வீட்டைக் கட்டிப்பார், திருமணம் செய்து பார்" என்று ஒரு பழமொழி உண்டு. இதற்கு எத்தனை நூறு வயதோ தெரியவில்லை. ஆனால், இன்றும் அது உண்மையாகவே இருக்கின்றது.
சொந்த வீட்டையாவது கட்டி முடித்துவிடலாம் போல் தெரிகிறது. ஆனால், திருமணத்தை நாம் நடாத்தி முடிப்பதற்குள் நாம் படும் பாடு ஒன்றா? இரண்டா? "ஆறு பெண்பிள்ளைகள் பெற்றால் அரசனும் ஆண்டி" என்பது மற்றொரு முதுமொழி. வாழ்க்கை என்பது, புயலில் அலைமோதும் ஒடம்தான்.
ஆனால், பிரமச்சரியம் கலங்கிய நீர்க் குட்டிக்கு நிகரானது. அதாவது, பழத்தின் உள்ளே வாழும் வண்டுபோலானது. ஆனால், மணம் முடிப்பவனோ தேனிக்கு நிகரானவன். அவன் தனக்காகவும், பிறருக்காகவும் வாழ்கிறான். எனவே, ஒரு மனிதன் தனித்து வாழ்வதை விட மண முடித்து வாழ்வது சிறப்பு என்று சான்றோர் கூறுவார்.
இவ்வாறு திருமணத்தைப் பற்றி பல்வேறு கருத்துகள் நிலவிய போதிலும் நமது மார்க்கக் கண்ணோட்டத்தில் நோக்கும்போது, இறைவன் மனிதனை மிக மேலான வடிவத்தில் படைத்து, அவனை தன் பிரதிநிதியாக்கி, அவன் மீது தன் அருட்கொடைகளை அனைத்தையும் வாரி வழங்கினான். மனிதனுடைய நலனுக்காக மனித குளத்தை வாழ வைப்பதற்காக அவனின் இன்ப, துன்பங்களில் பங்கேற்பதற்காக அழகின் திருவுருவாக, அன்பின் இருப்பிடமாக பெண்ணையும் தோற்றுவித்தான்.
அதனால்தான், பெண்மை அழகானது, மேலானது என்று ஆங்கில கவிஞன் மில்டன் வாயாரப் புகழ்கின்றான். நம் தமிழ் மொழியிலும் ‘பெண்’ எனும் சொல்லுக்கு ‘அழகு’ எனும் பொருள் இருப்பதை காணலாம். இல்லறம் எனும் பூஞ்சோலையில் பிரதானமாக ஐவகை நறுமணங்கள் வீசுகின்றன என்று உளவியல் மேதை சங்கைக் குரிய இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் தனது ஒப்பற்ற இலக்கியமான இஹ்யாவுலூமித்தீனில் வரைந்திருக்கின்றார்கள்.
1. மக்கட் செல்வம்
2. புலனிச்சை அடக்குதல்
3. மகிழ்ச்சி
4. குடும்பச் சுமை குறைதல்
5. நிர்வாகம் கற்றல் என்பனவாகும்.
1. செல்வத்தில் சிறந்த செல்வம் விலைமதிக்க முடியாத குழந்தைச் செல்வமாகும். ஒரு மனிதனின் அமல்கள் (நற் செயல்கள்) அவனது மரணத்துடன் முடிந்துவிடுகின்றனவென்றாலும் அவன் செய்த நித்தியா தருமம், பயன் தரும் கல்வி, துஆச் செய்யும் நல்ல பிள்ளை ஆகிய மூன்றும் மரணத்தின் பின் அவனது அமல்களாக பயன் தருகின்றன என்ற நபிமொழி வழியாய் தமக்காக துஆச் செய்யும் குழந்தைகளை விட்டு செல்வதற்கு இத்திருமணம் துணை செய்கின்றது.
2. திருமணம் கண்ணையும் கற்பையும் காக்கும் கோட்டை. அது நம்மைத் தவறில் செல்லவிடாது தடுக்கும் அரண். "திருமணம் புரிந்தவர் தமது அற வாழ்வில் ஒரு பகுதியை காத்துக் கொள்கிறார். இனி, அவர் எஞ்சியிருக்கும் பகுதியில் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளட்டும்" என நம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் வலியுறுத்துகிறார்கள்.
3. திருமணத்தால் மனதுக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது. தன் மனைவியுடன் கனிவாய்ப் பேசும்பொழுது மனம் மகிழ்வடைகிறது. மனம் எப்பொழுதும் ஒரு நிலையிலிருப்பதில்லை. அது சிலவேளை குழம்பிப் போகும். அவ்வேளை தன் கனிவான பெண்ணுடன் கலந்துறவாடும் போது அளவிலா ஆனந்தம் பெரும். எனவேதான் முத்தகீன்களெனும் பக்திமான்கள் மார்க்கம் அனுமதித்திருக்கும் மகிழ்ச்சிகளிலும் ஈடுபடுவது அவசியமாகின்றது என்கின்றனர். இக்கருத்தையே இறைவனும் தன் திருமறையில் "லியஸ்குன இலைஹா" அவளிடம் அமைதி பெரும் பொருட்டே துனைவியைப் படைத்ததாக திருவுளமாகிறான்.
4. திருமணத்தால் குடும்பப்பாரம் குறைகிறது. சமைப்பது, பெருக்குவது, விரிப்பது, துலக்குவது, வாழ்க்கைத் தேவைகளுக்கு இன்றியமையாத சாமான்களை சேகரிப்பது, இலலத்தின் பாதுகாப்பு போன்ற காரியங்களிலிருந்து ஆண்களுக்கு விடுதலை கிடைக்கிறது. ஒரு கணவன் வீட்டுப் பொறுப்புக்கள் அனைத்தையும் மேற்கொள்கையில் அவனின் பொன்னான நேரங்கள் அதிலேயே கழித்துவிடும். சமுதாய தொண்டு புரிவதற்கோ, கற்றபடி அமல செய்வதற்கோ சந்தர்ப்பம் வைக்காமல் போய்விடும். இவ்வகையில் அவன் தனக்கொரு வாழ்க்கைத் துணைவியைத் தேர்ந்தேடுப்பத்தின் மூலமே வெற்றி பெற முடியும்.
5. திருமணம், நிர்வாகத் திறமையினைக் கற்பித்துக் கொடுக்கிறது. தலைமை பதவிக்கு நம்மை தயார் செய்கிறது. மனைவிக்கு செலுத்தவேண்டிய கடமைகளில் கண்ணுங்கருத்துமாய் இருந்தாலும் அவள் பண்பறிந்து நடத்தலும், அவளிழைக்கும் துன்பங்களை சகித்தலும், தம் மக்களுக்கு ஒழுக்கம் கற்பித்தலும், அவர்களை சன்மார்க்க வழிநடத்த முயற்சித்தலும், அவர்களுக்காக தர்ம வழி நின்று பொருளீட்டலும் மகத்தான நிர்வாகங்கலாகும். நீங்கள் ஒவ்வொருவரும் நிர்வாவிகள், உங்கள் நிர்வாகம் பற்றி விசாரிக்கப்படுவீர்கள்.
" ஸாலிஹான நற்குனமுள்ள மனைவி சாபத்திற்குரிய துன்யாவைச் சார்ந்தவள் அல்ல, அவள் உனக்கு பரலோக காரியங்களில் துணை செய்பவளாவாள்" என்று மகான் அபூமுச்லிம் தாரானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் அருளுகிறார்கள்.
"ரப்பனா ஆதினா பித்துன்யா ஹஸனதன்" எங்கள் இறைவனே! இகத்திலும் எங்களுக்கு நன்மையைத் தந்தருள்வாயாக! எனும் இப்பிரார்த்தனையில் கூறப்பட்டிருக்கும் ‘ஹஸனா’ எனும் பதத்திற்கு நற்குணமுள்ள மனைவி என்று மகான் கஃபுல் கர்ழி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் பொருள் செய்திருக்கிறார்கள்.
"உங்களில் ஒவ்வொருவரும் நன்றியுணர்ச்சியுள்ள இதயத்தையும் தியானத்தில் நிலைத்திருக்கும் நாவையும் பரலோக காரியங்களில் துணை நிற்கும் நட்குனமுள்ள மனைவியையும் தேர்ந்தெடுத்துக் கொள்வாயாக!" என்பது நபிமொழியாகும்.
"ஒருவன் தன் மனைவிக்காக செலவிடுவது தர்மம். அவர் அவளின் வாயின்பால் உயர்த்தும் ஒவ்வொரு கவளத்திற்கும் நன்மை நல்கப்படும்" என்று எம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள். திருமணம் புரிவது அவசியம் என்பது தெளிவாகிவிட்டது. இனி, நாம் தேர்ந்தெடுக்கும் மணமகள் மார்க்க ஒழுக்கம், குணம், அழகு, குழந்தை பெறும் தகுதி, வம்சம் இவைகளை கவனித்தல் அவசியமாகும். மனமகளின் குண, நலன்களை கவனியாது அழகையே பிரதானமானதாக கவனிப்பதில் அநேக கெடுதிகள் விளைகின்றன.
மனைவி ஒழுக்கமற்றிருப்பின் கணவன் மனநிம்மதியற்று துன்பப் புயலில் துவண்டு தவிக்கும் பலரைப் பார்க்கலாம். தீய குணமுடைய மனைவியால் குடும்பமே சிதைந்து சீரழிந்து விடுவதையும் காணலாம். இப்பிரச்சினைகள் நிகழாதிருக்கவே மனுக்குல மகுடம் மா நபி திலகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் இதற்கு என்ன கூறினார்கள் தெரியுமா? "ஒரு ஆடவர் அழகுக்காக, பொருளுக்காக, குடும்பத்திற்காக, சன்மார்க்க ஒழுக்கங்களுக்காக ஓர் பெண்ணை மணந்து கொள்வதுண்டு. ஆனால், நீர் சன்மார்க்க ஒழுக்கமும் பண்புடையவளையே தேர்ந்தெடுத்துக்கொள்வாயாக" எனக் கூறினார்கள். (நூல்: இப்னுஹிப்பான்)
"பெருமைக்காகப் பெண் கொள்வோருக்கு அல்லாஹ் இழிவையே தருகிறான். பொருளுக்காக மண முடிப்போர்க்கு வறுமையை அதிகரிக்கிறான். அவளின் அழகுக்காக மணமுடிப்போருக்கு தாழ்வையே தருகிறான். ஆனால், தன் பார்வையைக் கட்டுப்படுத்தி தன் கற்பையும் காத்துக் கொல்வதற்காகவும், சுற்றத்தாரை தழுவி நடப்பதற்காகவும் மண மன முடிப்பவர்க்கு அல்லாஹ் அவளில் அவருக்கு நிம்மதி, சந்தோஷத்தையும், அவரில் அவளுக்கு நிம்மதி, சந்தோஷத்தையும் அளிக்கிறான்" என்று நம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறியுள்ளார்கள். (நூல்: தபரானி)
உங்கள் சிந்தனைக்கு ஒரு சில சம்பவங்களை சுட்டிக்காட்டலாம் என விரும்புகின்றேன். இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் இரண்டாவது கலீபா உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், ஒரு நாள் நள்ளிரவில் நகர சுற்றி வருகையில் குடிசை ஒன்றில் இருவர் பேசிக் கொள்ளும் சப்தம் கலீபா அவர்களின் காதில் விழுந்தது. இவர்கள் என்ன பேசுகிறார்கள்? என்று கவனிக்கையில், இப்பாலில் சற்று நீர் கலந்து விற்பனை செய்தால் கூடுதலான இலாபம் கிட்டும் என்று தாய் கூற, கலீபா அவர்கள் கண்டுபிடித்துவிட்டால் ஆபத்தாகிவிடும் என்று மகள் கூறினாள்.
இந்நேரத்தில் கலீஃபா அவர்கள் கண்காணித்துக் கொண்டிருக்கவா போகிறார்? என்று மீண்டும் தாய் கூற, அதற்கு மகள் இல்லை தாயே! கலீஃபா அவர்கள் நம்மை பார்க்கா விட்டாலும் நம்மைப் படைத்த இறைவன் பார்த்துக் கொண்டிருக்கிறான் அல்லவா! எனப் பதிலளித்தால். இச்சம்பாஷனை கலீஃபா உமர் ரலியல்ல்ஹு அன்ஹு அவர்களை பெரிதும் கவர்ந்தது. குடிசையில் வாழும் இளம் பெண்ணின் இறை பக்தியையும், நற்குண சீலத்தையும் நினைத்து பூரிப்படைந்தார்கள்.
பொழுது புலர்ந்ததும் தாயும் மகளும் கலீஃபா அவர்களின் தர்பாருக்கு அழைத்து வரப்பட்டார்கள். கலீஃபா உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், தம் புதல்வர் ஆஸிமை அழைத்து இப்பெண்ணின் நற்குணத்தையும் இறைபக்தியையும் பாராட்டி, இப்பெண்ணை திருமணம் செய்து கொள்ளுமாறு பணித்தார்கள். புதல்வரும் சம்மதம் தெரிவிக்க, தாயும் மகளும் மனமகிழ்ந்தார்கள். திருமணமும் நடந்தேறியது. பிற்காலத்தில் இத்தம்பதிகளின் வழித்தோன்றலாகவே உலகம் போற்றும் உத்தமர் சங்கைக் குரிய உமர் இப்னு அப்துல் அஸீஸ் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் அவதரித்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனவே, அவர்கள் வாழ்வும் மலர்ந்தது. உலகுக்கு அவர்களால் நல்ல சந்ததிகளும் கிடைத்தன. சங்கைக்குரிய இமாம் ஷாபிஈ (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் அடிமை வர்க்கத்தைச் சேர்ந்த கருப்பு நிறமுடைய பெண்ணை தனது வாழ்க்கைத் துணைவியாக தேர்ந்தெடுத்துக் கொன்றார்கள். அப்பெண்ணின் பெயர் பலாக். அந்த ஊரிலுள்ள பலரும் இமாம் அவர்களுக்கு அழகு சௌந்தர்யமுள்ள பெண்ணை மணமுடித்து வைக்க முயற்சி செய்தபோது எனக்கு அதற்கெல்லாம் அவகாசமில்லை பலாக்கில், பலாக் (பெரும் தத்துவம்) அமைந்திருக்கிறது எனக்கூறி மறுத்து விட்டார்கள்.
இவ்வாறு ஹன்பலி மத்ஹபின் இமாம் சங்கைக் குரிய அஹ்மது இப்னு ஹன்பல் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் ஒரு கண் ஒச்சமடைந்திருந்த ‘அவ்ராஉ’ என்ற பெண்ணை தம் இல்லறத் துணைவியாக தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். ஆனால், அவ்ராவின் தங்கை நல்ல அழகும், சௌந்தர்யமும் கொண்டவள். அவ்ராஉ அறிவு நுட்பமுடைய பெண். இவ்விருவரில் அறிவு நுட்பமுடைய அவ்ராதான் தனக்கு உகந்தவள் எனக் கூறி அவர்களை திருமணம் செய்து கொண்டார்கள். நம் முன்னோர்களிடம் இப்பண்பே அதிகம் இருந்தது. பரம எழையாயினும், செல்வச் சீமானாயினும் ஒழுக்கத்திற்கும் நல்ல குணத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருந்தனர்.source: Tamil - Mail of Islam
0 கருத்துகள்:
கருத்துரையிடுக