நஜ்மாவின் கருத்து எல்லா மதச் சிறுபான்மையினரையும் நோக்கி விடுக்கப்பட்டதுபோல்தான்
‘இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் சிறுபான்மையினர் அல்லர் - பார்சிகளே சிறுபான்மையினர்' என்ற சிறுபான்மையினர் நலத் துறையின் மத்திய அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நஜ்மா ஹெப்துல்லாவின் கருத்து, பெரும் சர்சையை எழுப்பியுள்ளது. முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் தகவல்தொடர்பு ஆலோசகராக இருந்து, பிறகு பா.ஜ.க-விலிருந்து விலகிய சுதீந்திரா குல்கர்னி இதுகுறித்து தனது ட்வீட்டர் பதிவில் ‘அது உண்மையெனில், 69,000 பார்சிகளுக்காக கேபினட் தகுதியில் ஒரு அமைச்சர் தேவையா? உண்மையை உணருங்கள் நஜ்மா’ என்று விமர்சித்துள்ளார்.
நஜ்மா குறிப்பிட்டுள்ளதுபோல் இந்தியாவில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருக்கும் சமூகமாக பார்சிகள் இருந்தாலும், ஏனைய சிறுபான்மைச் சமூகங்கள் மட்டுமின்றி இந்தியாவில் வாழும் அனைத்துச் சமூகங்களைவிடவும் மிக அதிகமான தனிநபர் வருவாய் உடையவர்களாகவும் அதிகாரத்தில் செழிப்பானவர் களாகவும் பார்சிகள் இருக்கிறார்கள். எனவே, குல் கர்னி குறிப்பிட்டுள்ளதுபோல் அவர்களுக்கெனத் தனி அமைச்சர் தேவையில்லைதான்.
உண்மையில், அரசியலிலும் நிர்வாகத்திலும் அனுபவ முள்ள நஜ்மாவுக்கு, பலம் வாய்ந்த பல துறைகள் இருந் தும் அதனை ஒதுக்காமல், அவர் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதற்காகவே சிறுபான்மை நலத் துறை அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது என்பதை அவர் மறந்துவிட்டார்.
சிறுபான்மையினர் யார்?
நஜ்மாவின் கருத்து நியாயமானதா என்பதை ஆவணபூர்வமாக ஆராய்வோம். ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் நியமித்த பாகுபாடுகளைத் தடுப்பதற்கும் சிறுபான்மையினரைப் பாதுகாப்பதற்குமான துணை ஆணையம் ‘சிறுபான்மை' என்பதற்குப் பின்வரும் வரைவிலக்கணத்தை அளிக்கிறது:
“ஒரு நாட்டில் வாழும் மக்கள்தொகையில் எண்ணிக் கையில் குறைவாக, அந்நாட்டின் குடிமக்களாக வாழ்ந் தாலும் எஞ்சிய மக்களைவிட அதிகாரம் செலுத்த முடி யாத நிலையில், பிற மக்களைவிட வேறுபட்ட இன, மத மற்றும் மொழிப் பண்பாடுகளை உடையவர்களாக, தங்கள் கலாச்சாரம், பாரம்பரியம், மதம் அல்லது மொழியைத் தக்கவைத்துக்கொள்ள ஒருமித்துச் செயல்படும் மனப்பான்மை உடையவர்களாக இருக் கும் குழுவினர்தான் சிறுபான்மையினர்” என்று குறிப் பிடுகிறது. இந்த வரைவிலக்கணத்தின் அடிப்படையில், இந்தியாவில் இனரீதியாக, மதரீதியாக மற்றும் மொழிரீதியாகப் பல வகையான சிறுபான்மையினர் வாழ்ந்துவருகின்றனர்.
1992-ல் இயற்றப்பட்ட சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையத்தின் 2-ம் பிரிவில் குறிப்பிட்டுள்ளவாறு, இந்தியாவில் சிறுபான்மையினர் யார் என்பதற்கான அறிவிக்கையை மத்திய அரசு 1993 அக்டோபர் 23-ல் வெளியிட்டது. அதில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் மற்றும் பார்சிகள் இந்தியாவில் சிறுபான்மையினர் என்று அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு ஜனவரி 20 அன்று சமணர்களும் சிறுபான்மையினர் என்று அறிவிக்கை வெளியிடப்பட்டது.
2006-ல் உருவாக்கப்பட்ட சிறுபான்மை நலத்துறை அமைச்சகம் அதிகாரம் மிக்கது அல்ல. தனது செயல்பாட்டுக்கு அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்து நிற்கும் நிலையிலேயே அது உள்ளது. இந்த அமைச்சகம் சிறுபான்மை மாணவர்களுக்குக் கல்வி உதவி அளிப்பது, சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்குக் கட்டமைப்பு வசதிகளைச் செய்வதற்கு உதவுவது உள்ளிட்ட மிகச் சிறிய அளவு பணிகளை மட்டுமே செய்துவருகிறது.
இருப்பினும், இப்பணிகள் வளர்ச்சியின் அடிப்படையில் அமைந்தவை. மோடி அரசு வளர்ச்சியின் பாதையில் இந்தியாவை அழைத்துச்செல்வதாகக் கூறுகிறது. சிறுபான்மையினர் வளர்ச்சியடையக் கூடாது என்ற மறைமுகத் திட்டத்தின் வெளிப்பாடுதான் நஜ்மாவின் கருத்தா? பிரதமர் மோடிதான் பதில் அளிக்க வேண்டும்.
முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு
முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது பிரச்சினைகளுக்குத் தீர்வாகாது. மாறாக, அது பிரச் சினைகளிலிருந்து தப்பிப்பதற்கான ஒரு வழியே என்றும் தனது பேட்டியில் நஜ்மா குறிப்பிட்டுள்ளார். அரசியலமைப்புச் சட்டம் மதரீதியான இடஒதுக்கீட்டை அங்கீகரிக்கவில்லை என்றும் இப்பிரச்சினையை அரசி யலமைப்புச் சட்டரீதி யாக அணுகவிருப்பதாகவும் நஜ்மா கருத்துத் தெரிவித்துள்ளார்.
இதே கருத்தை மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரம் வழங்கல் அமைச் சராகப் பொறுப்பேற்றுள்ள தாவர்சந்த் கெல்லட்டும் தெரிவித்துள்ளார். அரசிய லமைப்புச் சட்டத்தின் 15 (4) மற்றும் 16 (4) பிரிவு கள் அளிக்கும் அதிகாரத்தின் அடிப்படையில் பல்வேறு மதங்களைப் பின்பற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வகுப்பினருக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது போன்று பிற்படுத் தப்பட்ட முஸ்லிம் வகுப்பினருக்கும் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது.
1950-ல் வெளியிடப்பட்ட குடியரசுத் தலைவரின் ஆணையின் அடிப்படையில், இந்துக்களாக உள்ள பட்டியல் இன மக்களுக்கு இடஒதுக்கீடு முதன்முதலாக வழங்கப்பட்டது. பிறகு 1956-ல் சீக்கிய மதத்தைச் சேர்ந்த பட்டியல் இனத்தினருக்கும் 1990-ல் பௌத்த மதத்தைச் சேர்ந்த பட்டியல் இனத்தினருக்கும் இதே இடஒதுக்கீடு நீட்டிக்கப்பட்டது. ஆனால், கிறிஸ்தவர்களாக இருக்கும் பட்டியல் இனத்தினருக்கும் இந்த இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்ற நீதிபதி ரங்கநாத் மிஸ்ராவின் அறிக்கையைத் தான் நிராகரிப்பதாக நஜ்மா கூறியிருப்பது அவரது அறியாமையா அல்லது அவர் யாருடைய ஊதுகுழலாக இப்போது மாறியுள்ளார் என்பதன் எடுத்துக்காட்டா?
பட்டியல் இன மக்களுக்கு மதரீதியாக இடஒதுக்கீடு அளிப்பதை ஏற்றுக் கொள்ளும்போது, மிகவும் பிற்படுத்தப்பட்ட அல்லது பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சார்ந்த முஸ்லிம்களுக்கு மட்டும் இடஒதுக்கீடு அளிப்பது தவறு என்று சொல்வது எப்படி நியாயம்? இடஒதுக்கீடுகுறித்து நஜ்மாவும் கெல்லட்டும் கூறியுள்ள கருத்துகள் முஸ்லிம்களுக்கு மட்டும் எதிரானது அல்ல. இன்று பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் என்றால், நாளை பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட ஏனைய சமயங்களைச் சார்ந்த மக்களுக்கான இடஒதுக்கீட்டையும் இவர்கள் தேவையில்லாத ஒன்று என்று கூறுவதற்கும் தயங்க மாட்டார்கள்.
காங்கிரஸிலிருந்து பா.ஜ.க-வுக்கு
நஜ்மா ஹெப்துல்லா தனது வாழ்நாளின் பெரும் பகுதியைக் காங்கிரஸ் கட்சியில் கழித்தவர். இதற்காக அக்கட்சி அவரைக் கண்ணியப்படுத்தி நான்கு முறை (1980, 1986, 1992, 1998) மொத்தம் 24 ஆண்டுகளுக்கு அவரை மாநிலங்களவை உறுப்பினராக்கியது. இதில் 16 ஆண்டுகள் அவர் மாநிலங்களவைத் துணைத் தலைவராக காங்கிரஸ் கட்சியின் தயவால் பதவிவகித்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
2004-ல் மீண்டும் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு காங்கிரஸ் கட்சியால் நியமிக்கப்படவில்லை என்பதால், அவர் பா.ஜ.க-வுக்குக் கட்சி மாறினார். உடனடியாக அவர் மாநிலங்களவை உறுப்பினராக பா.ஜ.க-வால் நியமிக்கப்பட்டார். இருக்கும் இடத்துக்கு ஏற்றவாறு தனது குரலை மாற்றிக்கொள்பவர் என்று அவரைச் சந்தேகிக்க எல்லா நியாயங்களும் இருக்கின்றன. முஸ்லிம்கள் சிறுபான்மையினர் அல்ல;
அவர்களுக்கு இடஒதுக்கீடு தேவையில்லை என்பதுடன் நிற்காமல், சிறுபான்மையினர் வளர்ச்சிக்கான சச்சார் குழுவின் பரிந் துரைகளையும் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரையையும் நிராகரிக்க வேண்டும்; வக்ஃபு சொத்துகள் அனைத்தும் அரசுக்குச் சொந்தமானவை என்றெல்லாம் நஜ்மா தனது பேட்டியில் கூறியுள்ளார்.
தனது அமைச்சரவையில் அதிக வயதுடைய சகாவான நஜ்மாவின் கருத்துகள் பெரும் சர்ச் சையை எழுப்பினாலும் பிரதமர் அதுகுறித்து மௌனமாக இருந்துவருகிறார். அனைவருக்குமான பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடி, சிறு பான்மையினர்குறித்த தனது அமைச்சரவை சகாக்களின் கருத்துகள்குறித்து தனது நிலையைத் தெளிவுப்படுத்த வேண்டும் என்பதே அரசியலமைப்பை நேசிக்கும் சிறுபான்மைச் சமூகத்தின் எதிர்பார்ப்பு.
எம்.எச். ஜவாஹிருல்லா,
மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர்,
தொடர்புக்கு: jawahirisnfo@gmail.com
0 கருத்துகள்:
கருத்துரையிடுக