.
தோல்வியே வெற்றிக்கான முதல் படிக்கல் என்று தன்னம்பிக்கையோடு தேர்வு முடிவுகளை எதிர்கொள்ள வேண்டும். இதனை பெற்றோரும், மாணவர்களும் புரிந்து கொள்வது அவசியம்.அன்னை வயிற்றில் இருந்து, அழுது கொண்டே வெளியில் வந்தால் தான், பிள்ளை இப்பூமியில் வாழும். மூச்சுக்காற்றுக்கு ஏங்கி அழுகை எனும் தோல்வியை வெளிப்படுத்தும் போது தான், சுவாசம் சீராகிறது. வாழ்வு சுகமாக தொடர்கிறது. பெற்றோராகிய நாம், பிள்ளையின் அழுகையை ஆனந்தக் கண்ணீரோடு, அரவணைத்து ஏற்றுக் கொள்கிறோம். இந்த அரவணைப்பு, காலம் முழுதும் தொடரவேண்டாமா? கீழே விழுந்தால் மனம் பதறி, பிள்ளைக்கு அடிபட்டிருக்கிறதா என்று தானே பதறுகிறோம். பிளஸ் 2 தேர்வில் தோற்றாலும், மதிப்பெண் குறைந்தாலும் கீழே விழுவது போல் தானே. விழுந்த பிள்ளையை தூக்கி, ஆறுதல் படுத்த வேண்டாமா? பெற்றோர்களே... உங்கள் குழந்தைகளை, ஆறுதல் கூறி தேற்றுங்கள். மாணவச் செல்வங்களே... உங்களை விட, உலகத்தில் உயர்ந்த செல்வம், பெற்றோருக்கு இல்லை என்பதை உணருங்கள்.
. "தோல்வியினால் துவண்டு நிற்கும் பிள்ளையிடம், அன்பு, அரவணைப்பு, ஆறுதல் தரவேண்டியது, பெற்றோரின் கடமை' என்கிறார், மனநல டாக்டர் சி. ராமசுப்ரமணியன்:தேர்வில் எதிர்பார்த்தது நடக்காவிட்டால், மாணவனுக்கு மட்டுமல்ல... பெற்றோருக்கும் தோல்வி, அவமானம், மனச்சோர்வு போன்ற அனைத்து உணர்வுகளும் ஏற்படும். இதைக் கடந்து வரவேண்டியது தான் முதலில் செய்ய வேண்டிய வேலை. பிள்ளையின் மீது வைத்த நம்பிக்கை தளர்ந்து போய், பெற்றோரின் சுயகவுரவம் பாதிக்கப்பட்டதாக நினைக்கலாம். ஆனால் அதைப் பிள்ளையிடம் காண்பிப்பது ஆபத்தானது. பாரம் தாங்காமல் வண்டிமாடு கீழே விழுந்தால், அதற்கு தண்ணீர் காண்பித்து தட்டி கொடுப்பது தான் சரியான அணுகுமுறை. விலங்குகளுக்கே ஆதரவு தேவைப்படும் போது, நமது ரத்தபந்தமாம் பிள்ளைக்கும் தேவைப்படும், என்பதை உணருங்கள். நண்பர்களைப் பார்க்காமல், வீட்டை விட்டு வெளியே செல்லாமல், அவமானத்தால் கூனிக் குறுகி நிற்கும் பிள்ளையை, வார்த்தைகளால் காயப்படுத்தாதீர்கள். உள்மனக் காயம் ஆறும் வரை, ஆறுதல் கூறுங்கள். இப்போதைக்கு உங்கள் பிள்ளைகளுக்குத் தேவை, அன்பான பேச்சு, ஆறுதலான அரவணைப்பு தான். எதனால் மதிப்பெண் போயிற்று என்பதை நிதானமாக ஆராய வேண்டும்.
பிள்ளையை உணரவைத்து, அடுத்த தேர்வுக்கு உற்சாகமாக தயார்படுத்த வேண்டும். தடுக்கி விழுவது தவறல்ல. விழுந்தவனை கரம் நீட்டி, தூக்கி விடுவது தான், பண்பு. ஒரே ஒரு தோல்வி, மனிதனின் வாழ்க்கையை தீர்மானிக்காது. சாதனையாளர்களும், வெற்றியாளர்களும் தோல்வியை சந்திக்காமல் இருந்ததில்லை. முதல் முயற்சியிலேயே வெற்றி பெறுபவர்கள், வாழ்க்கைப் பாடம் கற்றுக் கொள்வதில்லை. தோல்விக்குப் பின் வெற்றி நிச்சயம் என்பதை, பிள்ளையை உணரவையுங்கள்.
பையனின் திறமையை புரிந்து கொண்டு, ஆற்றலை அறிந்து, அதற்கேற்ப உங்கள் மனதில் ஆசையை வளர்த்துக் கொண்டால், ஏமாற்றம் ஏற்படாது. உங்களது ஆசையை, பிள்ளையிடம் திணிப்பது நியாயம் அல்ல. பக்கத்து வீட்டு பையன் மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெற்று, உங்கள் பிள்ளை சுமாரான மதிப்பெண் பெற்றாலும், தயவுசெய்து ஒப்பிட்டு பேசாதீர்கள். இது ஒட்டுமொத்த தன்னம்பிக்கையை சாகடித்துவிடும். நல்ல மதிப்பெண் பெறாத பிள்ளை, நல்ல மனிதனாக இருக்கலாம், மற்றவர்களுக்கு உதவி செய்யும் குணமுள்ளவனாக இருக்கலாம். அல்லது வேறு ஏதாவது ஒரு கலையில் திறமையாளனாக இருக்கலாம். அதைக் கண்டறிந்து, அந்த திசையை நோக்கி, பிள்ளையை உருவாக்குங்கள். இவ்வாறு கூறினார்.
வெறும் மதிப்பெண்கள் வாழ்க்கையை தீர்மானிக்காது :""மாணவர்களே...பிளஸ் 2 வில் மதிப்பெண்கள் குறைந்தாலும், அதோடு உங்கள் வாழ்க்கை முடிந்து விடாது. நீங்கள் செல்ல நினைக்கும் திசை தான் மாறும்,'' என்கிறார், குழந்தைகள் மனநல டாக்டர் தீப்:
அவர் கூறியதாவது: தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காத போது, தவறான முடிவு எடுக்கின்றனர் என்றால் பெற்றோர், தன்னம்பிக்கை அளிக்கவில்லை என்று அர்த்தம். ஆரம்பத்தில் இருந்தே வெற்றி, தோல்விக்கு மனதை பக்குவப்படுத்த வேண்டும். சிறு சிறு பிரச்னைகளை பிள்ளைகளாக சமாளிக்கும் வகையில், பழக்க வேண்டும். "பிளஸ் 2 மதிப்பெண் தான், வாழ்க்கையை தீர்மானிக்கிறது. முக்கியமான கட்டம் இதுதான். தோற்றால் வீட்டிற்குள் நுழையாதே. முகத்தில் முழிக்காதே,' என, பெற்றோர் கூறினாலும், உங்கள் மேல் வைத்த பாசம் தான் காரணம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். ரோடு பிரியும் இடத்தில் சிறு குழப்பம் நேரும்போது, எந்த திசையில் செல்ல வேண்டும் என்பதை வழிகாட்டியாக, பெற்றோர் உணர்த்த வேண்டும். பொதுத்தேர்வு என்பது முட்டுச்சந்து அல்ல. வாழ்க்கை அங்கேயே நின்று போவதற்கு. இந்தத் தேர்வில் தோற்றால், அடுத்த மூன்றே மாதங்களில் மீண்டும் படித்து வெற்றி பெறலாம்.
ஒரு மதிப்பெண்ணில், முதலிடம் போய்விட்டது என்றாலும் பதறவேண்டாம். வெறும் மதிப்பெண்கள் வாழ்க்கையை தீர்மானிக்காது. பள்ளியில், மாவட்டத்தில், மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெற நினைக்கலாம். நடக்காத பட்சத்தில், மனதை அமைதிப்படுத்துங்கள். ஒரு மதிப்பெண்ணுக்காக, விலைமதிப்பில்லா உயிரை பணயம் வைக்காதீர்கள். மனம் பதறும் போது, பெற்றோரின் முகத்தை நினைவில் கொண்டு வாருங்கள். அடுத்த முறை வெற்றி நிச்சயம் பெறலாம் என்றார்.
. இலவச ஆலோசனை பெற:தோல்வி பயம், அவமானம் குறித்து யாரிடமும் பேச பிடிக்கவில்லையா... "உதவி' அமைப்பை (உயிர்ச் சேதம் தடுக்கும் விழிப்புணர்வு) 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். பெற்றோர், பிள்ளைகள் மனதில் குழப்பம், மன அழுத்தம், மனச்சோர்வு, பதட்டம் இருந்தால், தயங்காமல் மனம் விட்டு பேசலாம். மனநல டாக்டர்கள் உங்களுக்கு ஆலோசனை வழங்குவர். 98421 78739, 98940 52543 எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
நன்றி:http://www.dinamalar.com/News_detail.asp?Id=470820
0 கருத்துகள்:
கருத்துரையிடுக