கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

21.12.2012…. நாம் இன்னும் உயிரோடுதான் இருக்கிறோம்..!

21.12.2012…… இன்றைய காலைபொழுதும் பறவைகளில் கீச் கீச் ஓசையுடன் மிகவும் ரம்மியமாகவே புலர்ந்தது. சாலைகளில் வாகனங்கள் நகர்ந்தன… மக்கள் வழக்கம்போல துரிதகதியில் வேலைக்குச் சென்றனர்… தற்போது வேலை முடிந்து வீட்டுக்கும் சென்றுகொண்டிருக்கின்றனர்..
காலையில் வெயில், அப்புறம் கொஞ்சமாக மழை என இயற்கையும் தனது வர்ணஜாலத்தை தீட்டிய வண்ணமே உள்ளன… இதையெல்லாம் விட நாம் தற்போது உயிரோடு இருக்கிறோம்! மகிழ்ச்சிதானே!
கடந்த ஓரிரு ஆண்டுகளாக உலக மக்களின் பார்வையை உலகமே தன்வசம் ஈர்க்க வைத்தது, மாயன் காலெண்டர். மெக்சிகோவில் பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த மாயன் இனத்தவர்கள் அப்போதே நாகரீகமாக வாழ்ந்தனர் என்பதற்கான முக்கிய சான்றாக விளங்குவது மாயன் நாள்காட்டியாகும். இந்த மாயன் நாள்காட்டி, 21.12.2012-டன் நிறைவடைவதைத் தொடர்ந்து இன்றைய தேதியில் உலகம் அழிந்து விடும் என்ற மாயை ஏற்பட்டுவிட்டது, முதல் கிட்டத்தட்ட உலக மக்கள் அனைவரும் உலகம் எப்போது அழியும் என காத்திருக்கத் தொடங்கிவிட்டனர் என்றுதான் கூறவேண்டும்.
பொதுவாகவே, 2012 கடந்த ஆண்டு முதலே உலக மக்களிடையே பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. முதலாவதாக, 12-12-2012 என்ற தேதி. காலச்சக்கரத்தின் ஒரு அதிசயத் தேதியாகவே கருதப்பட்டது. இனியும் 13-13-2013 என்ற தேதி, நாள்காட்டியில் வராது என்பதாலோ என்னவோ, இந்த தேதியை மக்கள் ஒரு அதிசய நாளாகவும், அதிர்ஷ்டகரமான நாளாகவும் கருதி, குழந்தைப் பெறுவதற்காகவும், திருமணம் செய்துகொள்ளவும் போட்டி போட்டுக்கொண்டு முன்பதிவு செய்தனர். ஆனால், 12-12-2012 அதிர்ஷ்ட நாளாகக் கருதப்பட்டது போல், இன்றைய 21-12-2012 தேதியை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனெனில்,  மக்களைப் பொறுத்தவரையில் இன்றைய நாள் உலகம் அழியும் என்பதே..
21.12.2012 என்ற தேதியில் உலகம் அழியும் என்ற ஆருடம் மக்களிடையே வேரூன்றத் தொடங்கியது முதலே, நாசா விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தங்களின் பொறுப்பை உணர்ந்து பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு உலகம் இப்போதைக்கு அழியாது என்ற நிதர்சனமான உண்மையை மனிதர்களுக்கு உணர்த்தியபோதும் பலர் நம்பத் தயாராக இல்லை. இன்றைய தேதியைத் தொடர்புபடுத்தி அனுப்பப்பட்ட குறுஞ்செய்திகளும், மின்னஞ்சல்களும், சமூக வலைதளங்களில் அனல்பறக்கும் விவாதங்களும், “உலகம் அழியும் கடைசி நிமிடத்தில் நீ என்ன செய்வாய்?” போன்ற உணர்ச்சிப்பூர்வமான கேள்விகளும் மக்களிடையே சக்கை போடு போட்டன.   
நாகரீகமும், நவீன தொழில்நுட்பங்களும் விண்ணையும் தொட்டுவிட்ட இன்றைய காலத்திலும், பகுத்தறிவிற்கு அப்பாற்பட்ட இது போன்ற நம்பிக்கைகளும், ஆருடங்களும், மாயையும் மக்களை ஆட்கொள்ளவே செய்கின்றன என்பதற்கு மேற்கண்ட சம்பவங்களே சான்றாகும்.
21.12.2012 –ஆம் தேதியன்று உலகம் அழியும் என்று நம்பி ஏமாந்ததாக மக்கள் பேசிக்கொள்வது இன்று காலை முதல் பல்வேறு திசைகளில் எதிரொலிப்பதைக் கேட்க முடிகிறது. ஆனால் மாயன் காலெண்டர் என்ற விஷயம் தலைதூக்காத வரை, வானமாவது..கடலாவது, பூமியாவது…எது எது எப்படி போனால் எனக்கென்ன? என சுயநலமாக திரிந்த மக்களை, தன்னைப் பார்த்து பயப்படும்படி செய்ததில் நாம் வாழும் பூமிப்பந்து வெற்றி பெற்றுள்ளது என்றுதான் கூற வேண்டும்!
இதுநாள் வரை கால் போன போக்கில் ஆங்காங்கே குப்பைகளை வீசுவதும், வஞ்சனையில்லாமல் பிளாஸ்டிக் பைகளை உபயோகித்து, மேம்பாடு என்ற பெயரில் மரங்களை வேரறுத்து கட்டடங்கள் கட்டி ரசித்து,  உலகத்தை டென்ஷன் (வெப்பம்) படுத்தி, இயற்கை சீற்றங்களுக்கு வழிவகுத்துத் தந்துள்ள நாம்  இன்றைய தேதியில் நமக்கு உயிர்பிச்சை அளித்துள்ள உலகத்திற்கு இனிமேலாவது நன்றி கடன் செலுத்த வேண்டிய கடப்பாட்டைக் கொண்டுள்ளோம்.
நாளுக்கு நாள் நாம் வாழும் இந்த பூமி வெப்பமடைந்து வருகிறது. ஆண்டுக்கு ஆண்டு வெப்பம் அதிகரித்து 5 நிமிடம் கூட வெயிலில் நிற்பது அனலில் நிற்பதைப் போன்ற உணர்வை நமக்கு ஏற்படுத்துகிறது. பருவ நிலை மாறியுள்ளதைக் கண்கூடாகக் காண்கிறோம். எதற்கும் ஒரு அளவில்லாமல் வெயிலடிக்கிறது, அல்லது மழைப்பொழிகிறது.  அதிகளவில் வாகனம் மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் புகை, கட்டுப்பாடற்ற காடு அழிப்பு, பிளாஸ்டிக் பை உபயோகம் போன்ற மனித தவறுகளால் பூமி நாளுக்கு நாள் வெப்பமடைந்து வருகிறது. இதனால், வட, தென் துருவங்களில் பனிக்கட்டிகள் கரைந்து கடல் நீர்மட்டம் அதிகரித்தால், மனித குலத்திற்குப் பேரழிவு ஏற்படும் என விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர்.
ஆயினும், இவ்விஷயத்தில் நாம் இன்னமும் மெத்தனமாகவே இருக்கிறோம். இயற்கைக்குத் தங்களால்  இயன்ற கடப்பாடாக, பல பேரங்காடிகள் பிளாஸ்டிக் பைகளைத் தடை செய்துள்ளதை, பலரும் அறிவோம், பிளாஸ்டிக் உபயோகத்தை குறைக்க இம்முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், இந்த அணுகு முறையை நம்மில் எத்தனைப் பேர் பின்பற்றுகிறோம்? இன்று சனிக்கிழமை என்பதை மறந்து பேரங்காடிக்குள் நுழைந்து சகட்டு மேனிக்கு பொருட்கள் வாங்கி பணம் கட்டும் நேரத்தில் தான் நமக்கு பிளாஸ்டிக் தடை நினைவுக்கு வருகிறது. அப்போது நம் முகம் போகும் போக்கு இருக்கிறதே...? 20 சென் தானே போனால் போகட்டும் என காசு கொடுத்து பூமிக்கு விரோதமான அந்த பையை வாங்கியே தீருவேன் என்றல்லவா அடம்பிடிக்கிறோம்…?
எண்சாண் உடம்பை வைத்துக்கொண்டு இந்த மாபெரும் புவியை நாம் பலவாறாகத் துன்புறுத்துகிறோம். ஆனால் பூமி பதிலுக்கு நம்மை ஆட்டுவித்தால் மனித குலமே அழியும் என்பதற்கு சுனாமி போன்ற பேரிடர்கள் நமக்கு ஓர் அச்சுறுத்தலாகும்.
எனவே… நாம் உயிர்வாழ அரணாக இருப்பதே இந்த உலகம் தான். எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு பூர்வக்குடியினர் எழுதிவைத்த ஆருடத்தை நம்பி உலகத்தில் பிரளயம் ஏற்படவிருப்பதாக அஞ்சி நடுங்குகிறோம். ஆனால், நாம் வாழ்வதற்கு இடமளித்த உலகத்தைப் பற்றி சற்று சிந்தித்து செயல்பட்டால், இன்னும் பல கோடி ஆண்டுகளுக்கு நம் பூமி பாதுகாப்பாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. நமது அடுத்த தலைமுறையும் இந்த பூமியில் வாழ அனுமதிப்பது நம் கடமை அல்லவா?
http://www.vanakkammalaysia.com/

0 கருத்துகள்: