கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

மணிச்சுடர், இனி தனிச்சுடர் தான்!


28ஆவது ஆண்டில் மணிச்சுடர் நாலுவண்ணத்தில் எட்டுபக்க ஏடாகிறது.

-பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் ஆசிரியர், மணிச்சுடர் நாளிதழ்.

மணிச்சுடர் நாளிதழ் இன்று தனது 28ஆவது ஆண்டு பயணத்தைத் துவங்கியிருக்கிறது. சிந்தனைச் செல்வர் சிராஜுல் மில்லத் அல்ஹாஜ் ஏ.கே.ஏ. அப்துஸ் ஸமத் சாஹிப் அவர்களால் 1987ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட மணிச்சுடர், பல நெருப்பாறுகளையும் காட்டாறுகளையும் கடந்து, இப்போது நேரான ராஜபாட்டையில் பயணித்துக் கொண் டிருக்கிறது.

மணிச்சுடர் ஏட்டின் பயணம் சீராகவும் சரியாகவும் சிந் தனையாளரின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் நடக்கிறது; ஆனால், சமுதாய மக்கள் அனைவருக்கும் சென்றடையவில்லை என்பது பெருங்குறையே ஆகும்.

மணிச்சுடர் நான்கு பக்க நாளேடுதானே என்கிறார்கள் சிலர்! வண்ணங்கள் மிகுந்த இன்றைய வையக வாழ்வில் மணிச்சுடர் பத்திரிகையில் `கலர்’ இல்லையே என்கிறார்கள் பலர்! விளம்பரங்கள் தருவதற்கு விரும்பியிருக்கிறவர்கள் கூட, வண்ணங்களில் அச்சிடும் வசதியைக் கேட்கிறார்கள்! காலம் மாறுகிறது; வாசிப்போரும் மணிச்சுடரை நேசிப்போரும், இந்த ஏடு, தமிழ் கூறும் நல்லுலகில் எழுச்சி பெற்ற ஏடாகத் திகழ வேண்டும் என்று ஆசிக்கிறார்கள்.

எல்லோரும் விரும்பிப் படிக்கும் ஏடாக, நாடு போற்றும் நாளிதழாக, சமுதாயம் ஏற்கும் சத்தியப் பிரச்சார இதழாக விளங்க வேண்டும் என்ற பெருவிருப்பத்தோடு வள்ளல் பெருமக்கள் உதவ முன்வந்தனர்.

அவர்களுக்கு எங்களின் இதயம் நிறைந்த இனிய நல்வாழ்த்துக்களை உரித்தாக்குகிறோம். இன்ஷா அல்லாஹ் ரமளான் மாதத்தில் மணிச்சுடர் எட்டுப்பக்க ஏடாகிறது! நாலுவண்ணத்தில் வரும் நாளேடு ஆகிறது! வாசகர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் இதழாக மலர்கிறது! சமுதாய வாழ்வில் புதிய பொழுது புலர்கிறது! மணிச்சுடரின் 28ஆவது பிறந்த நாள், கண்ணியத் தென்றல் காயிதே மில்லத் அவர்களின் ஜனன தினம் என்பதிலும் ஒரு பொருத்தம் உண்டு.

எல்லோரும் தொடர்ந்து கூறிய அறிவுரைகளைக் கேட்டு அந்த ஆலோசனைகளை செயல்படுத்த முனைந் திருக்கிறோம். இனி எல்லோருடைய ஆதரவும் ஒத்துழைப்பும் தொடர்ந்து கிடைக்கும் என்று நம்புகிறோம். மணிச்சுடர், இனி தனிச்சுடர் தான்! ஊரும் உலகும் உவந்து ஏற்கும் பணிச்சுடர்தான்!

0 கருத்துகள்: