ஐந்து நிமிடப் பேச்சு அது. ஆனால் ஆணித்தரமான, அழகான, நிறைவான பேச்சு.
மோடிக்கு வாழ்த்து சொல்லி பாராட்டியவர் ‘நான் உங்களுடைய வெற்றியை Pyrrhic victory ஆகத்தான் கருதுகின்றேன்’ என்று சொன்னதுதான் சரியான பஞ்ச். மோடியின் வெற்றியை இதனை விட நச்சென்று விமர்சிக்க முடியாது.
‘ஏன் குஜராத் 2002 படுகொலைகளையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கின்றீர்கள்?’ என்று ராம்விலாஸ் பாஸ்வான் சொன்னதற்கு அவர் அளித்த பதில் அழுத்தமானது. கனமானது. உவைசி சொன்னார்: ‘இந்த நாட்டின் வரலாற்றில் நாட்டின் அடிப்படைகளை ஆட்டங்காணச் செய்கின்ற அளவுக்கு நான்கு கொடூரங்கள் நடந்திருக்கின்றன. முதலாவதாக தேசத் தந்தை மகாத்மா காந்தியின் படுகொலை. இரண்டாவதாக, 1984-இல் தில்லியில் நடந்த சீக்கியப் படுகொலைகள். மூன்றாவதாக, பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட கொடுமை. நான்காவதாக குஜராத்தில் 2002-இல் நடந்த முஸ்லிம் படுகொலைகள்.’
இவ்வாறு சொன்ன அதே மூச்சில் ‘எவரிடம் மனித நேயம் இருக்கின்றதோ அவர் இந்தக் கொடுமைகளை மறக்க மாட்டார். நினைவில் வைத்திருப்பார். எவரிடம் மனிதம் இருக்கின்றதோ அவர் இந்தக் கொடுமையாளிகளை மன்னிக்கவே மாட்டார்.’ என்று சொன்னதைக் கேட்டு அவையே சில வினாடிகள் ஸ்தம்பித்து நின்றுவிட்டது.
Inclusive growth குறித்து பேசுகின்ற நீங்கள் ஒன்றைக் கவனிக்க வேண்டும். பன்முகத் தன்மையும் பல்வேறு இனங்களையும் மதங்களையும் மொழிகளையும் பண்பாடுகளையும் சேர்ந்து வாழ்கின்ற பன்மைச் சமூகத்தன்மையும்தான் இந்த நாட்டின் அடையாளமாக, பாரம்பர்யமாக இருந்து வந்துள்ளது. ஆனால் இது இந்த அவையில் பிரதிபலித்துள்ளதா? யோசியுங்கள். முஸ்லிம் எம்பிக்களின் எண்ணிக்கை 21 ஆக சுருங்கிப் போனதேன்? சிந்தியுங்கள்.
முஸ்லிம்களை equal partnersகளாக ஆக்கிக் கொள்வோம் என்று சொல்கின்றீர்கள். சமமான பங்குதாரர்களாய் முஸ்லிம்களை எப்படி ஆக்கப் போகின்றீர்கள்? உங்களுடைய சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சரே முஸ்லிம்களை சிறுபான்மையினர் எனச் சொல்லக் கூடாது என்று கூறியிருக்கின்றார். நான் கேட்கின்றேன். முஸ்லிம்கள் சிறுபான்மை சமூகத்தினர் இல்லை யெனில் 80 ஆயிரம் பேரைக் கொண்ட பார்சிகளுக்காகத்தான் சிறுபான்மை துறை அமைச்சகம் அமைக்கப்பட்டுள்ளது என்று நான் நம்ப வேண்டுமா? அரசியல் அமைப்புச் சட்டத்தின் 29க்கும் 30க்கும் இது நேர் மாறானதாக இல்லையா?
மே 16 அன்றுதான் அக்ஷர்தாம் கோவில் தாக்குதல் தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பும் வந்தது. குஜராத் அரசும் உள்துறை அமைச்சரும் சரியாகச் செயல்படவில்லை என்று உச்ச நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்தது. அந்த அரசின் அப்போதைய உள்துறை அமைச்சர்தான் இப்போது இந்த நாட்டின் பிரதமராகவும் இருக்கின்றார்.
தம்முடைய கையாலாகாததனத்திற்காக குஜராத் அரசு மன்னிப்பு கேட்குமா? ஏழு ஆண்டுகள், பன்னிரு ஆண்டுகள் என சிறையில் தொலைத்த அப்பாவிகளுக்கு அவர்களின் இழந்த ஆண்டுகளை மீட்டுக் கொடுப்பது யார்?
Zero tolerance to communalism என்று இந்த அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஐயா, நான் இங்கு இஹ்ஸான் ஜஃப்ரியின் மகனாக வந்திருக்கின்றேன்.
நான் இங்கு இஷ்ரத் ஜஹானின் அண்ணனாக நிற்கின்றேன்.
நான் இங்கு முஹ்சின் சாதிக்கின் சித்தப்பாவாக வந்துள்ளேன். நான் இங்கு குஜராத் இனப் படுகொலையின்போது உயிரைப் பறிகொடுத்த அபலைகளின் சார்பாக நிற்கின்றேன்.
அந்த அப்பாவிகளுக்கு நீதி கிடைக்க வேண்டாமா?
இணைப்பு கீழே தரப்படுகின்றது.
- டி. அஜீஸ் லுத்ஃபுல்லாஹ்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக