கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

ஆசை பலவிதம்!


நமக்குத்தான் எத்தனை ஆசைகள்...! எதிர்பார்ப்புகள்...! நாம் ஆசைகளையும் கனவுகளையும் வளர்த்துக்கொள்கிறோம். ஆசைகளுக்குப் பின்னால் ஓடுகின்றோம். ஓடி ஓடிக்களைத்துப் போகின்றோம். வாழ்க்கையே முடிந்து போனாலும் ஆசைகள் முடிவதில்லை.

ஆசை இல்லாத மனிதர்களே இல்லை! ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஆசை. சின்னச்சின்ன அசை, பெரிய பெரிய ஆசை. மருத்துவராக ஆசை; பொறியாளராக ஆசை, வீடு கட்ட ஆசை, இன்னும் என்னென்னவோ!


"ஆசை வைக்காதே, அவதிப்படாதே!" ஆசையே துன்பங்களுக்குக் காரணம்" போன்ற சொல்வழக்குகள் எல்லா மொழிகளிலும் உண்டு. என்றாலும் நாம் ஆசைப்படுவதை விடுவதில்லை. "ஆசையே துன்பத்திற்குக்காரணம்" என்று சொன்ன புத்தர் கூட அந்த துன்பத்திலிருந்து விடுதலை பெற ஆசைப்பட்டாரே...!

ஆசைப்படுவது மனித இயல்பு. மனித மனங்கள் ஆசைகளால் உயிர் பெருகின்றன. ஆசையில்லாத உள்ளங்கள் பிணவறைகளே! ஆனால், நமது ஆசைகள் எப்படிப்பட்டவை என்பது மிகமிக முக்கியமானது ஆகும்.

குறிப்பாக ஓர் இறைநம்பிக்கையாளன் எப்படிப்பட்ட ஆசைகளை தனது உள்ளத்தில் இருத்திக்கொள்ள வேண்டும்? தனது இறைவனிடம் எத்தகைய எதிர்பார்ப்புகளை வைத்திருக்க வேண்டும்? - இந்தக் கேள்வி முக்கியமானவை.

நம்பிக்கையால நிறைந்த உள்ளங்கள் ஆசைகளால் நிறைந்தாலும் அவை மறுமை வெற்றிக்கும் உத்தரவாதம் தருபவையாகத் திகழும் இறை உவப்பை பெறுவதும், மறுமையின் நிரந்தர வெற்றியை ஈட்டுவதுமே ஓர் நம்பிக்கையாளரின் பெரிய பெரிய ஆசைகள்.

ஆசைகள் குறித்து அறிஞர் பலரும் எழுதியிருக்கிறார்கள். இமாம் அபூ பக்கர் அப்துல்லாஹ் பின் முஹம்மத் பின் உபைத் அல் பக்தாதி என்ற அறிஞர் அல் முத்மனீன் (ஆசைகள்) என்ற தலைப்பில் பெரிய நூலொன்றை எழுதியிருக்கிறார்கள். இமாம் புகாரி ரஹ்மதுல்லாஹி அலைஹி தமது நபிமொழித் திரட்டில் ஆசைகள் குறித்து ஓர் அத்தியாயமே எழுதியிருக்கிறார்கள். அதில் ஆசைகள் தொடர்பான பத்தொன்பது நபிமொழிகளைத் தொகுத்திருக்கின்றார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "ஆசைகளுக்கு" அனுமதி தந்திருக்கின்றார்கள். "நீங்கள் இறைவனிடம் கேட்கும்போது மிக மிக அதிகமாகக் கேளுங்கள். ஏனெனில் கேட்கப்படுபவனே உங்களைப் படைத்தவனாக இருக்கின்றான்." "இறைவனிடம் அவனது அருள்வளத்தைக் கேளுங்கள்."

ஆசைகள் பல வகை உண்டு. அடுத்தவ்ர் பொருள் தனக்குக் கிடைக்க வேண்டும்; அடுத்தவருக்கு அந்த பொருள் கிடைக்கக் கூடாது என்று ஆசைப்படுவது பொறாமை ஆகும். இது மிகப் பெரிய தீமையாகும். நற்செயல்களை அழித்து விடக்கூடியது.

ஆஹா! அந்த நண்பர் என்னமாய் சம்பாதிக்கிறார்...! எப்படியெல்லாம் அதனை இறைவழியில் செலவழிக்கிறார்..! என்று ஆசைப்பட்டு, "இறைவன் அவர் மீது இன்னும் அதிகமாக அருள் பொழிவானாக" என்று பிரார்த்தித்து, எனக்கும் அப்படி பொருளும் வசதியும் கிடைக்க வேண்டும்; நானும் அதனை இறைவழியில் செலவழிக்கும் நற்பேறு கிட்ட வேண்டும்" என்று ஆசைப்படுவது தவறல்ல.

"உலகமே என் காலடியில் இருக்க வேண்டும். மரணமே நிகழக்கூடாது" என்றெல்லாம் ஆசைப்படுவது விபரீத ஆசை. இது இறைவனின் நியதிகளை மாற்ற முனைவதாகும். இது தடுக்கப்பட்டுள்ளது.

இப்போது சில நல்ல நல்ல ஆசைகளைப் பார்ப்போம்.

உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆசை

அது ஒரு பொன்மாலைப்பொழுது. கலீஃபா உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தமது தோழர்கள் புடைசூழ ஒரு வீட்டில் அமர்ந்திருக்கின்றார்கள். அங்கு பஷர் பின் மூஸா அவர்களும் இருக்கின்றார்கள்.

உமர் ரளியல்லாஹு அன்ஹு புன்னகை பூத்த வண்ணம் தம் தோழர்களைக் கேட்கிறார்கள்; "நண்பர்களே! வாருங்கள், இனிய மாலைப்பொழுதில் ஆசைகளைப் பரிமாறிக் கொள்வோம். தோழரே! உங்கள் ஆசை என்ன?" ஒருவர் கூறுகிறார்: " எனக்கு இந்த வீடு முழுக்க தங்கக்கட்டிகளும், நகை நட்டுகளும் கிடைக்கணும். அதை நான் இறைவழியில் மகிழ்வுடன் செலவழிக்கணும் என்பதே எனது ஆசை"

உமர் ரளியல்லாஹு அன்ஹு மற்றவரிடம் கேட்கிறார்கள்: "உங்கள் ஆசை என்ன?"

அவர் கூறுகிறார்: "எனக்கு இந்த வீடு முழுக்க முத்துமணிகள், பவளங்கள், ரத்தினங்கள், வைரங்கள் நிரம்பி வழிய வேண்டும். அதனை நான் மகிழ்வுடன் இறைவழியில் செலவழிக்க வேண்டும் என்பதே என் ஆசை"

உமர் ரளியல்லாஹு அன்ஹு மீண்டும்: "இன்னும் எவராவது?"

நண்பர்கள் கூறினார்கள்: "நம்பிக்கையாளர்களின் தலைவரே! எங்களுக்கு எதை ஆசிப்படணும் என்பதே தெரியவில்லை"

உமர் ரளியல்லாஹு அன்ஹு சொல்கிறார்கள்: "எனக்கு இந்த வீடு நிறைய அபூ உபைதா பின் ஜர்ராஹ் ரளியல்லாஹு அன்ஹு போன்ற சத்திய சீலர்கள் வேண்டும்."

முகலாய மன்னர் அவ்ரங்கஸேப் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் ஆசை

முகலாய மன்னர் அவ்ரங்கஸேப் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் ஆசை என்னவாக இருந்தது தெரியுமா?

ஒரு நாள் அஸர் தொழுது முடித்த பிறகும் அவ்ரங்கஸேப் நீண்ட நேரம் பிரார்த்தித்துக் கொண்டிருந்தார். அவரது கண்களில் கண்ணீர்! அருகே நின்ற அமைச்சர் நவாப் ஸதக்கத்துல்லாஹ் கானுக்கு ஆச்சரியம்!

பிரார்த்தனை முடிந்து எழுந்த மன்னரிடம் கேகின்றார். "மன்னரே! உங்களது அரசு காபூலில் இருந்து கன்னியாகுமரி வரையிலும் பரந்து விரிந்து கிடக்கிறது. உங்களிடம் அப்படியென்ன நிறைவேறாத ஆசை? எதற்காக இந்தக் கண்ணீரும், பிரார்த்தனியும்?"

அவ்ரங்கஸேப் சொல்கிறார்: "எனக்கு செயல்வீரர்கள் தேவை. இறைவழியில் உயிர்விட ஆசை! ‘’எவன் வசம் எனது உயிர் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக, இறைவழியில் நான் கொல்லப்பட வேண்டும் என்றே நான் விரும்பினேன்!"

என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். இறைவழியில் உயிர் துறக்க ஆசைப்படுவது இறைவனின் அருள்வளத்தை யாசிப்பது போன்றது.

"இறைவழியில் உயிர் துறக்க வாய்மையான உள்ளத்துடன் ஒருவர் ஆசைப்பட்டால் அவருக்கு அதற்கான நற்கூலி கிடைக்கும்; அவர் உயிர் துறக்க வாய்ப்புக் கிட்டாமல் போனாலும் சரியே!" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றுள்ளார்கள்.

மீண்டும் மீண்டும் உயிர்விட ஆசை

"சுவனம் கிடைத்த பிறகு எவருமே உலகத்திற்குத் திரும்ப விரும்ப மாட்டார்கள், உயிர்த் தியாகம் செய்தவர்களைத் தவிர; இறைவழியில் உயிர்த்தியாகம் செய்வதன் மகத்துவத்தை உணர்ந்து கொண்ட அவர் பத்து தடவை உலகுக்கு மீண்டு வரவும், ஒவ்வொரு தடவியும் இறைவழியில் உயிர் துறக்கவும் விரும்புவார்" என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளார்கள்.

பாவ மன்னிப்பு கிடைக்க ஆசை

அவ்ப் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: "நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு ஜனாஸாவுக்காக செய்த பிரார்த்தனையை நான் நினைவில் நிறுத்திக் கொண்டேன். அந்தப் பிரார்த்தனி இதுதான்.

"இறைவனே! இவருக்கு பாவமன்னிப்பை நல்குவாயாக! இவர் மீது கருணை காட்டுவாயாக! இவரை நல்ல நிலையில் வைத்திருப்பாஅயாக! இவரது மண்ணறையை விரிவுபடுத்துவாயாக! வெள்ளைத் துணியிலிருந்து அழுக்கை அகற்றி விடுவது போல இவரது பாவங்களை மன்னிப்பாயாக! சுவனத்தில் இடம் கொடுப்பாயாக! மண்ணறையின் வேதனையிலிருந்தும், நரக நெருப்பிலிருந்தும் காப்பாற்றுவாயாக!"

சுவனத்தில் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் இருக்க ஆசை

ராபிஆ பின் கஅப் ரளியல்லாஹு அன்ஹு என்ற நபித் தோழர் கூறுகிறா: "நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருகிலேயே தங்கியிருந்தேன். அவர்களுக்கு உளூ செய்ய தண்ணீரை கொடுப்பது எனது வழக்கமாக இருந்தது. ஒருமுறை தண்ணிரை பெற்றுக்கொண்ட பிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடம் கேட்டார்கள்: "கேளுங்கள், உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் கேளுங்கள்".

நான் பதிலளித்தேன், "நான் சுவனத்திலும் உங்களுடனேயே இருக்க விரும்புகிறேன்".

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீண்டும் கேட்டார்கள். "வேறு ஏதாவது வேண்டுமா?"

நான் சொன்னேன், "எனக்கு வேறு எதுவுமே தேவையில்லை"

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள், "அதிகமாக இறைவன் முன் சிரம் தாழ்த்தி எனக்கு உதவுங்கள்" (அதாவ்து அதிகமாகத் தொழுது எனக்கு உதவுங்கள் என்பது இதன் கருத்தாகும்)

சுவனத்திற்குள் ஏழைகளுடன் நுழைய ஆசை

ஹிஜ்ரத் செய்தவர்களில் எளியவர்கள் மகிழட்டும்! இறைவன் அவ்ர்களை பணக்காரர்களைவிட நாற்பது நாட்கள் முன்பே சுவனத்தில் நுழைத்து விடுவான். இதனைக் கேட்ட ஏழைகளின் முகம் மகிழ்ச்சிப் பெருக்கால் பிரகாசமாக இருந்தது. நானும் அவர்களில் ஒருவனாக இருக்கக்கூடாதா என மனம் ஏங்கியது" என்று அப்துல்லாஹ் பின் அம்ரு இப்னு ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள்.

குர்ஆனிய அறிவு கிட்ட ஆசை

அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: "நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்; "குர்ஆனிய அறிவு நிரம்ப வழங்கPபட்ட ஒருவர் அதன்படிச் செயல்படுவது மட்டுமல்லாமல் அழகாக ஓதவும் செய்கிறார் எனில் அவரைப் பார்த்து எனக்கும் குர்ஆன் மனனம் செய்யும் பேறு கிட்ட வேண்டும். நானும் இவரைப் போலவே குர்ஆன் ஓத வேண்டும்" என்று ஆசைப்படுவது அனுமதிக்கப்பட்டுள்ளது.

- சொர்க்கத் தோழி பிப்ரவரி 2008
source:http://www.nidur.info

0 கருத்துகள்: