் தொற்றாமல் பாதுகாக்கும். இதைவிட முக்கியம் உணவுக்கட்டுப்பாடு. சத்தான, மிதமான உணவுமுறை முதுமையில் மிக அவசியம்.

(04) இரத்த அழுத்தம்இரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் நாள்தோறும் காலையில் 1-அவுன்ஸ் துளசிச் சாறெடுத்துச் சாப்பிடுவது நல்லது. உடலில் தடை பட்டிருக்கும் ரத்தக்குழாய்களைத் துளசிச் சாறு அகலப்படுத்த உதவுகிறது. இதனால் ரத்த-அழுத்தம் குறைந்து விடும்.

(05) புற்றுநோய்த் தடுப்புநாம் அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்ளும் சில உணவுப்பொருட்களில் புற்று நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் உள்ளது எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உணவில் வெங்காயம், வெள்ளைப்பூண்டு அதிகம் சேர்த்துக்கொள்வோர்க்குப் புற்று நோய் வருவதற்கு வாய்ப்புகள் குறைவு என்று மருத்துவத் தகவல் தெரிவிக்கின்றது. வெங்காயத்திலும் வெள்ளைப் பூண்டிலும் உள்ள 'செலீனியம்' என்னும் உலோகம் புற்று நோய் வராமல் தடுக்கும் ஆற்றல் பெற்றுள்ளது.

(06) பல் ஈறுபல் ஈறுகள் வீங்கி வலியால் துடிப்பவர்கள் படிகாரத்தைச் சிறிது தூளாக்கி வெந்நீரில் போட்டுக்கலந்து வாயைக் கொப்பளித்தால் வலி போன இடம் தெரியாது.

(07) மாரடைப்புமாரடைப்பால் பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானவர்களுக்கு அதிகாலையில்தான் மாரடைப்பு வருகின்றது. இதற்கான காரணம் என்னவென்றால் அவர்கள் பெரும்பாலும் இரவில் அதிகம் தூங்க மாட்டார்கள். தூக்கமின்மையால் அவதிப்படுவோர்க்குத்தான் அதிகாலையில் மாரடைப்பு வருகின்றது.

(08) நரம்புத் தளர்ச்சிநரம்புத் தளர்ச்சி நோய் சர்வசாதாரணமாக எல்லோருக்கும் ஏற்பட்டு வருகின்றது. மலச்சிக்கல், உறக்கமின்மை, நீரழிவுநோய், பெருந்தீனி, ரத்த அழுத்தம், தவறான வழியில் சக்தியை வீணாக்குதல், குடும்பப்பளு, சத்தான உணவை உட்கொள்ளாமை போன்ற காரணங்களால் நரம்புத் தளர்ச்சி நோய் ஏற்படுகின்றது. இதிலிருந்து தப்பிக்க ...
· நன்றாக உறங்க வேண்டும்
· மன அளவிலும் உடல் அளவிலும் உடலைப் பேணிக் காக்க வேண்டும்.
· உறங்குவதற்குமுன் அதிக நீரைப் பருக வேண்டும்
· தூங்கும்முன் சூடான பானம் எதுவும் அருந்தக்கூடாது.

(09) வழுக்கைசிலருக்குத் தலையில் வட்ட வடிவமாக வழுக்கை விழும். இதைத் தவிர்ப்பதற்கு மாதுளம் பழச்சாற்றைப் புழுவெட்டு உள்ள இடத்தில் சூடேற்றித்தேய்க்க மூன்று நாட்களில் அரிப்பு மாறி, முடி முளைக்கும். ஊமத்தைப் பிஞ்சை உமிழ் நீரால் மைபோல அரைத்துத் தலையில் தடவி வந்தால் புழுவெட்டு நீங்கும். ஆற்றுத் தும்மட்டிக்காயை நன்றாக நறுக்கித் தலையில் தேய்த்துவர பலன் கிடைக்கும்.

(10) தொண்டைப்புண்தொண்டைப்புண், சளி போன்றவற்றால் அவதிப்பட்டுவோருக்குப் பனங்கற்கண்டு, சிறிது மிளகு, சிறிது சீரகம், விரலி மஞ்சள் துண்டு ஆகியன உதவும். மிளகு, சீரகத்தை வறுத்துப் பொடி செய்து கொள்ள வேண்டும். ஒரு டம்ளர் தண்ணீரில் கொஞ்சம் மஞ்சளைப் பொடியாக்கிப்போட்டு விட்டு மேற்கண்ட எல்லாவற்றையும் போட்டு, தளதளவென்று கொதிக்க விட்டு, இறக்கிய கஷாயத்தில் சூட்டுடன் ஒரு டீஸ்பூன் வெண்ணெய்யைச் சேர்த்துக் கலக்கிக் குடித்தால், தொண்டையைத் தொல்லைப்படுத்திக்கொண்டிருக்கும் பிரச்சனைகள் நீங்கி விடும்.

(11) உடல் தளர்ச்சிவெங்காயத்தில் வைட்டமின் ஏ,பி,சி ஆகியவை உள்ளன. உடல்தளர்ச்சியினால் ஏற்படும் உபாதைகளை எல்லாம் வெங்காயம் போக்குகிறது. இருதயத்தை வலுப்படுத்துகிறது. இது உடலுக்குச் சக்தியை அளிப்பதுடன் இழந்த சக்தியைத் திரும்பப் பெறவும் பயன்படுகின்றது. வெங்காயம் இளமையைப் பாதுகாக்கும். நீரழிவு நோயாளிகளுக்கு வெங்காயம் அருமருந்து. காரணம் வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. வெங்காயத்தின் விஞ்ஞானப் பெயர் 'ஆலியம்சிபா.'

(12) வயிற்றுப்புண்வயிற்றுப்புண் இருப்பவர்கள் பச்சரிசி, பாசிப்பருப்பு, வெந்தயம் 1டீஸ்பூன், நிறைய பூண்டு உரித்துப்போட்டு குக்கரில் வைத்து வெந்தவுடன், அதில் கெட்டியான தேங்காய்ப்பால் கலந்து சாப்பிட்டுவர, வயிற்றுப்புண்ணும் வாய்ப்புண்ணும் குணமாகிவிடும்.

(13) அல்சர்சர்வ சாதாரணமாக எல்லோரையும் தாக்கக் கூடிய நோய்களில் 'அல்சரும்' ஒன்று. நேரத்திற்குச் சாப்பிடாமல் இருப்பவர்களுக்கு, சாப்பிடும் உணவு ஜீரணம் ஆகாமல் இருப்பவர்களுக்கும் இந்த நோயின் பாதிப்பு அதிகம். முதலில் வயிற்றின் அடிப்பகுதியில் கடுமையான வலியோடு ஆரம்பிக்கும். வாந்தி, எரிச்சல் ஏற்படும். அல்சர் ஏற்படக்காரணங்கள்:
· காரமான உணவுப்பொருட்களை அதிகம் உட்கொள்ளுதல்
· மண்,கல் கலந்த உணவு, நீர் போன்றவற்றை உட்கொள்ளுதல்
· கோபப்படுதல், பட்டினி இருத்தல்
போன்ற காரணங்களால் அல்சர் ஏற்படலாம்.
அறிகுறிகள்:
பசியின்மை, ஏப்பம் அடிக்கடி வருதல், வயிறு இரைச்சல், நெஞ்சு எரிச்சல்.
கட்டுப்பாடுகள்:
வேளாவேளைக்குச் சரியாக சாப்பிடுதல், இறைச்சி, மீன் போன்றவற்றைத் தவிர்த்தல் ஆகியவற்றால் அல்சரிலிருந்து குணம் கிடைக்கும்.

(14) நோய் எதிர்ப்பு சக்திகற்றாழையில் உள்ள மருத்துவ குணங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. இதில் வைட்டமின்கள், கனிம சத்துக்கள், என்சைம்கள், புரோட்டீன்கள் சேர்த்து 70 வகையான மருத்துவ குணங்களுடைய உபபொருட்கள் உள்ளன. மொத்தத்தில் கற்றாழை என்பது உடலில் எனர்ஜி அதிகரிக்கக்கூடியது. ரத்த ஓட்டத்தைச் சீராக்குவது. அதனால்தான் மூளையில் ரத்தம் உறைந்த நிலையிலும் இதைப் பயன் படுத்துகின்றனர். ஆங்கில மருந்துகளிலும் இதன் பயன்பாடு உள்ளது.
நோய் எதிர்ப்பு சக்திக்கு, அல்சர்போன்ற வயிறு சம்பந்தமான கோளாறுகளுக்கு, ஜீரண சக்திக்கு, தோல் பாதுகாப்புக்கு, தோல் பளபளப்புக்குக் கற்றாழை நல்ல பயன் தருகின்றது. தசைகள் மூட்டு இணைப்புகளில் திடத்தன்மை ஏற்படுத்துவதும் கற்றாழைதான்.

தொகுத்து அளித்தவர்: ஆர்.நூர்ஜஹான் ரஹிம் (கல்லை)

0 கருத்துகள்: